Published:Updated:

இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...
இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...

இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...

பிரீமியம் ஸ்டோரி

``கூகுள் வந்த பின் உள்ளூர்ல இருந்து உலகம் முழுக்க எல்லா விஷயங்களையும் இருந்த இடத்துல இருந்தே தெரிஞ்சுக்க முடியுது. முன்னாடியெல்லாம் ஹனிமூன் போகறதுக்குத் திட்டம் போடணும்னா மனசுல சந்தோஷத்துக்கு முன்னாடி ஒருவித பயம்தான் வரும். தெரியாத இடம், எங்க தங்கறது, என்ன சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சு... ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும். ஆனா, இப்போ ஹனிமூன் போறதுக்கான இடத்தைத் தேர்வு செய்யறதுல இருந்து, அங்கே போறதுக்கான டிக்கெட், தங்கற ஹோட்டல், சுற்றிப் பார்க்குற இடங்களுக்கான திட்டமிடல்னு  மொத்த ட்ரிப்புக்கான பிளானையும் கூகுள் ஆண்டவர் மூலமாவே பிளான் பண்ணிட முடியுது. ஆனாலும், புதுமண தம்பதியர் ஹனிமூன் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன” எனும் ‘கிராண்ட் ராயல் டூர்ஸ்’ நிறுவன நிர்வாக இயக்குநர் சுகந்தி சரவணன், ஹனிமூன் ட்ரிப்புக்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை விளக்குகிறார்.

இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...

அவசர எண்கள் கையில் இருக்கட்டும்:

நீங்கள் உள்நாடு, வெளிநாடு என்று எந்தச் சுற்றுலாத்தலத்துக்கு செல்வதாக இருப்பினும் அங்கு நீங்கள் செல்லும் இடங்களின் லேண்ட் லைன் தொடர்பு எண்கள், உங்களுக்கு உதவப் போகும் நபர்களின் செல்போன் எண்கள் அனைத்தையும் செல்போனில் பதிவு செய்வதோடு, சிறிய நோட் புக்கிலும் குறித்துக் கொள்ளவும். செல்போன் தொலையவும், இயங்காமல் போகவும் வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு. உள்நாட்டுக்குள் என்றால் அந்த ஊர்களில் உள்ள உறவினர், நண்பர் மற்றும் நீங்கள் பணியாற்றும் நிறுவனம் தொடர்பான எண்கள், உள்ளூர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் என உங்களுக்கு ஆபத்துக்கு உதவப் போகும் எண்களும் கையில் இருக்கட்டும்.

வழிப்போக்கர்களின் வழிகாட்டுதலை நம்ப வேண்டாம்... அடையாளமற்றவர்களைத் தவிர்த்திடுங்கள்:

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிநாட்டுக்கு விமானத்தில் பறந்து செல்கிறீர்கள். அங்கு நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கான வழி எதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்கப்போவதில்லை. அங்குள்ள அறிமுகமில்லாத நபர்கள் வழிகாட்டுகிறேன் என்றால் உடனடியாக அவர்களை நம்பி பயணிக்க வேண்டாம். புதிய ஊரில் உங்கள் நண்பர்கள், உறவுகள் இருப்பின் ஏர்போர்ட் வரை வந்து அவர்களை வழிகாட்டச் சொல்லலாம். அல்லது உரிமம் பெற்ற கேப், வாகனத்தில் பயணிக்கவும். நீங்கள் தங்கப்போகும் விடுதியின் மூலமாகப் பயணத்துக்கான வசதியைக் கேட்டுப் பெறலாம்.

இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...

பணத்தைப் பகிர்ந்து பத்திரப்படுத்தவும்:

வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஒரே இடத்தில் பணம், கிரெடிட் கார்டு மற்றும் டிராவலர் செக் ஆகியவற்றை பத்திரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களது உடை, கைப்பை, பர்ஸ் மற்றும் பேக் என வெவ்வேறு இடங்களில் பிரித்து வைக்கவும். ஒரு பொருள் தொலைந்து விட்டாலும் இன்னோர் இடத்தில் இருக்கும் பணம் கைகொடுக்கும். அனைத்தையும் ஒன்றாய்த் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. விடுதியைத் தேர்வு செய்யும்போதும் பாதுகாப்பானதா என்பதை டிராவல்ஸில் கேட்டு உறுதிசெய்து கொள்ளவும். அங்கும் பணத்தைப் பத்திரப்படுத்த வேண்டியது அவசியம்.

விழித்திருங்கள்:

புதிய நாடு மற்றும் மொழி தெரியாத ஊர்களுக்கு ஹனிமூன் சென்றால் எதுவும் தெரியாத அப்பாவியாக, பயப்படுவதை விட்டு விடுங்கள். உங்கள் நடவடிக்கையில் தைரியம் இருக்க வேண்டும். உங்களைச் சுற்றிலும் இருக்கும் சூழலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பாதுகாப்பற்ற இடங்களில் தனியாகச் சென்று மாட்டிக்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். விலை உயர்ந்த உடை, நகைகளை அணிந்து செல்வதும் பாதுகாப்பற்றது. போகும் ஊருக்கு ஏற்ற உடையைப் பயன்படுத்தவும். பொது இடங்களில் செல்போனைப் பார்த்தபடி மெய் மறந்த நிலைக்குப் போய்விடாதீர்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் விழிப்போடிருங்கள்.

ஆவணங்களை ஆன்லைனுக்கு மாற்றுங்கள்:

இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது ஒரு சில அசல் ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். போகும் இடத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆவணங்களை ஸ்கேன் செய்து உங்களது மெயிலில் பத்திரப்படுத்துங்கள். போகும் இடத்தில் ஆவணங்கள் தொலைந்தாலும், இவை  உதவும். அதே போல் தொலைத்தவற்றை திரும்ப வாங்கவும் அவற்றின் நகல்கள் இருந்தால் உதவும். ஒரு செட் நகலெடுத்து அதை வீட்டில் பத்திரப்படுத்திச் செல்வதும் அவசியம்.

பணத்தைவிட பாதுகாப்பு முக்கியம்:

விடுதிகளைப் பதிவு செய்யும் போது, எது குறைந்த கட்டணம் என்று திட்டமிட வேண்டாம். நீங்கள் சுற்றுலா செல்லும் இடங்களுக்குப் பக்கத்தில் விடுதி இருக்கட்டும். இதனால் பயண நேரம் மற்றும் பயணச் செலவுகள் மிச்சம் ஆகும். ஏற்கெனவே டிராவல்ஸ் நடத்தி வருபவர்களின் ஆலோசனை பெற்றுத் திட்டமிடலாம். ஹனிமூன் என்பது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வருவது. டென்ஷன் இல்லாமல் அந்த நேரத்தைக் கொண்டாடுவது மிக அவசியம்.

வாங்கிக்குவிப்பதைத் தவிர்க்கலாம்:

ஓர் இனிய அனுபவத்துக்காக ஹனிமூன் செல்கிறோம். திருமணமான புதிதில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள அந்த நேரத்தைச் செலவிடலாம். அன்பு செய்வதைவிட பேரின்பம் எதுவும் இல்லை. புதிய ஊர் என்பதால் வித்தியாசமான பொருள்களை வாங்கிக்குவிப்பது சிலரின் வழக்கம். அப்படி வாங்கியதைப் பயணம் முழுக்கச் சுமப்பதும், பத்திரப்படுத்துவதும் தலைவலியாக மாறிவிடும். இதனால் பணமும் கரையும். ஹனிமூன் பயணத்துக்கு கிளம்பும்போதே தேவையற்ற பொருள்களை வாங்குவதில்லை என்பதை முடிவு செய்து விட்டுச் செல்வது பட்ஜெட்டுக்கும் நல்லது.

திகிலோடு தித்திப்பும் அவசியம்:

வெவ்வேறு குடும்பச் சூழலில் வளர்ந்த இருவர், காதலர்களாகவே இருந்தாலும் உரிமையோடு பயணிப்பது அதுவே முதன்முறையாக இருக்கும். தன் மனைவிக்கு த்ரில் தர வேண்டும் என்பதற்காக அபாயமான பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். போகும் இடங்களில் ஆண்கள் ஆபத்தான விளையாட்டுகளில் இறங்கி, தன் மனைவிக்கு கெத்துக்காட்ட  நினைப்பார்கள். ஹனிமூன் என்பது மகிழ்ச்சிக்கான ட்ரிப். இதுபோன்ற சவாலான முயற்சிகள் ஆபத்தில் முடிந்தால் வாழ்க்கை முழுவதும் சோகத்தைச் சுமக்க வேண்டியதாகிடும். த்ரில்லை விட தித்திப்பு அவசியம்.

அழகிய தனிமை:

இப்படியொரு தனிமை நீங்கள் கற்பனை செய்தாலும் கிடைக்கப்போவதில்லை. முடிந்தவரை ஒருவரையொருவர் அன்பால் நிரப்புங்கள். அன்பு செய்வதில் போட்டியிடுங்கள். அந்தத் தனிமையில் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்வதும், ‘நீ என் வாழ்வில் எவ்வளவு முக்கியம்’ என்பதை உணரவைப்பதற்குமான தருணங்களைத் தவறவிடாதீர்கள். தனிமை என்பது ஒருவருக்கானது எனும் கருத்துக்கு விதிவிலக்காக அமைந்திடும், இந்த இருவருக்குமான தனிமைப் பொழுதின் அனுபவத்தை அன்பின் பெருங்கடலாய் மாற்றிடுங்கள்.

உங்களுக்குள் முதல் முத்தம்... முதல் ஸ்பரிசம் போல முதல் பயணத்தையும் பதிவு செய்யுங்கள்.

ஹாப்பி ஹனிமூன்!

- எஸ்.டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு