Published:Updated:

தோழமை உறவுக்கு ஈடேதம்மா!

46 ஆண்டு கால நெகிழ்ச்சி பா.ஜெயவேல்

தோழமை உறவுக்கு ஈடேதம்மா!

46 ஆண்டு கால நெகிழ்ச்சி பா.ஜெயவேல்

Published:Updated:
##~##

அது ஓர் ஆனந்த சந்திப்பு. காஞ்சி புரம் எஸ்.எஸ்.கே.வி. பள்ளியில், 46 வருடங் களுக்கு முன் படித்த மாணவிகள், மீண்டும் இணைந்து நெகிழ்ந்த நட்புச் சந்திப்பு!

''1965 எஸ்.எஸ்.எல்.சி. பேட்ச் நாங்க. இப்போ போல செல்போன், சோஷியல் நெட்வொர்கிங் சைட்ஸ் எல்லாம் பெருகாத, போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டரைத் தவிர தகவல் தொடர்புக்கு எந்த வாய்ப்பும் இல்லாத அந்தக் காலத் தோழிகளான நாங்க, ஓடின வருஷங்கள்ல எங்க தொடர்புகளை இழந்துட்டோம். ஆனா, எங்களோட முயற்சியால மறுபடியும் ஒண்ணு சேரப் போறோம். அந்தத் தருணத்துல அவள் விகடனும் கூட இருந்தா, சந்தோஷம் ரெட்டிப்பு ஆகும். எங்களைப் போலவே மீண்டும் சந்திக்கிற உந்துதல் இன்னும் பல வாசகிகளுக்கும் வரும்!'' என்று நமக்கு மெயில் அனுப்பியிருந்த வாசகி தேவசுந்தரியால், நாமும் அந்த உற்சாக ஞாயிற்றுக்கிழமையில் இணைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோயில்ல பிரார்த்தனையை முடிச்சுட்டு, எங்க ஸ்கூல்ல 'அலும்னி’ கொண்டாட்டங்கள்... இதுதான் ஏற்பாடு!'' என்று கோயிலில் காத்திருந்தார்கள் தேவசுந்தரியும், கல்பனாவும். ஹேமலதா, அனுராதா, சாய்லட்சுமி என ஒவ்வொருவராக வந்து சேரச் சேர, ஆரத்தழுவிக் கொண்டனர் தோழிகள். ''இவ்வளவு இளைச்சுட்டியேடி கோகிலா..?'', ''ஹேமா... உன்னை அடையாளமே தெரியலப்பா..!'' என்று ஒரே கூக்குரல்கள்.

தோழமை உறவுக்கு ஈடேதம்மா!

''எங்க அம்மா இறந்ததற்கு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தோம். அதுல இருந்த தொலைபேசி எண்ணைப் பார்த்துட்டு, தோழிகள் பலர் அழைச்சது, எனக்கே ஆச்சர்யம். அப்படியே, 'உங்கிட்ட அவ நம்பர் இருக்கா..?’, 'எங்கிட்ட ரெண்டு பேரோட நம்பர் இருக்குடி... அவங்ககிட்ட வேற யாரோட நம்பராச்சும் இருக்கானு விசாரிக்கலாம்’னு 'அலுமினி’ சந்திப்புக்காக தோழிகளோட தொடர்பு எண்களை சேகரிச்சோம். 46 வருஷம் கழிச்சு போன்ல என் குரலைக் கேட்ட சந்திரிகாகிட்ட, 'நான் யாருனு சொல்லு பார்ப்போம்?’னு கேட்டப்போ, சந்தேகமே இல்லாம 'தேவசுந்தரீ..!’னு உற்சாகமா கத்தினா. இப்படித்தான் எல்லாருக்குமே சர்ப்ரைஸ் சந்தோஷங்கள். பேப்பர்லயும் விளம்பரம் கொடுத்தோம். பள்ளியின் மேலாளர் சி.கே. வாசன் சார், 'இது உங்க பள்ளி. வெல்கம்!’னு மகிழ்ச்சியோட அனுமதி கொடுத்தார். இதோ... இன்னிக்குத் திருவிழா!'' என்றபோது, தேவசுந்தரியின் முகத்தில் அத்தனை பரவசம்.

பெங்களூருவில் இருந்து விஜயா, கோகிலா, லலிதா, மகாலட்சுமி, கோவில்பட்டியில் இருந்து பூமா என இன்னும் பலர் வந்து இணைய... ''எங்க ஆத்துக்காரியோட படிச்சவா எல்லாம் வர்றதா அவ ஏற்கெனவே சொல்லிட்டா. சிறப்பு பூஜை, பிரசாதம், குங்குமம் எல்லாம் ரெடி பண்ணியிருக்கேன். எல்லோருக்கும் அம்பாள் அருள் கிடைக்கட்டும்!'' என்று அர்ச்சகர் பாலகிருஷ்ணன் பூஜையை முடிக்க, எல்லோரும் பள்ளிக்கூடத்துக்கு பொடி நடை போட்டனர்.

தோழமை உறவுக்கு ஈடேதம்மா!

''இங்க ஒரு நாகமரம் இருந்ததே ஞாபகம் இருக்கா..?'', ''அதோ நம்ம பிரேயர் ஹால்...'', ''அப்போ சின்னதா இருந்த இந்த வேப்பமரம்... எவ்வளவு பெருசாயிடுச்சு!'' என்று ஒவ்வொருவரும் ஒவ்வோர் நினைவுகளுடன் பள்ளியை நெருங்க... அங்கே இன்னோர் ஆச்சர்யம் காத்திருந்தது. ''கிளாரா டீச்சர்!'' என்று அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஆம்... இவர்களுக்கு வகுப்பாசிரியராக இருந்து, அதே பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்று, இப்போது தனியார் மெட்ரிக் பள்ளியில் பிரின்ஸிபால்... கிளாரா, தன் மாணவிகளுக்காக அன்று அந்தப் பள்ளிக்கு வந்திருந்தார். ''இத்தனை வருஷம் கழிச்சும் என்னை மறக்காம ஞாபகம் வெச்சுருக்காங்க பாருங்க!'' என்று நம்மிடம் நெகிழ்ந்த கிளாரா டீச்சருக்கு மனதெல்லாம் சந்தோஷம்.

சென்னையில் ஃபேஷன் ஜுவல்லரி நடத்தும் அனுராதா, தன் கையால் செய்து எடுத்து வந்திருந்த கைவினைப் பொருட்களை தோழிகளுக்குப் பரிசளிக்க, தன் ஆப்பிள் ஐ-பாட் மூலமாக அனைவரையும் 'கிளிக்’கிக் கொண்டிருந்தார் கீதா.

''மகாலட்சுமி நல்லா பாடுவாளே... அவளை ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்க!'' என்றார் கிளாரா டீச்சர். 'சந்நிதியை பாட என்ன தவம் செய்தேனோ’ என அசத்தினார் மகாலட்சுமி.

தோழமை உறவுக்கு ஈடேதம்மா!

''நாம் ஒவ்வொருவரும் நல்ல அலுவலக ஊழியராக, மனைவியாக, அம்மாவாக, மாமியாராக, பாட்டியாக என இந்தச் சமுதாயத்தில் முக்கியப் பங்கேற்றுள்ளோம். அதன் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளோம். அதற்காக நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்வோம்'' என்று தன் தோழிகளை 'சியர் அப்’ செய்தார் விஜயா. தொடர்ந்து, 'அலுமினி கேக்’-ஐ கிளாரா டீச்சர் வெட்ட, அவருக்கு உமா அண்ட் கோ பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். தொடர்ந்து கலகலப்பாக நிமிடங்கள் கரைய, தங்களின் (பழைய) மாணவிகள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கினார் பள்ளி மேலாளர். பிளாக் அண்டு வொயிட் நினைவுகளுக்கு புதுப்பொலிவு கொடுப்பதுபோல், குரூப் போட்டோவும் எடுக்கப்பட்டது.

பிரியும் நேரம் அது. ''அடிக்கடி போன் பண்ணு என்ன...'', ''வீட்ல விசேஷம்னா கூப்பிடுடி...'' - ஏக்கத்துடன் வெளியூர்த் தோழிகள் ஆயத்தமாக, அதே ஏக்கத்துடன் அவர்களை வழியனுப்பினர் உள்ளூர்த் தோழிகள்! ''ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் நானா வாழ்ந்த, எனக்காக வாழ்ந்த நாள் இது!'' என்ற அந்தத் தோழியின் விழிகளில் ஆனந்தம் தந்த நீர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism