Published:Updated:

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா
பிரீமியம் ஸ்டோரி
பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

இயற்கை... இனிமை...எம்.புண்ணியமூர்த்தி - படங்கள் : க.விக்னேஷ்வரன்

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

இயற்கை... இனிமை...எம்.புண்ணியமூர்த்தி - படங்கள் : க.விக்னேஷ்வரன்

Published:Updated:
பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா
பிரீமியம் ஸ்டோரி
பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

ரு பறவையைப்போல சுறுசுறுப்பாக, சுதந்திரமாக இருக்கிறார் அகிலா. பன்னாட்டு மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி, பிசினஸ் பெண். நாம் அவரைச் சந்திக்கக் காரணமான அடையாளம், சூழலியல் செயற்பாட்டாளர் என்ற மற்றொரு முகம்.  

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

கோவை அரசுக் கலைக்கல்லூரியில் சூழலியலையும் சங்க இலக்கியத்தையும் இணைத்து ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவியான அகிலாவை, தொலைக்காட்சி விவாதங்களில் சுற்றுச்சூழல் குறித்து மூச்சு வாங்கப் பேசப் பார்த்திருப்போம். அரசுப் பள்ளிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் குறித்து உரை நிகழ்த்துவது, பள்ளி மாணவர்களைச் சூழல் விழிப்பு உணர்வுப் பயணமாகக் காட்டுக்குள் அழைத்துச்சென்று பாடம் நடத்துவது என அகிலாவின் செயல்பாடுகள் ஆக்கபூர்வமானவை. கோவை ரேஸ்கோர்ஸின் மரங்கள் நிறைந்த சாலையில் நடந்தபடியே அகிலாவுடன் பேசினோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

‘`கோவைதான் சொந்த ஊர். அம்மாவும் அப்பாவும் கூலி வேலைபார்த்து என்னைப் படிக்க வெச்சாங்க. பி.எஸ்ஸி மைக்ரோ பயாலஜி படிச்சுட்டு, ஒரு பன்னாட்டு மருந்து கம்பெனியில விற்பனை பிரதிநிதியா வேலைக்குச் சேர்ந்தேன். சின்னப் பிள்ளையா இருக்கும்போது புத்தகம், நோட்டு வாங்கக்கூட காசில்லாம வாடும்போதெல்லாம், ‘நாம பெரிய ஆளாகி, நம்மளை மாதிரி கஷ்டப்படுற புள்ளைங்களுக்கு உதவணும்’னு நினைச்சுப்பேன். இப்போ மாசம் ஐம்பதாயிரத்துக்கும் மேல சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் கஷ்டப்படுற ரெண்டு பெண் பிள்ளைங்களுக்கு ஃபீஸ் கட்டுறேன். அது, சின்ன வயசு அகிலாவுக்கு உதவுறதாதான் எனக்குத் தோணும்’’ - வார்த்தைக்கு வார்த்தை  அன்பைக் கோத்துப் பேசுகிறார் அகிலா. அவரின் கவனம் சூழலியலுக்குத் திரும்பிய அத்தியாயம், அடுத்து.

‘`பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே நிறைய பேச்சுப்போட்டிகள்ல இயற்கை சார்ந்த, தமிழ் உணர்வு சார்ந்த தலைப்புகளில் பேசியிருக்கேன். அப்படி ஒரு மேடையில் சூழலியல் குறித்துப் பேசிட்டு இறங்கினப்போ, கோவையில் சுற்றுச்சூழல் தொடர்பா இயங்கிட்டிருக்கிற  ‘ஓசை’  காளிதாஸ் என்னைப் பாராட்டினார். ‘நீ அழகாவும் அறிவாவும் பேசுற. சுற்றுச்சூழல் தொடர்பா இன்னும் விழிப்பு உணர்வை வளர்த்துக்கோ’னு சொன்னார். அதன்பிறகு நிறைய படிக்க ஆரம்பிச்சேன், ‘ஓசை’ அமைப்புகூட இணைந்து பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பிச்சேன். மனசும் மூளையும் நிறைகிற அளவுக்கு அனுபவங்கள் கிடைச்சது. அதோடு, சுற்றுச்சூழலைக் காப்பாத்துறதில் மக்கள் எவ்வளவு அறியாமையில் இருக்காங்கங்கிறதும் புரிஞ்சது. இதற்கிடையில், தமிழ்மீது இருந்த ஆர்வத்தால் வேலைக்குப் போய்க்கிட்டே பார்ட் டைமா  எம்.ஏ தமிழ் படிச்சேன். எம்.ஃபில் முடிச்சுட்டு, இப்போ சூழலியலையும் சங்க இலக்கியத்தையும் இணைத்து பிஹெச்.டி பண்ணிட்டிருக்கேன்’’ என்றவர், அந்த ஆய்வின் சாராம்சத்தைக் காகித எழுத்துகளாக மட்டும் தொகுக்காமல், களப்பணியிலும் ஈடுபட்டுவருகிறார். 

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

‘`சங்க இலக்கியத்தைப் படிக்கப் படிக்கத்தான், தமிழர்களோட சூழலியல் சார்ந்த அறிவு எவ்வளவு ஆழமானதுனு புரிஞ்சது. சூழலியலின் ஆகப்பெரிய ரெஃபரன்ஸ் சங்க இலக்கியங்களாகத்தான் இருக்க முடியும். அந்தளவுக்கு நம் முன்னோர்களின் வாழ்வு முழுக்க முழுக்க இயற்கையோடு இயைந்தது. ஆனா, இன்றைய தலைமுறைக்கு, நம்மகிட்ட இருந்த இயற்கைவளங்கள், அழிக்கப்பட்ட பறிகொடுத்த இயற்கை வளங்கள் பற்றியெல்லாம் தெரியவோ, புரியவோ இல்லை. நம் காடுகளெல்லாம் எப்படிப்பட்ட பொக்கிஷங்கள் என்பதை  மாணவர்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்னு முடிவெடுத்தேன்’’ எனும்போது ஆர்ப்பரிக்கிறது அகிலாவின் குரல்.

‘`சனி, ஞாயிறுகளில் பள்ளி மாணவர்களை அழைச்சுட்டுக் காட்டுக்குள்ள ட்ரிப் போவேன். பறவைன்னா, நமக்குக் காக்கா, குருவி, மைனானுதானே தெரியும். ஆனா, நம்ம காடுகள்ல 436 வகையான பறவைகள் இருக்கு. இந்த உலகத்துல ஏதோ ஒரு மூலையில ஓர் உயிரினம் அழிஞ்சாலும் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகும். ஒவ்வோர் உயிரினமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. நமக்கே தெரியாம, நிறைய பறவைகள், நிறைய விலங்குகள் நம் வாழ்க்கைக்கு உதவி பண்ணிகிட்டே இருக்கு. பறவை அறிஞர் சலீம் அலி, ‘மனிதர்கள் இல்லாத உலகத்தில் பறவைகளால் வாழ முடியும். பறவைகள் இல்லாத உலகத்தில் மனிதர்களால் ஒருபோதும் வாழ முடியாது’னு சொல்றார்.  

பறவையே எங்கு இருக்கிறாய்? - அகிலா

‘காட்டிலிருந்து ஏதாச்சும் எடுத்துட்டு வரணும்னு நினைச்சீங்கன்னா,  நினைவுகளை மட்டும் எடுத்துட்டு வாங்க. காட்டுக்குள்ள எதையாச்சும் விட்டுட்டு வரணும்னு நினைச்சீங்கன்னா, காலடித் தடத்தை மட்டும் விட்டுட்டு வாங்க’னு ஒரு பொன்மொழி உண்டு. ஒரு சின்னப் பறவையோட இறகைக்கூட நாம் காட்டுக்குள்ளேயிருந்து  எடுத்துட்டு வரக் கூடாது. ஏன்னா, எல்லாமே காட்டுக்குத் தேவை. காட்டுக்குள்ளே உதிர்ந்து கிடக்கும் மான் கொம்பைப் பார்த்ததும் பசங்க, எடுத்துக்கலாமான்னு கேட்பாங்க. ‘இல்லடா... மான் கொம்பை முள்ளம்பன்றி சாப்பிடும்’னு சொன்னதும், ஆச்சர்யப்பட்டுப் போயிடுவாங்க. இப்படி காட்டுக்குள் கிடக்கும் எல்லாமே இன்னோர் உயிரினத்தின் உணவு’’ என்று ரசிக்கப் பேசும் அகிலா, அரசுப் பள்ளிகளிலும் சூழல் குறித்த  உரை நிகழ்த்துகிறார்.

ஒரு சேல்ஸ் ரெப் ஆக இருந்துகொண்டு  இவ்வளவு வேலைகளைச் செய்வதே  மலைப்பு. அகிலாவோ, அண்மையில் ‘ஆவாரை இயற்கை அங்காடி’ என்கிற பெயரில் பிசினஸும் தொடங்கியிருக்கிறார். ‘எல்லாவற்றையும் தனியொரு பெண்ணாக எப்படிச் சாத்தியப்படுத்துகிறீர்கள்?’ என்றால், “இயற்கை சார்ந்த விஷயங்கள் எதுவுமே பொது சேவை கிடையாது. எல்லாம் மனுஷனோட சுயநலம்தான். நம்முடைய வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, நாம இயற்கையைப் பாதுகாத்துத்தான் ஆகணும்’’ -  அகிலா முடிக்க, சுழன்றடிக்கிறது காற்று. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism