Published:Updated:

மயிலிறகு மனசு !

தமிழச்சி தங்கபாண்டியன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

மயிலிறகு மனசு !

தமிழச்சி தங்கபாண்டியன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

 உள்ளத்தை வருடும் நெகிழ்ச்சித்

##~##

'பெர்ட்ரான்ட் ரஸ்ஸலின் மகள்’ எனும் அடைமொழிக்கு மிகப் பொருத்தமான தோழி அருள்மொழியைச் சந்தித்துப் பேசுவதென்பது, தன்னம்பிக்கை எனும் ஒரு குவளைத் தேநீரை சிறுகச் சிறுக ரசித்துப் பருகுவது. அதைச் சுவைக்க... சென்னை, மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றபோது... மகள் குயிலின் மலர்ந்த வரவேற்புடன், அந்திச் சூரியனும் காத்துக் கொண்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல சந்தர்ப்பங்களில் அருள்மொழியைப் பொதுநிகழ்ச்சிகளில், திராவிடர் கழக மேடைகளில், பெரியாரியச் சிந்தனைக் கூட்டங்களில் சந்தித்திருந்தாலும், மனம்விட்டு உரையாடுவதெற்கென்று ஓர் மாலை இதுவரை வாய்த்ததில்லை. அவரது அலுவல்களின் நெருக்கடிகளை மீறி அபூர்வமாக அமைந்த அந்த மாலையில்... கண்கள் சுருங்கிச் சிரித்தபடி வெளிவந்த அருள்மொழி, எனக்கு மிகப்பிடித்த கருப்பு வண்ணப் புடவையில் இருந்தார்.

தமிழ் மறவர், புலவர் அண்ணாமலையாரின் மகள், சுயமரியாதை இயக்கப் போராளி, திராவிடர் கழகத்தின் பிரசாரச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட அருள்மொழி மிகச் சிறந்த பெண்ணியவாதி மட்டுமல்ல... சமரசமற்ற நெறிமுறைகளும், வியந்து பார்க்கின்ற விழுமியங்களும் உடையவர். துயரத்திலும், சிக்கலிலும் குழம்பித் தவிக்கின்ற எத்தனையோ பெண்களுக்குப் பேராதரவாக இருக்கின்ற அவர் மீது எனக்குப் பெருமதிப்பும், மிகுந்த மரியாதையும் உண்டு.  

மயிலிறகு மனசு !

துடைத்துவிட்ட மண் மெழுகிய தரை போன்ற இயற்கை அழகுடன், பெரிய சூரியகாந்தி பூ போல இருந்த அருள்மொழியின் முகம் குழந்தைமையைத் தொலைத்துவிடாத வசீகரமிக்கது. அவரது வரவேற்பறை முழுக்க புத்தகங்களும், அபூர்வமான சில புகைப்படங்களுமிருக்க... ஆர்வத்துடன் அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். பத்து வயதில் தந்தை பெரியாருடன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் சிறுமி அருள்மொழி, நீண்ட கூந்தலைப் பின்னலிட்டுத் தன் அப்பாவுடன் தீவிரமான விவாதத்தில் பதின்பருவ அருள்மொழி என ஒவ்வொன்றாகக் கடந்தேன்.

'கொள்கை வேறு, குடும்பம் வேறு’ அல்ல அருள்மொழிக்கு. இன்று வரை தான் நம்புகின்ற விஷயங்களுக்காக மிகப் பிடிவாதமானதொரு நங்கூரமாகப் புயல்கள் பல கடந்து நிற்பவர். பெண்ணை, பெரும் சக்தியெனக் கொண்டாடிய பாரதியின் பிறந்த நாளன்று அவர் கனவு கண்டதொரு பெண்ணைச் சந்தித்து உரையாடுகின்ற பரவசத்துடன் அருள்மொழியின் அருகாக அமர்ந்து கொண்டேன். சம வயதுத் தோழிகளுக்கான சிறு உல்லாச சிரிப்பை இருவரும் பகிர, பிடித்த பாடல் ஒன்றின் இசையை மெல்ல அசை போடத் துவங்கியது மனது.

எனக்கும் அவருக்கும் நெருக்கமான உணர்வுகளில் ஒன்று... தந்தை மீதான இருவரது பற்றும் பிடிப்பும். இருவருமே அப்பா செல்லங்கள் மட்டுமல்ல, அப்பாக்களின் வழிகாட்டுதலின்படி பயணம் செய்பவர்களும் என்பதால் அருள்மொழியிடம் கூடுதல் அன்பு உண்டு எனக்கு. ஓர் நாடக நிகழ்வில் எடுத்த புலவரது ஆஜானுபாகுவான புகைப்படத்தை எனக்குச் சுட்டியபடி தந்தையின் நினைவுகளைப் பகிரத் தொடங்கினார் அவர். காலம் காலமாக அப்பாக்கள் அவர்தம் அன்பு மகள்களுக்கு விட்டுச் சென்ற, நிரப்பப்பட முடியாத வெற்றிடத்தில் நினைவுச் சோழிகளின் மெல்லொலி எதிரொலிக்க, இரவு கவிழத் தொடங்கியது. பரங்கிமலையின் சிறு விம்மல் அன்று மந்தைவெளிப்பாக்கத்தில் எங்களிருவரிடையேயும்!

'மாடிப்படிகளில் இறங்கும்போது இரண்டு கைகளிலும் பொருட்களை வைத்துக்கொண்டு இறங்காதே அருள்மொழி. திடீரென இடறிவிட்டால் பற்றிக்கொள்ள வசதியாக ஒரு கையைக் காலியாக வைத்திரு’ என்று எப்போதும் தன் அப்பா சொல்வாரென்றும், பார்க்கின்ஸன் நோயின் கொடூரத் தாக்குதல் நிலையிலும், அம்மா குறித்து 'அவளும், நானும்’ எனும் பாரதிதாசன் வரியன்றை மிகுந்த சிரமத்துடன் எழுதிக் காண்பித்தார் எனவும் பகிர்ந்துகொண்ட அருள்மொழியை... கூர்ந்து பார்த்தேன். தந்தையற்ற என் கையறு நிலையின் பிரதிமையாகத் தெரிந்த அவருக்குள்ளிருந்து அப்போது பெர்ட்ரான்ட் ரஸ்ஸலின் ஆசைமகளே வெளிப்பட்டாள்.

விருந்தோம்பலும், கொள்கைப் பிடிப்பும், அரவணைப்பும், பகுத்தறிவின் ஒளியும், போராட்ட குணமும் கொண்டு அச்சுத் தொழிலை ஓர் அறமென நடத்திய வாழ்விணையர் இருவர் நடமாடிய இந்த வீடு, அந்தச் சுடர் அணையாமல் அருள்மொழியால் உயிர்த்திருக்கிறது என்றபடி பால்கனியில் உதிர்ந்து கிடந்தன கொடிப்பிச்சிப் பூக்கள். புலன்கள் கிறங்க அவற்றின் மணத்தைச் சுகித்தேன்.

ஒரு முறை, 'பெரியார்’ தொலைக்காட்சிக்காக... 'காதல் ஒப்பந்தம்’ எனும் நிகழ்ச்சியினை அருள்மொழி ஒழுங்கு செய்திருந்தார். அதில் சுயமரியாதைத் திருமணங்களின் தேவை குறித்தும், அத்திருமணங்களின் மூலம் இன்று வரை சிறப்புற வாழ்ந்து கொண்டிருக்கும் இணையர்களை நேர்காணல் செய்யும் தொகுப்பாளராக நான் பங்கேற்றேன். அழகுபடுத்திக் கொள்வதில் சிறிதும் விருப்பமில்லாத அருள்மொழி, அபாரமான ரசனை உணர்வுடன், எனது உடை மற்றும் கைவினை ஆபரணங்களை அப்போது மட்டும் அல்ல, எப்போதும் கவனித்துப் பாராட்டுவார். அந்தப் பெரிய கண்கள், அழகுணர்வின் சுவை மாந்திய கருவண்டுகளென அவரது மலர்ந்த முகத்தில் விரிவதைப் பதிலுக்கு நான் ரசிப்பதுண்டு.

பூக்களோடும், கண்ணாடி வளையல்களோடும், கடற்பாசி மணி மாலைகளோடும் வெளிப்படுகின்ற என் புறத்தோற்றம் தாண்டி அறிவின் தீர்க்கத்தைக் கண்டுகொள்பவர் அவர். அதனைக் கைதூக்கி விடுகின்ற பெருந்தன்மையினை எனது கவிதைப் புத்தகமொன்றின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியபோது நான் உணர்ந்து நெகிழ்ந்ததுண்டு.

குயில் கொண்டு வந்து தந்த தேநீர்ச் சூட்டோடு சமகால நிகழ்வுகள், நடப்புகள், எனது இலக்கியப் பயணம் எனப் பலவற்றையும் அவரது வீட்டு மொட்டை மாடியில் பகிர்ந்துகொண்டோம். தந்தை பெரியாரை, புரட்சிக்கவிஞரை, சுயமரியாதையை, பகுத்தறிவை, தமிழினத்தை, திராவிடர் கழகத்தை, தமிழுணர்வை, பெண் விடுதலையை, ஈழத்தமிழரின் போராட்டத்தை, தன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் அயராமல், அச்சுப்பிசகாமல் தன் குருதிக்குள் சுமந்து வாழ்கின்ற அருள்மொழி எனும் அற்புதமான பெண்மணியின் உருவம், சூரியனின் மஞ்சள் ஒளியில் ஓர் நிழல் ஓவியமென, அக்கணத்துக்குத் தோழமையின் வண்ணம் தீட்டியது.

கடைசியாக அம்மா இறந்த அன்றுதான் மொட்டை மாடிக்கு வந்ததாகச் சொன்னார். எத்தனையோ பெண்களின் கண்ணீரை வழக்குரைத்துத் துடைக்கின்ற தாயுமானவளான இவர், இன்னமும் கூடத் தன் தாயின் கதகதப்பை தேடுகின்ற சிறு குழந்தைதான் என்றெண்ணியபடி வானத்தைப் பார்த்தேன். நிலவின் நேர்கோட்டில் அதீதமான பிரகாசமுடன் அந்த ஒற்றை நட்சத்திரம்! நல்ல நட்பும், நம்பிக்கையான மனிதர்களும் இருக்கும் வரை இவ்வுலகம் இனிமையானதுதான் என்பதுபோல கீழே இறங்கி வந்து என் கைப்பற்றி விடைகொடுத்தார் அருள்மொழி. ஒற்றை நட்சத்திரம் கண்சிமிட்ட, நிலவு முழுமையாக மலர்ந்திருந்தது. தண்ணென்றிருந்த அவரது கைகுலுக்கலின் இதத்தில் நானும்தான்!

- இறகு வருடும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism