பிரீமியம் ஸ்டோரி
தில்... த்ரில்... தேனிலவு!

னி மூடிய மலைச் சாலை... இணையுடனான ஈரப்பயணம்... உள்ளூரக் கொஞ்சம் பயமிருந்தாலும்கூட, அடுத்து என்ன பார்க்கப் போகிறோம் என்கிற ஆசையின் உந்துதலில் இமயத்துக்கு இருசக்கர வாகனத்திலேயே 26 நாள்கள் சென்று ஹனிமூன் கொண்டாடித் திரும்பியுள்ளனர் அஜய் - பிரின்சி ஜோடி.   

தில்... த்ரில்... தேனிலவு!

அஜய், மாஸ்டர் ஆப் சோஷியாலஜி முடித்துவிட்டுச் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் வசிக்கும் ஊராளி பழங்குடி மக்களின் உரிமைக்காகப் பணிபுரிகிறார். பைக் டிராவல், காட்டுக்குள் சுற்றுலா என த்ரில் பயணங்களை விரும்புகிறவர். இவரின் மனைவி பிரின்சி, இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்துவிட்டுப் பள்ளி மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கிறார். இப்போது கோவைப் பகுதியில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் நடனம் கலந்த உடற்பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். எப்போதும் குழந்தைகளுடன் வேலை செய்வது பிரின்சியின் விருப்பம்.

நட்பு, காதல், திருமணம் என இருவரும் இணைந்து வாழ்வின் பயணத்தைத் தொடங்கிய கையோடு, தேனிலவுக்காக இமயமலைக்கு இருசக்கர வாகனத்திலேயே சென்றுவந்தது அத்தனை பேருக்கும் ஆச்சர்யம்.   

தில்... த்ரில்... தேனிலவு!

``நாங்க பதிமூணு வருஷமா ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேருக்குமே எங்களோட விருப்பு வெறுப்பு எல்லாமே நல்லா தெரியும். நாலு வருஷத்துக்கு முன்னாலதான் எங்களுக்குள்ள இருக்கிற லவ்வைக் கண்டுபிடிச்சோம். ஹனிமூனுக்கு பைக் டிராவல் மூலமா காஷ்மீர், சிம்லா, லடாக்னு சுத்துறதுதான் பிளான்னு நான் சொன்னதும், பிரின்சி ரொம்ப எக்சைட் ஆனாங்க. இப்படி ஒரு  திட்டத்தை வீட்டுல சொன்னா யார் ஏத்துப்பாங்க? அதனால சீக்ரெட்டாவே வெச்சிருந்தோம். லடாக் வரை பைக்லன்னு நினைக்கும்போதும், அதைப் பற்றிப் யோசிக்கும்போதும் எங்களுக்கு அந்தப் பனிமலைச்சாரல்ல பறக்குறமாதிரியே இருக்கும். கல்யாணத்தைவிட ஹனிமூன் டிராவல் பத்தின எதிர்பார்ப்புதான் ரெண்டு பேருக்கும் அதிகமா இருந்தது.  

நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே, உடற்பயிற்சி, டயட்னு உடலையும் மனசையும் இந்த த்ரில் பயணத்துக்காகத் தயார் செய்தோம். இமயமலையில பார்க்க வேண்டிய இடங்கள், பயணத்துக்கான சாலைகள், தங்கும் இடங்கள்னு ஆன்லைன்ல தேடி, தகவல்களை எடுத்து பட்ஜெட் பிளான் பண்ணினோம். டெல்லி வந்ததும் 25 நாளுக்கு அட்வென்சர் பைக் வாடகைக்கு எடுத்தோம்.

எங்க ஹனிமூன் பயணம் ராயல் என்பீல்ட்ல தொடங்குச்சு. முதல்ல நாங்க போன இடம் தாஜ்மஹால். டெல்லியைச் சுற்றிக் கொஞ்சம் இடங்கள் அப்படியே ஜாலியாப் போச்சு.  

தில்... த்ரில்... தேனிலவு!

ரெண்டு பேருக்கும் குளிர் தாங்குற ஜாக்கெட்ஸ், மூணே மூணு டிரஸ், ஒரு கேமரா, செலவுக்கான பணம்... இவ்வளவுதான் பேக்கேஜ். சாப்பாடு பத்தியெல்லாம் பெரிய பிளான் எதுவும் இல்லாம, வழியில கிடைச்ச உணவைச் சாப்பிட்டோம். அடுத்து போகப்போற லொகேஷன் பத்தி அங்கிருந்த மக்கள்கிட்ட விசாரிச்சுட்டே பைக் போன போக்குல டிராவல் செய்தோம். சில இடங்கள்ல நாங்க மட்டும்தான் மலைப்பாதையிலே போயிட்டிருப்போம். அந்தமாதிரி நேரத்துல ரெண்டு பேருக்கும் ஹார்ட் திக் திக்குன்னு அடிச்சாலும், வெளிய காட்டிக்காம, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா பேசிட்டே போவோம்.

அப்படியும் ஓர் இடத்துல மழையில மாட்டி ஃபுல்லா நனைஞ்சிட்டோம். பனிச்சரிவுல நாங்க போயிட்டிருந்த பாதையே காணாமல் போச்சு. எங்கயாச்சும் தங்க முடியுமான்னு தேடுனதுல ஒரு வீட்டுத் திண்ணையைக் கண்டுபிடிச்சோம். ஆனா, எங்களுக்கு முன்னாடியே, அங்கே பத்துப் பேர் தஞ்சம் அடைஞ்சிருந்தாங்க. அந்த ஈரத்துணியோடவே அன்னிக்கு இரவு முழுக்க இருந்தோம். செம்ம எக்ஸ்பீரியன்ஸ் அது.  

தில்... த்ரில்... தேனிலவு!

கொஞ்ச தூரம் வரைக்கும்தான் சப்பாத்தி மாதிரியான இந்திய உணவு கிடைச்சுது. அதுக்கப்புறம் பிரெட் ஆம்லெட்டும் நூடுல்ஸும் மட்டும்தான் சாப்பிட்டோம். பல இடங்கள்ல டாய்லெட் இல்லாம பிரின்சி கஷ்டப்பட்டாங்க. போகப் போக சூழலைப் புரிஞ்சுக்கிட்டுப் பழகிட்டாங்க.

சிம்லா பகுதியில பல இடங்களுக்குப் போனோம். உலகத்துலயே மிகவும் அபாயகரமான ட்ரச்ரஸ் சாலையில (Treacherous Road) பயணிச்சது பயங்கர த்ரில் அனுபவம். நுப்ரா பள்ளத்தாக்கில் பயணிக்கும்போது ஒரே பனி. அவ்ளோ குளிரை அதுக்கு முன்ன அனுபவிச்சதில்ல. இப்போ நினைச்சாலும் மனசுல சில்லுனு ஓர் உணர்வு.    

தில்... த்ரில்... தேனிலவு!

அங்கிருந்து இருபதே கிலோமீட்டர் தொலைவுல ஒரு பாலைவனம். அங்க இரண்டு திமில்கொண்ட ஒட்டகங்கள். பார்க்கற இடம் ஒவ்வொண்ணுமே ஆச்சர்யப்படுத்துச்சு. இவ்வளவு கஷ்டப்பட்டு பயணிச்சது இந்த மாதிரியான பரவச உணர்வுகளுக்குத்தானே?

திருமண வாழ்க்கையோட ஆரம்பத்துலயே வாய்த்த இந்தப் பயண அனுபவம் எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அன்பையும் புரிதலையும் அதிகமாக்குச்சு. இருபது வருஷம் வாழ்ந்து கத்துக்க வேண்டிய விஷயங்களை அந்த 25 நாள்ல கத்துக்கிட்டோம்னே சொல்லலாம்.

கடைசி நாலு நாள்கள் அவ்ளோ பனி, மழை, பனிச்சரிவுன்னு செம த்ரில்லா இருந்துச்சு. நிச்சயமா, நம்மால இந்தப் பயணத்தை முடிச்சிட்டு, பாதுகாப்பா திரும்ப முடியும்னு நம்பினோம். அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு வழித்துணையா இருந்தது” என்கிற அஜய்யைப் பார்த்துப் புன்னகைத்தவாறு பேசுகிறார் பிரின்சி.  

தில்... த்ரில்... தேனிலவு!

‘‘எனக்கு எல்லாமே புது அனுபவம். ஹனிமூன் ப்ளஸ் த்ரில் பயணம்னு என்னோட சந்தோஷமே வேற லெவல். நான் ஊட்டில வளர்ந்ததால குளிர ஈஸியா சமாளிச்சிட்டேன். ஆனா, இப்படி ஒரு டிராவலைக் கற்பனை பண்ணியும் பார்த்ததில்லை. பனிமலைகள், பள்ளத்தாக்குகள், பூக்கள், உயரமான இடங்கள், பாலைவனம், ஒட்டகப் பயணம்... இப்படி மணிரத்னம் படங்கள்ல வியந்து பார்த்த இடங்கள்ல, நானும் அந்த குளிர்ல குழந்தையானேன். கஷ்டப்பட்டுக் கிடைக்கிற சந்தோஷத்துக்கு ஆயுள் அதிகம்னு சொல்வாங்க. அந்தச் சந்தோஷம் இமயமலைப் பயணத்துல கிடைச்சது.

இந்தப் பயணத்தால நிறைய விஷயங்களும் கத்துக்க முடிஞ்சது. வீட்ல ஒரு குப்பை இருக்கக் கூடாது, டாய்லெட் சுத்தமா இருக்கணும், சாதாரண ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு... நான் பர்சனலா நிறைய கண்டிஷன் வெச்சிருப்பேன். `இப்படித்தான் இருப்பேன்’னு தத்துவமெல்லாம் ஃபாலோ பண்ணிட்டிருந்தவ நான். விடிய விடிய ஈரத்துணியோட காத்திருந்தது, ஓப்பன்ல டாய்லெட் போக இடம் கிடைச்சா போதும்னு அலைஞ்சது, சாப்பாடு எங்க கிடைக்கும்னு பசியோட பயணிச்சதுன்னு... இந்த அனுபவம் என்னைப் புது பிரின்சியா மாத்திடுச்சு. சாப்பிடுறது, டிரஸ் பண்ணிக்கிறதுன்னு எனக்கான எதிபார்ப்புகள் எல்லாத்தையும் இந்த ட்ரிப் தலைகீழா மாத்திடுச்சு. பயணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் என்னோட ரூல்ஸை எல்லாம் டஸ்ட் பின்னுல போட்டுட்டேன். இனி வாழ்க்கைல இதைவிட பெரிய கிஃப்டை யாராலும் எனக்குத் தர முடியாது” என்கிற பிரின்சியைக் காதல் பார்வைப் பார்த்தபடி தொடர்கிறார் அஜய்...

“ட்ரிப் முடிஞ்சு வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டயும் போட்டோஸ் காட்டினதுக்கு அப்புறம்தான் எங்க பிளான் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சுது. முதலில் ஆச்சர்யப்பட்டாலும், `வழியில ஏதாவது நடந்திருந்தா’ன்னு திட்டவும் செஞ்சாங்க. மறுவீடு போறது, திருமண சம்பிரதாயம்னு நாங்க கலந்துக்கிட்ட இடத்துல எல்லாம் எல்லாரும் எங்க ஹனிமூன் ட்ரிப் பற்றிதான் அதிகமா விசாரிச்சாங்க. இப்போ எங்களுக்குள்ள சின்னச் சின்னச் சண்டைகள் வரும்போது எங்க ஹனிமூன் போட்டோஸ், அங்கே கிடைச்ச அனுபவங்கள் எல்லாம் எங்களை கூல் பண்ணிடுது. அவ்ளோ பெரிய பிரச்னைகளை ஒண்ணா சமாளிச்சோம், இப்படி சின்ன விஷயத்துக்குப் போய் முகத்தைத் தூக்கி வெச்சுக்கணுமான்னு, வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளை ரொம்ப ஈஸியா ஹேண்டில் பண்ண முடியுது. மொத்தத்துல அவ்ளோ உயரமான மலையில த்ரில்லா, ரொம்ப தில்லா ஹனிமூன் கொண்டாடிட்டோம்ல’’ எனக் காதல் மனைவிக்கு ஒரு ஹை-ஃபை கொடுத்தார் அஜய்.

பயணங்கள் வெறும் தூரம் கடத்தல் மட்டும் இல்லை. அவை மனதைப் பண்படுத்தும் உளிகள்!

- யாழ் ஸ்ரீதேவி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு