Published:Updated:

தூள் முறுக்கு...'தூள்'கிளப்பு !

தூள் முறுக்கு...'தூள்'கிளப்பு !

இனியவன் படம்: என்.விவேக் ஓவியம்: கண்ணா

'ஹேப்பி கிறிஸ்துமஸ்...', 'ஹேப்பி நியூ இயர்...', 'ஹேப்பி பொங்கல்...' என்று முக்கியமான நிகழ்வுகளுக்கெல்லாம் வந்து கொண்டிருந்த எஸ்.எம்.எஸ். வாழ்த்து... இப்போது, 'ஹேப்பி புதன் கிழமை..', 'ஹேப்பி வெள்ளிக்கிழமை' என்று விடிந்தால்... பொழுதுபோனால்கூட வர ஆரம்பித்து, 'வாழ்த்து' என்பதன் மகிமையையே மறக்கச் செய்து கொண்டிருக்கிறது!

தூள் முறுக்கு...'தூள்'கிளப்பு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

ஒரு காலத்தில், 'வாழ்த்து' என்றாலே... 'பொங்கல்'தான் ஓடோடி வந்து நிற்கும்! வீட்டில் கிடைக்கும் 5 காசு, 10 காசையெல்லாம் சேர்த்து வைத்து, அழகழகான வாழ்த்து அட்டைகளை வாங்கி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு இணையேது!

வாழ்த்து அட்டைகளை வாங்கி புத்தகப் பையில் ஒளித்து வைத்துக் கொண்டு... நண்பனுக்குத் தெரியாமல் அனுப்பு வது; ''டேய், இந்த வாழ்த்து அட்டையத் தான் உனக்கு அனுப்பப் போறேன்’' என்று முதல் நாளே நண்பனிடம் காட்டிவிட்டு அனுப்புவது; வந்த வாழ்த்து அட்டையில் கையெழுத்தை மட்டும் அழகாக அழித்துவிட்டு தன் கையெழுத்தைப் போட்டு மீண்டும் அனுப்புவது என்று கிட்டத்தட்ட பொங்கலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே கொண்டாட்டம்தான்!

''நன்றி கார்டு அனுப்பிச்சேன். ஆனா, வரலேங்கறியே... இந்த போஸ்ட்மேன் எடுத்துக்கிட்டான் போல...’' என்று பொங்கல் முடிந்து ஒரு மாதம் வரைக்கும்கூட தபால்காரரைத் திட்டிக் கொண்டிருப்பது தனிக்கதை!

தூள் முறுக்கு...'தூள்'கிளப்பு !

பொங்கலே நன்றி நவிலல் விழாதானே! 'மண்ணுக்கு ஒரு நன்றி! உழுத மாட்டுக்கு ஒரு நன்றி! தோளோடு தோள் நின்ற உறவுகளுக்கொரு நன்றி’ என்று வகை வகையாகப் பிரித்துக் கொண்டாடும் பண்டிகைஆயிற்றே!

ஒரு டீ கடைக்குப் போய், டீ சாப்பிட்ட பிறகு, அந்த டீ மாஸ்டரிடம், ''டீ சூப்பர் மாஸ்டர். தாங்க்ஸ்'' என்று சொல்லிப் பாருங்கள். மறுநாளிலிருந்து உங்களைப் பார்த்தால் தனியாக வணக்கம் வைப்பார். கடை முதலாளிக்கு பழைய தூளில் டீ போட்டுக் கொடுத்தாலும் கொடுப்பாரே தவிர, உங்களுக்கு மட்டும் தனக்குத் தானே போட்டுக் குடிக்கும் நல்ல டீயை விடவும் பிரமாதமாகப் போட்டுத் தருவார்.

இப்படி மனிதர்களுக்குள் அன்பை மலர வைக்கும் வல்லமையுள்ள 'நன்றி’ என்ற அந்த ஒற்றை வார்த்தைக்காக தமிழன் கொண்டாடிய தைத்திருநாள், இன்று தன்னுடைய தாத்பர்யத்தை இழந்து கொண்டிருக்கிறது!

''மண்பானை ஹைஜீனிக் இல்லை. குக்கர் பொங்கல்தான் பெஸ்ட்'' எனும் நகரத்துவாசிகளே... ஏதாவது ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் சென்று பாருங்கள். சாதாரணமாக செய்யப்படும் குழம்புக்கு சொல்லும் விலையைவிட, மண் சட்டி குழம்பின் விலை, சில மடங்கு அதிகமே!

குக்கரைப் பற்றிய ஒரு நகைச்சுவை நினைவில் தெறிக்கிறது. இந்த குக்கர்களுக்கு கொஞ்சம் திமிர் அதிகம். தானுண்டு தன் வேலையுண்டு என்று பக்கத்து அடுப்பில் பொறுப்பாக வடை சுட்டுக் கொண்டிருந்த வாணலியை பார்த்து, ''நீ ரொம்ப கறுப்பா இருக்க. உன்னைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு'' என்று சொன்னதாம் குக்கர். உடனே வாணலி சொன்னதாம்... ''நான் இப்படி கறுப்பா இருக்கும்போதே என்னைப் பார்த்து விசில் அடிக்கிறியே! நான் வெள்ளையா இருந்திருந்தா என்னவெல்லாம் பண்ண மாட்ட?!''

சிரிக்கிறீர்கள்தானே?

இப்படியெல்லாம் எஸ்.எம்.எஸ், இணையதளம் வழி நமக்கு வரும் புனைவு நகைச்சுவைக்கு பழகிவிட்ட நம் குழந்தைகள், நம் கிராமத்து பொங்கல், ஜல்லிக்கட்டு, தேர் திருவிழாக்கள் என்று நிஜ நிகழ்வுகள் தரும் ஆனந்தத்தையும், சந்தோஷத்தையும், சாகசத்தையும் அனுபவிக்காமலேயே வளர்கிறார்களே என்பதுதான் வேதனைப் பொங்கலாக இருக்கிறது... இல்லையா!

ஒருமுறை வாஞ்சி மணியாச்சியில் மாட்டுப் பொங்கலுக்காக ஸ்பெஷல் 'ரேக்ளா ரேஸ்’ பார்த்தேன். தடத்தின் இரண்டு பக்கத்திலும் மக்கள் கூட்டம். சீறிப் பாயும் வேகத்தில் செல்லும்போதும், வண்டிக்காரர் தன் முறைப் பெண்ணைப் பார்த்தவுடன், கையில் இருக்கும் சாட்டைக் குச்சியால் சக்கரத்தின் இடையே லேசாக உரசி ஒருவித சத்தத்தை ஏற்படுத்த, அந்தப் பெண் வெட்கத்தில் கையசைக்க, அடடா... அழகு! அதையெல்லாம் பார்க்க இன்று எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கப் போகிறது?!

அதுசரி, இன்று அபார்ட்மென்ட்களில் ஒண்டுக்குடித்தனம் நடத்திக் கொண்டிக்கும் காலத்தில்... இதைப் போய்ச் சொன்னால் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். பின்னே... வாசலில் கோலம் போட்டு ரசிக்கவே இடம் இல்லை. நம் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக தண்ணீர் தெளித்தால்... எதிர் வீட்டு டைனிங் ஹாலில் தெறித்து வம்பை விலைக்கு வாங்குகிறது!

பிரச்னை என்று ஒன்று வந்தால், தலையை முட்டிக் கொள்ளகூட இன்று முற்றம் இல்லை. மீறி முட்டிக் கொண்டால்... ''சார்... மெதுவா முட்டிக்கோங்கோ... ஒரே சத்தம் வருது'’ என்று பக்கத்து வீட்டுக்காரர் வந்து பக்குவமாகச் சொல்லிட்டுப் போகிறார்.

இப்படி இயலாமை, ஏக்கங்களினூடே பொங்கல் கடந்தாலும், 'அது ஒரு அழகிய நிலாக் காலம்’ என்று நெஞ்சில் ஊறி நிற்கும் இளமைக் கால பொங்கல் தரும் தெம்பு கொஞ்சம் அதிகமே... இந்த தூள் முறுக்கு போல!

பொங்கலுக்கு ஏதாவது பட்சணம் செய்ய வேண்டும் என்கிற சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர் எங்களின் அம்மா. ஆனால், ஒரு போதும் அவர் முழுதாக முறுக்கு சுட்டுக் கொடுத்ததே இல்லை. தூள் தூளாக உடைந்த முறுக்குதான் கிடைக்கும்.

''ஏம்மா... உனக்கு முழு முறுக்கு சுடத் தெரியாதா?'' என்று நான் கேட்க, ''அந்த அரிசி கடைக் காரன் அரிசியை மாத்திக் கொடுத்துட்டான்'' என்றார். அடுத்த வருடம், ''அந்த ரைஸ் மில்காரன் சரியா மாவு அரைக்கல'' என்றார். அடுத்த வருடம், ''எதிர் வீட்டுக்காரி கண்ணு வெச்சுட்டா'' என்றார். அடுத்த வருடம், ''சாமிக்கு படைக்கிறதுக்கு முன்னாடியே உங்கப்பா எடுத்து சாப்பிட்டது தெய்வ குத்தமா போச்சு'' என்றார். கடைசி வரையில் தனக்கு முறுக்குப் பக்குவம் கைவரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை.

பொங்கல் தோறும் 'ஒரு பட்சணம் பண்ணணும், பிள்ளைங்களுக்கு சாப்பிடக் கொடுக்கணும்...’ என்கிற நம்பிக்கையின், அக்கறையின் அச்சாணியில்இருந்து விலகாமல் அம்மா செய்த அந்த தூள் முறுக்கின் வாசமும், பாசமும் இன்றும் என் நெஞ்சில்!

'இதுக்கெல்லாம் எதுக்கு மெனக்கெட்டுக்கிட்டு..?’ என்றபடி பொங்கலுக்காக ஸ்வீட் ஸ்டாலில் நான் வாங்கிச் செல்லும் பட்சணங்கள் எல்லாம் எப்போதும் எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில்!