Published:Updated:

சமூக வலைதளங்களில் பரவும் ‘அம்மா - குழந்தை மருதாணி மேஜிக்’... என்ன கூறுகிறார் வல்லுநர்?

`பிரசவ நாள் நெருங்கும்போது, ஒரு சில கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் அரைத்த மருதாணியைக் கையில் வைக்க, பிறந்த குழந்தையின் கையிலும் லேசான ஆரஞ்சு நிறத்தில் மருதாணியின் சுவடு இருந்தது!’ - இது உண்மையா?

சமூக வலைதளங்களில் பரவும் ‘அம்மா - குழந்தை மருதாணி மேஜிக்’... என்ன கூறுகிறார் வல்லுநர்?
சமூக வலைதளங்களில் பரவும் ‘அம்மா - குழந்தை மருதாணி மேஜிக்’... என்ன கூறுகிறார் வல்லுநர்?

`சில மாதங்களுக்கு முன்பு, பிரசவ நாள் நெருங்கும்போது, ஒரு சில கர்ப்பிணிப் பெண்களை வீட்டில் அரைத்த மருதாணியைக் கையில் வைத்துக்கொள்ளுமாறு சொன்னோம். அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. பிறந்த குழந்தையின் கையிலும் லேசான ஆரஞ்சு நிறத்தில் மருதாணியின் சுவடு இருந்தது. என்னுடைய பயிற்சி வகுப்பில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் பலருக்கும் அதேபோன்ற அனுபவம் ஏற்பட்டது. ஒரு சாதாரண மருதாணி, உங்கள் குழந்தைக்கு இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமானால், உங்களின் எண்ணங்களும் நடவடிக்கைகளும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படும்? அதனால், கர்ப்பிணி பெண்கள் தங்களின் கருவுக்கு நேர்மறையான எண்ணங்களையும் அனுபவங்களையும் அளிப்பது அவசியம்!'

கடந்த 20-ம் தேதி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் அளிக்கும் `விருக்‌ஷம்’ என்ற மையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதியப்பட்டிருந்த செய்தி இது. வெறும் எழுத்துடன் மட்டுமின்றி, ஒரு தாயின் மருதாணி கையையும், அவர் குழந்தையின் பிஞ்சு விரல்களின் லேசான ஆரஞ்சு நிறத்தையும் புகைப்படமாகப் பதிவிட்டிருந்தனர்.

இந்தப் பதிவின்கீழ், 'ஆமாம்! எங்களுக்கும் அப்படியான அனுபவம் கிடைத்திருக்கிறது' எனச் சிலரும், 'இதெல்லாம் மூடநம்பிக்கை. நானும் இதை முயன்றேன். அப்படி எதுவும் நடக்கவில்லை' எனச் சிலரும், “பொதுவாகக் குழந்தையின் பிஞ்சு விரல்கள் இளஞ்சிவப்பு நிறமாகத்தான் இருக்கும்' எனச் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

`விருக்‌ஷம்' பயிற்சி மையத்தை நடத்துபவர், அனுபமா விஜய் ஆனந்த். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

``திருப்பூரில், 'விருக்‌ஷம்' என்ற கர்ப்பிணி பெண்களுக்கான பயிற்சி மையம் நடத்திட்டிருக்கேன். நான் கர்ப்பமாக இருந்தபோது நிறைய சிக்கல்களைச் சந்திச்சேன். அதனால், கர்ப்பிணி பெண்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தயார்படுத்த இந்த மையத்தை ஆரம்பிச்சேன். இதுக்காக, சிங்கப்பூரில் ஒரு கோர்ஸ் படிச்சுட்டு வந்தேன். யோகா, தியானம், தாய்மை, குழந்தை வளர்ப்பு எனப் பல விஷயங்களை எங்க மையத்துல சொல்லிக்கொடுக்கிறேன். திருப்பூர் தவிர, கோயம்புத்தூர் மற்றும் ஆன்லைனிலும் இதைச் சொல்லித்தர்றேன். ஒருமுறை, என் ஸ்டூடன்ட் இப்படி ஒரு விஷயம் இருக்குனு பகிர்ந்துக்கிட்டாங்க. முயன்று பார்ப்போமேனு, பயிற்சி மையத்திலிருந்த இரண்டு மூணு பேரிடம் சொன்னேன். அவங்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பிஞ்சு விரலில் லேசான ஆரஞ்சு நிறத்துல மருதாணி வெச்ச மாதிரி தெரிஞ்சது. என் ஸ்டூடன்ட் இதைப் பற்றி ஒரு டாக்டரிடம் கேட்டதுக்கு, 'காட் இஸ் கிரேட்!'னு சொன்னாராம். இது ஒரு சின்ன சுவாரஸ்யமான விஷயம்தானே தவிர, ஆராய்ச்சி பண்ணினது இல்லைங்க” என்கிறார் அனுபமா.

``நான் 'விருக்‌ஷம்' நடத்தும் கிளாஸுக்குப் போயிட்டிருந்தேன். அங்கேதான் இதைப் பற்றி சொன்னாங்க. டிரை பண்ணுவோம்னு செஞ்சேன். டெலிவரி டைமில் அந்த மருதாணி கொஞ்சம் மங்கிடுச்சு. ஆனால், குழந்தை பிறந்தப்போ, அவன் கை விரல்களில் ஆரஞ்சு கலர் இருந்துச்சு. கொஞ்ச நாளிலேயே மறைஞ்சுடுச்சு. என் அனுபவத்தில் இது உண்மையா இருக்கும்னு தோணுது” என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த காவேரி.

இதேபோல செய்துபார்த்த திருப்பூர் சரண்யா மோகன், ``நான் திருப்பூரில் ‘ஷ்ரிஸ்டி’ என்ற கர்ப்பிணி பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். இந்த மாதிரி ஒரு விஷயம் நம்ம பாட்டி காலத்திலிருந்து இருக்கிறதா சொன்னாங்க. நானும் பிரசவ நாளுக்கு 10 நாள் முன்னாடி, மருதாணி வெச்சுக்கிட்டேன். வீட்ல அரைச்ச மருதாணிதான் வைக்கணும். கடையின்

மெஹந்தி கூடாது. பிரசவத்துக்கு அப்புறம் பார்த்தால், என் பையன் கையிலும் அப்படியே இருந்துச்சு. ஒரே ஆச்சர்யம்'' என்றவர் குரலில் அன்றைய நாளின் ஆச்சர்யம் இன்னும் இருந்தது.

`இந்த மருதாணி மேஜிக் உண்மைதானா?’ சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் விமலா, “இப்படியான வதந்திகள் இந்தக் காலத்தில் சகஜமாகிவிட்டன. மருத்துவத் துறையில், கர்ப்பிணி பெண்ணின் கையில் மருதாணி வைத்திருந்தால், பிறக்கும் குழந்தையின் கையிலும் இருக்கும் என்பதற்கு மருத்துவரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. இதையெல்லாம் நம்ப வேண்டாம். இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்கிறார் தெளிவான குரலில்.