Published:Updated:

எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...
எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...

கேசம்

பிரீமியம் ஸ்டோரி

ருவரின் அழகோடு ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும் கண்ணாடி கூந்தல். அதை ஆரோமா ஆயில்களைப் பயன்படுத்தி அழகு குலையாமல் பாதுகாக்க முடியும் என்கிறார் சென்னை வடபழனியில் உள்ள ‘கேர் ஆண்டு கியூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அசோக். பத்து வகையான அரோமா ஆயில்கள் மற்றும் அவற்றின் பலன்களையும் பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்குகிறார்.

எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...

லாவண்டர் ஆயில்:

கூந்தல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதில் முதன்மையானது லாவண்டர் ஆயில். சருமம், கூந்தல் என்று இரண்டிலும் செயல்பட்டு குணமளிக்கிறது. சாதாரணமாக முடி கொட்டும் பிரச்னைக்கு லாவண்டர் ஆயிலைப் பயன்படுத்தி உடனடியாகச் சரி செய்யலாம். முடி கொட்டுவதைத் தவிர்க்க 100 மில்லி விளக்கெண்ணெய், 100 மில்லி ஆலிவ் ஆயில் என இரண்டு எண்ணெயையும் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் 100 சொட்டு லாவண்டர் ஆயில் கலந்து வைக்கவும். மூன்று நாள்களுக்குப் பின் கலந்து வைத்த எண்ணெயைத் தேவையான அளவு எடுத்துத் தலையில் தேய்த்து இரவு முழுவதும் ஊறவிடுங்கள். இது முடியின் வேர்க்கால்களில் பரவி நன்கு வேலை செய்ய தொடங்கும். இந்த எண்ணெயைப் பயன்படுத்தி இரண்டு மூன்று நாள்களில் முடி உதிர்வது படிப்படியாகக் குறைவதை உணரலாம்.

சிடர்வுட் ஆயில்:

தலையின் கியூட்டிகல் பகுதியே முடியின் உறுதி தன்மைக்குக் காரணம். கியூட்டிகல் ஆரோக்கியமாக இருந்தால் முடியும் உறுதியாக இருக்கும். கியூட்டிகலைப் பாதுகாக்க நாம் பயன்படுத்துவது சிடர்வுட் ஆயில். 100 மில்லி அளவுகொண்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் என்று எந்த எண்ணெயிலும் சிடர்வுட் ஆயில் 100 சொட்டு கலந்து தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம். முடி எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் ஆரோக்கியமாக இருக்க சிடர்வுட் ஆயில் உதவுகிறது.

டீ ட்ரீ ஆயில்:

சாதாரணமாக எல்லோருக்குமே முடி கொட்டும் பிரச்னை இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் தலையில் இருக்கும் பொடுகு. ஆன்டி டேண்ட்ரப் ஷாம்பூ பயன்படுத்தினாலும் இரண்டு நாள்களில் மீண்டும் பொடுகுத் தொல்லை வந்துவிடும். பொடுகுப் பிரச்னை வேரிலிருந்து தொடங்குவதால், ஷாம்பூவால் தீர்வு காண முடியாது. டீ ட்ரீ ஆயில் பொடுகு பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து டீ ட்ரீ ஆயிலைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது பொடுகிலிருந்து நிரந்தரத் தீர்வு காண முடியும். ஆலிவ் ஆயில் 100 மில்லி எடுத்துக்கொண்டு அதில் 100 சொட்டு டீ ட்ரீ ஆயில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். டீ ட்ரீ ஆயில் 20 நிமிடங்களில் முடியின் வேர்க்கால்களில் இறங்கி வேலை செய்யும். பொடுகுப் பிரச்னையிலிருந்து விரைவில் தீர்வு கிடைக்கும்.

எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...

ஈவினிங் பிரைம் ரோஸ் ஆயில்:

அரோமா தெரபியில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது ஈவினிங் பிரைம் ரோஸ் ஆயில். சில பிரச்னைகளுக்கு இந்த எண்ணெயை உள்ளுக்கும் எடுத்துக்கொள்வார்கள். முடியில் வறட்சியைப் போக்குவதுடன் செம்பட்டை ஏற்படுவதைத் தடுக்கிறது. ஒருவரது முடி செம்பட்டையாக மாறினால் அதை கண்டுகொள்ளாமல் விடக் கூடாது. இளநரை வரப்போகிறது என்பதற்கான அறிகுறியே இது. இளநரை வராமல் தடுக்கவும் ஈவினிங் பிரைம் ரோஸ் உங்களுக்கு உதவும். முடியின் இயல்பான கருமை நிறம் குறையத் தொடங்கினால் இந்த ஆயிலைப் பயன்படுத்தி இளநரை ஏற்படாமல் தடுக்கலாம். தேங்காயைத் துருவி, தண்ணீர் கலக்காமல் கெட்டியான தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும். ஈவினிங் பிரைம் ரோஸ் ஆயில் உங்களுக்கு கேப்ஸ்யூல் வடிவத்தில் கிடைக்கும். மூன்று கேப்ஸ்யூல்களை உடைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிட்டு, பின்னர் தலைக்குக் குளிக்கவும். நான்கு முறை ஈவினிங் பிரைம் ரோஸ் ஆயிலைப் பயன்படுத்தியதும் உங்கள் முடி இயல்பான கருமை நிறத்துக்கு மாறுவதைக் காணலாம்.

பே ஆயில்:

பிரியாணிக்குப் பயன்படுத்தும் பிரிஞ்சி இலையிலிருந்து எடுக்கப்படுவது தான் பே ஆயில். தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அரோமா தெரபியில் பல பிரச்னைகளுக்கு பே ஆயில் பயன்படுத்தப்படுகிறது. முடி உதிர்வைத் தடுத்து உறுதித் தன்மையை மேம்படுத்தும். முடி வளர்ச்சியைத் தூண்டும் வேலையை பே ஆயில் சிறப்பாகச் செய்யக்கூடியது என்பதால் முடியின் அடர்த்தி குறைந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு பே ஆயில் உதவும். 200 மில்லி தேங்காய் எண்ணெயில் 150 முதல் 200 சொட்டு வரை பே ஆயில் சேர்க்கலாம். இந்தக் கலவையைப் பத்து நாள்களுக்கு ஊற விடவும். இந்த எண்ணெய் முடியின் வேர் வரை செயல்பட்டு முடி வளர்ச்சியைத் தூண்டி, கூந்தலை அடர்த்தியாக்க உதவும்.

லைம் ஆயில்:

எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...



தலையில் புழு வெட்டு ஏற்பட்டு வட்ட வட்டமாகக் குறிப்பிட்ட இடங்களில் உள்ள முடி முழுவதும் கொட்டி அந்த இடம் வழுக்கையாகக் காணப்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பாக்டீரியா தொற்றின் காரணமாகத் தலையில் புழு வெட்டுப் பிரச்னை ஏற்படலாம். இப்படியான முடி உதிர்வின் தொடக்கக்காலத்தில் லைம் ஆயிலைப் பயன்படுத்தித் தீர்வு காணலாம். லைம் ஆயில் புழு வெட்டு உள்ள இடங்களில் செயல்பட்டு, முடி வளர்ச்சியைத் தூண்டிவிடுகிறது. கடுகு எண்ணெயில் உள்ள சல்பரும் புழு வெட்டு விழுந்த இடங்களில் முடி வளர உதவும்.

100 மில்லி கடுகு எண்ணெயில் 30 சொட்டு லைம் ஆயில் கலந்து இரவில் தலையில் தேய்த்து விடவும். காலையில் தலைக்குக் குளித்துவிடலாம். இந்த ஆயிலைத் தொடர்ந்து உபயோகப்படுத்தினால் புழு வெட்டு விழுந்த இடங்களில் மீண்டும் முடி வளரத் தொடங்கும்.

கிரேப் சீட் ஆயில்:

படுக்கை, துண்டு என எல்லா இடத்திலும் முடி உடைந்து உதிர்ந்து கிடப்பவர்களுக்கு, கிரேப் சீட் ஆயில் ஒரு வரம். வேரில் பிரச்னை இருப்பதால் இதுபோன்ற முடி உடையும் பிரச்னை வரும். இந்தப் பிரச்னைக்கு ரத்தப் பரிசோதனை செய்து, குறைபாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். முடி துண்டாகி விழும் பிரச்னை உள்ளவர்கள் கிரேப் சீட் ஆயில், விளக்கெண்ணெய், ஆல்மண்ட் ஆயில் என மூன்றும் சேர்த்து

100 மில்லி எடுத்துக்கொள்ளவும். இதில் 200 சொட்டு இலாங் இலாங் ஆயில் சேர்த்துக் கலக்கி, தலையில் அப்ளை செய்யலாம். இந்த எண்ணெயை அப்ளை செய்த பின் யூஸ் அண்டு த்ரோ ஷவர் கேப் கொண்டு தலையை கவர் செய்யவும்.இரண்டு மணி நேரத்துக்குப் பின் தலைக்குக் குளித்துவிடலாம். தலைப்பகுதியில் ஸிங்க் குறைவாக இருப்பவர்களுக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம். எனவே ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு கிரேப் சீட் ஆயிலையும் பயன்படுத்தவும்.

எழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...

பைக்கி நார்ட் ஆயில் மற்றும் ரோஸ் வுட் ஆயில்:

தலையில் சொரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இரண்டு எண்ணெய் வகைகளும் தீர்வாகப் பயன்படுகிறது. சொரியாசிஸ் பிரச்னை உள்ளவர்கள் வேறு எந்த வேலையையும் கவனிக்க முடியாமல் தலையைச் சொரிந்துகொண்டே இருப்பார்கள். இது தலையிலிருந்து முகத்தில் படரவும் வாய்ப்புள்ளது. ஆல்மண்ட் ஆயில் 300 மில்லி எடுத்துக்கொள்ளவும். இதில் பைக்கி நார்ட் ஆயில் 200 சொட்டு, ரோஸ் வுட் ஆயில் 200 சொட்டும் சேர்த்து கலக்கவும். இரவு நேரத்தில் இந்த எண்ணெய்க் கலவையைத் தலையில் தேய்த்துக் காலையில் குளித்து விடலாம். இதன்மூலம் விரைவில் சொரியாசிஸ் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.

ஜெரேனியம் ஆயில்:

சிறுவயதில் அடர்த்தியான முடி உள்ளவர்களுக்கும் 30 வயதுக்கு மேல் முடி கொட்டி மிகவும் ஒல்லியான கூந்தலாக மாறிவிடும். முடியின் அடர்த்தியை மேம்படுத்த உதவுவதே ஜெரேனியம் ஆயிலின் தன்மை. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதற்கான உணவு வகைகளில் கவனம் செலுத்தலாம். முடியின் அடர்த்திக்குக் கடுகு எண்ணெய் 200 மில்லி, விளக்கெண்ணெய் 200 மில்லி, லாவண்டர் ஆயில், ஜெரேனியம் ஆயில், டீ ட்ரீ ஆயில், ரோஸ் ஆயில் ஆகியவற்றை தலா நூறு சொட்டுகள் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து தலையில் தடவிவர முடி அடர்த்தியாக வளரும்.

கவனிக்க!

அரோமா ஆயிலில் பேஸ் நோட் ஆயில் வகைகள் உள்ளன. இவற்றை கர்ப்பிணிப் பெண்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், குறை ரத்த அழுத்தம், பர்பியூம் அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. அரோமாவில் உள்ள டாப் நோட் ஆயில் வகைகளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சில ஆயில்கள் போட்டோ சென்சிட்டிவ் ஆயில்கள் எனப்படுகின்றன. இந்த ஆயில்களைப் பயன்படுத்திய பின் வெயிலில் செல்லக் கூடாது. அப்படி வெயிலில் சென்றால் சருமம் கறுத்துவிடும்.

யாழினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு