Published:Updated:

கணீர் கலாசலா!

ம.பிரியதர்ஷினி படம்: பொன்.காசிராஜன்

கணீர் கலாசலா!

ம.பிரியதர்ஷினி படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:

'கலாசலா கலசலா... கலாசலா கலசலா..
கல்லாசா கலசலா... கலாசலா கலசலா..
வடக்கே கேட்டுப் பாரு
என்ன பத்திச் சொல்லுவான்
சர்தார் பீடா போல
என் பேரைத்தான் மெல்லுவான்’

##~##

- இளசுகளின் ஹெட்போனில் இடைவிடாமல் ஒலிக்க ஆரம்பித்திருக்கும் லேட்டஸ்ட் பாடல் இது. எஸ்.டி.ஆர் (சிம்பு) நடிக்கும் 'ஒஸ்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்த அயிட்டம் நம்பர் பாடலைப் பாடியவர், கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான எல்.ஆர்.ஈஸ்வரி. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து இவர் பாடியிருக்கும் திரைப்பாடல் இது. தி.நகரில் பழமை அழகுடன் இருக்கும் தன் வீட்டில், அதே கணீர் குரலும், உற்சாகமுமாக அதைப்பற்றி பேசினார் எல்.ஆர்.ஈஸ்வரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திடீர்னு ஒரு நாள் டைரக்டர் தரணியும், தமனும் எனக்கு போன் செய்து, 'ஒரு பாட்டுப் பாடணும்மா... கார் அனுப்பறோம்... வந்துடுங்க’னு சொன்னாங்க. நானும் ரெடியா காத்திருந்தேன். வீட்ல எல்லாரும், 'எங்கே கிளம்பிட்டே?'னு கேட்டப்போ, எதுவும் சொல்லல. ஏன்னா, நான் பாடற பாடல் சில காரணங்களால படத்துல வராமகூட போகலாம். இப்போ இருக்கற டிரெண்ட் அப்படி. ஏன் எதிர்பார்ப்பை உண்டாக்கணும்னுதான் சொல்லல. அதுக்கு ஏத்தமாதிரியே அன்னிக்கு கார் வரல. மறுநாள் போன் வந்துச்சு. 'நைட் ஒன்பது மணிக்கு பாட்டை கம்போஸ் பண்றதா இருந்தோம். உங்க உடல்நிலைய மனசுல வெச்சுதான் அந்த நேரத்துல கூப்பிடல. இப்போ வர முடியு மாம்மா?’னு கேட்டாங்க. அந்த அழைப்புல அக் கறையும் ஆறுதலும் இருந்துச்சு.

தமனும், தரணியும், 'இது டூயட் சாங். நீங்க பாடுறதை மட்டும்தான் ரெக்கார்ட் பண்ணப் போறோம்மா’னு சொல்ல, என் போர்ஷனை ஒன்றரை மணி நேரத்தில் முடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன். சமீபத்தில் நான் நார்வே, ஜெர்மனினு போயிருந்தப்போதான், நான் பாடின பாட்டை அங்க டவுன்லோட் பண்ணி எனக்கு போட்டு காண்பிச்சாங்க. நான் பிட் பிட்டா பாடிக் கொடுத்த அந்தப் பாட்டை முழுக் கோவையா கேட்டப்போ, அவ்வளவு பிரமிப்பா, சந்தோஷமா இருந்துச்சு. இன்னொரு பக்கம், இவ்வளவு மாஸ் ஹிட் ஆகியிருக்கிற இந்தப் பாட்டை இன்னும் கொஞ்சம் நல்லா பாடியிருக்கலாமோனும் தோணுச்சு!''

கணீர் கலாசலா!

- கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக தமிழகத்தை ஆட வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். ஆனாலும், அறிமுகப் பாடகிபோல் அத்தனை எளிமை அவர் வார்த்தைகளில்.

''அந்தக் காலத்தில் யார் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர்னு எந்தத் தகவல்களும் தெரியாமதான் ஸ்டூடியோ போவேன். அங்க மியூஸிக் டைரக்டர் சொல்றதை பாடிக்கொடுத்துட்டு வந்துடுவேன். நான் பாடின முதல் பாடல், 'நீங்காத நினைவுகள்’ படத்துக்காக 'ஓஹோ சின்னஞ் சிறு மலரே’வை எழுதினது வாலி அண்ணன்ங்கிறது, பல வருஷத்துக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுது. அதேமாதிரி 'வெள்ளி விழா’ படத்துக்காக 'காதோடுதான் நான் பேசுவேன்...’னு நான் பாடின பாட்டு, கவிஞர் கண்ணதாசன் எழுதினதுனுதான் ரொம்ப காலமா நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம் ஒரு சந்திப்புலதான் அதுவும் வாலி அண்ணனோட பாட்டுனு தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ இந்த 'கலாசலா’ பாட்டை எழுதினதும் வாலி அண்ணன்தான். ஏதோ... தானே பாடின மாதிரி சந்தோஷப்பட்டார். சினிமாவுல எனக்குக் கிடைச்ச மதிப்புமிக்க மனிதர்கள்ல வாலி அண்ணன் முதன்மையானவர்!'' என்ற ஈஸ்வரி, தன் சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். சமீபத்தில் 'ஆத்தா கண் திறந்தா’ என்கிற தலைப்பில் அம்மன் பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கணீர் கலாசலா!

''பாடின வாயும்... ஆடின காலும் சும்மா இருக்காதுனு சொல்லுவாங்க. எனக்கு வர்ற வாய்ப்புகளை முதுமையைக் காரணம் காட்டி தவிர்க்கறதில்லை... முழுமையா பயன்படுத்திக்கிறேன். கேப்டன் டி.வி-யில் 'நீங்காத நினைவுகள்’ங்கிற நிகழ்ச்சியையும் இப்போ நடத்திட்டு இருக்கேன். என் காஸ்ட்யூம்ஸ் பத்தின கேள்வியும் உங்ககிட்ட இருக்கலாம். ஆமா! எனக்கு அழகா உடுத்திக்க, அலங்காரம் பண்ணிக்கப் பிடிக்கும். நல்ல மனசோட இருந்தாலே, இளமை நம்மைவிட்டு விலகாதுங்கறதும் நான் நம்புற பியூட்டி சீக்ரெட்!''

- கலகலவெனச் சிரித்து, கை கூப்பி விடைகொடுத்தார் எல்.ஆர்.ஈஸ்வரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism