Published:Updated:

திருமணத் தடை நீக்கும் பௌர்ணமி வழிபாடு!

திருமணத் தடை நீக்கும் பௌர்ணமி வழிபாடு!
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணத் தடை நீக்கும் பௌர்ணமி வழிபாடு!

ஆலயம்எஸ்.கண்ணன்கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்

காவிரி நதி இரண்டாகப் பிரிந்து அரவணைத்துச் செல்லும் பகுதியில் ஐந்து அரங்கப் பெருமானின் தலங்கள் அமைந்திருக்கின்றன. ஐந்து அரங்கத் தலங்களுள் ஆதிரங்கம் என்னும் சிறப்பினைப் பெற்றது ஸ்ரீரங்கப்பட்டணம் என்னும் புனிதத் தலமாகும். அரங்கப்பெருமான் அருளும் இந்தத் தலத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், காவிரிக்கரையில் இயற்கை அழகுடன் காட்சிதரும் கஞ்சம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது அருள்மிகு ‘நிமிஷாம்பாள்’ ஆலயம். காவிரியில் நீராட அகன்ற படித்துறையும், கரையில் விநாயகர் கோயிலும் அமைந்துள்ளன. பௌர்ணமி நாளில் இந்தத் தலத்துக்கு வந்து காவிரியில் நீராடி, விரதமிருந்து அம்பிகையை மூன்று கால பூஜைகளிலும் தரிசித்தால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதுடன், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். மேலும், எதிரிகளின் தொல்லையும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்து நிமிஷாம்பாள் யாகத் தில் தோன்றியவள் என்கிறது தலபுராணம்.

அந்தப் புராண வரலாறு...

முற்காலத்தில் இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதியை ஆட்சி செய்துவந்தார் முக்தராஜன் என்ற மன்னர். அன்னை பராசக்தியிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த முக்த ராஜன், அனுதினமும் அன்னையைப் பிரார்த்தித்து வழிபட்ட பிறகுதான், அரசாங்கக் கடமைகளைத் தொடங்கு வார். அம்பிகையிடம் ஆழ்ந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்த காரணத்தினால், அவருடைய ஆட்சியின் கீழ் நாடும் செழிப்பாக இருந்தது. மக்களும் செல்வச் செழிப்புடனும் மன நிம்மதியுடனும் வாழ்ந்து வந்தனர்.

திருமணத் தடை நீக்கும் பௌர்ணமி வழிபாடு!

ஆனால், அந்த மன நிம்மதி நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஓர் அசுரன் மூலம் சோதனை ஏற்பட்டது.

ஜானுசுமண்டலன் என்ற அந்த அசுரனுக்கு, முக்தராஜன் அம்பிகையிடம் கொண்டிருந்த பக்தியைக்கண்டு பொறுக்க முடியவில்லை. ஆத்திரம்கொண்டவனாக மன்னர் முக்தராஜனுக்கும் நாட்டு மக்களுக்கும் அடுக்கடுக்கான தொல்லை களைக் கொடுக்கத் தொடங்கினான். நாளுக்கு நாள் அசுரனுடைய கொடுமை தாங்க முடியாமல் போனது. மன்னரால் நாட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இறுதியில் அம்பிகையிடமே தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பற்றிச் சொல்லி முறையிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதற்காக அம்பிகை யைப் பிரார்த்தித்து ஒரு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார்.

முக்தராஜனின் பக்திபூர்வமான யாகத்தின் பயனாக, யாககுண்டத்தில் இருந்து அம்பிகை தோன்றினாள். மன்னரின் வேண்டுகோளின்படி ஜானுசுமண்டலனை சம்ஹாரம் செய்ய திருவுள்ளம்கொண்ட தேவி, அவனை அழிக்கப் புறப்பட்டாள். ஜானுசுமண்டலனுக்கு எதிரில் வந்த தேவி, ஒரு நிமிஷ நேரம் தன் விழிகளை மூடித் திறந்தாள். விழி மூடித் திறந்த அம்பிகையின் அக்னிப் பார்வைபட்டதுமே ஜானுசுமண்டலன் பிடி சாம்பலாகிப்போனான். நிமிஷ நேரத்தில் அசுரனை அழித்து தர்மத்தை நிலைநிறுத்திய அம்பிகை, ‘நிமிஷாம்பாள்’ என்னும் திருப்பெயரால் போற்றப் பெற்றாள்.

தர்மத்தை நிலைநிறுத்தவே அசுரனை சம்ஹாரம் செய்திருந்தாலும், அவனைக்கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்கவேண்டி, அம்பிகை இந்தத் தலத்துக்கு வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். அம்பிகையின் தவத்துக்கு இரங்கிய ஈசன், அம்பிகைக்கு தரிசனம் தந்து தோஷம் நீக்கி அருள்புரிந்தார்.

திருமணத் தடை நீக்கும் பௌர்ணமி வழிபாடு!

தன் தவத்துக்கு இரங்கி தரிசனம் தந்ததுடன், அசுரனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தியும் செய்த மௌத்திகேஸ்வரரை அம்பிகை வழிபட்டாள். பின்னர் அம்பிகையின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட இறைவன், அம்பிகையைத் திருமணம் செய்துகொண்டு, இந்தத் தலத்திலேயே கோயில் கொண்டதாக ஐதீகம். அதன் காரணமாகத் திருமணம் தடைப்படும் பெண்கள், பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி, விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

தோஷம் நீங்கப்பெற்ற அம்பிகை, முக்தராஜனின் வேண்டுகோளின்படி இந்தத் தலத்திலேயே மௌத்தி கேஸ்வரருடன் கோயில் கொண்டாள்.  அன்னை நிமிஷாம்பாளின் சந்நிதிக்கு இடப்புறத்தில் சிவபெருமான் தனிச் சந்நிதிகொண்டு, பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் உள்ளார். மௌத்திகேஸ்வரர் என்ற பெயருக்கு, முக்தியை அருள்பவர் என்று பொருள் என்கிறார்கள்.

திருமணத் தடை நீக்கும் பௌர்ணமி வழிபாடு!

படம் உதவி: அருள்மிகு நிமிஷாம்பாள் தேவஸ்தானம்

விழாக்கள்... விசேஷங்கள்:

இந்தத் தலத்தில் பௌர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுவதுடன், வைகாசி மாதம் வளர்பிறை தசமியன்று அன்னை நிமிஷாம்பாள் ஜயந்தி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அம்பிகைக்கு 108 கலச பூஜையுடன், துர்கா ஹோமமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீரங்கப் பட்டணம் உள்ளது. பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சில ரயில்கள் ஶ்ரீரங்கப்பட்டணா ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மைசூரிலிருந்து நிறைய பேருந்துகளும் உள்ளன. ஸ்ரீரங்கப்பட்டணத் திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்திருக்கிறது.  ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.