Published:Updated:

Money Money Money

அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆர்.டி!பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் நிதி ஆலோசகர் அனிதா பட்

Money Money Money

அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆர்.டி!பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் நிதி ஆலோசகர் அனிதா பட்

Published:Updated:
##~##

சேமிப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது... 'சிறுவாடு’க்கு அப்புறம், தபால் அலுவலக ஆர்.டி (RD - Recurring Deposit)! ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரக் குடும்பம் என அனைவருக்கும் கை கொடுக்கும் நல்ல திட்டம் இது. 10 ரூபாய் தொடங்கி... 50, 100, 1,000 என உங்களால் முடிந்ததை ஆர்.டி. மூலமாக சேமித்து வரலாம். இதற்கான வட்டிகூட அண்மையில் கூடியுள்ளது என்பது அனைவரையும் சந்தோஷப்படுத்தும் சங்கதி!

ஆர்.டி.-யில் சேமிக்கும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு கட்டாயம் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும். இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், மாதந்தோறும் கட்டும் ஆர்.டி. தொகையை ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்கு முன்கூட்டியே மொத்தமாக கட்டினால், கணக்கு வைத்திருப்பவரை ஊக்குவிக்க, ஆறாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் வீதம் ஊக்கத் தொகை கிடைக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவசரத் தேவைகளுக்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல், உங்கள் ஆர்.டி. கணக்கில் அதுவரை நீங்கள் கட்டியிருக்கும் தொகையில் 50% கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி... ஆர்.டி கொடுக்கப்படும் வட்டியைவிட இரண்டு சதவிகிதம் கூடுதலாக இருக்கும். கடனை இடையிலேயே திரும்பச் செலுத்திவிடலாம். அல்லது ஆர்.டி. முடியும்போது, கடன் தொகை பிடித்தம் போக, மீதமிருக்கும் சேமிப்புத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் கடனை திரும்பச் செலுத்திவிடுவதே, நமக்கு லாபகரமானதாக இருக்கும்.

Money Money Money

அடுத்து, தபால் நிலைய டைம் டெபாஸிட். அதாவது உங்களிடம் ஓர் தொகை இருக்கிறது. அது ஐந்து ஆண்டுகள் கழித்து மகளின் திருமணத்துக்குத் தேவைப்படும் என்றால், அதை ஐந்து ஆண்டு டைம் டெபாஸிட்-ல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம்... ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் என முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வட்டி முறையே 7.7%, 7.8%, 8% மற்றும் 8.3%. இதில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

பணி ஓய்வு பெறப் போகிறவர்கள், மாதந்தோறும் வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள்... தபால் நிலைய மாத வருமான சேமிப்பு திட்டத்தில் (மன்த்லி இன்கம் ஸ்கீம்) முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை, 1,500. தனிநபர் 4.5 லட்சம் வரையிலும், கணவன்- மனைவி ஒன்பது லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இதற்கான 8.2 சதவிகித வட்டியை மாதந்தோறும் பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய சேமிப்பு பத்திரம் என்பதும் நல்லதொரு முதலீடுதான். இந்த பணத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இதற்கு 8.4 சதவிகித வட்டி மற்றும்  வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த பத்திரத்தை நகை போலவே வங்கியில் அடமானம் வைத்து உடனடியாக கடனும் பெற முடியும்.

சேமிப்புக்கு மட்டும் இல்லை... இதையே ஒரு தொழிலாக எடுத்து சம்பாதிப்பதற்கும் வழிகள் இருக்கின்றன! நிதி சார்ந்த முதலீடுகள் மற்றும் அது சார்ந்த வேலை வாய்ப்பு பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம்!

- பணம் பெருகும்...

 மெடிக்ளைம் மோசடி உஷார்!

சென்ற இதழில் (6.12.2011) வெளியான 'மெடிக்ளைம் பாலிசி' பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு, கோயம்புத்தூர் வாசகர் பிந்துமாதவன் நமக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ''தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஏஜென்ட்டிடம் பாலிசி எடுத்தேன். ஜூலை மாத இறுதியில் எனக்கு நெஞ்சு வலி வந்தது. அதற்கு பைபாஸ் சர்ஜரி செய்தார்கள். மருத்துவச் செலவுகளுக்கு க்ளைம் வாங்குவதற்காக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஆவணங்களை அனுப்பினேன். 'முன்கூட்டியே ரத்த அழுத்தம் இருந்ததால் க்ளைம் கிடைக்காது' என்று சொல்லிவிட்டார்கள். இதைப் பற்றி ஏஜென்ட்டிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவர் அதைப் பற்றி குறிப்பிடாமல், எனக்கு பாலிசி எடுத்துக் கொடுத்துவிட்டார். ரத்த அழுத்தம் இருப்பதைக் குறிப்பிட்டால், பாலிசிக்கு அதிக தொகை செலுத்த வேண்டும். அதைச் சொன்னால், நான் பாலிசி எடுக்காமல் போய்விடுவேன் என்று ஏஜென்ட்டாகவே முடிவு செய்துவிட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். அவர் செய்த தவறுக்கு... எனக்குத் தண்டனை'’ என வேதனையுடன் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

''பொதுவாக பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே இருக்கும் நோய்கள், அறுவை சிகிச்சை விவரங்கள் என அனைத்தையும் மறைக்காமல் குறிப்பிட வேண்டியது மிகமிக அவசியம். ஆனால், உங்களுக்கு இருக்கும் ரத்த அழுத்தத்தைப் பற்றி ஏஜென்ட்டிடம் சொல்லியும், அவர் அதை மறைத்து பாலிசி எடுத்திருக்கிறார். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் நிச்சயம் கஷ்டமானதுதான். ஆனால், அது கற்பித்த பாடம் முக்கியமானது. ஏஜென்ட் தெரிந்தவராக இருந்தாலும், அவரிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே என்று இருந்துவிடாமல், பாலிசிப் பத்திரம் வந்தவுடன் அதை சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும். அதில் இதுபோல ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனே அந்த ஏஜென்ட் மூலமாகவே அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று தவறுகளினால் க்ளைம் கொடுக்க மறுத்தால், சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனில் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் விசாரித்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் க்ளைம் கிடைப்பதற்கு உதவி செய்வார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism