Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் ! ஓவியம்: மணியம் செல்வன் அகிலன் சித்தார்த்

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் ! ஓவியம்: மணியம் செல்வன் அகிலன் சித்தார்த்

Published:Updated:
##~##

ஆண், பெண் ரொமான்ஸ் உறவின் அடிப்படையே.... உடல்ரீதியான தொடர்புதான். அது இயல்பான ஒன்று. ஆனால், பல்வேறு உடல் மற்றும் மனரீதியான காரணங்களால் இது பாதிக்கப்படுவதும் இயல்பான ஒன்றாகவே இன்று ஆகிவிட்டது.

பரத்தின் அக்கா மகள் நித்யா. இருவருக்கும் வயது வித்தியாசம் எட்டு ஆண்டுகள். சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் தோழர்களாகவே வளர்ந்தார்கள். நித்யாவைத் தூக்கி வளர்த்திருக்கிறான் பரத். மடியில் படுக்கவைத்து தூங்கவும் வைத்திருக்கிறான். அண்ணன், தங்கை போன்ற உறவுகூட இருவராலும் உணரப்பட்டிருக்கிறது. வீட்டுப் பெரியவர்களோ, 'எதிர்கால தம்பதி' என்று சொல்லியே வளர்த்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரத், மத்திய அரசுப் பணியிலும்... நித்யா டீச்சராகவும் வேலை செய்து கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்களைக் கணவன், மனைவியாகக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. ஆனால், குடும்பத்தினரின் பிடிவாதத்தை மீறி அவர்களால் எதுவும் செய்யவும் முடியவில்லை.

திருமணமும் கோலாகலமாக நடந்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்ததுதான் பரிதாபம். நித்யா, பரத் இருவராலும் தாம்பத்ய உறவுகொள்ள முடியவில்லை. மூடிய அறைக்குள் இரு துருவங்களாக வாழ ஆரம்பித்தனர்.

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஆண்டுகள் ஒன்று, இரண்டு என ஓடின. வாரிசு எதுவும் உருவாகாததால்... இருதரப்புப் பெற்றோரும் கவலைகொண்டு, கோயில் கோயிலாக கூட்டிச் சென்றனர். பரிகாரங்களையெல்லாம் செய்தனர். புத்திசாலியான ஓர் உறவினர்தான், பரத் - நித்யா இருவரின் வாழ்க்கையில் ஏதோ சிக்கல் இருப்பதைப் புரிந்து, மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். உண்மை மெள்ள வெளிப்பட்டது. பெற்றோர் இடிந்து போனார்கள். இனி இந்த பந்தத்தைத் தொடர்வதில் அர்த்தமே இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக அவர்களுக்குப் புரிய, மணவிலக்குக்கு ஏற்பாடு செய்தார்கள். இன்று பரத், நித்யா இருவரும் அடுத்த வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள்.

ஒரு சிறுவனிடம், 'இவள் உன் எதிர்கால மனைவி’ என்று ஒரு சிறுமியைக் காட்டி, அந்த வயதிலேயே கருத்தைத் திணிப்பது விபரீதத்தில்தான் கொண்டுபோய் விடும் என்பதற்கு உதாரணமானதைத் தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை... பரத் - நித்யாவின் வாழ்க்கை.

'உன் கண்ணில் நீர் வழிந்தால்...’, கணவன் - மனைவி உறவின் அற்புதத்தை விளக்கும் உன்னதமான பாடல். 'வேரென நீ  இருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’, 'என் தேவையை யார் அறிவார், உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’  போன்ற காலத்தால் அழியாத வரிகளைக் கொண்ட பாடல் அது.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி கூட்டை விட்டுப்பிரிந்த பிறகு, ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இத்தனை நாள் ஓடி ஒடி உழைத்த களைப்பு, அப்போது ஓய்வெடுக்கச் சொல்லும். உடலும் தன்னுடைய வலுவையும் ஆரோக்கியத்தையும் மெள்ள இழந்து, சாய்ந்துகொள்ள ஒரு தோளைத் தேடும். அப்போதுதான் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஜெயந்தி, ரமேஷ் தம்பதிக்கு... அது தொடர்பான ஒரு கசப்பான அனுபவம், வாழ்க்கையின் ஆரம்ப காலங்களிலேயே ஏற்பட்டது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். ரமேஷ் மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவான். ஜெயந்திக்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும் அரசாங்கப் பணி. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.  

ஜெயந்திக்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டிக்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, ஒரு மாதமாவது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாய சூழல் வந்து சேர்ந்தது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஊரில் இருந்து ஒரு பெண்மணியை வரவழைத்த ரமேஷ், ஆஸ்பத்திரிக்கு பணத்தைக் கட்டிவிட்டு, கடமை முடிந்ததாக நினைத்தான். ஆபரேஷன் அன்றுகூட மனைவியின் அருகே இல்லாமல், ஆபீஸ் வேலையாக மும்பை சென்று விட்டான்.

அது, ஜெயந்தியின் மனதை மிகவும் பாதித்தது. பைத்தியம் பிடித்தவள்போல் ஆனாள். 'எப்படி இருக்கிறாய்?’ என்றுகூட விசாரிக்காமல், 'நல்ல காலம் முழு இன்ஷூரன்ஸ் பணம் வந்துவிட்டது’ என்று சந்தோஷப்பட்டான் ரமேஷ்.

ஒரு சில மாதங்கள் உருண்டோடிய நிலையில்... 'முதுகுத்தண்டில் இன்ஃபெக்ஷன்' காரணமாக படுத்த படுக்கையானானான் ரமேஷ். ஆறு மாதங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இப்போதுதான், பழைய கோபங்களை மீட்டெடுத்தாள் ஜெயந்தி. 'அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க முடியாது' என்றவள், கணவனை சம்பிரதாயத்துக்கு மட்டுமே கவனித்துக் கொண்டாள். ரமேஷ§க்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. படுக்கையில் படுத்தபடியே சண்டையிட்டான். மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வேதனைகளை எல்லாம் ஜெயந்தியும் கொட்டினாள். தன் தவறு புரிந்து, அதிர்ந்தவன், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டான். வாழ்வு மறுபடி இனிக்க ஆரம்பித்தது அவர்களுக்கு!

- நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism