தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

ஜிலு ஜோசப்பின் தைரியமான முன்னெடுப்பு முதல் டாக்டர் சாந்தாவின் நியாயமான கோபம் வரை கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!  

14 நாள்கள்

அனல் பறக்கும் அட்டைப்பட சர்ச்சை!

மீபத்தில் வெளிவந்திருக்கும் கேரளாவின் மாத்ருபூமி குழுமத்தின் பெண்கள் பத்திரிகையான க்ருஹலக்ஷ்மியின் அட்டைப்படம், அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. `குழந்தைக்குப் பால் ஊட்டுகிறோம்; தயவுசெய்து எங்களை உற்றுப் பார்க்காதீர்கள்' என்கிற தலைப்புடன், பெண் ஒருவர் திறந்த ஒருபுற மார்புடன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது போன்ற படத்துடன் வெளிவந்திருக்கிறது பத்திரிகை. ஒரு சாரரால் தாய்ப்பாலுக்கு ஆதரவான மிகவும் தைரியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படும் இந்தப் படம், இன்னொருபுறம் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. படத்தில் உள்ளவர் திருமணமே ஆகாத மாடலான ஜிலு ஜோசப் என்பதை உறுதிசெய்யும் சிலர், தாயே அல்லாத ஒருவரது படம் தாய்ப்பால் குறித்த முன்னெடுப்புக்கு எப்படி சரியானதாக இருக்கும் என்றும் வாதிட்டுவருகிறார்கள்.

இடுக்கி மாவட்டம் குமுளியைச் சேர்ந்த 27 வயதான ஜிலு, ஃப்ளை துபாயில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுகிறார். கவிதைகள் எழுதுவது, திரைப்படங்களில் நடிப்பது எனப் பன்முகத் திறமையாளர். இவ்வாறு புகைப்படம் எடுத்ததைத் தன் தாயும் இரு சகோதரிகளும் கடுமையாக எதிர்த்ததாகச் சொல்லும் இவர், `இப்படி ஒரு புதுமையான, புரட்சிகரமான புகைப்படம் தேவை என்று பத்திரிகை என்னை அணுகியதுமே, நொடிப்பொழுது தாமதம்கூட இல்லாமல் ஒப்புக்கொண்டேன். என் உடலின் மீதான முழு உரிமை எனக்கு மட்டுமே இருக்கிறது. அதை நான் வெறுக்கவும் இல்லை; வெட்கப்படவும் இல்லை. பின் ஏன், எல்லாப் பெண்களும் சாதாரணமாகச் செய்யும் ஒன்றைச் செய்ய நான் யோசிக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகிறார்.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைக்குப் பொது இடங்களில் பாலூட்டுவது அசௌகரியமான விஷயமாகவே தாய்மார்களால் இன்னமும் பார்க்கப்படுகிறது. ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் எனப் பொது இடங்களில் இப்போதுதான் தனியாக ‘பிரெஸ்ட் ஃபீடிங்’ அறைகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

எது எப்படியோ, இனிமே வெறிச்சுப் பார்க்காம இருந்தா சரிதான்!

14 நாள்கள்

சூடு பிடிக்கும் ‘ரேப் ரோக்கோ’ போராட்டம்!

டெ
ல்லி மகளிர் கமிஷன் தலைவர் ஸ்வாதி மலிவால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, தலைநகர் டெல்லியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகிறார். பிப்ரவரி 14 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து இவர் டெல்லியில் ‘ரேப் ரோக்கோ’ (பாலியல் வன்கொடுமையை நிறுத்துங்கள்) என்ற பேரணியை வெற்றிகரமாக நடத்தினார். ரேப் ரோக்கோ இயக்கம் தனக்கென ஓர் இணைய தளம் உருவாக்கி, பிரதமருக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியும் மக்களிடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வை உருவாக்கியும் வருகிறது. ரேப் ரோக்கோ இயக்கத்தின் கோரிக்கைகளில் மிக முக்கியமானவை... பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆறு மாதங்களுக்குள் ஃபாஸ்ட் ட்ராக் கோர்ட் மூலம் மரண தண்டனைக்கு வழிவகை செய்வது, தடயவியல் துறையை மேம்படுத்துவது, காவல் துறையை நவீனப்படுத்துவது, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிர்பயா நிதியைச் சரியான முறையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குவது.

இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ள 9313181181 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க அழைக்கிறது இந்த வலைதளம். தன்னார்வலர்களாக இயக்கத்தில் இணைந்து தங்களால் இயன்ற உதவி களைச் செய்யுமாறும் வலியுறுத்துகிறார் ஸ்வாதி.  இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தன் கோரிக்கைகளை வலியுறுத்திவரும் ஸ்வாதி, இயக்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மார்ச் 8-ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் 14 வயதுச் சிறுமியின் பிறப்புறுப்பில் 12 தையல்கள் போடப்பட்டது தமிழகத்தையே உலுக்கி இருக்கும் நிலையில், தலைநகரில் தொடங்கியிருக்கும் இந்த நாடளாவிய முயற்சி வரவேற்கத்தக்கதே (www.raperoko.org).

நாமும் கொடுக்கலாமே ஒரு மிஸ்டு கால்..?

14 நாள்கள்

‘மகளிர் ஸ்பெஷல்’ ரயில் நிலையம்!

ந்த ஆண்டுத் தொடக்கத்தில் மும்பை மாதுங்கா ரயில் நிலையம் இந்தியாவின் முதல் புறநகர் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட்டு, லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, வடமேற்கு ரயில்வேயைச் சேர்ந்த காந்திநகர் ரயில் நிலையமும் சமீபத்தில் ‘மகளிர் ஸ்பெஷல்’ ரயில் நிலையமாக்கப்பட்டது. புறநகர் அல்லாத மெயின் லைன் ரயில் நிலையங்களில் முழுக்க முழுக்கப் பெண்களே பணிபுரியும் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் இது. தினமும் 50 ரயில்கள் காந்திநகரைக் கடக்கின்றன, 25 ரயில்கள் நின்று செல்கின்றன, ஏழாயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையத்தில் நிலைய மேலாளர், நிலைய அதிகாரி, டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் வழங்கும் ஊழியர்கள், பாயின்ட்ஸ் வுமன், ஆர்பிஎஃப் காவலர் என இங்கு பணிபுரியும் 28 பேரும் பெண்களே.

இங்கு பணியில் அமர்ந்த முதல் நாளே பரிசோதகர் களான அபூர்வாவும் வந்தனாவும் டிக்கெட் இன்றி பயணம் செய்த நபர்களிடமிருந்து அபராதம் வசூலித்தனர். இங்கு நிலைய அதிகாரியாகப் பணிபுரியும் ஏஞ்சலா ஸ்டெல்லா மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதாகக் கூறுகிறார். தானியங்கி சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம், சிசிடிவி கேமராக்கள் எனப் பெண்களுக்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பும் நிறைந்த ரயில் நிலையமாகப் பளிச்சிடுகிறது காந்திநகர் ரயில் நிலையம்.

எக்ஸ்பிரஸ் பெண்கள்!

14 நாள்கள்

ஊழலை கேன்சருடன் ஒப்பிடாதீர்!

ஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மேத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், `கடந்த 2011 முதல் நடைபெற்றுவந்த எங்கள் வங்கியின் ஊழல் கேன்சர் போன்றது' என்று கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவனரும், பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சாந்தா.

கடிதத்தின் சாரம் இதுதான்... `ஊழல் என்பது ஒரு குற்றம். அதைச் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். கேன்சர் அப்படி அல்ல; ஆயிரக்கணக்கான கேன்சர் நோயாளிகள் ஆண்டுதோறும் எங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆரோக்கியமான, மகிழ்வான வாழ்க்கையை அதன்பின் வாழ்கிறார்கள். கேன்சர் என்பதைக் குற்றத்துடனோ, நம்பிக்கையின்மையுடனோ, அச்சம்கொள்ள வேண்டிய ஒன்றோடோ ஒப்பிட வேண்டாம். ஒருபோதும் புற்றுநோயை ஊழலுடன் ஒப்பிட வேண்டாம். உங்கள் வங்கியின் சட்டச் சிக்கல்களுடன் கேன்சர் எனும் வார்த்தையை முடிச்சுப்போட்டுப் பேச வேண்டாம். இந்த வேண்டுகோளை அனைவரிடமும் வைக்கிறேன். கேன்சர் எனும் வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். பிற புற்றுநோய் மருத்துவர்களும் என் கருத்துடன் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்.’

- கடும் காட்டத்துடன் பகிரங்கமாகவே இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் டாக்டர் சாந்தா.

13 ஆயிரம் கோடி ரூபாய் முழுங்கினதை, ஆபீசர்ஸ் `கேன்சர் மாதிரி’னு எப்படி நோகாம சொல்ல முடியுது?!

14 நாள்கள்

ஐந்தில் வளைந்த சாதனைப் பெண்!

ஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெண்கள் வால்ட் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த அருணா ரெட்டி. இருபத்து இரண்டு வயதாகும் அருணா, தன் வெற்றிக்குக் காரணம், தனக்கு ஜிம்னாஸ்டிக்ஸை அறிமுகப்படுத்திய தன் தந்தை நாராயண ரெட்டிதான் என்கிறார். ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யக்கூடிய உடல்வாகும் பலமும் தன் மகளிடம் உள்ளதை சிறு வயதிலேயே அடையாளம் கண்டுகொண்ட நாராயண ரெட்டி, ஹைதராபாத்தின் லால்பகதூர் சாஸ்திரி அரங்கில் பயிற்சிக்குக்கொண்டு சேர்க்கும்போது மகளின் வயது ஐந்துதான். `என் வெற்றியை அவருக்கே சமர்ப்பிக்கிறேன். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால், மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்' என்று கூறியிருக்கிறார் அருணா.

ஏற்கெனவே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற அருணா, தேர்ந்த கராத்தே கோச்சும்கூட.

2005-ம் ஆண்டு முதல், மூன்று தேசியப் போட்டிகளிலும் நிறைய பதக்கங்களை அள்ளிக் குவித்திருக்கிறார் அருணா. இனிவரும் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடப் போவதாக அறிவித்துள்ள அருணாவின் அடுத்த இலக்கு 2018-ம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள்.

`ஜிம்னாஸ்டிக்ஸைப் பொறுத்தவரை எவ்வளவு பயிற்சி இருந்தாலும், 23-24 வயதைக் கடந்துவிட்டால், உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழந்துவிடுகிறது. அதனால்தான் விரைவாகவே பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்' என்கிறார் அருணா.

ஆல் தி பெஸ்ட் அருணா!