Published:Updated:

பக்கத்து வீட்டு பஞ்சாபி, எதிர்வீட்டுக் கன்னடம், மலையாளம் பழகட்டும் அப்பார்ட்மென்ட் குழந்தைகள்!

`` `ஆ' எனக் காட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்தியாவைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாடும் இல்லை”

பக்கத்து வீட்டு பஞ்சாபி, எதிர்வீட்டுக் கன்னடம், மலையாளம் பழகட்டும் அப்பார்ட்மென்ட் குழந்தைகள்!
பக்கத்து வீட்டு பஞ்சாபி, எதிர்வீட்டுக் கன்னடம், மலையாளம் பழகட்டும் அப்பார்ட்மென்ட் குழந்தைகள்!

மிழகத்தில் பரவலாக அறியப்படும் பேச்சாளர்களில் ஒருவர், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்.  உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருப்பவரைத் தொலைபேசியில் அழைத்தபோது, ``அடுத்த வாரம் இங்கிலாந்து கிளம்பறேன் கண்ணா. அதற்குள் ஒப்புக்கொண்ட பள்ளிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும். இன்னொரு முறை சந்திக்கலாமே” என்றார் மென்மையாக. அவரது உரையாடலை அப்படியே விட்டுவிடாமல் ``உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா தொலைபேசி மூலமே பேசிடலாம்” என்றதும் சம்மதித்தார்.

``இயற்கைப் பேரிடர்களின்போது மட்டுமே மனிதத்துவம் அதிகமாக வெளிப்படுகிறதே...?'' என ஆரம்பித்தேன். இனி அவருடன்...

``தற்போது கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கானாலும் சரி, 2015-ம் ஆண்டில் தமிழகம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோதும் சரி, அங்கே முதலில் மனிதர்களுக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வும் அச்சமும்தான் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது. நம்முடைய பாரம்பர்யமான ஜல்லிக்கட்டைக் காப்பாற்றவில்லையே என்கிற குற்றவுணர்ச்சிதான் போராடத் தூண்டியது. நாம் ஏதோ ஓர் இடத்தில் தவறு செய்துவிட்டோம். அந்தத் தவறுதான் நமக்கு எதிராக வந்து நிற்கிறது. இதை நாம்தான் சரி செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சியில், தவற்றைத் திருத்த முயல்கிறோம். தனியாக நின்று பயப்படுவதைவிட 10 பேருடன் சேர்ந்து நிற்கும்போது பயம் குறையும். நான் மட்டுமல்ல, எல்லோரும் சேர்ந்தே தவறு செய்திருக்கிறோம் என நினைக்கும்போது இன்னும் பயம் குறையும். இது காலம் காலமாகவே எல்லோருக்குள்ளும் இருப்பதுதான். இந்த எண்ணம் இல்லாமல், தவறு என்னால் மட்டுமே நிகழ்ந்தது என ஒற்றை மனிதராகப் பொறுப்பை ஏற்பவர்கள் மகாத்மா ஆகிறார்கள்.'' 

``கூட்டுக்குடும்பம் சிதைவுக்கான காரணிகள் என்னென்ன, அந்த வாழ்க்கை முறைக்குள் மீண்டும் செல்லமுடியுமா?''

``கூட்டுக்குடும்பமாக வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைய காலகட்டத்தில் இல்லை. முன்பு வீட்டுக்கு வீடு விவசாயம் இருந்தது. ஆடு, மாடு கோழி வளர்ப்பு என ஆளுக்கொரு வேலைகளைப் பிரித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, பெரியப்பா, மாமா என அனைவரிடமும் இருக்கும் குணங்களை பிள்ளைகளுக்குக் கடத்த முடிந்தது. ஆனால், அப்பாவும் அம்மாவும் காலையில் வேலைக்குப் போய் மாலையில் வீடு திரும்பும் இன்றைய சூழ்நிலையில் இரவு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. வீட்டில் உள்ளவர்களின் நல்ல பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். இப்போதைய காலகட்டத்தில், ஒவ்வொரு அப்பார்ட்மென்ட்டும் ஒரு கூட்டுக்குடும்பம்தான். கதவைச் சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்காமல், அக்கம் பக்கத்தில்  நெருங்கிப் பழக வேண்டும். அப்பார்ட்மென்ட்களில் இருக்கும் தாத்தா, பாட்டிகளுடன் சேர்ந்து கதைக்கலாம். டி.வி மட்டுமே உலகமாக இருந்துவிடாமல் அருகிலிருக்கும் மனிதர்களின் முகத்தையும் பார்க்க வேண்டும். இதைப் பழக்கினால், உங்கள் பிள்ளைகள், பக்கத்து வீட்டு பஞ்சாபி, எதிர் வீட்டு மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிப் பழக்கவழக்கங்களையும் கலாசாரங்களையும் தெரிந்துகொள்ளும்.''

``பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்கிறீர்கள். குழந்தை வளர்ப்பில் மேலைநாடுகளுக்கும் இந்தியாவுக்குமான வேறுபாடு எதுவாக இருக்கிறது?''

``வளர்ந்து வரும் நாடாகச் சொல்லப்படும் இலங்கை போன்ற நாடுகளிலும், வளர்ந்த நாடான மலேசியாவிலும் கல்வியை இலவசமாகக் கொடுக்கும்போது, அங்குள்ள மக்களும் அதன்மீது தார்மிகப் பொறுப்போடு இருக்கிறார்கள். அங்கே தேர்வு முடிந்ததும் புத்தகங்களைக் கிழித்துப் போடுவதில்லை. பள்ளியில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் கசங்காமல், கிழியாமல் அடுத்த வருட மாணவர்களிடம் கொடுத்தாக வேண்டும். புத்தகங்களை நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும் என்கிற அக்கறையும் பொறுப்புஉணர்வும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கிறது. எதுவும் இலவசமாகக் கொடுக்கப்படும்போது, அது மக்களுடைய வரிப்பணம் என்பதை நினைத்துக்கொள்கிறார்கள். யாருடைய உழைப்போ எனது கல்விக்காக உருமாறி வருகிறது என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்தப் பொறுப்பு வந்தாலே ஒரு நாட்டின் கல்வித்தரம் உயரும். கல்வி என்கிற மிகப்பெரிய அஸ்திவாரத்தின் ஊடாக இப்படியான பொறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டும்.

அதேநேரம், கல்வி மட்டுமே குழந்தைகளை இந்தச் சமுதாயத்தில் தலைநிமிர்த்தி விடாது. நீங்கள் எதை உங்கள் குழந்தைகளிடம் சொல்கிறீர்களோ, அதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக நீங்கள் மாறியிருக்க வேண்டும். இந்த உணவைச் சாப்பிடாதே என்றால், அந்த உணவுப் பழக்கம் உங்களிடம் இருக்கக் கூடாது. கத்தாதே என்பதை, நீங்கள் கத்தியபடியே சொல்வதில் பயனில்லை. இப்படித்தான் வளர வேண்டும் எனப் பிள்ளைகளிடம் சொல்வதற்கு முன்பு, அவர்களுக்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். புலி தன் குட்டியைப் புலியாகவும், பூனை தன் குட்டியைப் பூனையாகவும்தான் வளர்க்கிறது. நாம்தான் நம் கற்பனைகளுக்கேற்றவாறு வளர்க்க நினைக்கிறோம். குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இல்லை. குழந்தைகளுக்கான பேச்சு இல்லை. குழந்தைகளுக்கான மொழிகூட இல்லை. `நிலா நிலா ஓடிவா', `ஓடி விளையாடு பாப்பா' பாடல்கள் எல்லாம் அவர்களிடமிருந்து பறிபோய்விட்டது. `டாடி மம்மி வீட்டில் இல்லை' பாடலைப் பாடுகிறார்கள். இப்படி நாம்தான் பிஞ்சிலேயே பிள்ளைகளைப் பழுக்க வைக்கிறோம். 

பலரும் நதிகளை சூறையாடிட்டாங்க, இயற்கை வளத்தைக் கொள்ளையடிச்சிட்டாங்கன்னு புலம்புறோம். ஆனால், குழந்தைகளின் குழந்தைத்தனத்தையே பறிச்சுட்டது பற்றி ஏன் கவலைப்பட மாட்டேங்குறோம். எங்களுக்குக் கிடைக்காததை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கணும்னு நினைச்சோம். ஆனால், எங்களுக்குக் கிடைச்ச நல்லவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தணும்ங்கிறதை மறந்துட்டோம். எனக்கு சைக்கிள் கிடைக்கலை. என் பையனுக்கு பைக் வாங்கிக் கொடுக்கணும், நான் செருப்பு போட்டவன், என் பையன் விதவிதமா ஷூ போடணும். நான் ப்ளஸ் டூ படிச்சேன். என் பொண்ண எம்.பி.பி.எஸ் படிக்க வைக்கணும்னு நினைக்கிற மாதிரி, எதையும் அருகிலுள்ளவர்களோடு பகிர்ந்துக்கிறது, உறவுகளைப் பராமரிக்கிறது போன்ற விஷயங்களைக் கொடுக்க மறந்துட்டோம்.”

``எந்த நாடு உங்களை அதிகமாகக் கவர்ந்தது?''

`` `ஆ' எனக் காட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்தியாவைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாடும் இல்லை. ஒரு சில நாடுகளுக்குப் பயணிக்கும்போது, அங்கிருக்கும் நல்ல விஷயங்கள் இந்தியாவிலும் இருக்கலாம்னு தோணும். அவ்வளவுதானே தவிர, இந்தியா அளவுக்கு வேறு நாடு ஈர்த்ததில்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல கால் வைக்கும்போது, `சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?'  உணர்வுதான் வரும்.''

``தற்போதைய சூழலில் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான தாக்குதல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``இந்தக் கேள்வியை என்னால் எளிதில் கடந்துபோக முடியலை கண்ணா. இங்கே எதையெல்லாம் திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் வாயிலாக நாம் காட்டுகிறோமோ, அதைத்தான் சமூகமும் ஏற்றுக்கொள்கிறது. சமூகத்துக்குத் தேவையில்லாத கருத்துகளோடு ஒரு பாடலை எழுதும் பாடலாசிரியரில் தொடங்கி, நடிகர்கள், இயக்குநர்கள், தணிக்கைக் குழுவினர் என அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். நாம் எழுதும், நடிக்கும், இயக்கும் படைப்பானது, எங்கோ பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தையைப் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். தவறிழைப்பவர்களின் மனைவி, அம்மா, மகள்களே வீதியில் இறங்கிப் போராட வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள். பொதுமக்கள் தண்டனை கொடுக்கிறார்கள். ஆனால், உறவினர்கள் அமைதியாகத்தானே இருக்கிறார்கள். இனி இவர் என் கணவரே இல்லை. இவனை என் மகன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது எனச் சொல்ல வேண்டும். அதுதானே தவறு செய்பவர்களுக்கு எதிரான முதல் அடியாக இருக்க முடியும். இந்த மனப்பக்குவத்தைத்தான் ஒவ்வொருவரிடமும் வளர்க்க வேண்டும்.''

``நீங்கள் பேராசிரியராக இருந்த காலம் எப்படிப்பட்டது, ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?''

``35 வருடங்களாக ஆசிரியர் பணியில் இருந்திருக்கிறேன். ரிட்டயர்டு ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இப்போதும் மாணவர்களைச் சுற்றியேதான் இருக்கிறேன். மாணவப் பருவம் மிக நல்ல பருவம். திறமையானவர்களை மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். மோசமானவர்கள் என யாரையும் பார்த்ததில்லை. ஒரு சிலரை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். புரிந்துகொள்ள முயன்றபோது அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கலாம். ஆசிரியர் என்பவர், மாணவர்களுக்கு நல் மேய்ப்பராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அம்புக்குறியாக இருந்தாலே போதும். நாம் தோள் கொடுத்தால் போதும், அவர்கள் அதை வெற்றிப்படியாக மாத்திக்குவாங்க. நம்ம தோள் மேலே ஏறி நின்று ஜெயிக்கும் பிள்ளைகளை அண்ணாந்து பார்க்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கும்.''

``உங்கள் ஓய்வுக் காலத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள்?''

(பலமாகச் சிரித்தபடியே), ``எனக்கு இன்னும் ஓய்வு வரலையே கண்ணா. இப்போ உன்கிட்ட பேசிட்டிருக்கேன். அடுத்தது தர்மபுரியில் ஒரு பள்ளிக்குப் போய் மாணவர்களிடம் உரையாற்றப் போறேன். 60 வயசு ஆச்சு. இன்னும் ஒரு 60 வயசை ஆண்டவன் கொடுக்கவா போறான். அதனால், கிடைக்கும் நேரத்தை இப்படிப் பயனுள்ளதா மாத்திக்கிறேன். நிறைய படிக்கிறேன். எப்போதும் உற்சாகமாகவே இருக்கேன். யார் வம்புக்கும் போறதில்லே. எதைப் பற்றியும் புலம்பறதில்லே. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை கொட்டாவி விடாமல் சுறுசுறுப்பா இயங்கறேன் கண்ணா. அது போதுமே வாழ்க்கைக்கு!''