தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!”

“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!”

சாந்தி முருகானந்தம்இது ‘பேட்மேன்' குடும்பம்மு.பார்த்தசாரதி - படம் : தி.விஜய்

“எத்தனையோ வீடுகள்ல, ‘எம்புருஷன் அடிக்கடி சண்டை போடுறாரு’, ‘குடிச்சுட்டு வீதியில விழுந்து கிடக்குறாரு’ன்னு சொல்றதைக் கேட்கும்போது, ‘அப்பாடா... நமக்கு அந்த மாதிரியெல்லாம் இல்லாம ஒழுக்கமான கணவர் கிடைச்சிருக்காரு’ன்னு கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கேன். ஆனா, அதே கணவரைத்தான் சரியா புரிஞ்சிக்காம தனியா விட்டுட்டு அப்பா வீட்டுல போய் இருந்தேன்” - கோவையைச் சேர்ந்த தொழிலதிபர், ‘பேட்மேன்’ அருணாசலம் முருகானந்தத் தின் மனைவி சாந்தியின் வார்த்தைகள் இவை. 

“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!”

பாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் அக்‌ஷய்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேட்மேன்’ (Padman) இந்திப் படம், நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாதவிடாய்க் காலங்களில் கிராமப் புறப் பெண்களும் நாப்கின்களைப் பயன்படுத்த அறிவுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம், அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கை.

“எங்களுக்குக் கல்யாணமாகி பத்து வருஷங்கள் ஆகப்போகுது. எனக்கு ஒவ்வொரு மாசமும் அந்த மூணு நாள்கள் வந்துடுச்சுன்னா ரொம்ப கஷ்டமாகிடும். அந்த நேரத்துல இவரு எனக்குப் பக்கபலமா இருந்தாலும் ஒருசில விஷயங்களைப் பத்தி கேட்க ஆரம்பிக்கும்போது கூச்சமா இருக்கும். மாதவிடாய் பத்தி எதையாவது கேட்டுட்டே இருக்கிறவர்கிட்ட, ‘எனக்கு பதில் சொல்லத் தெரியல, என்னை விட்டுடுங்க’ன்னு சொன்னாக்கூட விடாம பேசிட்டே இருப்பாரு. ‘இந்த நேரத்துல துணியைப் பயன்படுத்தக் கூடாது, அதை யூஸ் பண்ணு, இதை யூஸ் பண்ணு’ன்னு சொல்லும்போது, ‘இவரு எதுக்கு பொம்பள விஷயத்துலயெல்லாம் தலையிடுறாரு’ன்னு கோபம் வரும். பல்லைக் கடிச்சிட்டிருப்பேன்.

ஆரம்பத்துல என்கிட்ட மட்டும் மாத விடாய் சிரமங்கள் பற்றிக் கேட்டுக்கிட்டு இருந்தவரு, மற்ற பொம்பளைங்ககிட்டயும் கேட்க ஆரம்பிக்க, அவ்வளவுதான்... ‘உம் புருஷன் அப்படி இப்படி’ன்னு கண்ணு, காது, மூக்கெல்லாம் வெச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஒருசிலர் நேரடியா வீட்டுக்கே வந்து சண்டை போட்டாங்க. இன்னொரு பக்கம், இவரு எங்கிட்ட கேள்வி கேட்கிறதையும் விடலை. வீட்டுக்காரராகவே இருந்தாலும் பொம்பளைங்க ரகசியமா நினைக்கிற அந்த விஷயத்தை எப்படிச் சொல்ல முடியும்? ஒருகட்டத்துக்குமேல பொறுக்க முடியாம எங்கப்பா வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டேன்’’ என்று சொல்லிக் கொண்டே தன் கணவரை ஏறிட்டுப் பார்க்க, முருகானந்தம், சாந்தியின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார்.

“மாதவிடாய் நேரத்துல சுகாதாரமில்லாத பழைய துணிகளைப் பயன்படுத்துறது இவங்களுக்குத்தானே கெடுதல்? அதைச் சொல்ல வர்றதை இவங்களே புரிஞ்சிக்காதபோது, வேற யாருங்க புரிஞ்சிப்பா? நான் பைத்தியக்காரன் மாதிரி ஊரு முழுக்க சுத்திட்டு இருந்தேன். மலிவு விலை நாப்கின் தயாரிக்கிற என் முயற்சிக்காக, அதில் பெண்கள் எதிர்பார்க்கிற, அவங் களுக்குத் தேவைப்படுற அம்சங்கள் என்னென்னன்னு எனக்கு எடுத்துச் சொல்ல யாருமே உதவி பண்ண முன்வராதபோது, நானே துணிஞ்சு டெஸ்ட்ல இறங்கினேன். என் உடம்புல சிவப்பு மை கறை இருக்கிறதைப் பார்த்து, ‘இவன் ரத்தத்தைக் குடிக்குறான், இவனுக்குப் பைத்தியம் புடிச்சிடுச்சு’ன்னு சொல்லி யாருமேகிட்ட வரமாட்டாங்க. ‘நாம ஒரு பெரிய நோக்கத்துக்காக ஓடிக்கிட்டு இருக்கோம், அதை அடைகிறவரை எதைப் பத்தியுமே கவலைப்படக்கூடாது’னு முடிவு பண்ணினேன். இன்னிக்கு நான் சாதிச்சுட்டேன். பழசைப் பத்தி யாருமே பேசுறதில்ல. அப்போ விரட்டுனவங்க எல்லாரும் இப்போ, ‘ஒனக்கு நெத்தி பெருசு முருகானந்தம், நீ சாதிச்சிடுவேனு எனக்கு முன்னவே தெரியும்’னு சொல்லுறாங்க” - சிரித்துக்கொண்டே சொல்பவரிடம், ‘`மீண்டும் எப்போது ஒன்றுசேர்ந்தீர்கள்?'’ என்றதும், ``நாலு வருஷம் முன்னதான்'' என்கிறார் சாந்தி.

“எப்பவுமே வேலை வேலைனு சுத்திட்டு இருக்கிறவருக்கு எங்கேயிருந்து பொண்டாட்டி ஞாபகம் வரும்? திடீர்னு ஒருநாள் டி.வி-யில இவரு பேட்டியைப் பார்த்ததுக்கு அப்பறம்தான் இவருக்குள்ள ஏதோ ஒரு திறமை இருக்குன்னு புரிஞ்சுக் கிட்டேன். ஊர்க்காரங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு நாமளே நம்ம புருஷனை தப்பா நினைச்சுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். அந்த அஞ்சு வருஷத்துல என்னிக்காவது ஒருநாள் நான் திரும்ப வந்துடுவேன்னு அவரும் எதிர்பார்த்துட்டுதான் இருந்திருக் காரு. அதுக்கப்பறம் ரெண்டு பேரும் ஒருத் தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிச்சோம். அவருக்கு சப்போர்ட்டா, எங்க கிராமத்துல எந்தப் பொண்ணாவது பெரிய மனுஷியா கிடுச்சுன்னா, மல்லிப்பூவையும், கூடை நிறைய நாப்கினையும் வெச்சு எடுத்துட்டுப் போவேன். பருவ வயசுல இருக்குற பிள்ளைகள்கிட்ட போய் மாதவிடாய் தொடர்பா பேசுவேன். இதுவரை 3,100 பெண்களுக்கு இலவச நாப்கின் கொடுத்திருக்கேன். இப்போ, எங்க வாழ்க்கையை பாலிவுட்ல படமாவும் எடுத்துட்டாங்க. என்னையும் பொண்ணு ப்ரீத்தியையும் டெல்லி, மும்பைன்னு கூட்டிட்டுப்போய் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, பால்கி சார்னு எல்லாரையும் சந்திக்க வெச்சாரு.

இந்தியாவுல இருக்கிற எல்லா பெண் களுக்கும் மலிவு விலை நாப்கின் சென்றுசேர வைக்கணும். அதை நோக்கித்தான் பயணிக்க ஆரம்பிச்சிருக்கோம். இப்போ வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கு...’’- பக்கத்தில் அமர்ந்திருக்கும் தன் கணவர் முருகானந்தத்தைப் பார்த்து மல்லிகைப்பூவாக பூரிக்கிறார் இந்த பேட்உமன்!