Published:Updated:

என் குடும்பம் !

எஸ்.ஏ.சந்திரசேகர் எம்.குணா

என் குடும்பம் !

எஸ்.ஏ.சந்திரசேகர் எம்.குணா

Published:Updated:
##~##

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்ற அடை யாளங்களை எல்லாம்விட, 'இளைய தளபதி’, நடிகர் விஜய்யின் தந்தை என்ற அடையாளத்தாலேயே பெரிதும் மகிழ்கிறார், எஸ்.ஏ.சந்திரசேகர்! கர்னாடக, மெல்லிசைப் பாடகி, தமிழக அரசு இசைக் கல்லூரிகளின் அறிவுரைஞர் ஷோபா சந்திரசேகருக்கும், தன் குடும்பம்தான் முதல் மகிழ்ச்சியாக இருக்கிறது!

''சினிமா கனவில், 18 வயதில் ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து... தெருவோரங்களில் படுத்துக் கிடந்த எனக்கு... இன்று ஒரு மதிப்பான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. காரணம்... ஷோபா! என் உழைப்பு, போராட்டம், பசி, துயரம் எல்லாவற்றிலும் என்னுடன் இருந்து, என்னை மட்டுமல்ல... இன்று என் பிள்ளையையும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவைத்த ஏணி... அவர்தான்!'' என்று நெகிழ்ந்து ஆரம்பித்தார் சந்திரசேகர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சட்டம் ஒரு இருட்டறை என்கிற கதையை கையில் வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 30 சினிமா கம்பெனிகள் ஏறி இறங்கிய காலம் அது. இரவானால் படுப்பதற்கு இடம் இல்லாமல் சுற்றித் திரிந்த இந்தக் காட்டுக்குருவிக்கு, கூடு ஒன்று கிடைத்தது. அந்தக் கூடு கொடுத்தது... நீலகண்டன் என்கிற தாய்ப் பறவை. என் எழுத்துக் கலையை அரங்கேற்ற மேடை போட்டுக் கொடுத்த கடவுளும் அவர்தான்.

என் குடும்பம் !

அந்தக் கடவுளின் தயவால்தான் நான் எழுதிய 'பிஞ்சுமனம்’, 'சுக்ரதிசை’ 'வரப்பிரசாதம்’ நாடகங்கள் அரங்கேறின. அந்த நாடகத்தில் அவருடைய மகன்கள் சுந்தர், சுரேந்தர் மற்றும் மகள்களும் நடித்தனர். அந்த நாடகங்களைப் பார்த்த பிரபல திரைப்பட இயக்குநர்களுக்கு, நான் அறிமுகமானேன்.

அந்த நேரம் பார்த்து எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது. மாதம் முந்நூறு ரூபாய் சம்பளம் என்று உத்தரவுக் காகிதம் சொன்னது. அதேசமயம், திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. முந்நூறு ரூபாய் கிடைக்கும் அரசாங்க உத்தியோகமா, நூறு ரூபாய் கிடைக்கும் உதவி இயக்குநர் வேலையா என்றெல்லாம் எந்தக் குழப்பமும் இல்லாமல், உறுதியான முடிவெடுத்து உதவி இயக்குநரானேன். நான் முதலில் பணியாற்றிய படம், 'மனசாட்சி'. பணம் கொடுதத முதல் முதலாளி, ஜாக்பாட் சீனிவாசன். இப்படித்தான் என் சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது.

என் குடும்பம் !

எனக்கு மனைவியைக் கொடுத்த இறைவனும், நீலகண்டன்தான். புரியவில்லையா..? அவருடைய மகள் ஷோபாவைத்தான் நான் காதலித்தேன்; கைப்பிடித்தேன். எனக்கென்று ஒரு குடும்பம் கிடைத்துவிட்டது. ஆனால்,  குடும்பத்தை காப்பாற்றுவது எப்படி..? சாப்பாடே இல்லை என்றாலும், பட்டினி கிடந்து சாவதாக இருந்தாலும் என்னோடு சாவதற்கு தானும் தயாராக இருந்தார் ஷோபா. இருவரின் வாழ்க்கையே இப்படிப் போராட்டத்தில் இருந்தபோதுதான், இன்னொரு புதுவரவு எங்கள் வீட்டில். விஜய் பிறந்தான்.

ஒருநாள். கையில் பைசா காசு இல்லை. நானும், ஷோபாவும் பசி பொறுப்போம். குழந்தை..? பசியால் அழுத குழந்தைக்கு பால் டின் வாங்கக் காசில்லாமல் நாள் முழுக்க நான் பட்டபாடு... எதிரிக்கும் வரக்கூடாது. அந்த இக்கட்டான நாட்களில் எல்லாம் என் குடும்பத்தைத் தாங்கியது, ஷோபாதான். நண்பர் இளையராஜாவின் மேடைக் கச்சேரிகளில் பாடச் செல்வார். ஒரு கச்சேரி பாடினால் 100 ரூபாய் கிடைக்கும். அவர் பாடும் நாட்களில் எங்களுக்கு உணவு... பாடாத நாட்கள் பட்டினி. ஆனால்... அந்த வறுமையிலும்கூட எங்களின் மகிழ்ச்சி குறையாமல் இருந்தது!'' என்ற சந்திரசேகர், ஷோபாவின் வார்த்தைகளுக்கு வழிவிட்டார்.

''எங்கள் மகள் வித்யா பிறந்தபோதுதான் இவருக்கு 'சட்டம் ஒரு இருட்டறை’ வாய்ப்பு கிடைத்தது. அவளை அதிர்ஷ்ட தேவதையாகக் கொண்டாடினோம். அவருக்குத் தொடர்ந்து ஏறுமுகம்தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் அந்தந்த மாநில சூப்பர் ஸ்டார்களை இயக்கும் அளவுக்கு முக்கியமான மாஸ் இயக்குந ரானார். அந்த வெற்றி நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஆறுதல் தந்த தருணத்தில்தான், இன்னுமோர் துயரத்தைச் சந்தித்தோம். எங்கள் மூன்று வயது தேவதை வித்யா, இறந்து போனாள். எங்கள் மூவரின் சந்தோஷங்களும் சமாதி ஆனது. சுட்டிப் பையனாக இருந்த விஜய், தன் இயல்பில் மாறி மௌனமானது அதன் பிறகுதான்.

அந்தச் சமயத்தில் என்னையும், விஜய்யையும் துன்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டது, என் கணவர்தான். அழுகையை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு, எனக்கும், விஜய்க்கும் அவர் தாயாகி தைரியமும், ஆறுதலும் தந்தார். எங்களை அந்தக் கண்ணீரில் இருந்து மீட்டார். ஒரு பக்கம் திரையுலக வேலைகள் அவரைத் துரத்தினாலும், இன்னொரு பக்கம் எனக்கும் விஜய்க்கும் தர வேண்டிய நேரத்தில் ஒரு குடும்பத் தலைவராக அவர் குறை வைத்ததே இல்லை. அந்தப் பிணைப்புதான் எத்தனை புயல்கள் சந்தித்தபோதும் எங்கள் குடும்பத்தைக் கரை சேர்த்த கட்டுமரம்!'' என்ற ஷோபாவின் முகத்தில், நெகிழ்வு.

என் குடும்பம் !

''கிட்டத்தட்ட 50 படங்கள் இயக்கி முடித்துவிட்ட நிலையில், இந்த சினிமா வாழ்க்கை போதும் என்று நான் முடிவெடுத்தேன். 'அப்பா... நான் நடிக்க வேண்டும்...’ என்று 18 வயதில் என்னிடம் வந்து நின்றான் விஜய். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'சினிமா வேண்டாம்’ என்றேன். என் பிடிவாதம் அவனுக்கு அப்படியே. 'சினிமாதான் வேண்டும்.’ என்றான் அவன். முடிவு, என் மனைவி கையில் தரப்பட்டது. 'அவன் நடிக்கட்டும். நீங்களே தயாரித்து, இயக்குங்கள்’ என்றார் ஷோபா. விஜய்யின் முதல் படமான 'நாளைய தீர்ப்பு’ வேலைகளை ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் விஜய் சில தடுமாற்றங்களைச் சந்தித்தபோது, 'கண்டிப்பாக ஜெயிப்போம்’ என்று எந்த சந்தேகமும் இல்லாமல் அவனும், அவன் அம்மாவும் முழு நம்பிக்கை வைத்துக் காத்திருந்தது, இப்போதும் என் கண்களில் காட்சிகளாக உறங்குகிறது. எங்கள் கூட்டின் சந்தோஷத்தைக் கூட்ட, மருமகள் சங்கீதா வந்தார். என் வழிகாட்டல், ஷோபாவின் ஊக்கம், சங்கீதா கொடுத்த அரவணைப்பு, விஜய்யின் உழைப்பு எல்லாம் சேர்ந்து இன்று அவனை 'இளைய தளபதி’ ஆக்கியுள்ளது. பாலுக்கு வழிஇல்லாமல் அழுத விஜய், இன்று பல நூறு குழந்தைகளைப் படிக்க வைக்கிறார், பல நூறு ஏழைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார், இன்னும் பல நலத்திட்ட உதவிகளைத் தொடர்கிறார்'' என்றபோது அத்தனை பெருமிதம் சந்திரசேகர் முகத்தில்.

''நான், ஷோபா, விஜய், சங்கீதா, பேரன் சஞ்சய், பேத்தி திவ்யா என்று இப்போது நாங்கள் பெரிய குடும்பம்; ஸ்டார் குடும்பம்; சூப்பர் குடும்பம்!''

- ஷோபாவின் சிரிப்பை ரசிக்கிறார் சந்திரசேகர் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism