தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

மூன்றெழுத்து அற்புதம்சாஹா - படங்கள் : க.பாலாஜி

`என் தாய்தான் உலகின் ஆகச்சிறந்த அம்மா’ என்கிற எண்ணம் எல்லா குழந்தைகளுக்கும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. அதுதான் தாய்மையின் சிறப்பு. மருத்துவரும் ஸ்கேட்டிங் சாம்பியனுமான ஆர்த்தியும் அவரின் தங்கை ஆராதனாவும் அவர்களின் அம்மாதான் ‘தி பெஸ்ட் மாம்’ என்பதற்கு ஆயிரம் காரணங்கள் வைத்திருக்கிறார்கள். மகள்கள் பெருமையாகப் பேசும் அந்த மாண்புமிகு அம்மா பிரபல மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.  

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

‘`அம்மானாலே பெஸ்ட்தானே... அதுக்குக் காரணங்கள் சொல்ல முடியுமா என்ன?’’ என்று ஆச்சர்யமாக ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த வார்த்தைகளிலும் வரிகளிலும் ஆர்த்தியும் ஆராதனாவும் நிரப்பும் அத்தனையும் நூறு பர்சென்ட் லவ்.

‘`நினைவு தெரிஞ்ச நாள்லேருந்தே நாங்க எங்கம்மாவை பிஸியான டாக்டராகத்தான் பார்த்து வளர்ந்திருக்கோம். ஆனாலும் அம்மா, எங்களுக்கான குவாலிட்டி டைமைக் கொடுக்கிறதுல ஒருநாளும் காம்ப்ரமைஸ் ஆனதே இல்லை.

அம்மா அவங்களோட டீன் ஏஜ்ல ஸ்போர்ட்ஸ் பர்சனா இருந்தவங்க. பயங்கரமான ஃபிட்னஸ் ஃப்ரீக். அதனால நானும் தங்கச்சியும் ஏதாவது ஒரு ஸ்போர்ட்ல இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க. முதல்ல என்னை ஸ்விம்மிங் பண்ணவும் டென்னிஸுக்கும் கூட்டிட்டுப் போனாங்க. அண்ணா நகர் டவர் பார்க்குக்கு என்னையும் தங்கச்சியையும் விளையாடக் கூட்டிட்டுப் போவாங்க. அப்போ எனக்கு எட்டு வயசு. அங்கே நிறைய குழந்தைங்க ஸ்கேட்டிங் பண்றதைப் பார்த்தேன். எனக்கும் அதுல ஆர்வம் வந்தது. அதைச் சொன்ன உடனேயே அம்மா என்னை ஸ்கேட்டிங் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. ‘ஏற்கெனவே ஸ்விம்மிங், டென்னிஸ் எல்லாம் இருக்கிறபோது, ஸ்கேட்டிங் எதுக்கு?’னு அவங்க கேட்கலை. ஸ்கேட்டிங் பண்ண ஆரம்பிச்ச முதல் நாள்லேருந்து, இன்னிக்கு வரைக்கும் அம்மாவோட சப்போர்ட்டும் ஊக்கமும் அப்படியே இருக்கு...’’ - அழகாகச் சொல்கிற ஆர்த்தி, தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் ஸ்கேட்டிங் சாம்பியன்களில் ஒருவர்.

‘`ஸ்கேட்டிங் கொஞ்சம் ரிஸ்க் நிறைஞ்ச விளையாட்டு. லேசா ஸ்லிப் ஆனாலும் பெரிசா அடிபடும். பலமுறை எனக்கு அப்படி நடந்திருக்கு. வேற யாராவதா இருந்திருந்தா, ‘பொம்பிளைக் குழந்தை... இப்படி அடிக்கடி அடிபட்டுக்கிட்டு வந்து நிற்கிறது நல்லதில்லை. ஸ்கேட்டிங்கே வேணாம்’னு முடிவெடுத்திருப்பாங்க. ஆனா, எங்கம்மா வேற லெவல். ஒவ்வொரு முறை நான் விழுந்து அடிபட்டுக்கிட்டு வந்து நிற்கும்போதும், எனக்குத் தைரியம் சொல்வாங்க. அடுத்த முறை கவனமா விளையாடறதுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அம்மாவுக்கு என்னை மெடிசின் படிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, அதை அவங்க என் மேல திணிக்கலை. எனக்கு பயாலஜி ரொம்பப் பிடிச்சது. அதனால மெடிசின் படிச்சேன்.

ஒரு டாக்டரா அம்மாவை நான் அவ்வளவு ரசிப்பேன். பேஷன்ட் ஒவ்வொருத்தரையும் தன் குடும்பத்துல ஒருத்தராத்தான் பார்ப்பாங்க. வேலை முடிஞ்சு ராத்திரி ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்திருப்பாங்க. அவங்க எப்படா வீட்டுக்கு வருவாங்கனு நானும் தங்கச்சியும் வெயிட் பண்ணிட்டிருப்போம். வீட்டுக்கு வந்தாலும் அம்மாவுக்குப் பாதி ராத்திரியிலகூட பேஷன்ட்ஸ் போன் பண்ணுவாங்க. அந்த நேரத்துலயும் ஒருநாள்கூட அம்மா கோபப்பட்டதில்லை. பொறுமையா அவங்களுக்கு ஆலோசனை சொல்லுவாங்க. நாங்க சின்னக் குழந்தைங்களா இருந்தபோது அது எங்களுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கு. அம்மா மேல கோபப்பட்டிருக்கேன். ஆனா, நான் வளர்ந்து டாக்டருக்குப் படிச்சு முடிச்ச பிறகுதான் மருத்துவம்கிறது எவ்வளவு பெரிய சேவைனு புரிஞ்சது. அம்மா மேல மரியாதை அதிகமானது. இப்பவும் ராத்திரி எந்த நேரம் எமர்ஜென்சி கால் வந்தாலும் அசிஸ்டென்ட்டை அனுப்பவோ, போன்லயே இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுக்கவோ நினைக்க மாட்டாங்க. உடனே கிளம்பிப் போயிடுவாங்க. அவங்ககிட்டருந்து நான் கத்துக்க வேண்டிய விஷயம் அது...’’ - அக்கா நிறுத்த, ஆர்வத்துடன் தொடர்கிறார் தங்கை ஆராதனா.

‘`ஆர்த்தி அளவுக்கு நான் அம்மாவை மிஸ் பண்ணினதில்லை. ஏன்னா, நான் ஸ்கூல் படிச்சுட்டிருந்தபோது ஸ்கூல் முடிஞ்சதும் அம்மாவோட கிளினிக்ல போய் உட்கார்ந்துடுவேன். அங்கேயே படிக்கிறது, ஹோம்வொர்க் பண்றதுனு இருப்பேன். நானும் முதல்ல ஸ்கேட்டிங்தான் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு எனக்கு ஸ்குவாஷ் மேல ஆசை வந்திருச்சு. நாலரை வருஷமா விளையாடறேன். ஸ்போர்ட்ஸ்ல கொஞ்சம் பிஸியாக ஆரம்பிச்ச பிறகுதான் அம்மாவை மிஸ் பண்றேன். நிறைய டிராவல் பண்ணணும். பெரும்பாலும் அப்பாதான் என்கூட வருவார். ‘மெடிசின் படிக்கிறியா’னு அம்மா கேட்டாங்க. ஆனா, எனக்கு `லா'தான் பிடிச்சிருந்தது. ‘பிடிச்சதைப் படி... ஆனா, ஹார்டு வொர்க் பண்ணு’னு சப்போர்ட் பண்ணினாங்க.

சின்னவளா இருந்தபோது நான் சரியா ஸ்கூலுக்குப் போக மாட்டேன். படிக்க மாட்டேன். ப்ளஸ் டூ-லகூட போர்டு எக்ஸாமுக்கு முதல்நாள்தான் படிச்சேன். ஸ்கூல்லேருந்து கம்ப்ளெயின்ட்ஸ் வந்துகிட்டே இருக்கும். ஆனா, அம்மா என்கிட்ட கோபப்பட்டதே இல்லை. ‘உன்னால முடியும்’னு சொல்லியே என்னை மோட்டிவேட் பண்ணுவாங்க.

நான், அம்மா, அக்கா மூணு பேரும் சேர்ந்துட்டா செம கலாட்டா நடக்கும். அம்மா - பொண்ணுங்கிறதை மறந்து ஃப்ரெண்ட்ஸ் மாதிரி அரட்டையடிப்போம். பேசாத விஷயங்களே இருக்காது. பிரியாணியும் நண்டும் சமைச்சுத் தருவாங்க. ஷாப்பிங் போவோம். அம்மாகூட வெளியில போனா அவங்க எங்கம்மானு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அக்காவானு கேட்பாங்க. செம ஹேப்பியா இருக்கும்...’’ - ஆரவாரமாகச் சொல்கிற ஆராதனாவுக்கு அவர் அம்மாதான் பெஸ்ட் என்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

‘`அவங்க எங்கம்மா... அதான்!'’ என்கிறார் அசத்தலாக.

‘`அவங்க சூப்பர் உமன்; சூப்பர் மாம்...’’ என்கிறார் அக்கா ஆர்த்தி.

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

``எனக்குக் கிடைத்த வரங்கள்!’’

``ஆ
ர்த்தியும் ஆராதனாவும் எனக்கு லைஃப்ல கிடைச்ச வரங்கள்னுதான் சொல்லணும். ஸ்போர்ட்ஸ்லயும் சாதிச்சுக்கிட்டு, படிப்பையும் கோட்டைவிடாம இருக்கிறது சாதாரண விஷயமில்லை. பெற்றோர் சப்போர்ட்டை எல்லாம் தாண்டி, வாழ்க்கைக்கு ஸ்போர்ட்ஸ் எவ்வளவு முக்கியம்கிற தெளிவும், அதையும்விட படிப்பு முக்கியம்கிற பொறுப்பு உணர்வும் வேணும்.

காலையில நாலு மணிக்கு அவங்களா அலாரம் வெச்சு பிராக்டீஸுக்குக் கிளம்புவாங்க. முடிச்சுட்டு வந்ததும் ஸ்கூல். ஓர் அம்மாவா அவங்களுக்கு அந்தச் சின்ன வயசுல அவ்வளவு கஷ்டங்கள் தேவையானு தோணினாலும், அது அவங்களோட எதிர்காலத்துக்கான அஸ்திவாரம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

பிள்ளைங்களுக்குப் படிப்போட முக்கியத்துவத்தையும் எடுத்துப் புரியவெச்சு, அதேநேரம் ஸ்போர்ட்ஸ்லயும் ஆர்வம் குறைஞ்சுடாமப் பார்த்துக்கிறது பெரிய சவாலா இருந்தது. ஆனா, விளையாடிட்டு வந்து படிக்கிறபோது புரிஞ்சுக்கிற சக்தி அதிகமாச்சு.  மனசளவுல பாசிட்டிவா வளர்ந்தாங்க. வெற்றி, தோல்விகளை ஹேண்டில் பண்ற மனப்பான்மை வந்தது.

வெறும் படிப்பை மட்டுமே பார்க்கிற பிள்ளைங்களை விட ஸ்போர்ட்ஸ்ல இருக்கிறவங்க படிப்புல ஒருபடி மேல இருப்பாங்கனு நிரூபிச்சாங்க. என்னை மாதிரி அம்மாக்களுக்குக் குழந்தைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்க முடியாது. ஆனா, குவான்டிட்டி டைமைவிடவும் குவாலிட்டி டைம் முக்கியம்னு நினைச்சேன். இப்போ வரைக்கும் எங்க வீட்ல நாங்க நாலு பேரும் ஒரே பெட்ரூம்லதான் தூங்குவோம்.

யார் எவ்வளவு லேட்டா வந்தாலும் எல்லாரும் கொஞ்ச நேரமாவது சிரிச்சுப்பேசிட்டு அன்னிக்கு நடந்த விஷயங்களை ஷேர் பண்ணிட்டுதான் தூங்கப்போவோம். அந்தப் பிணைப்பு ரொம்ப முக்கியம்...’’ - மகள்கள் தேவதைகளாகவும் இருக்கும் பூரிப்பு தாய் மாலா ராஜ் முகத்தில்.

அன்பான அம்மா - மகள்களுக்கு அழகான புடவைகள் பரிசு!

‘மகள்களுக்கான போட்டி’யில் வாசகிகள் எழுதிக் குவித்த உணர்வுகளின் பதிவுகள்... 

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

வறுமைக்காக ஒரு வரனா?

ன் அம்மாவுக்கு மூன்று குழந்தைகள். என் தந்தை பாதுகாப்பு இலாகாவில் பணிபுரிந்து சுதந்திரத்துக்கு முன்பே கராச்சியில் காலமாகிவிட்டார். தகவல் 18 நாள்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அப்போது அம்மாவுக்கு 25 வயது. அப்பாவுக்கு 32 வயது. மிலிட்டரி பென்ஷன் அம்மாவுக்கு 16 ரூபாய். மூன்று குழந்தைகளுக்கு அலவன்ஸ் 12 ரூபாய். 25 வயதில் 28 ரூபாய் பென்ஷனில் குழந்தைகளை வளர்த்துவிட வேண்டும் என்ற நிலையில் ஆரணியில் என்னையும் தம்பியையும் பள்ளியில் சேர்த்தார். பணப்பற்றாக்குறைக்கு மாமா மாதாமாதம் 15 ரூபாய் அனுப்புவார். வாடகை 5 ரூபாய். அம்மாவிடம் 12 பவுன் நகைகளும், நிறைய வெள்ளிப் பாத்திரங்களும் இருந்தன. நாங்கள் படித்து முடிப்பதில் அதெல்லாம் கடைக்குப் போய்விட்டன. மூன்று பேருக்கும் வயிறார சாப்பாடு போட முடியவில்லையே என வருத்தப்படுவார். தம்பியைச் சித்தப்பா வீட்டுக்கு அனுப்பினார். அவர், அவனை வெள்ளிக்கடையில் மாதம் 50 ரூபாய் சம்பளத்துக்குச் சேர்த்துவிட்டார். கோவையிலிருந்து மாதம் 30 ரூபாய் மணியார்டர் வரும். என் தம்பியும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து படித்தான். ஒரு வழியாக மூன்று வருடங்கள் கழித்து எல்.ஐ.சி-யில் தம்பிக்கு வேலை கிடைத்து, மாதம் 125 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அம்மாவுக்கு பென்ஷன் 20 ரூபாயும் கிடைத்தது. எனக்கு அப்போது 22 வயது. எனக்குத் திருமணம் செய்துவைக்கும் நோக்கில் சொந்தக்காரர்கள் சிலர், ‘நான்கு குழந்தைகளுடன் இருக்கும். மனைவியை இழந்த ஒருவர், வங்கியின் மேலாளராகப் பணிபுரிகிறார். மாதம் 800 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவருக்குக் கொடுத்துவிடலாம். சாப்பாடு, துணிக்குப் பஞ்சமிருக்காது’ என்றார்கள். அவர், என் அப்பா பிறந்த வருடம் பிறந்திருக்கிறார். என் அம்மா சம்மதிக்கவில்லை. பிறகு ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்துவைத்தார். சிறுவயதில் தன்னையும் காப்பாற்றிக்கொண்டு எங்களையும் காப்பாற்றி நல்ல நிலைக்குக்கொண்டு வந்த என் அம்மாதான் பெஸ்ட்!

- சாவித்திரி சிவசைலம், கோயம்புத்தூர் 38

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

அம்மா எடுத்த முடிவால் அழகாக வாழ்கிறேன்!

லகின் உன்னதமான உறவு அம்மா. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் என்பதால் என்னைச் செல்லமாக வளர்த்தார்கள். அதே நேரத்தில் பெரியவர்களிடம் மரியாதை, அனைவரையும் அரவணைத்தல் என எல்லாம் கற்றுக்கொடுத்தார்கள். கல்லூரிக்குச் செல்லும்போது தினமும் ஒரு கி.மீ நடந்துவந்து பேருந்தில் ஏற்றிவிடுவார்கள். மாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து என்னை அழைத்துச் செல்வார்கள். தன் உடல்நலனைக் கருத்தில்கொள்ளாமல் என் நலமே பெரிதென்று வாழ்ந்தார்கள். கல்லூரி முடிந்து வேலையில் சேர்ந்தபோது ஒரு வாரம் என்னுடன் வந்து, அலுவலக வளாகத்தில் காத்திருந்து அழைத்துச் சென்றார்கள். 

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?பிலானியில் எம்.எஸ் படித்துக்கொண்டிருக்கும்போது நல்ல வரன் அமைந்து எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். கல்யாணத்துக்கு முன், தொடர்ந்து நான் பணிக்குச் செல்லலாம் என்று பேசிய மாமியார் வீட்டினர், கல்யாணத்துக்குப்பின் வேலையைவிடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதற்காகக் கொடுமையும் படுத்தினார்கள்.

இதை என் தாயிடம் சொல்லிக் கண்ணீர் வடிக்க, அவர் துணிந்து என் திருமண பந்தத்தையே முறித்தார்கள். பழைய பஞ்சாங்கம் பேசிக்கொண்டிருக்கும் தாய்போல என் தாய் இல்லாமல், உற்றார் உறவினர் பழிச்சொல்லுக்கு அஞ்சாமல், `மாமியார் வீட்டில் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் பரவாயில்லை; கணவர் வீட்டில்தான் வாழ வேண்டும்' என்று வற்புறுத்தாமல் என் தாய் எடுத்த துணிச்சலான முடிவால் இன்று நான் மூன்று பட்டப்படிப்புகளைப் படித்து முடித்துவிட்டு, நல்ல பணியில், சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதனால், என் அம்மாதான் பெஸ்ட் என்பேன்.

- க.சுபாஷினி, சென்னை-16

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

கணவனே கைவிட்டாலும் கல்வி கைக்கொடுக்கும்!

ப்பா, அம்மா இருவருமே அந்தக் காலத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள். பெற்றோருக்கு, நாங்கள் மூன்று பெண்கள்; ஒரு பையன். அம்மாவின் எழுத்து, பேச்சு, செயல் எல்லாமே எப்போதும் ஆண் ஆதிக்கத்துக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் எதிரானது. `எல்லாரும் கல்வி கற்க வேண்டும். அதுவும் பெண்கள் கட்டாயமாக அதிகபட்ச கல்வி கற்க வேண்டும். திருமணமான பெண்களுக்குக் கணவனைவிடவும் அவள் கற்ற கல்விதான் உற்ற துணையாகக் கடைசி வரை இருக்கும்' என்பதை வகுப்பறையிலும், வீட்டில் எங்களிடமும் தொடர்ந்து கூறி வருவார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் எல்லாருக்கும் தொழிற்கல்வியைத் தந்தார் அம்மா. ‘கணவனாக வருபவர் பிற்காலத்தில் ஏதோ காரணத்தால் தன் மனைவியைக் கைவிட நேர்ந்தால், அப்போது மனைவியாகிய அந்தப் பெண் கதி கலங்கி, திக்குத்தெரியாமல் தனியாக நிற்கக் கூடாது; அவளுக்கு அப்போது அவள் கற்ற கல்வி நிச்சயம் கைக்கொடுக்கும். நாம் கற்ற கல்வி மூலம் தொழில் செய்து பிள்ளைகளையும் குடும்பத்தையும் நம்மால் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை அந்தப் பெண்ணுக்கு வரும்’ என்று சொல்லிச் சொல்லியே தன் மாணவர்களையும் எங்களையும் வளர்த்ததால் எங்க அம்மாதான் பெஸ்ட்!

- இரா.வெண்ணிலா, புதுச்சேரி - 11

மேலும் பல வாசகிகளின் உணர்வுகள் அடுத்த இதழில்...