Published:Updated:

வேலு பேசறேன் தாயி!

நாட்டு விலங்குதான் ரொம்ப டேஞ்சரு !நகைச்சுவை புயலின் நவரச தொடர் வடிவேலு ஓவியம்: கண்ணா

வேலு பேசறேன் தாயி!

நாட்டு விலங்குதான் ரொம்ப டேஞ்சரு !நகைச்சுவை புயலின் நவரச தொடர் வடிவேலு ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

போன பொங் கலை சந்தோசமா கொண்டாடறதுக்காக... கேரளா பார்டர்ல இருக்குற மலை கிராமங்களுக்குப் போகலாம்னு பிளான் பண்ணி இருந்தேன். கோயம்புத்தூர்ல இருந்து வண்டியைக் கௌப்பினோம். சரியா எழுவது கிலோ மீட்டர் தூரம் தாண்டி, கேரளா எல்லையில போய் நின்னுச்சு வண்டி. ஏதோ சொர்க்கத்துல வந்து எறங்குன மாதிரி இருந்துச்சு. மலைக்கு பச்சைப் பெயின்டு அடிச்சுவிட்ட மாதிரி அப்படி ஒரு செழிப்பு... மொகத்துல அடிக்கிற காத்து முதுகெலும்பு வரைக்கும் ஜில்லுனு பாயுது!

'மண்ணே இப்புடி மணக்குதே... அங்க இருக்குற மனுச மக்க எப்புடி இருப்பாக?'னு நெனச்சுக்கிட்டே வண்டிய வுட்டோம். குண்டுங் குழியுமா ரோடு முழுக்க பஞ்சராகிக் கெடந்துச்சு. குதிரையில போற மாதிரி குலுங்கிக் குலுங்கிப் போனா, ஒரு கட்டத்துல கழுத தேஞ்சு கட்டெறும்பான மாதிரி ரோடு ரொம்பவே எளைச்சுப் போச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலு பேசறேன் தாயி!

''இங்கேருந்து அஞ்சு கிலோ மீட்டர் தூரம் போனா, அட்டகட்டி வரும். அங்கதான் மனுச மக்களப் பாக்க முடியும். மூணு, நாலு மணிக்கு ஒரு தடவ ஜீப் வரும். அதுலதான் அட்டகட்டிக்குப் போக முடியும். ஒங்க வண்டியெல்லாம் அதுக்கு உதவாது''னு வழிப்போக்கா போன சிலர் சொன்னாக. அதை நெனச்சே கதி கலங்கி நின்னா... சாயங்காலம் அஞ்சு மணிக்கே இருட்ட ஆரம்பிச்சு, வயித்துக்குள்ள புளியைக் கரைச்சுடுச்சு. ''இந்தப் பக்கம் எப்பவாச்சும் புலி, சிறுத்தைக வரும். ஆனாலும் மனுச மக்கள அதுக எதுவும் பண்ணாது''னு வயித்துப்புளியை கூடுதலாக்கி விட்டாக அந்த மக்க.

ஜீப்புல ஏறினதுக்கு அப்புறந்தான் கொஞ்சம் போல பயம் தெளிஞ்சுச்சு. ஜீப்... குண்டு குழியில ஏறி எறங்குனதுல கொடல் மட்டுந்தான் வெளிய வரலை. 'இதான் அட்டகட்டி’னு சொல்லி எறக்கி விட்டாரு டிரைவரு. குருவிக் கூடுக மாதிரி சின்னச் சின்னக் குடிசைகளைப் போட்டு, மக்கள் தங்கி இருக்காக.

''ஏ... நம்ம வடிவேலுடா..!''னு ரசிகப் பயபுள்ள ஒருத்தர் சவுண்ட் வுட்டதுதான் தாமதம்... மொத்தமா கூடிட்டாக அத்தனை பேரும். மலையாளமும் தமிழும் கலந்து அவுக பேசுற பேச்சு.... சக்கரை மாதிரி இனிக்குது. சினிமா, நடிப்பு, அரசியல், அக்கப்போருனு ஒண்ணு விடாம என்னயத் தோண்டி எடுத்தவுக... கெழங்கு, டீ, மாலை, மரியாதனு எதுலயும் கொற வெக்கல.

நைட்டு அங்கேயே ஒரு குடிசையில தங்கலாம்னு முடிவெடுத்தேன். ஆனா, கூட வந்தவுகளுக்கு அங்க தங்க பயம். ''அண்ணே... பாம்பு, பூச்சினு எது வேணும்னாலும் வரும்போல... ஏதுங் கடிச்சா ஆஸ்பத்திரிக்குப் போகக் கூட வழியில்ல... நாம கௌம்புறது தாண்ணே நல்லது'’னு பதற ஆரம்பிச்சுட்டாக. அப்போதான் எனக்கு அந்த மக்களோட அவஸ்தைக புரிய ஆரம்பிச்சுது. 'ஒரு நாளு தங்கறதுக்கே இப்புடி பயப்படுறோமே... வருஷம் முழுக்க இந்தக் காட்டுக்குள்ள கெடக்குற மக்கள் எப்புடியெல்லாம் கஷ்டப்படுவாக?’னு மனசுக் குள்ள வேதனையான யோசனை.

அப்போ ஒரு குடிசையில கொழந்தையோட அழுகை சத்தம். இந்தப் புள்ள குட்டிகள நோய்க்கும், நொடிக்கும், புலிக்கும், பூரானுக்கும் கொடுக்காம காப்பாத்த என்னவெல்லாம் கஷ்டப்படுவாகளோ இவுகனு நெனைக்கும்போதே, என்னோட வேதனை ரெண்டு மடங்கா கூடிருச்சு. நேரா அந்தக் குடிசைக்குப் போயி அழுத குழந்தைகிட்ட 'அவ்வு!’னு பண்ணிக் காண்பிச்சேன். பொக்கை வாய் காட்டி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.

''ஏம்மா... பாம்பு, பூச்சிகளுக்கு மத்தியில இங்க எப்படிம்மா வாழ்க்கை நடத்துறீக?''னு குழந்தையோட அந்தம்மாகிட்ட வேதனையா நான் கேட்டா... அவுக சிரிக்க ஆரம்பிச்சுட்டாக.

''இருக்க எடங் கொடுத்த இந்தக் காடு, வாழ வழி கொடுக்காதா என்ன..? காய்ச்சல், பிணினு என்ன வந்தாலும் இங்க கெடைக்கிற மூலிகைகள கசாயம் வெச்சுக் குடிச்சாலே சரியாகிடும். முருங்கை மரப் பட்டையையும் வெள்ளப் பூண்டையும் ஒண்ணா சேர்த்து நச்சு, தண்ணி யில கலந்து அந்த சாறை வீட்டைச் சுத்தி தெளிச்சு வெச்சிடுவோம். பாம்பு, தேளு, பூச்சினு எதுவும் வீட்டுக்குள்ள நுழையாது!''னு அந்தம்மா சொல்லிக்கிட்டே போக... எனக்கு ஆச்சர்யம் தாங்கல.

லேசா இருமல் வந்தாலே ஆஸ்பத்திரிக்கு ஓடுற நம்மளையும், பாம்பு கடிச்சாகூட பச்சிலையை கசக்கி மருந்து பூசிட்டு அடுத்த வேலையைப் பாக்க ஆரம்பிச்சுடற அந்த மக்களையும் ஒப்பிட முடியுமா தாயி?

''சரி, காட்டுக்குள்ள இருக்குற விலங்குகளை எப்புடி தாயி சமாளிக்கிறீக?''னு இன்னொரு தாயிகிட்ட கேட்டதுக்கு...

''ஒங்க நாட்டுல நடமாடுற ரெண்டு கால் விலங்குகள விட, இங்க நடமாடுற நாலு கால் விலங்குக கொடூரமானது இல்ல சாமி..!''

ஆத்தி... என்ன ஒரு பதிலு பார்த்தீகளா!

- நெறைய்ய பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism