Published:Updated:

சவப்பெட்டியில் காதல் கணவன்... கையில் பச்சிளம் குழந்தை...

அந்திய மண்ணில் இந்திய அபலைக்கு நேர்ந்த கொடுமை

சரோஜ் கண்பத்

சவப்பெட்டியில் காதல் கணவன்... கையில் பச்சிளம் குழந்தை...

'பெண் என்றால், பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆனால், இந்தியப் பெண் ஒருவரிடம் பேயைவிட மோசமான மனது படைத்தவர்களாக சவுதி அரேபிய போலீஸ் நடந்து கொண்ட விதம், 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று கொதிக்க வைக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிழைப்பு தேடி, சவுதி அரேபியாவுக்கு சென்ற டாக்டர் தம்பதி ஆசீஸ் சாவ்லா-சாலினி சாவ்லா. தற்போது, சாலினி மட்டும் நாடு திரும்பியிருக்கிறார், பெரும் செல்வத்தோடு அல்ல... கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துபோன தனது ஆருயிர் கணவரின் உடலோடு!

இறந்தபோன கணவனின் உடலை வைத்துக் கொண்டு, ஓராண்டாக அந்நிய மண்ணில், இந்தப் பெண் பட்ட அவஸ்தைகள்... கண்ணுக்குள் முள் வைக்கும் வலி, அதிர்ச்சி, சோகம்!

சவுதி அரேபியாவின் நஜ்ரான் என்ற இடத்திலிருக்கும் 'கிங் கலீடு’ என்கிற மருத்துவமனையில் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். ஆசீஸ் சாவ்லா, இதய மருத்துவர். சாலினி, உள்மருந்து பிரிவுத் மருத்துவர். மருத்துவமனை குடியிருப்பிலேயே வீடு. ஏற்கெனவே இரண்டு வயதில் மகள் இருக்க, இரண்டாவதாக கர்ப்பமானார் சாலினி.

##~##

பிரசவத்துக்கு சில மாதங்களே இருக்க, மருத்துவப் பணியிலிருந்து விலகினார் அவர்.

சீக்கிரமே இரண்டாவது வாரிசு வந்து பூப்போன்ற கால்களால் உதைக்கப் போகிறது என்கிற ஆனந்த அலைகள் நெஞ்சை உரச, சந்தோஷமாக நாட்களை நகர்த்தியிருக்கின்றனர் டாக்டர் தம்பதி. இந்நிலையில்தான், நெஞ்சை நொறுக்கும் அந்த சோகம்... 2010 ஜனவரி 31-ம் தேதியன்று தூக்கத்திலேயே திடீரென நெஞ்சு வலி வந்து, உயிரை இழந்தார் முப்பத்தியாறு வயது ஆசீஸ். அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, ஹார்ட் அட்டாக் மரணம் என்று ரிப்போர்ட்டையும் கொடுத்தனர்.

ஆசீஸ் உடலை இந்தியா கொண்டு வருவதோடு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சாலினிக்கு உதவும் பொருட்டும் ஆசீஸின் சகோதரர் அனுஜ் சாவ்லா, சாலினியின் தயார் உஷா இருவரும் சவுதி சென்றனர். கணவரின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் இருக்கும் நிலையில், சிசேரியன் மூலம் சாலினிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையோடும் கணவனின் உடலோடும் மார்ச் 1-ம் தேதியன்று இந்தியா புறப்படத் தயாரானார் சாலினி.

சவப்பெட்டியில் காதல் கணவன்... கையில் பச்சிளம் குழந்தை...

இந்நிலையில், 'ஆசீஸ் சாவில் சந்தேகம் இருக்கிறது. இறப்பதற்கு முன் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அதுதான் அவருடைய சாவுக்கு காரணம்' என்று குண்டு போட்ட போலீஸ், ஆசீஸின் உடலை இந்தியா கொண்டு போக தடைபோட்டதோடு, சாலினியின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.

இதைத் தொடர்ந்து நடந்தது... இன்னும் கொடூரம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் துளிகூட வெளியில் பேசமுடியாத அளவுக்கு மனதளவில் ரணமாகிப் போயிருக்கும் சாலினி, இந்தியா திரும்பியதுமே சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம், பானிபட் சென்றுவிட்டார்.

சாலினியின் தாய்மாமன் நாக்பால்தான் நம்மிடம் பேசினார். ''ஆசீஸ் ஒருபோதும் மதம் மாறவில்லை. பொய்யான காரணத்தைச் சொல்லி அந்நாட்டில் வேண்டுமென்றே பிரச்னையைக் கிளப்பிவிட்டனர். உச்சகட்டமாக, 'கணவர் மதம் மாறியது பிடிக்காமல் நீதான் விஷம் வைத்து கொன்று விட்டாய்' என்று சொல்லி, பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையோடு சாலினியை ஜெயிலில் தள்ளியது போலீஸ். அந்நாட்டு பத்திரிகைகளும் சாலினியைப் பற்றி தப்பும், தவறுமாக எழுதின.

இதற்கெல்லாம் காரணம்... ஆசீஸ்-சாலினி பணி புரிந்த அதே மருத்துவமனையில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்களும், உள்ளூர்க்காரர்களும் இணைந்து மத துவேஷத்தோடு செய்த சதிதான்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றேன். சில

சவப்பெட்டியில் காதல் கணவன்... கையில் பச்சிளம் குழந்தை...

நிபந்தனைகளுடன் ஷாலினியை ஜெயிலிருந்து வெளியே வர அனுமதித்தவர்கள், அங்கேயே 'ஹவுஸ் அரெஸ்ட்' நிலையில் வைத்தனர். பத்து மாதங்களாக... பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் கமிட்டி அமைக்கப்பட்டது. 'ஆசீஸ் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை. ஹார்ட் அட்டாக் காரணம்’ என்று அறிக்கை கொடுத்தது அந்தக் குழு. அதையடுத்துதான் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார் சாலினி'' என்ற நக்பால்,

''கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இறந்த கணவரின் உடலோடு, நினைவுகளோடு, அவரின் இழப்பு ஏற்படுத்திய வேதனையிலும் பெரிய வேதனையாக 'அவரை நீதான் கொலை செய்தாய்’ என்ற மனசாட்சியே இல்லாமல் சுமத்தப்பட்ட பழியோடு, பச்சிளம் குழந்தையோடு, அதுவும் அந்நிய மண்ணில் தவித்த சாலினியின் கண்ணீருக்கு யார் நியாயம் சொல்வார்கள்?!'' என்று கொதிப்புடன் கேட்டார்!

இத்தனைக்கும் பிறகும், ''குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், டாக்டர் சாலினி விடுக்கப்பட்டுள்ளார். கணவரின் உடலை இஸ்லாமிய மத சடங்குகளின்படி இந்தியாவில் அடக்கம் செய்வார் சாலினி' என்று விஷமத்தனமாகவும் சவுதி அரேபிய பத்திரிகைள் செய்தி வெளியிட்டதுதான் கொடுமை!