Published:Updated:

இளமை இதோ... இதோ !

பதினெட்டு வயதை பயமுறுத்தும் பி.சி.ஓ.எஸ்... வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் உங்களை பெருகேற்றும் மேக்னெட் தொடர்

இளமை இதோ... இதோ !

பதினெட்டு வயதை பயமுறுத்தும் பி.சி.ஓ.எஸ்... வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் உங்களை பெருகேற்றும் மேக்னெட் தொடர்

Published:Updated:
##~##

பருவம் அடைந்த பெண்களுக்கு ஆரோக்கியம் என்பது சீரான மாதவிடாயிலிருந்து ஆரம்பிக்கும். 18 - 21 வயதுகளில் மாதவிடாயானது சரியான இடைவெளியில் இருக்க வேண்டும். அதாவது 28 - 30 நாள் சுழற்சி. மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். இந்த வயதுக்கு அடுத்து சந்திக்கப் போவது... தாய்மைப் பருவம். அதனால், மாதவிடாய்ப் பிரச்னைகளை இளவயதிலேயே மருத்துவர் வழிகாட்டலுடன் சரிசெய்து கொள்வது முக்கியம்!

18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களைத் தாக்கக்கூடிய நோய்களுள் ஒன்று... 'பி.சி.ஓ.எஸ்' எனப்படும் 'பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' (PCOS -Polycystic Ovarian Syndrome).இந்தியாவிலேயே இந்த நோய்த் தாக்குதலில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது உடலுக்குள் படுத்தும் நோயாக மட்டுமல்லாமல், வெளித்தோற்றத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி, புற அழகை பாதிப்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அது தரும் மன அழுத்தம் அதிகம். குறிப்பாக, இதனால் பெண்ணுக்கே உரிய உடல் கட்டமைப்பு குலைந்து போவதால், அது அவருக்குத் தாழ்வு மனப்பான்மையைத் தரலாம். பெண்கள் இன்ச் இன்ச்சாக தங்கள் உடல் மேல் காதல் வயப்படும் இந்த 18 வயதுகளில்... தாடையில் முடி, பருத்த இடை, கறுத்த கழுத்து என்ற அறிகுறிகள் எல்லாம் அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைத்து, மனதளவில் அவர்களைச் சோர்வடையச் செய்யலாம். இப்பிரச்னையை கவனிக்காமல் விட்டால்... குழந்தையின்மை, சர்க்கரை நோய் என்று இது ஏற்படுத்தும் எதிர்கால விளைவுகளும் விபரீதமானவை. அதேசமயம், மிக எளிதாக குணப்படுத்திவிடக் கூடியதுதான் இந்த பி.சி.ஓ.எஸ்!

இளமை இதோ... இதோ !

பி.சி.ஓ.எஸ்-க்கான அறிகுறிகள் என்ன, காரணங்கள் என்ன, சிகிச்சைகள் என்ன, தவிர்க்கும் வழிமுறைகள் என்ன..?

சீரற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் எடை தொடர்ந்து அதிகரிப்பது, முகத்தில் அதிகமான பருக்கள் தோன்றுவது, முகம் மென்மைத் தன்மை இழப்பது, கழுத்துக்குப் பின்னால், அக்குள் மற்றும் தொடைகளுக்கு இடையில் கறுப்பாக மாறுவது, வயிற்றுப் பகுதியில் பருமன் அதிகரிப்பது, மேல் உதடு மற்றும் தாடையில் முடி வளர்வது, அளவுக்கு அதிகமாக முடி கொட்டுவது, எந்த நேரமும் சோர்வாக இருப்பது... இவையெல்லாம் பி.சி.ஓ.எஸ்-க்கான அறிகுறிகள். இதில்... நான்கு அல்லது ஐந்து பிரச்னைகள் ஒருசேர இருந்தால்... பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ஹார்மோன் சுரப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வு, உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்படும் திடீர் மாற்றம், பரம்பரை போன்றவற்றின் காரணமாக இந்த நோய் ஏற்படலாம். இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர் மருத்துவர்கள்! முதல் வகையினர்... யோகா, நீச்சல் போன்ற உடற்பயிற்சி முறைகளை கடைபிடித்தாலே தீர்வு கிடைத்துவிடும். இரண்டாம் நிலையினர்... மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்வதன் மூலமாக சரிசெய்யலாம். மூன்றாம் நிலையினர்... மகப்பேறு மருத்துவர்களின் தீவிர ஆலோசனையை கட்டாயம் பெற்றாக வேண்டும்.

பத்து வயது நிறைவடைந்த பிறகு, உடல் எடை சரியான விகிதத்தில் இருக்கிறதா என ஆண்டுதோறும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மென்சுவல் டைரியை முக்கியமாக கவனிப்பது நல்லது. மேல் உதட்டுக்கு மேல் முடி வளர்ந்தால்... 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மூலமாகவே சரிசெய்யலாம். அதற்கு மேல் வயதுள்ளவர்கள் என்றால்... பியூட்டி பார்லர்களுக்கு சென்று முடியை அகற்றலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது தானே உதிரவும் வாய்ப்பு உண்டு. முட்டை, பச்சை நிற காய்கறிகள், ஃப்ரூட் சாலட் போன்றவற்றை உணவாகச் சேர்த்துக் கொண்டாலே... பி.சி.ஓ.எஸ் பிரச்னை வராமலே தடுத்துவிட முடியும்!

சிகிச்சைகள் ஒருபுறம் இருக்க, பி.சி.ஓ.எஸ் பாதிப்புள்ள ஒரு பெண்ணுக்கு அவளைச் சுற்றி உள்ள உறவுகளும், நட்புகளும் இந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய 'பூஸ்ட் அப்’ நிறைய. அதே போல... குறைத்துக் கொள்ள வேண்டிய விமர் சனங்களும் நிறைய நிறைய. 'நான் எல்லாம் உன் வயசுல கொடிபோல இருப்பேன். உனக்கு இந்த மாசம் தைச்ச சுடிதார் அடுத்த மாசம் பத்தாமப் போயிடுது...’ என்று, தன் பெண்ணின் உடல் பிரச்னையைப் புரிந்துகொள்ளாமல் அவளை நோகடிக்கும் அம்மாக்கள், அவளுக்குப் பிடிக் காதவர் ஆகிப்போவது தவிர்க்க முடியாததாகி விடும். 'ட்ரீட்மென்ட் முடிந்ததும்... மறுபடியும் உடம்பை ஃபிட் ஆக்கிக்கலாம்டா... டோன்ட் வொர்ரி!’ என்று அவளைத் தோளில் சாய்த்துக் கொள்ளும் அம்மாவாக இருங்கள்.

கல்லூரியிலும், மற்ற மாணவிகள் சக மாணவி யின் தாடையில் தோன்றும் ரோம வளர்ச்சி குறித்து நகைப்பது, அதைப் பற்றி கிசுகிசுப்பது என்று இல்லாமல், 'இது ஹார்மோன் இம்பேலன்ஸ்பா... வேற ஒண்ணும் இல்லை!’ என்று அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கொடுத்து அவளுடன் சகஜமாக இருப்பது, சோர்ந்திருக்கும் அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மலர்த்தும்!

இன்றைய நாகரிக உலகில்... மேக்கப் உள்ளிட்ட பலவற்றுக்கும் நிறையவே செலவழிக்கிறார்கள் இளம் பெண்கள். ஆனால், இத்தகைய மேக்கப்பே... பிரச்னைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிடும் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை!  

- இளமை வளரும்...

என்றென்றும் அழகு!

''அவ கன்னம் 'டால்’ அடிக்கும்!'’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்ல ஆசைப்படும் வயது இது. ஆனால், சருமம் பளபளவென்று இருப்பதற்கு வெளியில் பூசும் க்ரீம்கள் மட்டும் கை கொடுக்காது. எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பதோடு... காய்கறிகள், கீரை, வெள்ளரி, தானிய வகைகள், நிறைய தண்ணீர் என்று எடுத்துக் கொண்டால்... சருமம் பொலிவு பெறுவதுடன் எனர்ஜியையும் தரும். இன்னும் முக்கியமான ஓர் ஊட்டச்சத்து இருக்கிறது... புன்னகை. அதை உங்கள் முகத்தில் தவழவிட்டால், நீங்கள் என்றென்றும் அழகுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism