Published:Updated:

வந்தது பதவி... பறந்தது காதல்...

பொங்கி எழுந்த பிரியதர்ஷினி! சுதர்ஷினி படம்: எம்.உசேன்

வந்தது பதவி... பறந்தது காதல்...

பொங்கி எழுந்த பிரியதர்ஷினி! சுதர்ஷினி படம்: எம்.உசேன்

Published:Updated:
##~##

''இத்தனை கசப்புகளுக்குப் பிறகும் வருண்குமாரை கல்யாணம் செய்துக்க நான் தயாரா இல்லை. ஆனா, என்னைக் காதலிச்சு ஏமாற்றின துக்கான தண்டனையை வாங்கித் தராம விடமாட்டேன்''

- இப்படி ஒரு டயலாக், சினிமாவில் வந்தால்கூட... 'அய்யய்யோ... நம்ம குடும்ப மானம் போயிடுமே!' என்கிற கதறல் டயலாக் அப்பா - அம்மா கேரக்டர்களிடம் இருந்து வருவதுதான் இங்கே வாடிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே நிஜத்தில்... வருண்குமாருக்கு எதிராக வாள் தூக்கியிருக்கும் பிரியதர்ஷினிக்கு, ''நாங்க இருக்கோம்மா... அவனோட முகத்திரையைக் கிழிக்காம விடக்கூடாது'' என்று தோள் கொடுத்துக் கொண்டு நிற்கிறார்கள் பெற்றோர் இருவரும் - சமூகத்தின் மீதான அக்கறையோடு!

சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கும் தன் வீட்டில் ஃப்ரெஷ்ஷாக வந்தமர்ந்த பிரியதர்ஷினி, ''என் அப்பா, சி.பி.சி.ஐ.டி. போலீஸில் வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். ஒரு அக்கா, ஒரு தம்பி, நான்... இதான் எங்க குடும்பம். சின்ன வயசுல இருந்தே ஐ.பி.எஸ். ஆகணுங்கிறதுதான் ஆசை. பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் முடிச்சுட்டு, 'கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி’யில நாலு வருஷத்துக்கு முன்ன சேர்ந்தேன். அங்க தான் வருண்குமார் எனக்குப் பழக்கம். ஒரு பொண்ணோட அவருக்கு நிச்சயமாகி, அந்தப் பொண்ணு வருணோட அப்பா, அம்மாவை மதிக்கலைங்கறதுக்காக கல்யாணம் நின்னு போனதை பகிர்ந்துக்கிற அளவுக்கு வருண் எனக்கு நண்பரானார்'' என்றவர்,

''ப்ச்... அப்போவே நான் சுதாரிச்சுருக்கணும்!'' என்றபோது குரலில் ஏகத்துக்கும் வருத்தம்.

வந்தது பதவி... பறந்தது காதல்...

''வருண்குமார் பல் டாக்டருக்குப் படிச்சுட்டு, அகாடமியில் சேர்ந் திருந்தார். எட்டு மாசப் பழக்கத்தில் நாங்க காதலர்களாகி இருந்தோம். நானும், வருணும் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்காக டெல்லி, வாஜிராம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தோம். பிரிலிம்ஸில் நான் தவறிட்டேன். வருண் பாஸாகி, மெயின் எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பிச்சார். நான் சென்னைக்குத் திரும்பிட்டேன்.

இடைப்பட்ட காலத்தில், எங்களோட காதலை ரெண்டு வீட்டுலயும் தெரியப்படுத்திஇருந்தோம். ஹைதராபாத்தில் அவங்க குடும்ப நிகழ்ச்சிக்கு போயிருந்தப்ப... 'இதுதான் வருணோட வருங்கால மனைவி’னு அவங்க உறவுக்காரங்ககிட்ட என்னை அறிமுகப்படுத்தினாங்க அவரோட அப்பாவும் அம்மாவும். என் மேலயும் ரொம்பப் பிரியமா இருந்தாங்க. கௌரவமான எங்க குடும்பத்துல சம்பந்தம் வெச்சுக்கிறது, அப்போ அவங்களுக்கு விருப்பமா இருந்தது. மெயின் எக்ஸாமில் இந்திய அளவுல மூணாவது ரேங்க் வாங்கி வருண் பாஸ் செய்தார். ஒரு பேக் ஃபுல்லா சாக்லேட்ஸ் வாங்கிட்டு வந்து என் மேல கொட்டி, 'நீதான் என் சக்சஸுக்குக் காரணம்’னு அவரோட வெற்றியை என்கூட பகிர்ந்துகிட்டார். ஆனா, அதுக்குப் பிறகு நடந்ததுதான் துயரம்!''

- பிரியதர்ஷினியின் கண்களில் கலக்கம்.

''வருண் ஐ.பி.எஸ். ஆனதும், அவரோட அப்பாவும், அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமா என்னைத் தவிர்த்தாங்க. திடீர்னு ஸ்டேட்டஸ் உயர்ந்ததால... அவங்களவிடக் குறைவானவங்களா நினைச்சு அலட்சியப்படுத்த ஆரம்பிச்சாங்க. 'என் பையனுக்கு பெண் கொடுக்க நிறைய பேர் காத்திருக்காங்க’னு சொன்னவங்க... 2 கிலோ தங்கம், 50 லட்சம் ரொக்கம், பி.எம்.டபுள்யூ கார்னு வரதட்சணையா கேட்டாங்க. மெயின் எக்ஸாம் முடிஞ்சதும் நிச்சயதார்த்தம்னு பேசியிருந்ததால... அதுக்கான தேதி, மண்டபம் எல்லாம் முடிவாகியிருந்த நிலையில, 'இந்தப் பெண் உனக்கு வேண்டாம்’னு வருண்கிட்ட சொன்ன அவங்க அப்பா - அம்மா, 'இந்தத் திருமணம் எங்களுக்கு வேண்டாம்’னு என் அப்பா, அம்மாகிட்டயும் சொல்லிட்டாங்க''

- அந்த அதிர்ச்சி அகலவில்லை இப்போதும் அவர் முகத்தில்.

''பெற்றோரோட பேராசைக்காக, அழகான எங்க காதலைக் கொல்ல எப்படி அவருக்கு மனசு வந்ததுனு தெரியல. என்கிட்டயிருந்து மொத்தமா விலகிப்போனார். அதைவிடக் கொடுமையா, எனக்கு ஒரு பொண்ணோட போட்டோவை அனுப்பி, 'இவளத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்... உன்னால என்ன செய்ய முடியும்? உன்னையும், உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன், உன் கேரக்டரை கேவலப்படுத்துவேன்’னு மிரட்டினார்.

வந்தது பதவி... பறந்தது காதல்...

நாலு வருஷக் காதலை, நம்பிக்கையை 'ஐ.பி.எஸ்’-ங்கிற அடையாளம் கிடைச்சவொடன தூக்கி எறிஞ்ச வருண்... எனக்குத் தந்த வேதனைகள் அத்தனை ரணமானவை. அந்தக் காயத்துல நான் கரைஞ்சுட்டு இருந்த நேரம், வருணும் அவங்க பெற்றோரும் போட்டோ, இ-மெயில்னு எங்க காதலுக்கான சாட்சிகளை எல்லாம் அழிக்கற வேலையைப் பார்த்தாங்க. தப்பு செஞ்சவங்க தலை நிமிர்ந்து இருக்கும்போது, நாம ஏன் கூனிக் குறுகணும்னு முடிவெடுத்தேன். எங்ககிட்ட இருந்த மிச்சமீதி ஆதாரங்களோட போலீஸில் புகார் கொடுத்துட்டேன்.

இப்ப, 'மனநிலை சரியில்லாதவ... நான் ஐ.பி.எஸ். ஆனதில் அவளுக்குப் பொறாமை'னு என்னைப் பத்தி விமர்சிக்கற வருண், உச்சகட்டமா என் கேரக்டரை கேவலப்படுத்த றார். நியாயம் கேட்டு வர்ற பெண்களை வலுவிழக்கச் செய்றதுக்காக எப்பவுமே ஆண்கள் வீசுற அசிங்கமான அம்பு அதுதானே? சட்டத்துக்கு தெரியும் உண்மை'' என்று நீதிக்காகக் காத்திருக்கிறார் பிரியதர்ஷினி.

பிரியதர்ஷினியின் அம்மா லட்சுமி, ''ஆரம்பத்துல, ஒரு அம்மாவா அவ எதிர்காலத்தை நினைச்சு நானும் ரொம்பவே யோசிச்சேன். ஆனா, இப்படியே பயந்து பயந்து இந்த சமுதாயத்துல பெண்கள் கூனிக்குறுகிட்டே இருந்தா... இதுமாதிரியான துரோகத்தை யார்தான் தோலுரிக்கறதுனு தோணுச்சு. மகளோட முடிவை நாங்களும் ஆதரிச்சோம். ஏமாத்தணும்னு நினைக்கிற ஒவ்வொரு ஆணுக்கும், ஏமாந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரியதர்ஷினியோட தைரியம்... இனி ஒரு பாடமா இருக்கும். கண்டிப்பா என் மகளுக்கு, அவள புரிஞ்சுக்கிட்ட ஒரு லைஃப் பார்ட்னர் கிடைப்பார்ங்கற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு''

- தன் மகளின் கரம் பற்றிக் கொள்கிறார்.

இந்த விஷயம் தொடர்பாக வருண்குமாரின் தந்தை வீரசேகரனிடம் கேட்டபோது, ''அது உண்மையா இருந்தாலும் இருந்துட்டு போகட்டும்... பொய்யா இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். ரோட்டுல போறவங்க சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது'' என்று மட்டும் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism