Published:Updated:

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

ஹேமமாலினி 

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

சினிமா உலகில் 'கனவுக் கன்னி’ என்ற சொற்றொடர் முதல் முதலாகப் பிறந்தது, ஹேமமாலினிக்குத்தான்! மொழிகளையும் மாநிலங்களையும் தாண்டி, இந்தியா முழுவதும் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்த தமிழ்ப் பெண். இந்தி சினிமாவை, இருபது ஆண்டுகள் முடிசூடா ராணியாக ஆண்டவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நான் போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தோட பிராண்ட் அம்பாஸடர். அவங்க ஏற்பாடு பண்ணியிருந்த 'புரமோ’ நிகழ்ச்சிக்காக வந்தேன்...'' என்று கண்களில் சிரித்து, தன் மனதின் சிம்மாசனத்தில் இருக்கும் ஆண்கள் பற்றி இங்கே பேசு கிறார் இந்த அறுபத்தி இரண்டு வயது ஆன்ட்டி!

''என்னைக் கவர்ந்த முதல் ஆண் ஆளுமை, என் அப்பா. அவர் இப்ப இல்லை. அதனால அந்த இடத்தை நான்

என்னுடைய சகோதரன் சக்ரவர்த்திக்குதான் கொடுக்கணும். அப்பாவுக்குப் பூர்விகம் கோவைதான். ஆனா, திருச்சிக்கு பக்கத்துல இருக்கிற அம்மன்குடிதான் நான் பிறந்த ஊர். அதன் பிறகு டெல்லி, மும்பைனு என்னுடைய வாழ்க்கை தமிழ்நாட்டைத் தாண்டிப் போயிடுச்சு. ஆனா... தமிழ்நாட்டுக்கும் எனக்கும் எப்பவும் பாலமா இருக்கறது தம்பி சக்ரவர்த்திதான்.

##~##
திருமணத்துக்கு அப்புறம் பெண்கள் பிறந்த வீட்டுக்குப் போகும்போது, அந்தப் பொழுதுகளை சந்தோஷமாவும், சங்கடமாவும் ஆக்கறது சகோதரர்கள் கையிலதான் இருக்கு. அவங்க கொஞ்சம் முகம் சுளிச்சிட்டாலும், மனசு கசங்கிடும் பொண்ணுங்களுக்கு. ஆனா, சக்ரவர்த்தி வீட்டுக்குப் போகும்போது, அம்மா வீட்டுக்குப் போற மன நிறைவு கிடைக்கும் எனக்கு. அந்தளவுக்கு தாயுள்ளத்தோட தாங்கற சகோதரன்.

மும்பையில என் வீட்டுல எங்கம்மா இருந்த வரைக்கும், சமையல் அவங்க கஸ்டடிதான். ஆனா, அவங்க மறைவுக்குப் பிறகு, ருசிங்கறதையே மறந்துட்டேன் நான். இத்தனை வருஷம் ஆனாலும், வடநாட்டு சமையல்ல மனசு நிறையாம வயிறு மட்டும் நிறைச்சுக்கற எனக்கு, இங்க வரும்போதெல்லாம் நாக்குக்கு ருசியான நம்ம தமிழ்நாட்டு விருந்து மணக்க காத்திருக்கும் சர்க்கரவர்த்தியோட வீடு. என் மனதை நிறைக்க அன்பை அள்ளி வெச்சு காத்திருப்பாங்க அந்த வீட்டுல இருக்கறவங்க. 'தம்பி’ங்கற உறவுக்கான அத்தனை சந்தோஷங்களையும் தளும்பத் தளும்பத் தர்றவர், சக்கரவர்த்தி!

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

பிறந்த வீட்டுக்குப் பிறகு, புகுந்த வீட்டைப் பத்தி சொல்லணும் இல்லையா?! என் கணவர் தர்மேந்திரா, என் வாழ்வின் வரம். நாங்க ரெண்டு பேரும் எப்படி காதலிச்சோம், காதலுக்காக எவ்வளவு தூரம் போனோம்னு நாட்டுக்கே தெரியும். கவித்துவமா சொல்லணும்னா, அவரோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்... எனக்கு சந்தோஷமான தருணங்கள். நானும் என் பொண்ணுங்க ஈஷா, அஹானாவும் அவரை சீண்டணும்னா... அடிக்கடி தமிழ்ல பேசிப்போம். நாங்க என்ன பேசிக்கிறோம்னு தெரிஞ்சுக்க துடியா துடிப்பாரு. அவரை அப்படி மண்டை காய வைக்கிறதுல எங்களுக்கு ஒரு அல்ப சந்தோஷம். அந்த டென்ஷன்லயும் எங்களோட சந்தோஷத்தை ரசிக்கற மனுஷன் அவர். தர்மேந்திரானா... முன்கோபம்னு டிக்ஷனரியில எழுதிடலாம். ஆனா, எனக்காகவும் பொண்ணுங்களுக்காக அவர் எவ்வளவு பொறுமையா போவாரு, இறங்கி வருவாருங்கறது எங்க வீட்டுக்கு மட்டுமே தெரிஞ்ச ஆச்சர்யம்.

சினிமா, நாட்டியம், டி.வி., அரசியல்னு ஒரே சமயத்துல நான் பல வேலைகளைப் பார்க்கறேன்னா அதுக்கு தர்மேந்திராவோட ஆதரவும் முக்கியக் காரணம். என் பொண்ணு ஈஷாவை ஹீரோயினா வெச்சு, 'டெல் மி ஹோ குதா’னு ஒரு சினிமாவை நான் இயக்கிட்டிருக்கேன். அதுல தர்மேந்திராவும் நடிக்கிறாரு. படத்துக்கு நான்தான் இயக்குநர்ங்கறதால, 'அப்படி நடிங்க... இப்படி நடிங்க’னு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தா, எந்த ஈகோவும் இல்லாம 'வீட்டுல பண்ணின தப்புக்கு செட்ல தண்டிச்சிடாதீங்க டைரக்டர் மேடம்’னு சிரிச்சுக்கிட்டே 'ஷாட்’டுக்கு ரெடியாவார். இப்படித்தான்... ஒவ்வொரு விஷயத்துலயும் எனக்கும் என் பொண்ணுங்களுக்கும் பாசத்தை மட்டுமல்ல... எங்களுக்கு வேண்டிய சுதந்திரம், மரியாதைனு எல்லாத்தையும் தருவார். கல்யாணமான 30 வருஷத்துல, 'என் சாய்ஸ்... சூப்பர் சாய்ஸ்!’னு எப்பவும் என் மனசை பெருமையில குதிக்க வைக்கற பாசத்துக்கு சொந்தக்காரர் தர்மேந்திரா!

அடுத்தது, வாஜ்பாய். பழுத்த அரசியல்வாதி, நாட்டின் பிரதமராக இருந்தவர், சாணக்கியன், கவிஞர், பக்குவப்பட்ட மாமனிதர்... இப்படி பெருமைகள் பல குவிந்த எளிமையாளர். அவர் நாடாளுமன்றத்துல பேச ஆரம்பிச்சா... எதிர்கட்சியினர்கூட அதை ரசிப்பாங்க. அந்த அளவுக்கு நாகரிகமாகவும், செறிவாகவும், கவித்துவமாகவும் அவரோட பேச்சு இருக்கும். எல்லாத்துக்கும் மேல, கலைஞர்களின் அருமை தெரிந்த மனிதர். அதனால்தான், ராஜ்ய சபா எனும் உயரிய இடத்தில் என்னையும் ஒரு உறுப்பினராக்கி அழகு பார்த்தார். ஐ சிம்ப்ளி லவ் வாஜ்பாய்!

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

சினிமா, டி.வி., அரசியல்னு எல்லாத்துக்கும் மேல என் இதயத்துக்கு நெருக்கமா இருக்கறது... நாட்டியம்தான். ஒடிசி நாட்டிய மேதை கேளு சரண் மஹாபத்ரா, என்னோட அந்த ஆர்வத்துக்கு கலைத்தீனி போடற கலைஞர். நாட்டிய உலகின் உச்சியில அவர் இருந்தப்போ... ஒரு முறை ஒரிஸ்ஸாவுல அவரைச் சந்திச்சேன். என் மீது கொண்ட அன்பின் காரணமா, பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போய், அங்க இருந்த சிற்பங்களையும் அதுல புதைஞ்சு கிடக்கற நாட்டிய சாஸ்திரத்தின் நுட்பமான விஷயங்களையும் அவர் விளக்கின அழகை மறக்கவே முடியாது. ஒரு முறை, 'கோவிந்த கீதங்கள்’ங்கற பெயர்ல ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினோம். அதுல அவர் கண்ணனாவும், நான் ராதையாவும் நடனம் ஆடினோம். என் உள்ளத்துல பூர்ண ஆயுசா வாழற அந்த கலைஞனுக்கு வந்தனங்கள்!

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

அன்பான கணவர், பாசமான பிள்ளைகள், பணம், பதவி, புகழ்னு எல்லாம் கிடைச்சாலும் இன்னும் ஒரு விஷயத்தை நான் தேடிட்டே இருக்கேன்... ஆழ்கடலைப் போல எதுக்கும் கலங்காத அமைதியான சாந்தி தவழும் மனசு. அது கிடைக்கிறது அத்தனை சுலபம் இல்ல. அது கிடைக்க இப்போதைக்கு எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர்... என்னுடைய குரு தாதாஜி திலீப் குமார் ராவ். அவர் மிகப்பெரிய கவிஞர், மகான் அரவிந்தரிடம் நேரடி சீடராக இருந்தவர். அவரைப் பார்த்தாலே... நம்முடைய மனதில் அமைதி குடி புகுந்துவிடும். அவருடைய எழுத்துக்களைப் படித்தால், மனம் தெளியும்.''

சந்திப்பு : பி.ஆரோக்கியவேல்
படம் : பொன். காசிராஜன்