Published:Updated:

சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!

சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!
பிரீமியம் ஸ்டோரி
சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!

அனுராதாநம்மால் முடியும்ஆர்.வைதேகி - படங்கள் : பி.கே.பிரவின், ப.பிரியங்கா

சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!

அனுராதாநம்மால் முடியும்ஆர்.வைதேகி - படங்கள் : பி.கே.பிரவின், ப.பிரியங்கா

Published:Updated:
சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!
பிரீமியம் ஸ்டோரி
சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!

`அடியே... எஸ்.மது' மட்டுமல்ல; அனுராதாவும் அண்ணாநகர், சாந்தி காலனி பிரபலம்தான்.  

சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!

யெஸ்... பாடிபில்டர் அனுராதாவை, அண்ணா நகரே அறிந்திருக்கிறது. ஆஜானுபாகுவான தோற்றத்தில் `ஐ' பட விக்ரம் மாதிரி ஸ்டைலாக, கெத்தாக வரவேற்கிறார், சென்னையின் முதல் பெண் பாடிபில்டர்.

``ஆந்திரா பொண்ணு நான். தமிழ் கொஞ்சம் தகராறு...'' - தற்காப்பு விளக்கத்துடன் ஆரம்பித்தாலும், அனுராதாவின் தமிழ் அட்சரசுத்தமாகவே இருக்கிறது. அதற்காகவே அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.

``ஹைதராபாத்ல பிறந்தேன். அம்மா சிவில் சப்ளை துறையில டெபுடி கலெக்டரா இருந்தாங்க. அவங்க வேலைக்காக சென்னையில செட்டிலானோம். எத்திராஜ் காலேஜ்ல  டிகிரி முடிச்சுட்டு, ஏர் இந்தியாவுல வேலைபார்த்துட்டிருந்தேன். அப்பா நாகேஸ்வரராவ் பாடிபில்டர். என் சின்ன வயசுல நான் ஃபிட்டா இருந்ததில்லை. காலேஜ் படிக்கிறப்போ என் வெயிட் 89 கிலோ'' என்று அறிமுகம் சொல்பவருக்கு, தனிப்பட்ட முறையில் அதிகப்படியான எடை குறித்த கவலைகள் இல்லை.

``நான் கவலைப்படலைன்னாலும் நம்ம சமுதாயம் சும்மாவிடுமா? குண்டா இருக்கிறது உலக மகா பாவம்கிற மாதிரியான சமுதாயப் பார்வைகளையும் விமர்சனங் களையும் எதிர்கொண்டேன்.
 
எனக்கு  ஓர் அண்ணன் இருந்தான். எதிர்பார்க்காத நேரத்துல அவன் இறந்துட்டான். நானும் அவனும் அவ்வளவு க்ளோஸ். என் உலகமே அவன்தான்னு சொல்ற அளவுக்கு எனக்கு எல்லாமா இருந்தவனோட திடீர் இழப்பால, எனக்குள்ள தீவிரமான மன அழுத்தம் ஏற்பட்டுச்சு. என் பருமனுக்கு அதுவும் ஒரு காரணம்.

எடையைக் குறைக்கணும்கிற எண்ணத்துலதான் முதல்ல ஜிம்முக்குப் போனேன். ஆனா, அங்கே நான் சந்திச்ச பிக்லீ முரளி விஜயகுமார், என் வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனைக்குக் காரணம். அவர், மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் சென்னை போட்டியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கறவர். ஜிம்ல என் வொர்க் அவுட்டைப் பார்த்துட்டு  `நீ ஏன் பாடிபில்டிங் ட்ரை பண்ணக் கூடாது... சென்னையில இந்தத் துறையில பெண்களே இல்லை. உன்னால முடியும்'னு சொன்னார். பிறகு எனக்குள்ள அவர் சொன்ன விஷயம் ஓடிக்கிட்டே இருந்துச்சு.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தோஷமா வாழறதுக்காக வொர்க் அவுட் பண்ணுங்க!

மனசளவுல ஆண்களைவிட பெண்கள் அதிக பலசாலிகள். மனசு வெச்சுட்டாங் கன்னா, அவங்க பேச்சை அவங்களே கேட்க மாட்டாங்க. ஆனா, அப்படி முடிவெடுக்கிறதுலதான் பல பெண்களுக்கும் தயக்கம். கணவன், குழந்தைகள், குடும்பம்னு அடுத்தவங்களுக்கான தியாகத்துலயே தன்னை மறந்துடுறாங்க. இந்தத் தடைகளைத் தாண்டி வந்தாங்கன்னா, சரியான பயிற்சியாளர் அமையணும். எனக்கு அப்படி அமைஞ்சது என் அதிர்ஷ்டம்'' - எல்லாம் சரியாக அமைந்த பிறகும் அனுராதாவின் தயக்கம் தீரவில்லை.

``என்னதான் மனசளவுல பலசாலியா இருந்தாலும், உடம்பும் அதுக்கேத்தபடி தயாராகணும். மனபலத்துக்கு இணையா உடலைப் பழக்கிக்கறது என்பது சாதாரண விஷயமில்லை. உப்புச்சப்பில்லாத உணவு, கடுமையான பயிற்சிகள்னு ஆரம்ப நாள்கள்ல அதுக்கெல்லாம் பழகறதே பெரிய போராட்டமா இருந்தது. ஆந்திரா பொண்ணு நான். எவ்வளவு காரசாரமா சாப்பிட்டுப் பழகியிருப்பேன். அதையெல்லாம் மறந்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க... நான் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு அஞ்சு வருஷங்களாச்சு...''  அனுராதாவின் உணவுக்கட்டுப்பாடு இன்றும் தொடர்கிறதாம்.

``சாப்பாட்டுத் தியாகத்தைக்கூட சகிச்சுக்கலாம். ஆனா, உடலளவுல படுற கஷ்டமிருக்கே... கேட்கிறவங்களுக்கே கண்ணீர் வரும். ஒவ்வொரு நாளும் கடுமையான உடம்புவலி இருக்கும். பயிற்சிகளை முடிச்சுட்டு வந்ததும் எழுந்திருக்கவே முடியாது. வீட்டுல உள்ளவங்களை சமாளிச்சு, சம்மதம் வாங்கி வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சா, அடுத்த சவால் ரெடி. வெயிட் குறைய ஆரம்பிக்கும்போது முதல்ல அது முகத்துல காட்டிக்கொடுக்கும்.

கன்னங்கள் வற்றிப்போகும். பார்க்கிற வங்க எல்லாரும் `உனக்கென்ன உடம்பு சரியில்லையா... ஏதாவது நோயா?'னு கேட்டுப் படுத்துவாங்க. `உங்க பொண்ணுக்கு சாப்பாடு கொடுக்கிறதில்லையா?'னு கேட்கிற சொந்தக்காரங்களுக்குப் பதில் சொல்ல முடியாம தவிச்சிருக்காங்க என் அம்மா.

`இது தேவையா... விட்டுடலாமா?'னு பலமுறை நினைச்சிருக்கேன். அடுத்த நாள் பொழுது விடியும்போது எனக்குள்ள முதல் நாளைவிடவும் அதிக வேகமும் ஆர்வமும் வந்திருக்கும். உடல் அளவுலயும் தயாரான பிறகும் எனக்குள்ள ஒரு சந்தேகம். நான் தொடர்ந்து இன்டர்நேஷனல் லெவல்ல உள்ள லேடி பாடிபில்டர்களை கவனிச்சுட்டிருந்தேன். அவங்க அளவுக்கெல்லாம் என்னால வர முடியுமாங்கிற தயக்கம் இருந்தது. `ஃபாரின்ல உள்ளவங்களுக்கு மட்டும் ரெண்டு கைகளும் கால்களும் எக்ஸ்ட்ரா இல்லையே. மனசுதான் காரணம்'னு என் ட்ரெய்னர் மறுபடியும் என்னை என்கரேஜ் பண்ணினார். தயக்கங்களைத் தூக்கி எறிஞ்சுட்டு, போட்டிக்குத் தயாரானேன். `நாபா ஏஷியா டோர்னமென்ட்'ல தங்கம் ஜெயிச்சேன். ஒன்பது மாசம் கருவுல குழந்தையைத் தாங்கிட்டு, பிரசவமாகி, குழந்தையைக் கையில வாங்கினதும் அத்தனை மாச வலியும் பறந்துபோயிடுமில்லையா... அப்படியோர் உணர்வைத்தான் இந்த வெற்றி எனக்குக் கொடுத்தது. அடுத்து என்னுடைய இலக்கு நேஷனல்ஸ். அதுக்காகத் தயாராகிட்டிருக்கேன்'' - மிரட்டலாகச் சொல்கிறார்.

``இன்னிக்கு என்னால பசங்களைவிட அதிகமா வெயிட் தூக்க முடியும். பாடிபில்டிங் பண்ற பெண்களுக்கு ஆண்மைத் தோற்றம் வந்துடும்கிற தப்பான அபிப்பிராயமும் நிறைய பேருக்கு இருக்கு. அந்த பயமே தேவையில்லை. அதுமட்டும் இல்லை, கல்யாண வாழ்க்கை, பிரசவம்னு எதுலயும் பிரச்னைகள் வராது. உண்மையைச் சொல்லணும்னா, பாடிபில்டிங் பண்ற பெண்கள் தினமும் மூணு மணி நேரம் கடுமையான பயிற்சிகள், ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பாடு, சரியான நேரத்துக்குத் தூக்கம்னு ரொம்ப ஒழுங்கான வாழ்க்கைக்குப் பழகிடுவாங்க'' - அச்சம் தவிர்க்கவைக்கின்றன அனுராதாவின் வார்த்தைகள்.

``பயிற்சி எடுக்கும்போது ஆண்களின் பார்வைகள் ரெண்டுவிதமாக இருக்கும். `ப்பா... எவ்வளவு பயங்கரமா பண்றாங்க'னு வியப்பாகவும் பார்ப்பாங்க. இன்னொரு தரப்புப் பார்வை இதுக்கு நேர் எதிராவும் இருக்கும். நான் 89 கிலோவுல இருந்தபோதும் ஆண்களோட கிண்டல் பார்வையை எதிர்கொண்ட அனுபவமிருக்கிறதால இதெல்லாம் என்னை ஒண்ணும் பண்றதில்லை. இன்னிக்குத் தூக்கினதைவிட நாளைக்கு ரெண்டு கிலோ அதிகமா தூக்கணும்கிறதுதான் என் சவால். இப்போ என்னால 120 கிலோ தூக்க முடியும். 200 கிலோதான் என் லட்சியம். வடஇந்தியாவில் நிறைய பெண்கள் பாடிபில்டிங்ல சாதிச்சுட்டிருக்காங்க. தென்னிந்தியப் பெண்களும் சளைச்சவங்க இல்லைன்னு நிரூபிக்கணும். சவுத்லேருந்து வர்ற பொண்ணுங்க பெருசா எதையும் சாதிச்சுட மாட்டாங்கங்கிற எண்ணம் பலருக்கும் இருக்கு. அதை முறியடிக்கணும். ஜிம் தொடங்கி, பெண்களுக்கு மட்டும் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கணும்'' - ஆசைகளை அடுக்குகிறவர், அத்தனை பெண்களுக்கும் ஒரு சீக்ரெட் சொல்கிறார்.

``எல்லாப் பெண்களுக்கும் ஏதோ ஒரு விஷயத்துக்காக மன அழுத்தம் இருக்கு. அதுலயிருந்து வெளியில வர,  சிம்பிளான சீக்ரெட் வொர்க் அவுட். டிப்ரெஷன்ல இருக்கும்போது பலரும் நிறைய சாப்பிடுவோம். அதனால வெயிட் அதிகரிக்கும். வொர்க் அவுட் பண்றது மூலமா வெயிட்டையும் கன்ட்ரோல்ல வெச்சுக்கலாம். டிப்ரெஷனும் ஓடிப்போகும். சாதிக்கிறதுக்காக இல்லைன்னாலும் சந்தோஷமா வாழறதுக்காகவாவது வொர்க் அவுட் பண்ணுங்க'' - எனர்ஜி தெறிக்கிறது எய்ட் பேக்ஸ் அழகியின் பேச்சில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism