Published:Updated:

உறவுகளை இயல்பாக அணுகுங்கள்...

உறவுகளை இயல்பாக அணுகுங்கள்
உறவுகளை இயல்பாக அணுகுங்கள்

மனநலம்லஷ்மி, படம்: Ashwin Th-Clicker Photography

பிறந்தது முதல் கூடவே இருந்த உறவுகளைப் பிரிந்து, தங்கள் வீட்டின் உறுப்பினராக இணையவிருக்கும் புதுப்பெண்ணை மகிழ்வுடன் வரவேற்கிறோம். அதைத் தொடர்ந்து கலாசாரம், பழக்கவழக்கங்கள், உறவுகளிடம் அளவளாவுதல் என அவள், அதுவரை வாழ்ந்த வாழ்க்கைமுறைக்கு மாறாக பல விஷயங்கள் திணிக்கப்படுகின்றன. ஆனால், அந்தத் தடைகளில் முடங்கிவிடாமல் தனக்கான சுய மரியாதையைப் பாதுகாத்தால்தான் ஒரு பெண் புகுந்த வீட்டினருடன் ஆரோக்கியமான மனநிலையில் பழக முடியும். உறவுகளில் விரிசல்விடாமலும் தனக்கான சுயத்தை இழக்காமலும் இருக்க உதவும் நுணுக்கங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் உளவியல் ஆலோசகர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் வேள்பாரி.

* புதுக் குடும்ப உறுப்பினர்களின் உறவு முறைகளைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு,  அன்பாகவும் ஆர்ப்பாட்டம் இன்றியும் இனிமையாகப் பழகுங்கள். முதலில் ஒவ்வொருவரின் பர்சனா லிட்டியையும் புரிந்து கொள்ளுங்கள். பழகும்போது அந்த உறவுமுறைக்கு ஏற்ற எல்லைகளில் வைத்துக் கொள்வதும் அவசியம். ‘ரொம்ப நல்ல பொண்ணு’ என்று பெயரெடுப்பதற்காக விட்டுக் கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் பெண்கள் நிறையவே இழக்கின்றனர். அதனால், உங்களது பர்சனல் விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை எப்போதும் உங்கள் கைகளில்தான் என்பதில் தெளிவுடன் இருப்பது அவசியம்.
 உங்கள் பழக்கவழக்கங்கள் அவர்களுக்குப் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாகக் கூறினாலும், அதுகுறித்து கேலி பேசினாலும், ஆரம்பத்தில் புன்னகையுடன் தவிர்த்திடுங்கள். உங்களது நிறம், எடை, ரசனை என தொடர்ந்து கிண்டல் செய்ய அனுமதித்தீர்களானால், அது உங்களுக்குள் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அதனால், அவற்றை வளரவிட வேண்டாம். உங்களை இழிவுபடுத்தும் கேலிகளுக்குச் சிரித்து ஆமோதிக்காமல், மவுனமாக இருந்தே உங்களது விருப்பமின்மையை வெளிப்படுத்துங்கள்.

உறவுகளை இயல்பாக  அணுகுங்கள்...

*   தொடக்கத்தில் உங்கள் நலம் விரும்பிகள் என்ற பெயரில் சிலர், உங்களது நன்மைக்காகப் பேசுவதைப்போல் உங்களுக்கும் உங்களது கணவருக்கும் இடையில் சந்தேகப் பூதத்தை எழுப்பிவிடக்கூடும்.புது வாழ்வைத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில், மனதால் இணையவேண்டிய உறவுக்குள் இப்படி விதைக்கப்படும் விஷயங்கள் சிறு புள்ளியாக உருவாகி, நாளடைவில் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பையே கேள்விக்குறியாக்கிவிடும் ஆபத்துள்ளது. உங்கள் இணைமீது நீங்கள் வைக்கும் நம்பிக்கைதான் உங்களுக்குள்ளான அன்பையும் உறவையும் பலப்படுத்தும்.

*   அன்பை வழங்குவதில் தாராளமாக இருங்கள். அதேநேரம் கணவரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தாக வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதனால், உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான எல்லைக் கோடுகளை எப்போதும் அழிக்க வேண்டாம். சில ரகசியங்கள் உங்களுக்கானவை எனும்பட்சத்தில் அவை உங்களிடம் மட்டுமே இருக்கட்டும். திறந்த புத்தகமாக இருப்பது கணவன்-மனைவி உறவில் சுவாரஸ்யத்தைக் குறைக்கக்கூடும். அவரவருக்கான சுதந்திர எல்லைகளை அமைத்துக்கொண்டு அதில் அடுத்தவர் தலையிடாமல் இருப்பதே உறவைக் கட்டிக் காக்க உதவும்.

பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது சரியே. அதற்காக அவர்களே உங்களுக்கான முடிவுகளை எடுப்பதும், அவர்கள் சொல்வதை நீங்கள் அப்படியே கேட்பதும் அவசியமில்லை. உங்களது உடலுக்கும் ரசனைக்கும் ஏற்ப உடைகளைத் தேர்வு செய்யுங்கள். பிடித்த மற்றும் பொருத்தமான உடையை அணிந்தால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* அடுத்தவர் கண்களை உறுத்தாவண்ணம் உடை அணிவதென்பது ஒரு கலை. அதை சரியாகச் செய்யும்பட்சத்தில் மற்ற எவரும் உங்கள் விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்க்க முடியும்.

தன்மீது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள். உங்களிடம் குறை கண்டுபிடிப்பதை வேலையாகவே வைத்திருப்பவர்களைக் கண்டு கொள்ள வேண்டாம். நீங்கள் குண்டாக இருந்தால் அதைக் கிண்டல் செய்வார்கள். நீங்கள் ஸ்லிம்மானால் `உடல்நிலை சரியில்லையோ’ என வீண்பேச்சு பேசி நேரத்தை வீணடிப்பார்கள். உங்கள் மனதைக் கெடுக்கும் இதுபோன்ற பேச்சுக்கு காதுகொடுப்பதையே நாசுக்காகத் தவிர்த்துவிடுவது சிறந்தது.

உங்களைப் போன்ற சூழலில் இருக்கும் பெண்களோடு இணக்கமாக இருங்கள். அவர்களது அனுபவப் பகிர்வுகள் உங்களது சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்க உதவலாம். எப்போதும் விழிப்பு உணர்வுடன் இருப்பதோடு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்துப் போவதும் அவசியம். இது குடும்பத்தினரிடையே உங்களது மரியாதையைக் கூட்டும்.

*   மொத்தத்தில் திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக அதுவரை வாழ்ந்த மொத்த வாழ்க்கையையும் இழக்க வேண்டியதில்லை. எப்போதும் போல இயல்பாக இருங்கள். உங்களிடம் உள்ள தனித்திறமையைத் திருமணமான பின்னரும் தொடர்ந்து மெருகேற்றுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பதுதான் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.  நீங்கள் நீங்களாக இருப்பதுதான் உங்களுக்கான வாழ்க்கை என்பதை மறந்திட வேண்டாம்.

அடுத்த கட்டுரைக்கு