Published:Updated:

பிரச்னைக்குரிய பார்ட்னரிடம் இருந்து ஒரு பெண் எப்போது விலக வேண்டும்? - உளவியல் ஆலோசனை

பிரச்னைக்குரிய பார்ட்னரிடம் இருந்து ஒரு பெண் எப்போது விலக வேண்டும்? - உளவியல்  ஆலோசனை
பிரச்னைக்குரிய பார்ட்னரிடம் இருந்து ஒரு பெண் எப்போது விலக வேண்டும்? - உளவியல் ஆலோசனை

தாங்கள் காதலிக்கும் ஆண் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுபவனாக வித்தியாசமான ஆளுமையாக இருந்தால் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.

சிட் வீச்சு... அரிவாள் வெட்டு... கத்திக்குத்து... கழுத்தறுப்பு... தீவைப்பு... காதல் பிரச்னைகளில் தமிழகப் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள் இவை. காதலிக்காவிட்டாலும் கொலை, காதலிக்கும்போது ஏதாவது சிறு பிரச்னை ஏற்பட்டாலும் அடி, உதை, கொலை. எப்படிப் பார்த்தாலும் காதலின் பெயரில் நடைபெறும் வன்முறைகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கிறார்கள். சாதியின் பெயரால் குடும்பத்தினரே ஆணவக் கொலை செய்வது ஒருபுறம்.... காதலிக்க மறுத்ததற்காக, காதலித்துத் தொலைத்ததற்காக மிகவும் கொடூரமாக பெண்கள் கொலை செய்யப்படுவது இன்னொருபுறம். வினோதினி, ஃபிரான்சினா, தன்யா, சோனியா, சுவாதி, வித்யா, நவீனா என நீள்கிறது இந்தப் பட்டியல். 


பெரும்பாலான ஆண்கள் காதலிக்கத் தொடங்கும்போது தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். போகப் போக அவர்களின்  சுயரூபம் வெளிப்படும். ஆணின் உண்மையான இயல்பு தெரிந்த பின்னால் எப்படி விலகுவது என்பது பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை. ஒருவேளை காதலித்துவிட்டு விலகுவது பெரும்குற்றமோ, பாவமோ என்றெல்லாம் கருதுவதால்தான் ஆபத்தான சூழலில் அவர்களால் சரியான முடிவுகளை எடுக்கமுடிவதில்லை. 'காதலித்தேன்... இப்போது பிரச்னை ' என்று வீட்டில் சொல்லி

பிரச்னையைச் சரிசெய்யும் அளவுக்கு சமூகமும் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. காதலிப்பது ஆண், பெண் இருவரும்தான். ஆனால், தொடர்ந்து பெண்கள் மட்டும் பலிகடா ஆக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

சரியான ஆணை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதிலும் பெண்களுக்குச் சிக்கல் இருக்கிறது. இவன் சராசரியானவன், இவன் கொலை செய்யக்கூடிய அளவுக்கு வன்முறையாளன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது..? 

``ஆண்களின் நல்ல குணங்களைப் பார்த்துதான் பெண்கள் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதலில் ஆரம்பத்தில் எமோஷன்ஸ்தான் மேலோங்கியிருக்கும், லாஜிக்ஸ் வேலை செய்யாது. அப்போது ஆண்களின் பாஸிடிவ் பக்கங்கள்தான் தெரியும். பெண்கள் காதலை ஏற்றுக்கொண்டபிறகு அந்தப் பெண்ணை மட்டுமே தங்களின் உலகமாக நினைக்க ஆரம்பிப்பது பெரும்பாலான ஆண்களின் வழக்கம். தன்னைப் போலவே, அந்தப் பெண்ணும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவளின் உலகத்தில் தானும் ஒருவன் என்பதைத் தாண்டி, அவளின் உலகமாக, தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.  

எப்போதும் தன்னிடம் மட்டுமே பேச வேண்டும், தன்னைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்தப்பெண் அப்படி இல்லாதபோது, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அப்போது கோபப்பட்டு சண்டை போடுகிறார்கள். வேறு ஆண்களுடன் பேசினால் சந்தேகப்படுவார்கள். படிப்படியாக  தங்களின் கோபத்தை, முரட்டுத்தனத்தைப் பெண்களிடம் காட்ட ஆரம்பிப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் மாற்றுக் கருத்து சொன்னால்கூட அதை ஏற்கும் மனப்பக்குவம் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்காது. தன் ஆளுமையை மதிக்கவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மைதான் உருவாகும். அப்போதுதான் அவர்களின் மாறுபட்ட குணங்கள் வெளிப்படும். சில ஆண்கள் இயல்பிலேயே உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள். நமக்குக் கிடைக்காத ஒன்று, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் தலைதூக்க, கொலை செய்யுமளவுக்குச் செல்கிறார்கள். 

இந்த விஷயத்தில் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் காதலிக்கும் ஆண் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுபவனாக, எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவனாக, வித்தியாசமான ஆளுமையாக இருந்தால் அவனிடம் கவனமாக இருக்க வேண்டும். போதைப் பொருள்கள் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள். அப்படிப்பட்ட ஆண்களைத் தவிர்த்துவிடுவது நல்லது `` என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

``ஆரம்பத்திலேயே சென்சிட்டிவ்வாக, அதிக பொசசிவ்னெஸ்ஸாக, இன்செக்யூராக, தாழ்வு மனப்பான்மை உடையவராக,

நகைச்சுவையுணர்வு இல்லாமல் எதையும் சீரியஷாக எடுத்துக் கொள்ளக்கூடியவராக ஒரு ஆண் இருந்தால்,  அவரிடம் இருந்து விலகிவிடுவதே  நல்லது. பழகிய இரண்டாவது நாளிலேயே அப்படிப்பட்ட ஆணைக் கண்டுபிடித்து விடலாம். அவர்கள் காதலை வெளிப்படுத்தும் விதமே வித்தியாசமாக இருக்கும். 'நீதான் என் உலகம்', 'நீ இல்லைன்னா செத்துடுவேன்' போன்ற வசனங்களைச் சொல்லித்தான் தங்கள் காதலையே வெளிப்படுத்துவார்கள். பொதுவாக, ஆண்கள்  இப்படியெல்லாம் காதலிக்க மாட்டார்கள். காதலுக்காக உயிர் கொடுப்பேன் என்று சொல்பவர்கள், அதற்காக உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

அவர்களிடம் இருந்து உடனடியாக  விலகினாலும் அதை அவர்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்,  விலகும்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் பிரச்னை இருப்பதாகக் காட்டிக்கொண்டு விலகக் கூடாது. பக்குவமாகப் பேசி விலக வேண்டும். தன்மீது காதல் இல்லாத, சுயமரியாதை இல்லாத ஓர் ஆணிடம் ஒரு பெண் என்னதான் அன்பை வெளிப்படுத்தினாலும்  மனநிறைவு இருக்காது. எப்போதும் எதிர்மறையான சிந்தனைகளையே கொண்டிருப்பார்கள். எவ்வளவு சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

சிலநேரங்களில், பெண்களும் ஆண்களின் சுயமரியாதையைத் தூண்டும் விதமாகப் பேசி விடுகிறார்கள். ஆணுக்கு முழுமையான நம்பிக்கை கொடுத்து திடீரென்று விலகிவிடுகிறார்கள். ஆணின் குடும்பத்தை, சாதியை, பொருளாதார நிலையைக் காரணம் காட்டி விலகுகிறார்கள். அப்படி நடந்துகொள்ளும்போது இயல்பாகவே ஓர் ஆணுக்கு கோபம் வரும். தன் அடையாளத்தையே அசிங்கப்படுத்தி விட்டதாக உணர ஆரம்பித்துவிடுவான். பிரிந்துசெல்ல முடிவெடுத்துவிட்டால் கொஞ்சம், கொஞ்சமாக பக்குவமாகப் பேசி பிரிய வேண்டும். உணர்ச்சிகரமாக வார்த்தைகளை விடாமல், மனம் புண்படும்படி நடக்காமல் விலக வேண்டும். நல்ல மனநிலையில் உள்ள ஆண்கள் கொலை செய்யுமளவுக்குச் செல்லமாட்டார்கள். ஏற்கெனவே மனநலப் பிரச்னைகள் உள்ளவர்கள்தான் அதற்குத் துணிவார்கள். `` என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

சமூகத்தின் எல்லா மட்டத்திலும் விளைவுகளை எதிர்கொள்பவர்களாக பெண்களே இருக்கிறார்கள். குடும்பத்தின் வேர்களாக, சமூகத்தின் தூண்களாக, பிரபஞ்சத்தின் அச்சாணியாக விளங்கும் பெண்களின் ஆளுமைக்கு ஆண் சமூகம் எப்போது மதிப்பளிக்கிறதோ அப்போதுதான் வெளிச்சம் பிறக்கும்!

அடுத்த கட்டுரைக்கு