Published:Updated:

செஃப் தாமுவின் வெற்றிப் பயணம்

ரமா ஆல்பர்ட் படங்கள்: வி.செந்தில்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

நளபாக சக்ரவர்த்தி... 'செஃப்’ தாமு! கிராமத்து சமையலில் இருந்து கான்டினென்டல் சமையல் வரை அசத்தும் தாமுவுக்கு, ருசிக்க ருசிக்கச் சமைக்க மட்டும் அல்ல, ரசிக்க ரசிக்கப் பேசுவதிலும் பிரியம் என்பது... சென்னை, கோடம்பாக்கத்தில்  இருக்கும் வீட்டில் அவரைச் சந்தித்த போது புரிந்தது!

''கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் அம்மா சமையல்தான் என் நாக்குக்கு ருசிக்கும். கல்யாணத்துக்கு அப்புறம், கணவன்களின் இலக்கணம் மாறாம, மனைவி சமையலுக்கு அடிமை ஆகிட்டேன்...''

- கலகலவென தாமு சிரிக்க, அம்மா கோதைநாயகி, மனைவி உஷா இருவரும் கூடவே குலுங்கிச் சிரித்தார்கள்.

''மட்டன் கிரேவி செய்யும்போது, கிரேவியை இன்னொரு கிண்ணத் துக்கு மாத்திட்டு, அந்தக் கடாய்ல கொஞ்சம் சாதம் போட்டுப் புரட்டி உருண்டை பிடிச்சுக் கொடுத்தா, அவ்வளவு பிரியமா சாப்பிடுவான். அப்புறம்... குழந்தை மாதிரி பருப்பு சாதமும், தக்காளி சூப்பும் ரொம்பப் பிடிக்கும். கருணைக்கிழங்கு வறுவல்னா ஒரு பிடி பிடிச்சுடுவான்!'' என்றபோது, தன் பிள்ளைக்கு ஒரு வாய் ஊட்டியது போல் திருப்தி கோதைநாயகியின் கண்களில்.

செஃப் தாமுவின் வெற்றிப் பயணம்

''சரி... உங்க கைப்பக்குவத்தில் சாருக்குப் பிடிச்சது என்ன..?'' என்றதும், உற்சாகமானார் உஷா.

''சேமியா உப்புமாதான். சில நாட்கள் வீட்டுக்கு வர நைட் 12 மணிகூட ஆயிடும். இடையில் போன் பண்ணி, 'உஷா... சேமியா உப்புமா செஞ்சு வெச்சுடும்மா...’னு சொல்வார். தொட்டுக்க சர்க்கரை மட்டும் போதும்... திருப்தியா சாப்பிடுவார். நான்-வெஜ்ல இறால், சுறா புட்டு, வறுத்த மீன்... இதெல்லாம் ஆசையா சாப்பிடுவார். ஆனா... 'இதுதான் வேணும், இது வேண்டாம்'னு சாப்பாட்டுல எந்தப் பிடிவாதமும் அவர்கிட்ட இல்லை'' என்று உஷா சொன்னபோது, புகழ் பெற்ற அந்த கரண்டிக்காரர் தாமுவின் எளிய உணவு ரசனை வியக்க வைப்பதாக இருந்தது.

''என் மகளும், மருமகனும் லண்டன்ல இருக்காங்க. மருமகனும் சமையல்ல அசத்துவார். அவர்... சாஃப்ட்வேர் இன்ஜினீயர். படிப்பை முடிச்சதோட வேலைக்காக லண்டன் போயிட்டதால, அங்க பேச்சிலர் சமையல் பழகியிருக்கார். அப்படியே கிச்சன் கில்லாடி ஆகிட்டார். பெண்ணோட திருமணத்துக்கு முன்ன, அங்க போய் 15 நாள் அவரோட நான் தங்கினேன். முழுக்கோழியில பதமா மசாலா போட்டு சமைச்சு... பிரியாணி செஞ்சு, அதை அந்தக் கோழிக்குள் வெச்சு அவர் கொடுத்தது... சூப்பர்!'' என்று சப்புக் கொட்டும் தாமு, ''ஆண் பிள்ளைகளும் சமையல் கற்றுக்கொள்ளணும்கிறது காலத்தின் கட்டாயம்'' என்பதை வலியுறுத்தினார்.

''ஒண்ணு தெரியுமோ... நான் கேட்டரிங் டெக்னாலஜி படிக்கப் போறேன்னு சொன்னப்போ, ரொம்பத் தயங்கினாங்க எங்கம்மா. 'உனக்கெதுக்குடா சமையல்காரன் வேலை? ஒழுங்கா ஏதாவது ஒரு டிகிரி முடிச்சுட்டு, ஆபீஸ் உத்தியோகத்துக்கு போகப் பாருடா’னு கவலைப்பட்டாங்க. ஆனா, 1974-ல், கிட்டத்தட்ட 27 வருஷத்துக்கு முன்னயே கேட்டரிங்குக்கு எதிர்காலம் இருக்கும்னு கணிச்சு, பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பை விடச் சொல்லி, தரமணி கேட்டரிங் இன்ஸ்டிடியூட்ல சேர்த்துவிட்டது எங்கப்பாதான். இன்னிக்கு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கறதுக்கு, அவரோட அந்த தைரியமான முடிவுதான் பிள்ளையார்சுழி!'' என்ற தாமுவிடம், சமீபத்திய 'கின்னஸ்’ சாதனை அனுபவம் பற்றிக் கேட்டோம்.

செஃப் தாமுவின் வெற்றிப் பயணம்

''24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 விநாடிகளில் மொத்தம் 617 வகை டிஷ்களை சமைத்தேன். செய்த உணவு பதார்த்தங்களோட எடை... 199 கிலோ. ஆறு கேஸ் அடுப்புகள் மட்டும் தொடர்ந்து எரிஞ்சாலும், 'மைக்ரோவேவ் அவன்’ மாதிரி எந்த நவீன உபகரணங்களும் அனுமதிக்கப்படல. இப்படி இன்னும் பல கடுமையான நிபந்தனைகள். இருந்தாலும், அம்மா, மனைவி, மகள் கொடுத்த மாரல் சப்போர்ட், மருத்துவர்களோட அக்கறை, எனக்கு பக்கபலமா இருந்த என் ஸ்டூடன்ட்ஸ் 30 பேர் மற்றும் சவேரா ஹோட்டலோட டைரக்டர் மீனா ரெட்டி... எல்லாத்தையும்விட சமயபுரத்து அம்மனோட அருள்... இதெல்லாம்தான் சமையலில் கின்னஸ் சாதனை படைச்ச முதல் தமிழன்ங்கிற பெருமையை எனக்கு வாங்கிக் கொடுத்தது!'' - தன்னடக்கப் புன்னகை தாமுவிடம் இருந்து.

''அரக்கப்பரக்க சாப்பிடறது, நடந்துட்டே சாப்பிடறது, கார்ல சாப்பிடறது... இதெல்லாம் கூடவே கூடாது. சாப்பாட்டுக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி, அது ரசம் சாதமா இருந்தாகூட... நல்லா மென்னு, ரசிச்சு சாப்பிடணும். மனுஷன் ஆடி ஓடி உழைக்கிறதே இந்த எண் சாண் வயித்துக்குத்தானே..?!''

- சத்தமான சிரிப்புடன் சொன்னார்... 'செஃப்’ தாமு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு