Published:Updated:

'ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்'...

உறுதியோடு ஓடும் 'பயோலி எக்ஸ்பிரஸ்'! எஸ்.ஷக்தி படம்: தி.விஜய்

'ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்'...

உறுதியோடு ஓடும் 'பயோலி எக்ஸ்பிரஸ்'! எஸ்.ஷக்தி படம்: தி.விஜய்

Published:Updated:
##~##

'பயோலி எக்ஸ்பிரஸ்’ நினைவிருக்கிறதா?! 1980-ல் இருந்து, 2000 ஆண்டு வரை உலகம் எங்கும் 'ஓடி’... இந்தியாவுக்காக தங்கம், வெள்ளி மெடல்களை அள்ளிக் கொண்டு வந்த சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் அது! யெஸ்... 'தங்க மங்கை' பி.டி.உஷாதான் அவர். ஒரு காலத்தில் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தவர், இப்போது எங்கே..?!

அடுத்த ஆண்டு லண்டனில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் கொத்தி வருவதற்காக, சில வீராங்கனைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் உஷாவை, கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள அவருடைய ஊரான பயோலியில், அவரது வீட்டில் சந்தித்தோம். ''எந்தானு ஏட்டா சுகந்தன்னே?!’' என்று சகஜமாக சம்சாரிக்கத் துவங்கிய உஷா,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு விஷயம் தெரியுமா..? சின்ன வயசுல நான் நோஞ்சான் குழந்தையாதான் இருந்தேன். மழையில் லேசா நனைஞ்சுட்டா போச்சு... வெயில்ல கொஞ்ச நேரம் விளையாடினா போச்சு... அப்புறம் ஹாஸ்பிட்டல்தான், மருந்துதான். வளர வளர என்னோட ஹெல்த்தை நினைச்சு நானே வருத்தப்பட்டு, அதை மாத்திக்க துடிச்சேன். என் ஸ்போர்ட்ஸ் கேரியரை மனசுல வெச்சு, பேரன்ட்ஸ் கொடுக்குற சத்து உணவுகளை ஆர்வமா சாப்பிட்டேன். 'மழையில் நனைஞ்சா காய்ச்சல் வந்துடுமோ’ங்கிற அச்ச உணர்வை சாய்ச்சதுதான், நான் உணர்ந்த என்னோட முதல் வெற்றி!''

'ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்'...

- சிரிக்கிறது வலுவாக வளர்ந்திருக்கும் அந்த 'நோஞ்சான் குழந்தை’.

''கேரள அரசு, 1976-ல் கண்ணூர்ல பெண்களுக்காக ஒரு ஸ்போர்ட்ஸ் டிவிஷன் ஆரம்பிச்சாங்க. என்னோட விளையாட்டு வாழ்க்கை ஒரு நேர்கோட்டுக்கு வர ஆரம்பிச்சது இங்கதான். என்னோட பெர்ஃபார்மன்ஸைப் பார்த்துட்டு, 'நீ பெரிய உச்சத்துக்கு போயிடுவே உஷா’னு சொல்லி நம்பிக்கையை வளர்த்த என்னோட கோச் நம்பியார் சாரை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

மாவட்ட அளவுல தடங்களைப் பதிக்க ஆரம்பிச்சு, ஸ்டேட், நேஷனல்னு ஓட ஆரம்பிச்சேன். கராச்சியில 1980-ல் நடந்த 'பாகிஸ்தான் ஓபன் நேஷனல் மீட்’தான் என்னோட முதல் இன்டர்நேஷனல் பெர்ஃபார்மன்ஸ். அதுல வாங்கின தங்கங்கள்... இன்னமும் என்னோட கண்ணுக்குள்ளே மின்னிக்கிட்டே இருக்குது. ரெண்டு வருஷம் கழிச்சு, சியோல் நகரத்துல நடந்த 'வேர்ல்டு ஜூனியர் இன்விடேஷன் மீட்’-ல் வாங்கின தங்கம், சர்வதேச மரியாதையைக் கொடுத்துச்சு. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்ஸ்... இந்த உஷாவை புகழோட உச்சத்துக்கு கொண்டுபோச்சு. ஒலிம்பிக்ஸோட ஃபைனலுக்குள்ள நுழைஞ்ச முதல் இந்திய பெண்ங்கிற பெருமையை இதுலதான் வாங்கினேன். இந்தியாவோட கவனம், என் கால்களை நோக்கி திரும்ப ஆரம்பிச்சுது. அதைப் புரிஞ்சுக்கிட்டு, முழு உறுதியை கால்கள்ல இறக்கி 400 மீட்டர்ஸ் ட்ராக்கில் நின்னேன். வெறியோடதான் ஓடினேன். ப்ச்ச்... மைக்ரோ நொடிகள்ல வெண்கலம் கைமீறிப் போயிடுச்சு''

- குரல் தளர்ந்து, பின் உயர்கிறது உஷாவுக்கு.

''சர்வதேச ட்ராக்ல பெர்ஃபார்ம் பண்ற அளவுக்கு எனக்கு அனுபவமில்லாம போனதுதான் முக்கியக் காரணம். உயர்தரமான பயிற்சி அமைப்புகளும், வாய்ப்புகளும், அனுபவங்களும் கிடைக்காம, ஃபைனல் வரைக்கும் போனதே பெரிய விஷயம்தான்.

அதுக்குப் பிறகு நிறைய சர்வதேச சாதனைகள் செய்தேன். இந்தியாவும் என்னை ரொம்பவே கொண்டாட ஆரம்பிச்சுது. அர்ஜுனா, பத்மஸ்ரீனு எனக்குப் பெரிய விருதுகளால அங்கீகாரங்கள் கிடைச்சுது. இது சந்தோஷமான விஷயம்தான்னாலும், சாதிச்சாதான் கொண்டாடுறாங்களே தவிர, முன்கூட்டியே தரமான  வீரரை அடையாளம் கண்டு ஊக்கம் கொடுக்கறதேயில்லை நம்ம நாட்டுல. 100 சதவிகிதம் திறமை இருந்தும், உயர் ரகப் பயிற்சி வசதிகளும், வாய்ப்புகளும் கிடைக்காமப் போறது... இந்திய வீரர்களுக்கான சாபம்!''

வருத்தப்பட்டு நிறுத்தியவர்,  

''என்னால் சாதிக்க முடியாத ஒலிம்பிக்கை... இளம் வீராங்கனைகளை வெச்சு சாதிக்கணும்ங்கற வெறி எனக்குள்ள வளர்ந்துச்சு. அதோட வெளிப்பாடாதான், 'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ்’னு விளையாட்டுக் கல்வி நிறுவனத்தை 2002-ல் ஆரம்பிச்சேன். குறைந்த பணத்துல உயர்தர பயிற்சி விஷயங்களை ஏற்படுத்தி தர்றது எனக்கு முதலில் சவாலாதான் இருந்துச்சு. ஆனா, குறுகிய காலத்துலயே எங்க பொண்ணுங்க நேஷனல் லெவலில் தடம் பதிக்கறத பார்த்துட்டு... கேரள அரசாங்கமும், சில ஸ்பான்சர்ஸ்களும் உதவிக்கு வந்தாங்க. அவங்களுக்கு வாழ்நாள் நன்றிக்கடன் பட்டிருக்கோம்.

இப்போ என்னோட ஒரே குறிக்கோள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் கேம்தான். லுகா, ஷில்பா, அஸ்வதி மோகன்... இப்படி எங்களோட தளபதிகள் சிலர், ஒலிம்பிக்ஸ் போருக்காக உச்சகட்ட தயார் நிலையில் இருக்காங்க. நொடி பிசகாம அவங்களுக்காக முழு வேகத்தில் உழைச்சுட்டிருக்கோம். என் கண்மணிகள் தங்கம், வெள்ளினு வாங்கணும், அதை இந்த நாட்டு மக்களோட சேர்ந்து நானும் கொண்டாடணும்கிறதுதான் என்னோட வாழ்நாள் லட்சியம்'' என்ற உஷா, சற்றே குரல் கம்ம...

''இந்தப் பள்ளியை வார்த்தெடுக்கிறதுக்குள்ளே நான் படுற சிரமங்களும், சவால்களும் இமயம் உயரத்துக்கு இருக்கு. சாதாரணமா இங்கே நடந்த இன்ஸ்பெக்ஷனை, 'பி.டி.உஷா பள்ளியில் போதை மருந்து ரெய்டு’-னு சொல்லி பரப்பிட்டாங்க. நாளைக்கு இந்த ஸ்கூல்ல இருந்து வர்ற சாதனையாளர்களைப் பார்க்கறப்போ, வதந்தி கிளப்பினவங்க வெட்கப்பட்டு நிப்பாங்க!''

- நியாயமான கோபம் உஷாவின் குரலை இன்னும் சூடாக்குகிறது.

''விளையாட்டு வீராங்கனைகளை வெறும் கிளாமர் டாலா மட்டும் கொண்டாடக் கூடாது. ஒரு போட்டியில் ஜெயிச்சுட்டா, 'இவர்தான் இந்தியாவின் நம்பிக்கை’னு எழுதி, பேசி கோபுர கலசமாக்கிடுறாங்க. அப்புறம் ஒரு போட்டியில் தோற்றாலும், 'முடிந்தது இவர் சாம்ராஜ்யம்’னு மண்ணோட மண்ணாக்கிடுறாங்க. இன்னொரு பக்கம், அரசாங்கம் அறிவியில் ரீதியிலான கட்டமைப்புகளை விளையாட்டு உலகத்துக்கு செஞ்சு தந்தால்தான் இந்திய விளையாட்டு உலகம் ஜெயிக்கும்'' என்ற உஷா, கணவர் சீனிவாசன் பக்கம் திரும்பி சின்னதாக புன்னகைத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

''திருமணமானது, மகன் உஜ்வாலை பெற் றெடுத்ததுனு சில வருஷங்கள் என் வாழ்க்கை, ட்ராக்ல இருந்து தடம் மாறி நின்னுச்சு. இந்த காலகட்டங்கள்ல 'பி.டி.உஷா அவ்ளோதான். இனி ஓடமுடியாது’னு நிறைய கணிப்புகள். கணவரோட சப்போர்டோட மறுபடியும் கிரவுண்ட்ல இறங்கி பயிற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஜப்பானில் நடந்த 'ஏசியன் ட்ராக் ஃபெடரேஷன் மீட்’-ல் மெடல் அடிச்சேன். என்னைப் பத்திப் பேசுனவங்களுக்கான பதிலடி மட்டும் இல்லை அது. 'பெண்களோட கேரியர்... திருமணத்துக்கு அப்புறம் அவ்வளவுதான், குழந்தை பெத்துக்கிட்டா அவங்களோட உடம்பு வலுவிழந்துடும், சாதிக்க முடியாது'ங்கறதுதான் சமூகத்தோட பொதுவான கருத்தா இருக்கு. இது வடிகட்டின பொய், அறியாமையால வந்த கருத்துனு உலகத்துக்கு நிரூபிக்க... நான் ஒரு துரும்பா பயன்பட்டதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி''

- கம்பீரமாக முடித்தார் பி.டி. உஷா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism