Published:Updated:

ஆச்சர்யப்பட வைக்கும் அமைதிப் புறாக்கள் !

நாச்சியாள்

ஆச்சர்யப்பட வைக்கும் அமைதிப் புறாக்கள் !

நாச்சியாள்

Published:Updated:
##~##

அமைதிக்கான உலகின் மிக உயரிய நோபல் பரிசு, பெண் இனத்தின் பெருமையை உலகுக்கே எடுத்துக் காட்டும் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆம்... 2011-ம் ஆண்டுக்கான இந்தப் பரிசு...  மேற்கு ஆப்பிரிக்காவின் லைபெரியா நாட்டின் பிரசிடென்ட் எலன் ஜான்சன் சர்லீஃப், அதே நாட்டைச் சேர்ந்த 'அமைதிப் போராளி' லெமா கோப்வீ, ஏமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் கம் சமூக ஆர்வலர் டவாக்கல் கார்மன் - இந்த மூன்று பெண்களுக்கும் டிசம்பர் 10-ம் தேதியன்று பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது!

இந்த அமைதிப் புறாக்களின் அரும் பெரும் சாதனை என்ன..?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எலன் ஜான்சன் சர்லீஃப், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக எகனாமிக்ஸ் பட்டதாரி. படிப்பு முடித்து நாடு திரும்பியவர், அப்போதைய பிரசிடென்ட் டால்பெர்ட் அமைச்சரவையில் துணை நிதி அமைச்சரானார். பிறகு, நிதி அமைச்சராக உயர்ந்தார். இந்நிலையில், பிரசிடென்ட் டால்பெர்ட்டை கொலை செய்துவிட்டு ஆட்சியைப் பிடித்தார் ராணுவ தளபதி சாமுவேல் டோ. இவரை விமர்சித்ததால், நாட்டைவிட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப் பட்டார் எலன்.

வாஷிங்டனில் இருக்கும் உலக வங்கியில் பணிபுரிந்தவர், ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையை விசாரிக்கும் குழு வில் இடம்பெற்று, அங்கு அமைதியை ஏற்படுத்த உழைத்தார். 'ஓபன் சொஸைட்டி இனிஷியேட்டிவ் ஃபார் வெஸ்ட் ஆப்பிரிக்கா’ என்கிற தன்னார்வ அமைப்புக்கும் தலைவரானார்.

ஆச்சர்யப்பட வைக்கும் அமைதிப் புறாக்கள் !

துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்காக 1985-ல் நாடு திரும்பிய எலனை, கைது செய்து 10 ஆண்டு காலம் சிறை தண்டனை கொடுத்தார் ராணுவ ஆட்சியாளர் டோ. ஆனால், மக்கள் எலனை செனட் மெம்பராகத் தேர்ந்தெடுக்க, சிறையில் இருந்து விடுவித்த டோ அரசு, அந்தப் பதவியை அவருக்கு வழங்கியது. அதை ஏற்க மறுத்ததால் மீண்டும் சிறையில் தள்ளப்பட்டவர், யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1989-ல் முதன் முதலாக லைபெரியாவில் மக்கள் புரட்சி உருவானபோது, அமைதியை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கினார் எலன். இதையடுத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டார். இரண்டாவது தடவையாக மக்கள் புரட்சி உருவானபோது, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அமைதியை அந்நாட்டில் நிலைநிறுத்தவும் போராடினார். இதற்கெல்லாம் பரிசாக... 2005-ல் நடைபெற்ற தேர்தலில் பிரசிடென்ட் பதவியை இவருக்கு கொடுத்து அழகு பார்த்தனர் மக்கள். இரண்டாம் முறையாகவும் அதில் நீடிக்கும் எலன்... நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போரின் பாதிப்பை மாற்றி... நாட்டில் அமைதி, பாதுகாப்பு, ஒற்றுமை, மறுமலர்ச்சி அனைத்தையும் படிப்படியாக உறுதி செய்துள்ளார்.

'மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபெரியாவின் முதல் பெண் பிரசிடென்ட்' என்கிற பெருமையைப் பெற்றிருக்கும் எலன்...  ஏழைப் பெற்றோரின் பெண்ணாகப் பிறந்து, 17 வயதிலேயே திருமணமும் செய்துகொண்டவர். அரியணை ஏறிய பின்பும் டாம்பீகம் இல்லாமல் இருப்பதுதான் இவருடைய அழகும் ஆளுமையும்!

ஆச்சர்யப்பட வைக்கும் அமைதிப் புறாக்கள் !

லெமா கோப்வீ... ஆறு குழந்தைகளின் தாய். ''போரினால் பாதிக்கப்பட்ட லைபெரியா நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், அது தாய்மார்களால் மட்டுமே முடியும்'' என்று உரக்கக் கோஷமிட்ட அன்னை. அதைச் செயல்படுத்தியும் காண்பித்தார். காரணம், உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குழந்தைப் போராளி அவர். ஆம்... சிறுவயதிலேயே போரினால் ஏற்படும் இழப்புகளையும், வலிகளையும், துயரங்களையும் தன் கண்களால் தினம் தினம் கண்டு, மனதால் நொடிக்கு நொடி அழுது, மனதை உறுதிபடுத்திக் கொண்டவர். மூளை பலத்தால் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவர்!

நாட்டில் அமைதியைக் கொண்டுவர 2002-ல் 'விமன் ஆஃப் மாஸ் ஆக்ஷன் ஃபார் பீஸ்’ என்ற அமைப்பை நிறுவி, பெண்களைத் திரட்டி அமைதி வழியில் போராடினார். உள்நாட்டுப் போருக்கு காரணமான சார்லஸ் முன் போராட்டம் நடத்தி, அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கக் கட்டாயப்படுத்தி, போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதையடுத்துதான்... ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று, பிரசிடென்ட்டாக எலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

''நாங்கள் கடந்த காலத்தில் அமைதியாக இருந்தோம். ஆனால், போரின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோம்; கொடூரமாகக் கொல்லப்பட்டோம்; எல்லா வழிகளிலும் அவமானப் படுத்தப்பட்டோம்; தொற்று நோயினால் பாதிக்கப்பட்டோம்; குடும்பம், குழந்தைகள் அழிக்கப்பட்டார்கள்... வன்முறைக்கு 'நோ’ சொல்வதிலும், அமைதிக்கு 'யெஸ்’ சொல்வதிலும்தான் எங்கள் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது!'' என்று இவர் ஒன்றிணைத்த பெண்கள் ஓங்கிக் குரல் கொடுத்ததால்தான், அந்த நாட்டில் அமைதி... அமைதியாக தற்போது தங்கியிருக்கிறது!

ஆச்சர்யப்பட வைக்கும் அமைதிப் புறாக்கள் !

டவாக்கல் கார்மன்... மூன்று குழந்தைகளின் தாய்; ஏமன் நாட்டுப் பெண்; அப்பா அரசியல்வாதி; சகோதரி அந்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்... இந்த அடித்தளமே, இவர் தொடர்ந்து போராடுவதற்கு ஊக்கசக்தியாக இருந்தது. 'டபுள்யு.ஜெ.டபுள்யு.சி' (WJWC-Women Journalists Without Chains ) என்கிற அமைப்பை நிறுவி, பெண் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து, அதை மனித உரிமை அமைப்பாக நிறுவினார். குறிப்பாக... பேச்சுரிமை, கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடினார்.

இந்த அமைப்பின் மூலம் தனியாக பத்திரிகை மற்றும் ரேடியோ ஸ்டேஷன் தொடங்க அப்ளை செய்தபோது, அனுமதி மறுத்ததோடு, டவாக்கலையும் பயமுறுத்தியது ஏமன் அரசு. அதற்கெல்லாம் அஞ்சாமல் உண்ணாவிரதம் மூலம் போராடினார். அரபு நாடான ஏமனில் ஒரு பெண் இப்படிப் போராடுவது குற்றம். என்றாலும், திரும்பத் திரும்ப போராடினார். ஒரு முஸ்லிம் நாட்டின் பிரஜையாக இருந்துகொண்டு பர்தா அணிய முடியாது என்று தைரியமாக எதிர்த்து நின்றார். 'பர்தா அணிவது கலாசார ரீதியானது; இஸ்லாம் அதைக் கட்டாயமாக்க வில்லையே' என்று, பத்திரிகைக்கு தைரியமாக பேட்டி அளித்தார்.

''பெண்கள் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டுள் ளோம்; நாம் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறோம் என்று சிந்திக்காமல், தீர்வாக இருக்கிறோம் என்று எண்ண வேண்டும். நாம் யாருடைய ஒப்புதலுக்கும் அனுமதிக்கும் காத்திராமல், எழுந்து நின்று போராடுவதன் மூலம்தான் ஏமன் நாட்டின் பலத்தை நிரூபிக்க முடியும்'' என்பதை ஒரு தாரகமந்திரமாக திரும்பத் திரும்ப சொல்லி, மக்களை ஒருங்கிணைத்தார்.

ஏமனில் இன்றும் நடைபெற்று வரும் போராட்டத்தில், இளைஞர்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் போராடியதற்காக கைது செய்யப்பட்டார் டவாக்கல். எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரம்கூடக் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பிறகு விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து போரடிக்கொண்டே இருக்கிறார் இந்த 32 வயதேயான இளம் போராளி!

வீட்டிலும், நாட்டிலும் அமைதிக்காக போராடுபவர்கள் பெண்கள்தானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism