Published:Updated:

தித்திக்கும் தேன் நிலவு

தித்திக்கும் தேன் நிலவு
News
தித்திக்கும் தேன் நிலவு

ஹனிமூன்திருமகள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கைத் துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாகக் கடப்போமே...   

தித்திக்கும் தேன் நிலவு

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கவிஞர் தாமரை எழுதிய வரிகளைப்போல ஒவ்வொரு புதுமணத் தம்பதியரும் திருமணம் முடிந்த கையோடு சோலை, மலை, கடல் எனத் தேனிலவு செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கெனவே, தென்னிந்தியாவில் எந்தெந்த இடங்கள் தேனிலவுக்கு ஏற்றவை என விளக்கமளிக்கிறார் சேலம் கிராண்ட் ராயல் டூர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுகந்தி சரவணன்...

கோவளம்

கடற்கரையில் கால் நனைக்க விரும்பாதவர்கள் யார்? அதோடுகூட சூரியக் குளியல், நீச்சல், மூலிகை மசாஜ், கலாசார நிகழ்ச்சிகள், கட்டுமரப் பயணங்கள் என வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க கோவளம் சிறந்த இடம். கடற்கரையையொட்டி குறைந்த விலை காட்டேஜுகள், ஷாப்பிங் இடங்கள், நீச்சல் குளங்கள், ஆயுர்வேத மசாஜ் சென்டர்களும் உள்ளன.    

தித்திக்கும் தேன் நிலவு

இந்தக் கடற்கரையின் மற்றுமொரு சிறப்பம்சம் கடற்கரைப் பாறைகள். இதன்மேல் உங்கள் காதல் துணையுடன் அமர்ந்து, கடல் அலைகளை ரசிப்பது மறக்கமுடியாத அனுபவமாக மனதில் பதியும். கோவளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையமும் 16 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையமும் உள்ளதால் போக்குவரத்து சுலபமே. கோவளத்தில் தங்கியபடி திருவனந்தபுரத்து நேப்பியார் மியூசியம், ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரி, பத்மநாப சுவாமி கோயில், பொன்முடி மலைவாழ்விடம், அரசின் கலைப்பொருள்கள் நிறைந்திருக்கும் எம்ப்போரியத்தில் ஷாப்பிங் என வலம் வரலாம். 

தித்திக்கும் தேன் நிலவுகுன்னூர்:

மலையும், மழையும், மழைச்சாரலும் எனப் பசுமைப் போர்த்திய தேயிலைத் தோட்டத்தின் நடுவே உங்கள் இதயத்தைத் திருடியவருடன் ஓர் உலா வந்தால், ஜென்மத்துக்கும் மறக்கமுடியாத தருணமாக நீங்காமல் நினைவில் நிற்கும். எப்போதும் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டிருப்பதால் உறங்கா பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் குன்னூர் தேனிலவுத் தம்பதியரைப் பாதுகாப்பாக உணரவைக்கும். சாக்லேட்டுகள்,  ஆர்க்கிட் மலர்கள் என உங்களை மீண்டும் வரத் தூண்டும் இடமாக விளங்கும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்றான குன்னூரில் எப்போதும் குளிர் மற்றும் மழை நீடிப்பதால், குளிர்காலத்தில் வருவதைத் தவிர்ப்பது நல்லது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.    

தித்திக்கும் தேன் நிலவு

ஆலப்புழா

பெரும்பாலான புதுமணத் தம்பதியர் விரும்பும் தேனிலவுக்கான தேர்வில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்றிருக்கிறது ஆலப்புழா. கேரளாவின் பாரம்பர்ய கட்டமைப்பில் மிதக்கும் படகு வீட்டினுள் பிடித்தவருடன் பயணிப்பது என்பது புதுமையான அனுபவமாக இருக்கும்.

ஹை-டெக் படகுகள் குளிரூட்டப்பட்ட அறைகளோடு ஓர் ஆடம்பர ஹோட்டலுக்கு இணையான வசதிகளைக்கொண்டுள்ளன. அந்தி சாயும் வேளையில் கரையோரம் இறங்கி உங்கள் இணையுடன் ஒரு காதல் நடை போடலாம். சைவம், அசைவம் என விரும்பிய உணவைக் கேட்டுச் சுவைக்கலாம். குறிப்பாக அசைவ விரும்பிகள் இங்குள்ள சுவையான மீன்களை ருசிக்கத் தவறாதீர்கள். இங்கு ரயில் நிலையம் இருப்பதால் எந்த ஊரில் இருந்தும் வருவது எளிது. கொச்சினிலிருந்து சாலை வழியாக ஒன்றரை மணி நேரத்தில் ஆலப்புழாவைத் தொட்டுவிடலாம். சென்னையிலிருந்து நேரடியாக ஆலப்புழாவுக்குச் செல்வதற்கு தினமும் இரவு 8.45-க்கு கிளம்பும் ரயில் அடுத்த நாள் காலை 10.45-க்கு ஆலப்புழாவை அடைகிறது. மொத்தத்தில் பரபரப்பான நகர வாழ்க்கைக்கு மாற்றாக, மனதுக்கு இதமளிக்கக்கூடிய இவ்விடம் உங்கள் இதயத்தைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற இடம் என்பதில் சந்தேகமில்லை.

ஹம்பி:


 ராமாயணத்தில் கிஷ்கிந்தா எனக் குறிப்பிடப்பட்டுள்ள நகரமான ஹம்பி, விஜயநகர வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ளது. தேனிலவைப் பரவசப்படுத்தும் ஆச்சர்யங்களால் நிறைக்க விரும்பும் தம்பதியருக்கு ஹம்பி சிறந்த தேர்வு. கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஹம்பி, பெங்களூரிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது. ஹம்பியைச் சுற்றிவர வாடகை சைக்கிள் மற்றும் மொபெட்களும் கிடைக்கின்றன. துங்கபத்திரா ஆற்றின் அழகும் திரும்பிய இடங்களிலெல்லாம் மிளிரும் விஜயநகரக் கட்டடக் கலையின் கம்பீரமும் நம்மை கால இயந்திரத்தில் பயணிக்க வைக்கும். தொல்பொருள் அருங்காட்சி முதல் விருபாக்‌ஷா ஆலயம், விட்டலா ஆலயம், ஆஞ்சனேயத்ரி போன்ற பிரசித்திபெற்ற ஆலயங்கள் என ஹம்பியில் பார்த்து ரசிக்க ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் நூறு இடங்கள் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் ஈர்ப்பவை. விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர், பாறை சிற்ப வேலைப்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இயற்கையும் தொன்மையும் நிறைந்த ஹம்பி தென்னிந்தியச் சுற்றுலாவில் தவிர்க்க முடியாத இடம்.  ரயில், பரிசல், சைக்கிள், நடைப்பயணம் என ஹம்பியை வலம் வருவதற்குப் பல வழிகள் உள்ளன.  

தித்திக்கும் தேன் நிலவு

குமரகம்

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் பசுமை போர்த்திய ஏரிக்கரைகளும் அமைதி கொஞ்சும் உப்பங்கழி ஓடைகளை இணைக்கும் தீவுத் திட்டுகளாகக் காட்சியளிக்கும் குமரகம் தனிமையைத் தேடும் இளம் தம்பதியருக்கு ஏற்ற இடம். தென்னை, வயல் எனத் திரும்பும் பக்கம் எல்லாம் பசுமையாகக் காட்சியளிக்கும் இவ்விடம், பறவை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் தேடிவரும் பறவைகள் சரணாலயமாகவும் இருக்கிறது. சைபீரியக் கொக்குகளின் அழகைக் கண்டு ரசிப்பதோடு, இங்கு கிடைக்கும் கறிமீன் பொரிச்சது, செம்மீன் வறுவல், எறால் உலர்த்தியது, மீன் மொய்லி, நண்டு வறுவல் என விரும்பியதை ருசித்து மகிழலாம். ஹனிமூன் தம்பதியருக்கான விசேஷப் படகு வீடுகள் வாடகைக்குக் கிடைக்கிறது. குமரகத்துக்குச் செல்ல ரயில், விமானப் பயணம் என இரண்டுமே சாத்தியம்.

அரக்குவேலி

ஆந்திராவில் மருத்துவ மகிமைப் பொருந்திய மரங்கள் சூழ்ந்த அனந்தகிரி மலையின் அருகில் உள்ளது அரக்குவேலி.  ஜன நெருக்கடி இல்லாத காடு மற்றும் மலைப்பிரதேசங்களில் உங்கள் அன்புத் துணையுடன் தனிமையில் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம். துணையோடு கைகோத்தபடி  மலைக்காட்டில் வலம்வருவதோடு நில்லாமல், டிரைபல் மியூசியம், டைடா மற்றும்  சுண்ணாம்புப் பாறையால் ஆன போரா குகைகள், சங்க்டா அருவி, பத்மபுரம் பொட்டானிக்கல் கார்டன் ஆகிய இடங்களுக்கும் சென்றுவருவது புது அனுபவத்தைத் தரும். மலைப்பிரதேசமாக இருப்பதால் சாகச விரும்பிகளுக்கான பல சாகச விளையாட்டுகளும் இருக்கின்றன. அரக்குவேலிக்கு ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து டீலக்ஸ், வால்வோ பேருந்துகள் மூலமாகவும், ரயில் மார்க்கமாக ஸ்ரீகாகுளம் சென்றும் செல்லலாம்.  

தித்திக்கும் தேன் நிலவு

குமரகம்

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் பசுமை போர்த்திய ஏரிக்கரைகளும் அமைதி கொஞ்சும் உப்பங்கழி ஓடைகளை இணைக்கும் தீவுத் திட்டுகளாகக் காட்சியளிக்கும் குமரகம் தனிமையைத் தேடும் இளம் தம்பதியருக்கு ஏற்ற இடம். தென்னை, வயல் எனத் திரும்பும் பக்கம் எல்லாம் பசுமையாகக் காட்சியளிக்கும் இவ்விடம், பறவை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் தேடிவரும் பறவைகள் சரணாலயமாகவும் இருக்கிறது. சைபீரியக் கொக்குகளின் அழகைக் கண்டு ரசிப்பதோடு, இங்கு கிடைக்கும் கறிமீன் பொரிச்சது, செம்மீன் வறுவல், எறால் உலர்த்தியது, மீன் மொய்லி, நண்டு வறுவல் என விரும்பியதை ருசித்து மகிழலாம். ஹனிமூன் தம்பதியருக்கான விசேஷப் படகு வீடுகள் வாடகைக்குக் கிடைக்கிறது. குமரகத்துக்குச் செல்ல ரயில், விமானப் பயணம் என இரண்டுமே சாத்தியம்.  

தித்திக்கும் தேன் நிலவு

கன்னியாகுமரி:

அதிகாலையில் உதிக்கும்போது, அந்தி மாலையில் அஸ்தமிக்கும்போது எனக் கடலிலிருந்து அமிழ்ந்து மூழ்கிக் குளிக்கும் சூரியனின் அழகு, காதல் துணையுடன் கரம்பிடித்து ரசிக்கும் கனம் ரம்மியமாகும். முக்கடல்கள் சங்கமிக்கும் பேரழகைக்கொண்ட கன்னியாகுமரியில்  படகு போக்குவரத்தின் மூலம் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைகளைக் கண்டுகளிக்கலாம்.    பத்மநாபபுரம் அரண்மனை சிற்பக்கலை, கடற் சிப்பிகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள்,  வகை வகையான  கடல் உணவின் சுவை என உங்கள் தேனிலவுக்குச் சுவை கூட்டும் இடமாக கன்னியாகுமரி உங்கள் மனதில் இடம்பிடிக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு செல்வதற்கு ஏற்ற மாதங்கள்.  திருவனந்தபுரம் விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து எனப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளதால் உங்கள் பயணம் சுலபமாக அமையும்.

கூர்க் - கர்நாடகா:

கர்நாடகாவில் உள்ள குடகு பசுமைக் காடுகள், பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், காபி, தேயிலை, ஏலக்காய், மிளகு, ஆரஞ்சு எனத் தோட்டங்கள், தோப்புகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சி என இயற்கை எழில் கொஞ்சும் வனமான கூர்க், கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எனவும் அழைக்கப்படுகிறது.   

தித்திக்கும் தேன் நிலவு

தேனிலவு கொண்டாட ஏற்ற இடமான கூர்க், கேரள மற்றும் கர்நாடக மக்களின் வார இறுதி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதற்குக் காரணம் இங்கிருக்கும் மிதமாக நகரும் அமைதியான வாழ்க்கை முறைதான்.

இதுதவிர மலையேற்றம், கோல்ப், தூண்டிலில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி என பல அம்சங்களும் உள்ளன. இந்தப் பகுதியில், தென்னிந்தியச் சுவையில் உணவு கிடைப்பது கூடுதல் சிறப்பு. மைசூர்தான் கூர்குக்கு அருகில் உள்ள ரயில் நிலையம்.

வர்க்கலா:

 திருவனந்தபுரத்துக்கு வெளியில் உள்ள அமைதியான கிராமம். அழகில் மிளிரும் வர்க்கலா கடற்கரையில் உள்ள ஒரு சொட்டு நீர் உடலில் பட்டாலும் அது ஆன்மாவையும் பாவங்களையும் கழுவி நிர்மூலமாக்கிடும் என்று நம்பப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் 2000-ம் ஆண்டுகள் பழைமையான ஜனார்த்தன சுவாமி கோயில் கம்பீரமாக்கக் காட்சியளிக்கிறது. ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கையுள்ள தம்பதியருக்கு, கடற்கரையின் ரம்மிய அனுபவத்துடன் ஆன்மிக அனுபவமும் சேர்ந்து, ஒரே பயணத்தில்       இருவேறு அனுபவங்களைக் கொடுக்கிறது.  கடற்கரைக்கு அருகிலேயே அழகிய நீரூற்றுகளுடன் கூடிய தங்குமிடங்கள் உள்ளன. இங்கிருக்கும் ஆயுர்வேதிக் மசாஜ் மையங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.  இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் வர்க்கலா ரயில் நிலையம் உள்ளது. 57 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. அதனால், போக்குவரத்து குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் வர்க்கலாவுக்குச் சென்றுவர முடியும்.

உங்களது தேனிலவுப் பயண அனுபவம் பரவசப்படுத்துவதாக மட்டும் இல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கான வழிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். அதேபோல் திட்டமிட்ட பட்ஜெட்டின்படி பயணம் இருந்தால் உங்கள் தேனிலவு தித்திக்கும் தேனிலவாக இருக்கும்.” என்கிறார் சுகந்தி.