Published:Updated:

ரெட்ரோ இன்டீரியரில் கலக்கும் சென்னைப் பெண்கள்!

ரெட்ரோ இன்டீரியரில் கலக்கும் சென்னைப் பெண்கள்!
ரெட்ரோ இன்டீரியரில் கலக்கும் சென்னைப் பெண்கள்!

"நாங்கள் எடுக்கும் ஆர்டர்களுக்கு முழு டிசைனிங்கும் நாங்களே செய்துடுவோம். கஸ்டமர்களின் டேஸ்ட்டை உள்வாங்கி, சுவரிலிருந்து பர்னிச்சர் வரை சின்னச் சின்னக் கலைவேலைப்பாடுகளில் கைத்திறமையைக் காண்பிச்சு அசரடித்திருவோம்."

டைகளில் இப்போது ரெட்ரோ, ஹாட் ட்ரெண்ட். 1970-ம் ஆண்டுகளின் ஃபேஷன், மீண்டும் ரெட்ரோ ஃபேஷனாக வலம்வருகிறது. பழையது புதிய ட்ரெண்டாக மாறுவது ஆடை விஷயத்தில் இயல்பான ஒன்று. ஆனால், வீடுகளின் இன்டீரியரிலும் ரெட்ரோ ஃபேஷன் இப்போது ட்ரெண்ட் அடிக்கிறது. `அடடா... தாத்தா காலத்துப் பொருளைப் பத்திரப்படுத்தியிருந்தால், ட்ரெண்டில் கெத்து காட்டிருக்கலாமே' என யோசிக்கிறீர்களா, உங்களுக்காகவே ரெட்ரோ இன்டீரியரிங்கை அறிமுகப்படுத்துகிறார்கள், சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை வல்லுநர்களான பிரியா மற்றும் ரம்பா.

``எப்போதுமே பழசுக்கு மவுசும் அழகும் அதிகம். அந்தக் காலத்துப் பொருளை எங்காவது பார்த்தால், இப்போ இந்த மாதிரியெல்லாம் கிடைக்கிறதே இல்லைன்னு ஆதங்கப்படுவாங்க. காரணம், அந்தக் காலத்தில் எல்லாப் பொருள்களுமே கலை நுட்பம் மிகுந்து இருக்கும். அதுக்குத்தான் கடை கடையாக ஏறி இறங்கவேண்டியிருக்கு. மக்களின் இந்தத் தேடுதல்தான் எங்கள் பிசினஸுக்கான வெளிச்சம்" என்கிறார் ரம்பா.

``நானும் ரம்பாவும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். இரண்டு பேருடைய டேஸ்டும் ஒரே மாதிரி இருக்கும். அதனால், எந்த புராஜெக்ட் செய்தாலும் சேர்ந்தே செய்வோம். காலேஜில் மத்தவங்க சொன்ன நேரத்துக்கு புராஜெக்ட்டை சப்மிட் செய்துருவாங்க. நாங்களோ கடைசி நேரம் வரை மாற்றி மாற்றி `தி பெஸ்ட்' கொடுப்போம். புதுசு புதுசா தேடித் தேடி கண்டுபிடிச்சு யுனிக்கா பண்ணுவோம். இதுக்கு எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்னு ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. எங்களுக்குத் திருப்தி கிடைக்கும் வரை விடமாட்டோம். காலேஜ் முடிந்ததும், எனக்குத் திருமணமாகி ஹாங்காங்கில் செட்டில் ஆகிட்டேன். ரம்பாவும் யு.எஸ். போயிட்டாங்க. திரும்பிவந்து ஆர்கிடெக் பண்ணிட்டு இருந்தாங்க. 8 வருஷம் கழிச்சு, எனக்கும் இந்தியா திரும்பும் எண்ணம் வந்துருச்சு. கணவரோடு சென்னைக்கு வந்து செட்டில் ஆகிட்டேன். அப்போதான் ரம்பாவுடன் சேர்ந்து ஆர்கிடெக் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். புதுமையாகச் செய்யணும்னு ரெண்டு பேரும் திட்டமிட்டோம்" என்கிறார் பிரியா.

குஷியுடன் குறுக்கிடும் ரம்பா, ``ஹேய்... அந்த வித்தியாசமான ஐடியா பற்றி நானே சொல்றேன். இன்டீரியரில் புதுசா என்ன பண்றதுன்னு பல நாள் நிறைய தேடுதல்கள். அப்போ, ரெட்ரோ ஐடியா மனசுக்குள் உதிக்க, இப்போ இருக்க ட்ரெண்டுக்கு இதுதான் சரியா இருக்கும்னு களத்தில் இறங்கிட்டோம். ரெண்டு மாசம் இந்தியா முழுவதும் சுற்றி, பிசினஸுக்கான அடிப்படைத் தகவல்களைச் சேகரிச்சோம். பழைய பொருள்களை அப்படியே வாங்கி விற்றால், கஸ்டமர்கள் கேட்கும் பொருளை கண்டிப்பாகத் தர முடியாது எனப் புரிஞ்சது. அதனால், அதே மாதிரி சின்ன வித்தியாசம் இல்லாமல் இமிடேட் செய்ய முடிவுசெய்தோம். வெளிநாட்டில் நாம வாங்க நினைக்கும் பொருளை, அதைவிடப் பல மடங்கு குறைவான விலையில் செய்துகொடுக்க இந்தியாவிலேயே நிறைய கலைஞர்கள் இருக்காங்க. நாமதான் அவங்களைச் சரியா பயன்படுத்திக்கிறது இல்லை. நாங்க வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்தப்போ என்ன வகையான பொருள்களை எந்த மாநிலத்தில் கொடுத்தால், சரியான ஃபினிஷிங்கில் இருக்கும் எனத் தெரிஞ்சுகிட்டோம். அப்புறம், நியா ஆட்டிக் என்ற டிசைனிங் நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்களுடைய ஸ்பெஷல், ஆர்கிட்டெக்கோடு இணைந்த இன்டீரியரிங்'' என்கிறார். 

``நாங்கள் எடுக்கும் ஆர்டர்களுக்கு முழு டிசைனிங்கும் நாங்களே செய்துடுவோம். கஸ்டமர்களின் டேஸ்ட்டை உள்வாங்கி, சுவரிலிருந்து பர்னிச்சர் வரை சின்னச் சின்ன கலைவேலைப்பாடுகளில் கைத்திறமையைக் காண்பிச்சு அசரடித்திருவோம். இப்போது நிறைய பேர் ரெட்ரோ சம்பந்தப்பட்ட டிசைனிங்கில் கவரப்படுவதால், இந்த ட்ரெண்டுக்கான நிறைய ஆர்டர்கள் வருது. எந்த நூற்றாண்டுக்குரிய மாடலில் பொருள் வேண்டும் என்றாலும், எந்த நாட்டின் சிறப்பம்சங்களுடன் வேண்டும் என்றாலும், எங்களால் அதைச் செய்துகொடுக்க முடியும். ஒரு கஸ்டமர் எங்களிடம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பெயரைச் சொல்லி, அந்த நாட்டின் பர்னிச்சர் ரொம்ப ஸ்பெஷல். அதைச் செய்துகொடுக்க முடியுமான்னு கேட்டார். அவர் கேட்ட பர்னிச்சரை வெளிநாட்டிலிருந்து வரவழைக்க, லட்சங்களில் செலவாகும். நாங்களோ, இந்தியக் கலைஞர்களைகொண்டே குறைவான விலையில் செய்து, அவரின் வீட்டை அலங்கரிச்சோம். அவர் மெய்சிலிர்த்துட்டார். தன் வீட்டைத் தனித்துவமாக அலங்கரிக்கணும் என்ற விருப்பம் எல்லோருக்குமே இருக்கும். ஆனால், இன்டீரியர் பொருளின் விலையைக் கேட்டு பின்வாங்கிடுவாங்க. அதை மாற்றியதுதான் எங்க ஐடியாவுக்குக் கிடைத்த வெற்றி. ரெட்ரோ ஃபேஷனால் நிறைய கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கமுடியுது. அதேசமயம் எங்களுக்கும் போதுமான மனநிறைவும் லாபமும் கிடைக்குது'' என்கிறார் பிரியா.

யுனிக் இஸ் கிரெட்!

அடுத்த கட்டுரைக்கு