தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்

இந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின், உந்துசக்தியாக ஒரு பெண் இருப்பதாகச் சொல்வது வழக்கம். ஒரு பெண்ணின் பெருவெற்றிக்குப் பின் அவள் கணவரும் மாமனாரும் இருந்தார்கள் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? அந்தப் பெண், சரளா தக்ரால் - இந்தியாவின் முதல் பெண் பைலட். 1936-ம் ஆண்டு ‘ஜிப்ஸி மாத்’ ரக விமானத்தில் லாகூர் விமான தளத்தில் இருந்து டேக் ஆஃப் செய்தார் பாந்தமாகப் புடவை கட்டிய சரளா. ஒட்டுமொத்த இந்தியாவும் அப்போது 21 வயதே ஆகி இருந்த சரளாவைத் தூக்கிவைத்துக் கொண்டாடியது. வெற்றிகரமான விமானப் பயணத்துக்குப்பின் வீடு திரும்பி, தன் நான்கு வயதுப் பெண் குழந்தையைச் சீராட்டி மகிழ்ந்தார் சரளா. 

இந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்

1914-ம் ஆண்டு டெல்லியில் பிறந்து, அங்கு வளர்ந்த சரளா, பதினாறாவது வயதில் பி.டி.ஷர்மா என்பவரைக் கரம்பிடித்தார். லாகூரைச் சேர்ந்த கேப்டன் பி.டி.ஷர்மா, ஏர்மெயில் பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் இந்தியர். ஷர்மாக்களின் குடும்பத்தில், அவர் தந்தையையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பைலட்டுகள். அத்தனை பைலட்டுகள் மத்தியில் வளையவந்த சரளாவுக்கு விமானங்கள்மீது காதல் வந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை. அவரின் மாமனார், பத்ரிநாத் - ஹரித்துவார் இடையே ஹிமாலயன் ஏர்லைன்ஸ் என்கிற விமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சரளாவின் கனவை நனவாக்கியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. மருமகளை லாகூர் ஃப்ளையிங் கிளப்பில் சேர்த்து விட்டார் மாமனார். தஸ்தூர் என்ற பயிற்சியாளருடன் இணைந்து பறந்த சரளா, எட்டு மணி நேரம் பத்து நிமிடங்களில் தன் முதல் விமானத்தை ஓட்டும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார். ஆனால், அடுத்த நாள்தான் அவரால் விமானத்தைத் தனியாக ஓட்ட முடிந்தது. பணி நிமித்தம் வெளியூர் சென்ற கணவர் திரும்பும் வரை காத் திருக்க வேண்டியிருந்ததே காரணம்.

`என்னுடன் அப்போது பயின்ற மாணவர்கள் யாரும் என்னை எந்த விதத்திலும் வேற்றுமையோடு பார்க்கவில்லை. ஃப்ளையிங் கிளப் எழுத்தர் மட்டுமே, நான் ஏன் விமானம் ஓட்ட முற்பட்டேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்' எனப் பின்னர் ஒரு பேட்டியில் தெரிவித்தார் சரளா. கேப்டன் ஷர்மா, பகத்சிங்கின் ‘புரட்சிகர இயக்கம்’ மீது அதிக ஆர்வம்கொண்டவர். கக்கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த இயக்கத்தின் யஷ்பால் மற்றும் அவர் மனைவி கமலாவை டெல்லி அஜ்மீர் கேட் பகுதியில் உள்ள தங்கள் வீட்டில் சிறிது காலம் மறைத்துவைத்திருந்தனர் ஷர்மா தம்பதியர். துரதிர்ஷ்டவசமாக 1939-ல் ஒரு விமான விபத்தில் பலியானார் சரளாவின் கணவர் பி.டி.ஷர்மா.  

இந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்

இரண்டாம் உலகப் போர் மூண்டது. விமான ஓட்டுநர் லைசென்ஸ் அளிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியது பிரிட்டிஷ் அரசு. சரளாவின் பைலட் கனவுகளும் மூடுவிழா கண்டன. கையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்தார் சரளா. மனம்தளரவில்லை. லாகூரின் ‘மாயோ ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்கூலில்’ சேர்ந்து ஓவியப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தார். டிப்ளோமா படிப்பு முடித்து, புகழ்பெற்ற ‘பெங்கால் ஓவிய'ங்களை வரைய ஆரம்பித்தார். விதி விடவில்லை.

1947 மார்ச் மாதம் லாகூரில் தொடங்கியது இந்திய - பாகிஸ்தான் பிரிவினை கலவரங்கள். கையில் விஷம் அடங்கிய பாக்கெட்டு களுடன் நடமாடிக் கொண்டிருந்தனர் சரளாவும் அவரது சுற்றமும். `விதவை களுக்குப் பாதுகாப்பு இல்லை' என்று பலர் வற்புறுத்தியதால் சரளா, டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். டெல்லி அரவணைத்துக் கொண்டது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் கொண்ட சரளா, தன் இரண்டாவது கணவர் தக்ராலை அங்குதான் சந்திந்தார். நகைகள், ஆடைகள் வடிவமைக்கவும் கற்றுக் கொண்டார். இவர் வடிவமைத்த ஆடைகளையும் நகைகளையும் விரும்பி அணிந்து கொண்டவர், விஜயலட்சுமி பண்டிட். அதன்பின் 15 ஆண்டுகள் ‘காட்டேஜ் எம்போரியம்’, ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ என பல நிறுவனங்களுக்கு அணி கலன் வடிவமைத்துக்கொடுத்தார். தன் 93-வது வயது வரை தன் வேலைகளைத் தானே செய்துவந்த சரளா, 2008-ல் மரணம் அடைந்தார்.

`வாழ்க்கை முழுக்க நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் கடைப்பிடித்தேன். அது - எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது. சிரிக்கும் வரம் மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உள்ளது. சிரித்து, மகிழ்ந்து வாழ்வோம்.' - சரளா தக்ரால் உதிர்த்த பொன்மொழி இது.