Published:Updated:

கேபிள் கலாட்டா

ரிமோட் ரீட்டாபடங்கள்: வீ.நாகமணி

##~##

மெரிட் மார்க்-ஐ மெயின்டெயின் பண்ணிட்டே மெகா சீரியல்ல கலக்கிட்டு இருக்கிற ஸ்டூடன்ட் ஆர்ட்டிஸ்ட்டுகளைப் பார்க்கப் போக ரீட்டா ரெடி... நீங்க ரெடியா..?! கமான்!

''இந்தக் குளிர்ல காலையில் சீக்கிரம் எழுந்திருக்கிறது கஷ்டமா இருக்கு. ஆனா, பழகிடும்ல அக்கா..?!''

- அதிகாலை காபியோட பேசினாங்க சத்யசாய். கலைஞர் டி.வி. 'அபிராமி’ சீரியல்ல கலக்கி, இப்போ விஜய் டி.வி. 'சரவணன் மீனாட்சி’ சீரியல்ல ஸ்கோர் செய்ய வந்திருக்கிற அமுல் பேபி.

''அமுல் கேர்ள்னு சொல்லுங்க ரீட்டாக்கா. நான் ப்ளஸ் ஒன் படிக்கிறேன்!''னு திருத்தம் சொன்ன சத்யசாய், வளசரவாக்கம் 'அவர் ஏஞ்சல்’ ஸ்கூல் ஸ்டூடன்ட்.

''நம்புங்க... நான் எப்பவுமே கிளாஸ் ஃபர்ஸ்ட் ஸ்டூடன்ட். படிப்புல குறை வைக்காம இருக்கறதால எங்க ஸ்கூல்ல எனக்கு ஷூட்டிங்குக்கு லீவ் எடுக்க பெர்மிஷன் கொடுப்பாங்க. ஆறு மாதக் குழந்தையா இருக்கும்போதே ஆக்டிங்கை ஸ்டார்ட் பண்ணியாச்சு. 'ஆசை’, 'அண்ணாமலை’, 'மஞ்சள் மகிமை’னு எல்லா சீரியல்லயும் நல்ல பெயர் வாங்கினேன். 'ஆசை’ தொடருக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான அவார்ட் கூட வாங்கியிருக்கேன். 'அபிராமி’ தொடர்ல நடிச்சப்போ கௌதமி ஆன்ட்டி பாராட்டினது, சமீபத்துல ஒரு ஃபங்ஷன் போயிருந்தப்ப தூரத்துல என்னைப் பார்த்த தேவயானி ஆன்ட்டி கூப்பிட்டு பக்கத்துல உட்காரச் சொல்லி மனம் விட்டுப் பாராட்டினது இதெல்லாம் மறக்க முடியாத சந்தோஷம். எல்லாத்துக்கும் காரணம் எங்கம்மா, அப்பாதான்!''னு சொன்ன சத்யசாய் அவங்க குடும்பம் பத்தியும் சொன்னாங்க.

கேபிள் கலாட்டா

''அப்பா டெய்லரிங் ஷாப் வச்சிருக்காங்க. அம்மா ஹவுஸ் வொய்ஃப். துர்கா, நாகலட்சுமினு ரெண்டு சிஸ்டர்ஸ். ஸ்கூல்ல படிக்கறாங்க. சீரியல்ல எனக்குக் கிடைக்கற பணத்துல ஸ்கூல் ஃபீஸ், டியூஷன் ஃபீஸ் கட்டிக்குவேன். அப்பா, அம்மாவுக்கு நம்மால் முடிஞ்சளவுக்கு ஹெல்ப் பண்றது நல்ல விஷயம்தானே?!''னு சத்யசாய் பேசினதுல, அசந்தே போனா உங்க ரீட்டா!

கெட்டிக்காரச் சுட்டி!

சன் டி.வி-யில 'முந்தானை முடிச்சு’, கலைஞர் டி.வி-யில 'கல்யாணி’னு கலக்கிட்டு இருக்கிற துர்கா, மெட்ராஸ் யுனிவர்சிட்டியில கரஸ்ல பி.காம். படிக்கறாங்க. ''ஒரு நிமிஷம் என் எதிர்ல உட்காரேன் ரீட்டா... உன்ன அப்படியே வரைஞ்சு கொடுத்துடுறேன்!''னு பென்சில் எடுத்தவங்க, அட ஆமா... அழகா (!) என்னை வரைஞ்சே முடிச்சுட்டாங்க!

கேபிள் கலாட்டா

''ப்ளஸ் டூ முடிச்சதும் ஓவியக் கல்லூரியில் சேரணும்னுதான் ஆசை ரீட்டா. ஆனா, ரெகுலர் காலேஜுல சேர்ந்தா ஆக்டிங் ஆசையை விட வேண்டியதாயிடுமே?! அதான் கரஸ்ல பி.காம் சேர்ந்துட்டேன். அந்தளவுக்கு எனக்கு நடிப்பு மேல பிடிப்பு. அதுக்குக் காரணம், என் தம்பி சச்சின். 'வரலாறு’ படத்துல 'தீயில் விழுந்த தேனா’ பாட்டுக்கு வர்ற குட்டி அஜித், என் பிரதர்தான். இப்போ நிறைய படங்கள்ல நடிக்கிறான். அவன பார்த்துதான் எனக்கும் நடிப்பு ஆசை வந்தது. ஜி தமிழ் சேனல்ல 'யாதுமாகி நின்றாய்’ தொடர்ல சொர்ணமால்யாவுக்கு மகளா நடிச்சதுதான் என்னோட முதல் என்ட்ரி. இப்போ சீரியல் ஏரியாவுல நமக்கும் ஒரு ஸீட் கிடைச்சுடுச்சு!''னு சொல்ற துர்கா... பி.காம்ல எல்லா பேப்பர்லயும் ஃபர்ஸ்ட் கிளாஸாம்!

சச்சின் அக்கா சமர்த்து!

சின்னத்திரையோட செல்லப்பிள்ளை... சுஜித்ரா! ''சன் டி.வி-யில 'குட்டீஸ் சாய்ஸ்’, சன் மியூசிஸிக்ல 'ஸ்டார் நேரம்’ லைவ் ஷோ, 'மேகலா’ சீரியல்ல சின்ன வயசு மேகலானு ரொம்பப் பிஸியா இருந்தேன்க்கா. போன வருஷம் டென்த் எழுதினதால, சின்னத்திரைக்கு பிரேக் விட்டுட்டு சின்ஸியராப் படிச்சேன். 88 பர்சன்ட் மார்க் எடுத்தேன். இப்போ ப்ளஸ் ஒன் படிச்சுட்டே மறுபடியும் கேமரா முன்ன வந்துட்டேன்!''னு சொன்ன சுஜித்ரா,

கேபிள் கலாட்டா

''முன்ன எல்லாம் குட்டீஸ்களுக்கான நிகழ்ச்சிகள்ல கலக்கிட்டு இருந்தேன். இப்போ 'கனா காணும் காலங்கள்’, 'சரவணன் மீனாட்சி’னு காலேஜ் படிக்கிற பொண்ணு, செகண்ட் ஹீரோயின் கேரக்டர்னு புரமோஷன் வாங்கியிருக்கேன். மறக்காம எழுதிக்கோங்க... நான் ஒரு கிளாஸிக்கல் டான்ஸரும்கூட. சமீபத்துல என்னோட டான்ஸ் புரோகிராமுக்கு வந்திருந்த டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அங்கிள், என் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்து சூப்பர்னு பாராட்டினாங்க. உன்னை என் படத்துல ஹீரோயினா அறிமுகப்படுத்துறேன்னும் சொன்னாரு!''

- அவ்ளோ சந்தோஷம் சுஜி முகத்துல.

''ஸ்கூல், ஷூட் இல்லாத நாட்கள்ல சென்னை, பெருங்களத்தூர்ல இருக்கிற சாரதா சக்தி பீடத்துக்கு நானும், என்னோட ஃப்ரெண்ட்ஸும் போயிடுவோம். நாள் முழுக்க இருப்போம். கடந்த தீபாவளியப்போ ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஃபண்ட் கலெக்ட் செய்து, அங்க படிக்கிற குழந்தைங்களுக்கு நோட், புக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தோம்!''னு சந்தோஷப்பட்ட சுஜி, 'ஆதவன்’, 'வேட்டைக்காரன்’னு சினிமாவுலயும் கலக்கிட்டு இருக்காங்க!

பிஸி சுஜி! 

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

ஆங்கில ஆதங்கம்!

''இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட யோகா கற்றுத்தரும் நிகழ்ச்சியை, பொதிகை டி.வி-யில் ஒளிபரப்புகிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் 'உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்ப வேண்டிய முகவரி’ என்று புதுடெல்லி முகவரி ஓன்றை இந்தி மொழியிலேயே காட்டுகின்றனர்! தமிழில் 'டப்’ செய்து ஒளிபரப்புகிறவர்கள், முகவரியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் காட்டினால்தானே நமக்கு புரியும். தூர்தர்ஷனின் சென்னை அலுவலகம் இதைக் கவனிக்கக் கூடாதா?'' என்று ஆதங்கத்துடன் சுட்டிக் காட்டுகிறார் திருச்சியை சேர்ந்த அமுதா அசோக்ராஜா.

உச்சகட்ட கேலிக்கூத்து!

''விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் 'சரவணன் - மீனாட்சி’ தொடரில் ஹீரோ சரவணனின் தந்தையாக நடிக்கும் ராஜசேகர், இரவு நேரங்களில் மது அருந்துவது போல காட்சிகள் வருகின்றன. அறுபது வயது கடந்தவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் போனஸ் என்று தத்துவம் பேசுபவர், 'அதனால்தான் தினமும் குடித்துக் குடித்து லைஃபை என்ஜாய் பண்ணுகிறேன்' என்று குடிப் பழக்கத்தைப் பற்றி பெருமையோடு பேசுவதைப் பார்க்க... அருவெறுப்பாக இருக்கிறது. அவருடைய காட்சிகளின்போது, 'குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்கிற வார்த்தைகள் ஸ்க்ரோலாக ஓடிக் கொண்டிருப்பதுதான் உச்சகட்ட கேலிக் கூத்து'' என்று நொந்து கொள்கிறார் மதுரையை சேர்ந்த எஸ். நிர்மலா.

நல்ல கேரக்டர்களை காண்பியுங்கள்!

''இன்றைய தொலைக்காட்சித் தொடர் எல்லாவற்றிலுமே ஏன் பெண்களை இத்தனை கொடூர வில்லிகளாக சித்தரிக்கிறார்கள்? குழந்தையைக் கடத்தும் அம்மா; மாமியாரை கொலை செய்யத் துடிக்கும் மருமகள்; நாத்தனாரின் வாழ்க்கையை சூறையாடும் அண்ணி; அடுத்தவரின் கணவருக்கு ஆசைப்படும் பெண்... என்று பெண்களை மையப்படுத்தியே எல்லா சேனல்களிலும் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இத்தகைய போக்கு, பெண் என்றாலே சதிகாரி என்பது போல... கேவலமான பார்வையை பெண்கள் மீது படிய வைத்திருக்கிறது என்பது என் கருத்து. நாட்டில் பெரும்பான்மை சமூகமாக நடமாடிக் கொண்டிருக்கும் நல்ல கேரக்டர்களை முக்கியப் படுத்தி சீரியலில் காண்பியுங்களேன்...'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த சாந்தி.