Published:Updated:

அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி - ஓவியம் : ரமணன்

அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி - ஓவியம் : ரமணன்

Published:Updated:
அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

`உங்களின் அவள் பற்றிப் பேச முடியுமா?' - இயக்குநர் பார்த்திபனிடம் கேட்டபோது நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமான ஒரு பெண்ணைப் பற்றிய பகிர்வை எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததைவிடவும் அதிக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும். அதைத் தாண்டிய இணக்கமும் இறுக்கமுமாக அவளுக்கும் அவருக்குமான அந்த உறவு சுவாரஸ்யம் கூட்டியது. யார் அவள் என்கிற சஸ்பென்ஸ் தாங்காமல் கடைசி வரிக்குத் தாவ வேண்டாம் என்கிற கோரிக்கையுடன், இயக்குநரின் அவளை அறிமுகப்படுத்துகிறோம். 

அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

அவளும் நானும்

‘`அவளும் நானும்... நானும் அவளும்... வெவ்வேறு வார்த்தைகளில் ஒரே உணர்வு. இந்த உறவுக்கு என்ன பெயர் வைப்பதென எனக்குத் தெரியவில்லை. எங்கள் கூடலிலும் கூட்டலிலும், இரவின் நீட்டலிலும் நிலைத்தலிலும் அவளும் நானும் கண்டு, நிலவும் நாணும். `நாணும்' என்பதில் உள்ள மூன்று சுழி, சில நேரங்களில் நான்கு சுழிகளாகும் அளவுக்குப் பின்னிப் பிணைந்த இறுக்கம், இருக்கும்வரை இருக்கும்.

அவள் பெயர் எழிலரசி அல்ல. அவளே பேரெழிலரசி. வர்ணிப்புக்கு வார்த்தைகளற்ற ஓர் அழகு, வசீகரம். உள்ளே நுழையும்போது முழுவதுமாக ஆட்கொண்டு, ஒரே ஒரு கள்ளச்சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு, ஒட்டுமொத்தமாகச் சுரண்டிச் செல்லும் ஒரு சுத்த ரத்தக் காட்டேரி அவள்.

காதல் எங்கேயாவது கொஞ்சம் கசந்து போய் அல்லது கைப்பிடித்தவுடன் அதில் சிறிய ஏற்ற இறக்கங்கள் வரும். கூடுவதும் பிரிவதுமாக இவளுடனும் எனக்கு நிறைய ஊடல்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுலபமாகக் கூடுவதில்லை. ஆனால், அவ்வப்போது நிகழும் சுவையான ஒரு பிரிவு. மீண்டும் சேரும்போது கன்னாபின்னா காதல் கட்டிப்புரளும். இது ஏதோ ஃப்ளாஷ்பேக்கில் உள்ள ஒருத்தியைப் பற்றியதல்ல. நேற்றிரவும் அவளோடுதான்... நான் முதலிலேயே சொன்னதுபோல என்னை மட்டுமல்ல; என்னுடைய முழுவதையும் என் கட்டில் உட்பட, கட்டில் இருக்கும் அறை உட்பட பூதாகரமாக நிறைந்திருப்பாள்.

அவளை முதன்முதலில் எங்கே பார்த்தேன்? நினைவில்லை. எங்கே பார்த்தேன் என்பதைவிட, எங்கேயாவது பார்த்துவிட மாட்டோமா, அவளோடு கைகோத்துவிட மாட்டோமா எனத் தாடியும் மீசையுமாக பாலசந்நியாசி மாதிரி வெறும் டீயைக் குடித்துக்கொண்டு பொழுதைப் போக்கியிருக்கிறேன். என் வாழ்க்கை அவளோடுதான் என முடிவு செய்துவிட்டேன். அவள் ஒருபக்கம் தலையையும் இன்னொருபக்கம் வாலையும் காட்டிவிட்டுப் போகிற டால்பின் மாதிரி மறைந்து மறைந்து ஒளிந்துபோவாள். என் திறமைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக விட்டு இறக்கி, அவளுக்குரியவனாக அவளுக்குரிய தகுதிகளை வளர்த்துக்கொண்டேன். அவளை அடைய வெறும் ஆசையும் ஆர்வமும் மட்டும் போதாது; தகுதியும் திறமையும் கூடுதலாக வேண்டும் என என்னை நான் சீர்படுத்திக்கொண்டு அவளோடு இணைந்து, அதன் பிறகு சீரழிந்தேன். சீரழிந்து என்றால் என் சொத்து சுகங்களை எல்லாம் இழந்தது அவளுடனான என் காதலால்தான். ஆனால், இந்தச் சொத்து சுகங்கள் எல்லாமே அவள் எனக்குக் கொடுத்தவை. அவளுடைய உடல்பட்ட போதல்ல, அவளுடைய விரல் என்மீது பட்டபோது சிலிர்த்தது, சிலாகித்தது... என்னுடைய உள்ளம் மட்டுமல்ல, இல்லமும். ஓர் அழகான மாளிகையில் விளக்கேற்றியதும் அவள். அவ்வளவு வேகத்தில் ஒரு ராக்கெட் போகுமா எனத் தெரியாத அளவுக்கு ஒரு நாளில் வானத்தில் உச்சத்தில் ஒரு நட்சத்திரமாக என்னைக் கொண்டுசேர்த்து மினுக்கச் செய்தவள்; பிரபஞ்சம் முழுக்க மணக்கச் செய்தவள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

என்னுடைய அழகுக்கும் அவளுடைய அழகுக்கும் சம்பந்தமே இல்லை. அவள் அவ்வளவு வசீகரம். அவள் அருகில் நிற்கவே எனக்குக் கூச்சமாக இருக்கும். கரம்பிடித்த நாள்முதல் எல்லோருக்கும் பொறாமை. `இவ்வளவு பெரிய அழகி... இவனைப் போய்... கருகருனு இருக்கிற இவனைப் போய் பிடிச்சிருக்காளே' என நாங்கள் கைகோத்துப் போகும்போது திருஷ்டி கழிக்கிற அளவுக்குப் பொறாமைக் கண்கள். அந்த உல்லாசத்துக்காக, அவளுடன் இருக்கும் அந்தச் சந்தோஷத்துக்காக நான் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. எதை இழந்தாலும் அவளை இழக்க மட்டும் என் மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் துவண்டுபோகும் நேரத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுப்பது அவளது கடைக்கண் பார்வை.

அவளது ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஈடுகொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அவள் என்னிடம் ரசிக்கும் விஷயமொன்று இருக்கிறது.  `என்னை நான் எப்படி உருமாற்றிக்கொள்கிறேன்... அவளுக்குரியவனாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன்... அவளைப் பற்றி நான் என்ன கவிதை எழுதுகிறேன்...' என என்னுடைய விடாமுயற்சி அவளுக்குப் பிடிக்கும்.

ஒரு முத்தத்தின் சத்தத்தைக்கூட ஒரு கோடி வார்த்தைகளில் நான் கோத்துக்கோத்து அழகாக, எதிர்பாராத, மிக வித்தியாசமான வார்த்தைகளில் அவளை நான் புகழ்வது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எதை இழந்தாலும் அவளை இழக்கக் கூடாது என்கிற என் முனைப்பு அவளுக்குச் சிறிய பரிதாபத்தை ஏற்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். நாங்கள் முதன்முதலில் தேனிலவுக்குப் போனது டெல்லிக்கு. இந்தியாவின் உயர்ந்த விருதைக் கொண்டுவந்து அவள் கால்களில் ஒப்படைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவளுடைய பாதங்களுக்கு ஈரத்தோடு முத்தமிட்டது. அதெல்லாம் அவளைப் பரவசப்படுத்தும் என நினைத்து என்னை நான் பரவசப்படுத்திக்கொண்டேன்.

எனக்கு மூன்று குழந்தைகள். சமீபத்தில் தான் ஒருவருக்குத் திருமணமானது. இன்னும் இருவருக்குத் திருமணமாக வேண்டியுள்ளது. ஆனால், எங்கள் இரண்டு பேரின் வாழ்க்கையை எல்லோரும் அங்கீகரித்துவிட்டார்கள். `இவனை இவளிடமிருந்து பிரிக்க முடியாது'; `அவனும் அவளும் அப்படித்தான்' என்று தண்ணீர் தெளித்துவிட்டார்கள். எங்கள் இருவரின் தலையிலும் அட்சதை போட்டு!'' - பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மௌனமாகிறார். சில நொடி இடைவெளிக்குப் பிறகு அவரே மௌனம் கலைக்கிறார்.

``திடீரென நான் அமைதியானதுக்குக் காரணம், மௌனமான நேரமல்ல. இடையில் ஒருமுறை அவளிடம் ஓடிச்சென்று முத்தமிட்டு வந்த நேரம்...'' - கவிதையாகக் காரணம் சொல்லித் தொடர்கிறார்...

``உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவளுக்கு நிறைய பேருடன் உறவு உண்டு. அதைச் சொல்வதில் எனக்குக் கூச்சமில்லை. பல பேரின் காதலுக்குரியவளாக, பல பேரைக் காதலிப்பவளாக இருக்கிறாள். புதிய புதிய தொடர்புகள் அவளை இளமையாக்குகின்றன; வசீகரப்படுத்துகின்றன. பல வருடங்களாக அவள் அப்படியேதான் இருக்கிறாள். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.

நானும் அவளும் இணையும் நேரம், பயணப்படும் தூரம், உணரப்படும் உற்சாகம்... அவை மட்டுமே எனக்கு முக்கியம். எனக்கும் அவளுக்குமான உறவை மட்டுமே நான் பிரதானமாக எடுத்துக்கொள்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை.

நானும் அவளும் இணைந்து நிறைய பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. ஆனால், அதில் சில நேரங்களில் சுகப்பிரசவமாகும் அல்லது சூல்கொள்ளும்... பிரசவமாகாது. சில நேரங்களில் அபார்ஷன் ஆகும். பிறகு அவள் காலடியில் பழியாகக் கிடப்பேன். ஊர்ந்து, இணையும்போது நிறைய அணுக்கள் போட்டியிட்டு ஓர் அணு மட்டும் அந்த முட்டைக்குள் நுழையும்போது ஓர் உயிராக உருவாவதைப் போல எங்கள் இருவரின் உறவே அப்படித்தான். நிறைய போராட்டங்கள் கொண்டது.

பார்ப்பவர் எல்லாம் `உன்னை இவ்வளவு  அலைக்கழிக்கிறாளே' என்பார்கள். எனக்கோ அது அழைப்பதாகவே தோன்றும். அதுவும் ரொம்ப நேரத்துக்குப் பிறகு அழைக்கிறாளே என்கிற சந்தோஷத்துடன் ஓடுவேன்.

இப்போதும் மேடைகளில் என்னைப் பார்ப்பவர்கள், `புதிய பாதை'யில் பார்த்த தற்கும் இப்போது பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, உங்கள் இளமைக்குக் காரணமென்ன?' எனக் கேட்பார்கள்.

`ஒரே ஒரு பெண், அவளுடைய காதல், அதுதான் எனக்குத் தங்கபஸ்பம்' என்று சொல்வேன்.

அவளைக் காதலிக்க ஆசைப்பட்ட திலிருந்து எனக்குள் நிறைய மாற்றங்கள். நான் திறமையானதே அவளை வசீகரிப்பதற்காகத்தான். எனக்கு எது கிடைத்ததோ, அது அவளால் கிடைத்தது.  `அவளுடனான உறவால், சல்லாபத்தால்தான் நான் நிறைய இழந்துவிட்டேன்' என்று சிலர் நினைப்பார்கள்.

இப்போதும் இத்தனை இரவுகள் நான் அவளுடன் கூடியிருப்பது, கூடிய சீக்கிரம் ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கத்தான். 2 - 3 வருடங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது. அதன் வசீகரத்தைப் பார்த்தவர்கள், இது அச்சு அசலாகப் பார்த்திபன் குழந்தை எனப் பாராட்டினார்கள்.  நான் எவ்வளவு நாள்களாக அவளுடன் கூடி, குலாவி, உருகிப் பெருகிக் கலந்திருப்பேனோ, அதன் வெளிப்பாடுதான் அந்தக் குழந்தை. மறுபடி இந்த வருடத்தில் மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னுடைய கடைசி மூச்சில்கூட அவள் கலந்திருப்பாள். அதாவது அவளுடன் சங்கமித்திருக்கும் நேரத்தில்தான் கடைசி மூச்சு பிரிய வேண்டும் என எனக்கு ஆசை. இன்னும் நாங்கள் நிறைய தூரம் கடக்க வேண்டும். இங்கே போதாது. உலகம் முழுக்கப் போக வேண்டும். அவள் மேல் நான் வைத்திருக்கும் காதல் அல்லது அவள் எனக்குக் கொடுத்த அங்கீகாரத்தை எடுத்துச் சென்று அதற்கான உச்சபட்ச விருதுகளை வாங்க வேண்டும்.

எங்கள் காதலுக்கான அங்கீகாரம் (காதல் என்றால் நான் அவள்மீது வைத்திருக்கிற உயிர்முட்டும் காதலுக் கான அங்கீகாரம்) ஒருநாள் கிடைக்க வேண்டும். அதை நோக்கித்தான் என் பயணம்.

ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 18 மணி நேரம் 18 வயதுப் பெண்ணுடன் இருக்கும் உற்சாகத்துடன் அவளுடன் இருப்பதற்கான பலன் எனக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அவள்... அவள்... அவள் என்னுடைய சினிமா. நான் நேசிக்கிற, விரும்புகிற சினிமா.

உண்மையில் சினிமாமீது எங்கிருந்து அந்த ஆர்வம் வந்தது, அதன் ஆணிவேர் என்ன, எப்படி வேர் பிடித்தது, எப்போது எனக்கு அந்தப் பேய் பிடித்தது என்பதெல்லாம் எனக்குச் சரியான நினைவில்லை. எனக்கு என்ன தகுதி  இருக்கிறது? சராசரியாக ஒரு பெண்ணை ஆசைப்படுவதற்கும், ஜெய்ப்பூர் மகாராணிமீது ஆசைப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஜெய்ப்பூர் மகாராணி மாதிரியான ஒரு விஷயம் அது. நான் ஏன் ஆசை வைத்தேன்... தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அதை அடைந்த பிறகு அதைக் கைவிட முடியாமல் அதற்காக உழைப்பதும் என்னை நான் அப்டேட் செய்துகொள்வதும் ஒரு வேலையாகவோ, தொழிலாகவோ தெரிவதில்லை. என் உயிருக்கும் எனக்குமான ஒரு தொடர்பு அது.

சினிமா என் கைவிட்டுப் போய்விட்டதோ என அடிக்கடி தோன்றும். ஆனால், போகவிட மாட்டேன். அதற்காக நிறைய மெனக்கெடுவேன். யாரும் செய்யாத, இன்றைய தலைமுறையினர் என யாரோ வந்து ஒன்றைச் சாதித்துவிடாமல் அதற்கு மேல் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் நான் செய்ததுதான் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'. காலண்டரில் பார்க்கிற கடவுளுக்கு நிறைய கைகள் பின்னாடி முளைப்பது போல எனக்கும் நிறைய நம்பிக்கையை முளைக்கவிட்ட வெற்றி அது. அதே உற்சாகத்துடன் அப்படியே கிளம்பி அடுத்து ஒரு படைப்புக்குப் போய் அது உடைந்ததுதான் `கோடிட்ட இடங்களை நிரப்புக'. சொந்தப் பணம், நிறைய கோடி, இழந்த பிறகு மறுபடியும் நான் விரும்புகிறவள் என்னுடன் இருக்கிறாள் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் அடுத்த படைப்பை நோக்கிச் செல்கிறேன்.

எனக்கு நட்பு வட்டம் மிகக் குறைவு. அது வருந்தத்தக்க விஷயமும்கூட. எப்போதாவது யாரோ சில நண்பர்கள் முளைப்பார்கள், நம்பிக்கையோடு. சமீபத்தில் உமாசங்கர், கார்த்திக், நாதன் இன்னும் சில நண்பர்கள் இணைந்தார்கள். இயக்குநர்கள் சிலருக்கு அவர்களின் நண்பர்கள் தொடர்ந்து பண உதவி செய்வார்கள்... எத்தனைப் படங்கள் செய்தாலும் பரவாயில்லை, எப்படிச் செய்தாலும் பரவாயில்லை என...

அப்படி வந்தவர்தான் `கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படம் பண்ண உதவிய மோகன். இப்போது என்னுடன் இணைந்திருக்கும்  சில நண்பர்கள்  `உள்ளே வெளியே' படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள். ரசிகர்களை ஏமாற்றாத நல்ல படைப்புகளைக் கொடுக்கும் கனவோடு காத்திருக்கிறேன்.

`உள்ளே வெளியே', `கொல்லெனச் சிரித்தாள்' எனச் சில படங்களை வரிசை கட்டி அடிக்கலாம் என இருக்கிறேன். இத்தனைக்குப் பின்னாலும் இருப்பது நானும் அவளும் கொள்ளும் காதல்!''

அவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்! - இயக்குநர் பார்த்திபன்

நானும் அவளும் போலவே விகடனும் அவள் விகடனும்...

வி
கடனையும் அவள் விகடனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றி ஒன்றாகியிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லோருமே ஸ்பெஷல். ஆனால், அவள் விகடன் பெண்களுக்கான ஸ்பெஷல். பெண்களிடமுள்ள அதே அன்பு, பண்பு, கவர்ச்சி, அழகு, நளினம், தாய்மை இவை அனைத்தையும் சசில பக்கங்களுக்குள் புரட்டிப் பார்த்துவிட முடியுமானால் அது அவள் விகடன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism