Published:Updated:

என் மனைவி !

என் மனைவி !

'இயற்கை வேளான் விஞ்ஞானி' நம்மாழ்வார்

''என் மனைவியை அருகில் வைத்துக்கொண்டே, அவர் மேல் எனக்கிருக்கும் பிரியத்தைப் பேசி, இப்படி அவர் முகம் வெட்க, மலர, பூரிக்க, நெகிழ பார்ப்பது எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது!'' 

என் மனைவி !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- தாடிக்குள்ளிருந்து தாவி வரும் சிரிப்புடன் 'என் மனைவி’க்காக பேச ஆரம்பித்தார் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார்!

##~##

''படிக்கும் காலத்திலேயே பெண் விடுதலையின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அப்போதுதான் அய்யா பெரியார் அவர்களின் பேச்சை ஒருநாள் கேட்டேன். 'நகரத்தில் நாய் வளர்ப்பார்கள். தெரு நாய்களிலிருந்து அது வேறுபட்டுத் தெரிவதற்காக நகராட்சி தரும் வில்லைகளை அணிவித்திருப்பார்கள். அதுபோன்றதுதான் பெண்களுக்குத் தாலி’ என்பதாக அந்தப் பேச்சு தொடரும். எனக்கு வரப்போகும் மனைவியைச் சமமாக நடத்த வேண்டும் என உளமார விரும்பினேன். எனது திருமணம் சுயமரியாதை திருமணமாக, தாலி கட்டிக் கொள்ளாத எளிமையான திருமணமாக 1964-ல் நடந்தது.

அந்த காலகட்டத்தில்.. 'தாலி இல்லாத கல்யாணம்', 'பெண்ணுரிமை' என்பதெல்லாம் புதுமையான, புரட்சிகரமான காரியங்கள். வெளியில் செல்லும்போது எதிர்படுகின்ற சொந்தங்களும், நட்புகளும் 'எங்கே தாலி?’ எனக்கேட்டு, அதற்கு சட்டென்று பதில் சொல்லத் தடுமாறிய சூழ்நிலைகளும் ஏற்பட்டதுண்டு. இருந்தாலும், ஏதோ புரட்சிக்காக என்று இல்லாமல் புரிதலுடன் எங்கள் வாழ்வை நாங்கள் எதிர்கொண்ட விதம், அழகான நாட்களைப் பரிசாகத் தந்தது.

வேளாண் பட்டதாரியான நான், கல்யாணமான புதிதில் கோவில்பட்டியிலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றினேன். அங்கே ஆக்கபூர்வமாக ஏதும் செய்யமுடியாத சூழ்நிலை. அதனால், ஆறு ஆண்டு காலத்தில் பணியைவிட்டு விலகினேன். இதைச் சற்றும் எதிர்பாராத என் மனைவிக்கு ஏக அதிர்ச்சி. 'என்ன இப்படி செய்துவிட்டீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டார். 'இப்போதுதான் ஞானம் வந்தது’ என்றேன். 'இந்த ஞானம் திருமணத்துக்கு முன்பே அல்லவா வந்திருக்க வேண்டும்..?’ என்றார் ஆற்றாமையுடன். அவருடைய கேள்வியில் இருந்த நியாயம் எனக்கு உறைத்தது. 'உன்னைக் கலங்காமல் வைத்து நான் காப்பேன்...’ என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்துவதற்காக என் பெயரில் இருந்த நிலங்களை எல்லாம் அவர் பெயருக்கு மாற்றி எழுதி வைத்தேன்.

எங்களுக்குள் எப்பவும் நல்ல பகிர்தல் இருந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தபோது, 'கொஞ்ச நாளைக்குப் பிறகு மறு குழந்தை பெற்றுக் கொள்ளலாமா..?’ எனக் கேட்டேன்.

'வருவாய்த் துறை’யை இழந்துவிட்டு ஏன் மறு குழந்தையைப் பற்றி நினைக்கிறீர்கள்...? எனக் கேட்டார். இந்தக் கேள்வியில் நியாயம் தெறித்தது. அவரின் முடிவை நான் மதித்தேன்.

என் மனைவி நன்றாக சமைப்பார். அதை நான் ரசித்து சாப்பிட வேண்டும் என விரும்புவார். ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அதைப் படிப்பதில் கவனம் கொண்டு, உணவில் அக்கறை இழப்பேன். அதற்கு மனைவி கோபித்தால், தோளில் பையோடு எதிரே இருக்கும் வேப்பமரத்தடிக்குக் கிளம்பி விடுவேன். 'இந்த ஒரு சாண் வயிறு நிறைந்தால்தான் எந்த உழைப்பையும், அறிவையும் வெளிக்கொண்டு வர முடியும்...’ என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, கைக்குழந்தைக்கு கவள சோற்றை ஊட்டப் போராடும் அம்மா போல, என் வயிறு நிறையாமல் விடமாட்டார்.

இப்படி அவர் என்னை வளர்க்க, என் ஒரே குழந்தை மீனாளை நான் பொறுப்புடன் வளர்த்தேன். குழந்தை வளர்ப்பு என்பது தாயின் கடமையாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எள்ளி நகையாடக்கூடிய கருத்து அது. தந்தைக்கும் அதில் பொறுப்பு இருக்கிறது. விசாலாட்சி நெடுஞ்செழியன் எழுதிய 'குழந்தை வளர்ப்பு’ புத்தகத்தை, குழந்தை பிறப்பதற்கு முன்னமே நாங்கள் இருவரும் சேர்ந்து படித்தோம். குழந்தைக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றால், எங்களுக்குள் பழி போட்டுக் கொள்வதைத் தவிர்த்தோம். பாலை பாட்டிலில் கொடுக்கிற கெட்ட பழக்கத்தை ஆரம்பம் தொட்டே ஒழித்தோம். 'கப்’பில் பால் கொடுத்தால் பிடித்து சுவைக்கிற அறிவு குழந்தைகளுக்கு உண்டு என்பதை பார்த்து மகிழ்ந்தோம். நான்காம் வகுப்பு படிக்கும்போதே மேடையேற்றி மேடைப் பேச்சை கற்றுக்கொடுத்தோம்.

ஆண் மாதிரி முடி வெட்டினோம். அவளுக்கு இளமையிலேயே ஆளுமையை கொண்டு வந்தோம். நாங்கள் சுற்றி வளையமாக உட்கார்ந்துதான் எல்லாவற்றையும் பேசுவோம். என் மகளையும் அதில் உட்கார வைத்து எல்லா விஷயங்களின் உண்மை நிலையை அறியச் செய்தோம்.

இன்னொரு பக்கம், என் மனைவி சமூகப் பொறுப்பு உள்ளவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவருக்கு வெளிப் பழக்க வழக்கங்கள் அதிகம் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கினேன். என் மனைவியை சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு தைரியப்படுத்தினேன். ஒரு கட்டத்தில் மற்ற பெண்களுக்கு வழிகாட்டுகிற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டார்.

இயற்கை வழி விவசாயம்தான் இந்த பூமியை நிலைத்து, நீடித்து வாழ வைக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதால், அதைப் பரப்பும் பணிகளுக்காக நான் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. அதனால், என் தோளில் இருந்த வீட்டுப் பொறுப்புகளை மகிழ்வோடு இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டோம்.

பெண், ஆணுக்கு அடக்கம் எனச் சொல்வது சரியல்ல. திருவள்ளுவர் 'மனைமாட்சி’ என்றுதான் சொன்னார். அவர் 'வாழ்க்கைத்துணை நலத்’துக்காக ஒரு அதிகாரத்தையே எழுதினார். பாரதி, 'மனைவியை அடிமையாக்கினால் உனக்கு பிறக்கிற குழந்தை எப்படி தைரியமுள்ளவனாக, வீரனாக இருப்பான்?’ எனக் கேட்கிறார். வயதாக ஆக... நடமாட்டம் குறைந்து, வேலைப் பளுவை குறைக்கலாம். சலிப்பு வரலாம். ஆனால் வாழ்ந்த காலங்களும், பழகிய தருணங்களும் மறப்பதற்கல்லவே! என்னைப் பற்றி சலிப்பாகக்கூட என் மனைவி சொல்வார். அதேநேரத்தில் யாராவது என் மீது குறை சொல்லப் புகுந்தால்... விழுந்து குதறுவார். அவர்தான் என் மனைவி சாவித்திரி!

நண்பர்களோடு எப்போதாவது சினிமாவுக்குச் செல்வேன். ஒருமுறை அப்படிச் சென்ற படம் கமலின் 'நாயகன்’. 'ஏன் என்னை அழைத்துச் செல்லவில்லை?’ எனக் கேட்டார். 'நண்பர்களோடு போய்விட்டேன்’ என்றேன். 'அப்போ நான் உங்கள் நண்பராக மாறிவிடவா..?’ எனக் கேட்டார். 'சரி’ என்றேன். அதற்குப் பிறகு நாங்கள் நண்பர்கள் என்றே சொல்லிக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். அது மிகமிக சௌகரியமாகவே இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஆண் - பெண் உறவின் அழகான சங்கமம். அன்பின் பரிவர்த்தனை. ஆனால், பெரும்பாலும் இங்கே அந்தப் புரிதல் இன்றியே திருணங்கள் நடக்கின்றன. நான் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தபோது, 'ஏன் உங்கள் பெண்களை (இந்தியாவில்) தீ வைத்து எரிக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்கள். ராமாயணம் தொட்டு இங்கே நடந்து வரும் அந்தக் கொடுமையை மனதில் வைத்து அவர்கள் எழுப்பிய அந்தக் கேள்விக்கு, மிகவும் துயர் அடைந்துதான் விடையளிக்க முடிந்தது. உண்மையை எப்படி மறைப்பது என கடும் தடுமாற்றத்துக்கு உள்ளானேன்.

திருமணத்தை நாம் வியாபாரமாக மாற்றிவிட்டோம். சொத்துக்காகவே கல்யாணம் என்ற கோட்பாடு உள்ளே நுழைந்துவிட்டது. காதல், அன்பு, அக்கறையில் மேலெழும் இல்லறத்தில் சொத்துக்கான இடம் என்ன?

சந்திப்பு: நா.கதிர்வேலன்
படங்கள்: கே.குணசீலன்