Published:Updated:

கொங்கு வேளாளர் திருமணம்!

கொங்கு வேளாளர் திருமணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொங்கு வேளாளர் திருமணம்!

சம்பிரதாயங்கள்நந்தினி சுப்பிரமணி

ன்றைய தலைமுறையினர் கால மாற்றங்களால் நம் கலாசாரத்தையும் பாரம்பர்யத்தையும் கடைப்பிடிக்கத் தவறிவிடுகின்றனர். ஆனாலும், திருமணங்களில் நம் கலாசாரத்தையும் அதில் மறைந்துள்ள அர்த்தங்களையும் எடுத்துரைக்கும்விதமாக இன்றைக்கும் சடங்குகள் செய்யப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், கொங்கு வேளாளர் திருமணங்களில் நடத்தப்படும் சடங்குகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார் இச்சமூகத்தைச் சேர்ந்த செல்வி.

திருமண ஏற்பாடுகள்

அந்தக் காலத்தில் திருமணத் தகவல் மையங்கள் எதுவும் கிடையாது. எனவே, இருவீட்டாரின் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இடையில் ஒருவர் இருப்பார். அவரை ‘தானாவதிக்காரர்’ என்பர். அவர்மூலம் ஜாதகம் பெற்றுப் பொருத்தம் பார்ப்பர். 

‘அகமணம்’ எனும் ஒரே குலத்தில் பெண் எடுக்கும் பழக்கம் இச்சமூகத்தில் இல்லாத காரணத்தால், முதலில் என்ன குலம் என்பதை விசாரிப்பார்கள். சில குடும்பங்களில் பெண் மற்றும் பையனுக்கு அனைத்துப் பொருத்தங்களும் இருந்தாலும், குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ப் பார்த்தோ அல்லது ‘பல்லி சகுனம்’ கேட்டோதான் அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

கொங்கு வேளாளர் திருமணம்!

பெண் பார்க்கும் சடங்கு

ஜாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் படலம் நடைபெறும்.  எனினும், அது வெளிப்படையாகப் பத்துப் பேர் கூடியிருக்கும் சபையில் நடைபெறாது. அப்பெண் கோயிலுக்குச் செல்லும்போதோ, தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ, திருவிழாவின்போதே பெண் பார்க்கும் படலம் மறைமுகமாக நடைபெறும்.

நிச்சயதார்த்தம்

ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய உறவினர்களுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து (துணி போன்றது) விரிக்கப்பட்ட தரையில் வரிசையாக வைக்கப்படும் மங்கலப் பொருள்களுக்கு முன் அருமைக்காரர் (முன்னின்று செய்பவர்) அமர்ந்திருப்பார். அவர் முன் எதிரெதிராக இருவீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும். பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இருவீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்வர்.

மணப்பெண், வரிசையில் வைத்த சேலை மற்றும் நகையை அணிந்து வெற்றிலை பாக்கு, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றை மடியில் கட்டிக்கொண்டு வந்து எல்லோரையும் வணங்கிவிட்டு சபையில் அமர்வார்.
மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் நலங்கு வைக்கும் வைபவம் நடைபெறும். நிகழ்வின் முடிவில் திருமணத் தேதியைச் சபையில் அனைவருக்கும் அறிவிப்பர். நிச்சயம் முடிந்து உறுதியாகும்வரை ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட மாட்டார்கள்.

மாங்கல்யத்துக்குப் பொன் கொடுத்தல்

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன், மணமகன் வீட்டார் கொண்டுவந்த மாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை, மங்கலப் பொருள்களோடு நகை செய்பவரிடம் கொடுப்பர். கொங்கு வேளாளர் சமூகத்தினரின் மாங்கல்யம் சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளைக் குறிப்பது போன்று முப்பிரிவு உடையதாக இருக்கும்.

உப்பு, சர்க்கரை மாற்றுதல்

நிச்சயதார்த்தம் முடிந்தபின் சில நாள்களில் இருவீட்டாரும் கடைக்குச் சென்று தனித்தனியாக உப்பும் சர்க்கரையும் வாங்கிப் பரிமாறிக்கொள்வர். ‘நன்மையிலும் தீமையிலும் நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் பங்குகொள்ள வேண்டும்’ என்பதே இதன் பொருள்.

கொங்கு வேளாளர் திருமணம்!
கொங்கு வேளாளர் திருமணம்!

விறகு வெட்டல்

அருமைக்காரருடன் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று ஆல், அரசு, பாலை போன்ற பால் உள்ள மரங்களுக்குப் பூஜை செய்து, அவற்றின் சிறு குச்சிகளை வெட்டிக்கொண்டுவந்து வீட்டுக் கூரைமேல் வைப்பர்.

சீர் அரிசி

மணமகளின் தந்தை வழிப்பெண்கள் ஒரு பெரிய பாத்திரத்தில் நெல் போடுவர். அதை வேகவைத்துக் காயவைத்துக் குத்தி அரிசியாக்கி வைப்பர். இதுவே சீர் அரிசியாகும்.

கூறைப்புடவை எடுத்தல்

இருவீட்டுப் பெண்களும் சில ஆண்களும் ஜவுளிக்கடைக்குச் சென்று மணமகளுக்கு மணமகன் வீட்டுச் செலவில் கூறைப்புடவை எடுப்பர்; மணமகனுக்குரிய ஆடைகளை மணமகள் வீட்டார் எடுப்பர்.

திருமண அழைப்பு

முன்பு, பனை ஓலையில் திருமண அழைப்பைக் கணக்கர் அல்லது புலவரைக்கொண்டு எழுதி, அதன்மூலம் நேரில் அழைப்பர். இதற்கு இரண்டு அல்லது நான்கு பேராகச் செல்வது வழக்கம். இப்போதோ, பத்திரிகை அச்சடித்து அழைப்பு விடுக்கின்றனர்.

சோறாக்கிப் போடுதல் (விருந்து)

திருமணத்துக்கு முதல்நாள் நடைபெறும் விருந்து புதுவிதமானது. மணமகளின் சகோதரிகளும் சகோதரி முறையாக இருப்பவர்களும் இருவீட்டாருக்கும் விருந்தளிப்பர். மணமகளின் குடும்பத்துக்கு உறவினர் செய்யும் உதவியான இதைச் ‘சோறாக்கிப் போடுதல்’ என்பர்.

பட்டினிச் சாதம்

முகூர்த்தத்துக்கு முன், ஒருவேளை உணவே மணமக்களுக்கு வழங்கப்படும். இதைப் ‘பட்டினிச் சாதம்’ என்றும் ‘விரத விருந்து’ என்றும் கூறுவர். மணமக்கள் விரதத்தின் பயனை அறியவும் திருமண நாளில் வயிற்றுக்கோளாறு எதுவும் ஏற்படாதிருக்கவும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

முகூர்த்தக்கால் நடுதல்

அருமைக்காரருடன் மூன்று பேர் சென்று ஆல், அரசு, பாலை எனப் பால் மரங்களில் ஒன்றுக்குப் பூஜை செய்து அதிலிருந்து சிறுகொம்பை வெட்டித் தோல் சீவி, மஞ்சள் பூசி வைத்திருப்பர். அதை மணப்பந்தலில் நீர் மூலை அல்லது ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கில் வைத்து கூடவே மஞ்சள் தோய்ந்த துணியில் நவதானியங்கள் வைத்து, ஆண்களும் பெண்களும் கூடி அருமைக்காரருடன் பால்வார்த்துப் பூஜை செய்து கொம்பில் கட்டுவார்கள்.

பிறைமண் எடுத்தல் – பேய்க் கரும்பு நட்டல்

குலதெய்வக் கோயில் புற்றுமண் அல்லது அருகில் உள்ள புற்றுக்கு அருமைக்காரருடன் சென்று பால்வார்த்துப் பூஜை செய்து மூன்று கூடைகளில் புற்றுமண் எடுத்துவந்து மணமேடையில் கொட்டி, மேடை அமைத்து அதில் பச்சை மூங்கிலையும் பேய்க் கரும்பு என அழைக்கப்படும் வேர்க்கரும்பையும் நடுவர். அதில் அரச இலையும் நவதானிய முடிச்சும் கட்டி பூஜை செய்வர்.

காப்புக் கட்டுதல்

சிறு மஞ்சளை, மஞ்சள் தோய்த்த நூலில் இணைத்து மணமகனுக்கு வலது கையிலும், மணமகளுக்கு இடது கையிலும் அருமைக்காரர் காப்பு கட்டிவிடுவார். திருமணம் முடிந்த பின்னரே காப்பு அவிழ்க்கப்படும்.

சீர்த்தண்ணீர் கொண்டுவருதல்

சுமங்கலிப் பெண்கள் அருமைக்காரரை வணங்கி தாம்பூலம் பெற்றுக்கொண்டு, பெண் வீட்டின் அருகில் உள்ள நீர்நிலைக்கு மேளதாளத்துடன் சென்று குடங்களில் சீர்த் தண்ணீர் கொண்டு வருவர். அத்தண்ணீரைப் பிள்ளையார் கோயிலில் வைத்து பூஜை செய்து, வீட்டுக்கு எடுத்து வருவர். முகூர்த்த நெல்லைக் குத்திக் கிடைத்த அரிசியை, இந்நீரினால் சமைத்து மணமக்களுக்கு அளிப்பர்.

செஞ்சோறு அஞ்சடை கழித்தல்

மணமகனை முக்காலியில் அமரவைத்து, தலைக்கு நீரூற்றி, மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்த சோற்றுருண்டை களிக் கொண்டு திருஷ்டி கழிப்பர். மணமகளுக்கும் இவ்வாறு நடைபெறும்.

உருமால் கட்டுதல்

நீராடல் முடிந்த மணமகனுக்குத் தாய்மாமன் புத்தாடைகள் கொடுப்பதுடன் தலையில் உருமால் குஞ்சம் விட்டுக் கட்டி விட்டுத் தங்க அணிகலன்கள் அணிவிப்பர்.

குப்பாரிக் கொட்டல்

மணமகன், தான் மணமகளை மணக்கப் போகும் செய்தியை ஊரார் அனைவரும் அறிய முழங்கும் கருவிகளாகிய பெரிய மேளம், தப்பட்டை ஆகியவற்றைக் கொட்டி அறிவித்தல், குப்பாரிக் கொட்டல் எனப்படும். குலதேவதையை வணங்கி இச்சடங்கைச் செய்வர்.

நிறைநாழி

நெல் அளக்கும் இரும்புப் படியில் நெல் நிரப்பி, தக்கிளி போன்ற ஒரு கம்பியில் வெண்மையான நூலைச் சுற்றி நெற்குவியலுக்கு நடுவில் குத்தி வைத்திருப்பர். அநேகமான சடங்குகளில், சீர்க்காரப் பெண் நெல் படியை எடுத்து மணமக்களின் தலையை மூன்று முறை சுற்றுவார்.

குலதெய்வ வழிபாடு

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவருவது சாத்தியமில்லாத பட்சத்தில், அதற்குப் பதிலாக ஒரு குழவிக்கல்லை வைத்து, அதற்கு நீர்வார்த்து வெற்றிலை வைத்துக் கட்டி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து குலதெய்வமாக வழிபடுவர்.

நாட்டுக்கல் வழிபாடு

கொங்கு 24 நாடுகளின் தலைவர்கள் ‘நாட்டார்’ எனப்படுவர். திருமணத்துக்கு அவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பெறும். இருப்பினும், நாட்டார் எல்லா திருமணங்களுக்கும் வர இயலாது. அதனால், திருமண வீட்டின் அருகில் சாலையில் ஒரு கல்லை நட்டு, மஞ்சள் பூசிய நூலில் வெற்றிலையை வைத்துக் கட்டுவர். அதில் 24 நாட்டார்களும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். மணமகனும் மணமகளும் மேளதாளத்துடன் அங்கு வந்து வழிபடுவர்.

கொங்கு வேளாளர் திருமணம்!

இணைச் சீர்

மணமகனின் சகோதரி, மணப்பெண் போன்ற அலங்காரத்தில் இரு தட்டுகளைச் சுமந்துகொண்டு வருவார். கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு அடங்கிய பேழை ஒன்றை இடக்கையிலும், வலக்கையில் ஒரு சொம்பு நீரையும் எடுத்துவருவார். மணவறைபோலவே அலங்கரிக்கப்பட்ட பந்தலின் அமர்ந்திருக்கும் மணமகனையும் மணவறையையும் சுற்றிவந்து பேழையை மணமகனுக்கு வலப்புறம் வைப்பார். பேழையில் உள்ள பொருள்களை அகற்றி, அதனுள் சகோதரியை நிறுத்துவர். பேழையில் இருக்கும் கூறைப்புடவையில் ‘இணைப் பவுன்’ அல்லது தன் சக்திக்கு ஏற்றதைச் சகோதரி முடிந்துவைத்திருப்பார். அருமைக்காரர் மணமகனின் சகோதரிக்குத் தாம்பூலம் கொடுத்து மடியில் கட்டச் சொல்வார். பின், கூறைப்புடவையைக் கொசுவமாக மடித்து ஒருமுனையை மணமகன் கக்கத்திலும் மறுமுனையைச் சகோதரி கையிலும் கொடுப்பார். அருமைக்காரர் மணமகனின் கையை அரிசியில் பதியவைப்பார். பின்னர், விநாயகருக்குப் பூஜை செய்து அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து மங்கல வாழ்த்து இசைக்கப்படும்.
 
தாயுடன் உண்ணல்

முன்பு, இணைச் சீர் வரை அனைத்துச் சீர்களும் மணமகன் இல்லத்திலேயே நடைபெறும். பின்பு, மணமகன் தன் உறவினர்களுடனும் திருமணத்துக்கு வேண்டிய பொருள்களுடனும் மணமகள் இல்லம் செல்வார். இப்படிச் செல்வதைக் ‘கட்டிலேற்றிச் செல்லுதல்’ என்பர். அப்படிச் செல்லும்முன் மணமகன் தாயுடன் ஒரே தட்டில் உணவு உண்பார்.

மணமகளை மணம் முடிக்கச் செல்ல மணமகனுக்குத் தாயார் அனுமதியளித்து ‘பூங்கொடிக்கு மாலையிடப் போய்வா மகனே’ என்று அனுப்பி வைப்பாள். தாயார் ‘கட்டளை ஏற்றுச் செல்லல்’ என்பது `கட்டிலேற்றிச் செல்லல்’ என மருவிவிட்டது. தாயோடு உண்ணலைத் ‘தயிர்ச் சோறு உண்ணல்’ என்றும் தாயார் கையால் உண்ணும் கடைசி உணவு என்றும் சிலர் கூறுவர்.

விடுதி வீடு

மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார், தங்கள் உறவினருடன் சென்று அவர்களை வரவேற்று அழைத்து வருவர். முக்கியமானவர்கள் தாம்பூலத்தைப் பரிமாறிக்கொள்வர். மணமகனையும் அவர்கள் சுற்றத்தாரையும் தனி வீட்டில் தங்கவைப்பர். அவ்வீட்டுக்கு விடுதி வீடு என்று பெயர்.

பட்டம் கட்டுதல்

தாய்மாமன் மணப்பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும். இதுவரை குமரிப்பெண்ணாக இருந்தவள் இனி கணவனோடு சேர்ந்து வாழ்ந்து இல்லறம் நடத்துவதற்கு உரிமை உடையவள் என்பதைக் குறிக்கும்.

பெண்ணெடுத்தல்

பட்டம் கட்டியபின் மணமகளைப் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். மணவறைக்கு அழைத்துச் செல்லும் உரிமை மாமன்மார்களுக்குரியது. முன்பு, மணப்பெண்ணை மாமன் தோளில் அமரச் செய்து தூக்கிக்கொண்டு செல்லுதல் வழக்கமாக இருந்தது. இப்போது, ஒருவர் குடைபிடிக்க மற்றவர்கள் மணமகளுடன் நடந்துவந்து மணவறையைச் சுற்றிவந்து, பெண்ணை மாப்பிள்ளைக்கு வலப்புறம் நிறுத்துவர்.

பாத பூஜை

மணமகனும் மணமகளும் தங்கள் பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர்.

தாரைவார்த்தல்

மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து அதில், பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவினர்கள் முன்னிலையில் தன் கையால் தண்ணீர்விட்டுத் தாரைவார்ப்பார்கள். பெண் வீட்டார், ‘கொடுத்தோம்’ என்று சொல்ல... மணமகன் வீட்டார், ‘கொண்டோம்’ என்று சொல்வார்கள். இனி, மணமகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக்கும் சடங்காகும் இது. தாரைவார்க்கும் நீரில் பொன் வைப்பது வழக்கம்.

திருப்பூட்டுதல்

தாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப்படும். அருமைக்காரர், விநாயகரை வணங்கி தட்டை கொடுத்து மணமக்களை வணங்கச் செய்வார். பின்னர், அந்தத் தட்டை அனைவரும் வணங்கி ஆசீர்வதிப்பர். அருமைக்காரர், கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையை வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாகவும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்து வைப்பார். மாங்கல்யம் திருப்பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும். ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசியை வாழ்த்துக்கூறி மணமக்கள்மீது போடுவர்.

விரல் கோவை

திருநாண் பூட்டுதல் முடிந்தபின் மணமகனது வலது கைச் சுண்டு விரலையும், மணமகளது இடது கைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத்துணியால் கட்டி மணவறையைச் சுற்றிவரச் செய்வர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின், மணமக்கள் மாலை மாற்றிக்கொள்வர்.

நலங்கிடல்

வெற்றிலையில் குங்குமத்தை வைத்துக் குழைத்து, மணமக்களுக்குப் பிறர் பொட்டு வைப்பதுதான் நலங்கிடல் எனப்படுகிறது.

அம்மி மிதித்து அருந்ததி காட்டல்

அம்மியைக் கழுவிச் சுத்தம்செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டைவிரலை அம்மியில் வைப்பாள். பின், அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் தன் முகத்தைப் பார்ப்பாள். அம்மிபோல உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள்.

அறுகு மணம்

மணவறையில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரில் உள்ள வெற்றிலையையும் அறுகம்புல்லையும் எடுத்துக் கிள்ளி, அருமைக்காரர் மணமகனுக்கும் மணமகளுக்கும் பாதம், தோள், தலை இவற்றில் கையை நிறுத்தி மூன்று முறை ஆராதனை செய்வார். இதற்கு ‘அறுகு மணம்’ என்று பெயர்.

பரியம் செலுத்தல்

மணமகன் சார்பில் மணமகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு தொகை பரியம் ஆகும். சில இடங்களில் பணத்தோடு அரிசியும் கொடுக்கப்படும். மஞ்சள் துணியில் கட்டிக்கொடுக்கப்படும் பணத்தை முக்காலிமீது வைத்து எண்ணிப் பார்த்து எவ்வளவு என்று அறிவித்து மணமகள் வீட்டுச் சீர்க்காரப் பெண்ணிடம் இதைக் கொடுக்க அவர், வாங்கிச் சென்று தண்ணீர் நிறைந்த பாத்திரத்தின் மீது வைத்து மணமகள் வீட்டாரிடம் கொடுப்பார்.

பாத அணி அணிதல்

மணமக்கள் மண வீட்டின் வாயிலில் வந்து பண்ணையத்து மாதிகன் எனக் கூறப்படும் மாதாரி அளிக்கும் பாத அணிகளை (செருப்பு) அணிவர். அவருக்கு மனம்குளிரப் பணமும் பொருள்களும் கொடுப்பர். பாத அணிகள் கடையில் வாங்கினாலும் அவரிடம் கொடுத்தே அணியப்படும். கடைநிலையில் உள்ளாரும் திருமணத்தில் பங்குபெற வேண்டும் என்பது இதன் பொருள்.

புலவர் பால் சாப்பிடுதல்

காணிப்புலவருக்கு விருந்தளித்து அதன்பின் மணவீட்டார் தாங்கள் உண்ணும் வெங்கல வட்டிலில் பாலும் பழமும் கலந்துகொடுத்து உண்ணச் செய்வர். புலவருக்குத் தலை, தோள், இடுப்புக்கு என்று மூன்று ஆடை அளிப்பர். புலவர் பால் சாப்பிடாத வீடு மதிப்புக் குறைந்த வீடாகக் கருதப்படும்.

கரகம் இறக்குதல்

 இணைச் சீர் நடைபெற்ற இடத்திலும் மணவறையிலும் இருந்த கரகங்களை எடுத்து மூடியைத் திறந்து தாம்பூலம் வைத்து மணப்பெண் வீட்டுக்குக் கொண்டு செல்வர். தண்ணீரைக் கூரைமேல் ஊற்றுவர். நெல் உள்ள கரகத்தை உறியில் வைப்பர். பின், மணமக்களின் கங்கணங்கள் அவிழ்க்கப் பெறும். அதைக் கூரைமேல் அல்லது பாலில் போடுவர்.

சட்டுவச் சாதம் கலக்கல்

இது, மணமகனுக்கு மணமகள் அளிக்கும் முதல் உணவாகும்.

சம்பந்தம் கலக்கல்

திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர்களை அறிமுகம் செய்துவைக்க நேரம் இருக்காது. திருமணம் முடிந்து இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது ‘சம்பந்தம் கலக்குதல்’ எனப்படும்.

தொடர் நிகழ்வுகள்

குலதெய்வக் கோயில்களுக்கும் உள்ளூர் கோயில்களுக்கும் ‘கல்யாணப் படி’ என்ற பெயரில் மணமக்களோடு சென்று பூஜை செய்து வழிபடுவர். பெண்ணெடுக்கும் மாமன்மார்களுக்கு விருந்து வைக்க அவர்கள் இல்லங்களுக்குச் செல்வர். இணைச் சீர் செய்த சகோதரிக்கு இல்லம் சென்று சிறப்புச் செய்வர். பின் மணமகனுக்கும் மணமகளுக்கும் மணமகன் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவர். பின்னர், மணமக்கள் இருவரும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விருந்து உணவு அருந்துவர்.