Published:Updated:

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

அவள் அரங்கம்அமுதைப் பொழியும் நிலவேதொகுப்பு : கு.ஆனந்தராஜ் - படம் : க.பாலாஜி

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

அவள் அரங்கம்அமுதைப் பொழியும் நிலவேதொகுப்பு : கு.ஆனந்தராஜ் - படம் : க.பாலாஜி

Published:Updated:
“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

1950-களில் தொடங்கி தென்னிந்திய சினிமாவைத் தாலாட்டிக்கொண்டிருக்கும் தேன் குரலுக்குச் சொந்தக்காரர். தமிழ்த் திரையிசைப் பின்னணிப் பாடகிகளில் சூப்பர் சீனியர். பல்லாயிரக்கணக்கான பாடல்களால் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களை மகிழவும் நெகிழவும் வைப்பவர். கின்னஸ் சாதனை, பத்மபூஷண், ஐந்து முறை தேசிய விருதுகள் எனச் சிகரங்கள் பல தொட்டவர். அண்மையில் அவள் விகடன் வழங்கிய `தமிழன்னை' விருது வென்ற இசையரசி பி.சுசீலா... இதோ ‘அவள் அரங்க’த்தில் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.    

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

உங்கள் பால்யம் பற்றிச் சொல்லுங்கள்...

அகிலா விஜயகுமார், சென்னை-17


பிறந்தது, ஆந்திர மாநிலம் விஜயநகரம். நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் 10 பேர். சங்கீதக் குடும்பம். கிரிமினல் வழக்கறிஞரான அப்பா புலப்பக முகுந்தா ராவ், வீணை வித்வானும்கூட. அம்மா சேஷவதனம், இல்லத்தரசி. எனக்கு இயல்பிலேயே இசை ஆர்வம் இருந்தது; படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லை. தேர்வுகளில்கூட வினாக்களையே விடைத் தாளில் எழுதிவைத்துவிட்டு வந்துவிடுவேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவைப்போல, நானும் பெரிய கர்னாடக இசைப்பாடகி ஆக வேண்டும் என அப்பா மிகவும் ஆசைப் பட்டார். ஆனால், சினிமா பின்னணிப் பாடகியாக, என் பயணம் அமைந்தது.

இசைப் பயிற்சி ஆரம்பித்தது எப்போது?

புவனா சந்திரசேகர், தஞ்சாவூர்


தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர ராவ் மற்றும் பின்னணிப் பாடகி ஆர்.பாலசரஸ்வதி ஆகியோரின் பாடல்கள் இளம்வயதில் என்னை மிகவும் கவர்ந்தன. தவிர, ரேடியோவில் இந்திப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றை அப்படியே பாடுவேன். இந்தி இசையமைப்பாளர்கள் நெளஷாத், சி.ராம்சந்திரா, பங்கஜ் முல்லிக் ஆகியோரின் ரசிகை நான். எங்கள் ஊருக்கு வருகை தரும் இசைக்கலைஞர்களிடமெல்லாம், ‘என் மகள் நன்றாகப் பாடுவாள்; அவளுடைய குரலைக் கேளுங்கள்’ என்று சொல்லி அப்பா அவர்களை எங்கள் வீட்டுக்கு எப்படி யாவது அழைத்துவருவார். அவர்களின் முன்னிலையில் என்னைப் பாடவைப்பார். அப்படி ஒருமுறை, வயலின் மேதை துவாரம் வேங்கடசுவாமி நாயுடு முன் பாடியபோது, அவருக்கு என் குரல் ரொம்பவே பிடித்துவிட்டது; அவருடைய மகனிடம் கர்னாடக சங்கீதம் பயிலும் வாய்ப்பும் கிடைத்தது. பின்னர் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இசையில் டிப்ளோமா படித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலாஎதிர்காலத்தில் பெரிய பாடகியாவோம் என்று இளம் வயதில் நினைத்தீர்களா?

ஆர்.கோகிலா, ஊட்டி


கர்னாடக இசை கற்றுக்கொண்டாலும் அப்போது வந்த பழைய தெலுங்கு மற்றும் இந்திப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்ததால், பின்னணிப் பாடகியாக ஆசைப்பட்டேன். பாடிக்கொண்டே இருக்க வேண்டும்; அது என் வாழ்நாள் முழுக்கத் தொடர வேண்டும் என்பது மட்டுமே என் ஒரே ஆசையாக இருந்தது. எதிர்காலத்தில் பெரிய பாடகியாவேன் என நினைக்கவில்லை.

உங்கள் பூர்வீகம் ஆந்திரப்பிரதேசம். ஆனால், உங்கள் அழகுத் தமிழ் உச்சரிப்பு அதை நம்ப மறுக்கச் செய்கிறதே?

அமுதா பிரபாகர், தேவகோட்டை 

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

என் இளமைக்காலத்தில் கர்னாடக இசையைக் கற்றுக்கொண்டபோது, ஒவ்வொரு கீர்த்தனையையும் மிகத் தெளிவாகப் பாட வேண்டும். வார்த்தை உச்சரிப்பு சரியாக ஒலிக்காவிட்டால் அதைப் பெரிய கலைக்குற்றமாக அப்போதைய குருக்கள் கருதுவார்கள். பாடகியானபோது, தெளிவாகவும் பிழையின்றியும் வார்த்தை களை உச்சரிப்பதுடன், பாடலின் சூழ்நிலைக் கேற்ப அழகான உணர்வுடன் பாடுவது திரையிசைப் பாடல்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை என் ஆழ்மனதில் பதியவைத்துக் கொண்டேன். தமிழ் எனக்கு இயல்பாகவே வந்தது. ஏவி.எம் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் ஒப்பந்தப் பாடகியாகப் பணியாற்றினேன். அப்போது தமிழ் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் அழகுத் தமிழ் உச்சரிப்புடன் பாடவும் எனக்கு ஒரு தமிழ் ஆசிரியரை நியமித்தார், ஏவி.மெய்யப்ப செட்டியார். தவிர, ஆரம்ப காலங்களில் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களிடம் ஆலோசனை பெற்றும் பாடினேன். சில ஆண்டுகளிலேயே என் நாவுக்குத் தமிழ் வரம் கிடைத்துவிட்டது.

சினிமா வாய்ப்புக்கு அடித்தளமிட்ட, ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சி அனுபவம்?

பார்வதி கலைவாணன், ஒசூர்


‘பாப்பா மலர்’ நிகழ்ச்சியை நடத்துபவர் எங்கள் வீட்டுக்கு ஒருமுறை வந்திருந்தார்.அவரை சென்னையிலுள்ள என் அக்கா வீட்டில் மீண்டும் சந்தித்தேன். அப்போது தான், அந்நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். சென்னை வானொலியில் ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய காலங்கள் மிகவும் அற்புதமானவை. பி.லீலா, ஜிக்கி, கே.ராணி, பாலசரஸ்வதி உள்ளிட்ட என் சீனியர்கள் மற்றும் மிகச்சிறந்த கலைஞர்களின் திரைப்படப் பாடல்களை, ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தேன். ஆல் இண்டியா ரேடியோவில் கர்னாடக இசைக் கச்சேரியும் செய்துகொண்டிருந்தேன்.

பின்னணிப் பாடகியாகும் வாய்ப்பு எளிதில் கிடைத்ததா?

கே.மணிமேகலை, சுசீந்திரம்


‘பாப்பா மலர்’ நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த தருணம்... ‘பிரகாஷ் ஸ்டுடியோ’ நிர்வாகத்தினர் புதுப்பாடகிக்கான தேர்வை நடத்திக்கொண்டிருந்தனர். அந்நிறுவனத்தின் பிரதான இசையமைப்பாளராக பெண்டியாலா நாகேஸ்வர ராவ் இருந்தார். அவர் முன்னிலையில் என்னை ஆடிஷன் செய்தனர். ஓர் இந்திப் பாடலைப் பாடிக் காட்டினேன். அவருக்கு என் பாடல் மிகவும் பிடித்துப்போனது; என்னைப் பாராட்டினார். தொடர்ந்து அவர் இசையில் 1951-ம் ஆண்டு ‘பெற்ற தாய்’ படத்தில் ‘எதற்கு அழைத்தாயோ’ பாடல் மூலம் என்னைப் பின்னணிப் பாடகியாக்கினார். அப்போது எனக்கு 16 வயது. தமிழ் கற்றுக்கொள்ளாமல் இருந்தாலும், அப்போதே ‘ழ’கரம் உள்ள அப்பாடலைச் சரியாக உச்சரித்துப் பாடினேன். அதே பாடலைத் தெலுங்கிலும் பாடினேன். அந்தப் பாடலைக் கேட்ட தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ் வர ராவுக்கும் என் குரல் பிடித்துவிட்டது. உடனே அவருடைய ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் என்னைப் பாட வைத்தார். பின்னர் அவருடைய படங்களில் என்னைத் தொடர்ந்து பாட வைத்தார். அப்பாடல்கள் வெற்றி பெற்றுப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.  

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

இப்போதுபோல உங்கள் காலத்தில் நவீன இசைக் கோவைக்கான வாய்ப்புகள் இல்லை. ஒரு பாடல் பதிவுக்கு அந்தக் காலத்தில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

திவ்யா முருகன், காஞ்சிபுரம்


கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களின் உதவியுடன் இசைக்கோப்பு மற்றும் பாடல் ரெக்கார்டிங் செய்வதெல்லாம் அப்போது கிடையாது. சில வாத்தியக் கருவிகள் இருந்தாலும் சரி, பல நூறு வாத்தியக் கருவிகள் இருந்தாலும் சரி... ஒரு பாடலின் தொடக்கம் முதல் இறுதிவரை பிழை இல்லாமல் பாட வேண்டும். ஒரு பெரிய ஹாலில் நடுவில் நின்று, ஆண் மற்றும் பெண் பாடகர்கள் ஜோடிப் பாடல்களை ஒன்றாகவே பாடுவோம். பாடகர்களோ, இசைக்கலைஞர்களோ... யார் சிறு பிழை செய்தாலும், மீண்டும் முதலில் இருந்து எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்ய வேண்டும். இதனால், இசையமைப்பாளர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர் என எல்லோரும் கூட்டு முயற்சி
யுடன் பணியாற்றுவோம். நேர விரயம், செலவு விரயம் ஏற்படக் கூடாது; பிறருக்கு நம்மால் பாதிப்பு ஏற்படக் கூடாது என ஒவ்வொரு கலைஞருமே ஈடுபாட்டுடன் பணிசெய்த பொன்னான காலம் அது. தவிர, அப்போது ரெக்கார்டிங் செய்த பாடல் வரிகளோ, இசையமைப்போ, நடனத்துக்குச் சரியாகப் பொருந்தவில்லையெனில், மீண்டும் முதலில் இருந்து ரெக்கார்டு செய்வோம். இப்படியாக, ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டு அது சினிமாவாக உருப்பெறுவதற்காக நிறையவே உழைப்போம். அதனால்தான் அந்தப் பாடல்கள் அழியாத புகழ் பெற்றிருக்கின்றன.   

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

இன்றைய காலத்தில் நிலைமை அப்படியில்லை. ஜோடிப் பாடலை இரு பாடகர்களும் தனித்தனியே பாடுகிறார்கள். நடுவில் தவறுவந்தால், தனியாக அந்த போர்ஷனைப் பாடி தவறுகளைச் சரிசெய்துகொள்கிறார்கள். தொழில்நுட்பம் இன்றைக்குப் பணிகளை மிக எளிமையாக மாற்றியிருக்கிறது.

இந்தியாவின் முதல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்ற மகிழ்ச்சித் தருணம் பற்றி...

தேவி கணேசன், உசிலம்பட்டி


1969-ம் ஆண்டுதான், திரைப்படத் துறையினருக்கான தேசிய விருதுகளில் முதன்முதலில் பின்னணிப் பாடகர்களும் சேர்க்கப்பட்டனர். அப்படிச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான முதல் தேசிய விருது, ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் ‘நாளை இந்த வேளை’ பாடலுக்காக எனக்குக் கிடைத்தது. தேசிய விருது அறிவிப்பு பற்றி என் கணவர் மூலமாக எனக்குத் தெரிய வந்தது. அப்போது என் மகன் பிறந்து ஐந்தாவது நாள். தாய்மை மகிழ்ச்சியுடன், இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்தத் தருணத்தில்,
ஏவி.எம் செட்டியார் எனக்காகப் பாராட்டு விழாவே நடத்தினார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் பல இசைக்கலைஞர்களும் கலந்துகொண்டனர். டி.எம்.செளந்தரராஜன் நிகழ்ச்சி யின் தொடக்க வாழ்த்துப் பாடலைப் பாடினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என் தோழி லதா மங்கேஷ்கர், என் வீட்டுக்கும் வந்து ஒரு வீணையைப் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார். 

ஒரு நாளில் அதிகபட்சமாக எத்தனை பின்னணிப் பாடல்களைப் பாடியிருப்பீர்கள்? அந்தப் பரபரப்பு நாள்கள் எப்படியிருந்தன?

எஸ்.கலாவதி, துறையூர்


கர்னாடிக், வெஸ்டர்ன், ஃபோக் என எல்லாவிதப் பாடல்களையும் பாடியிருக்கிறேன். சராசரியாக ஒரு நாளில் 4 - 8  பாடல்களைப் பாடியிருக்கிறேன். 1970-களில் ஒருமுறை, நானும் எஸ்.பி.பாலசுப்ர மணியமும் கச்சேரிக்கு அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய சூழல். அதை நாங்கள் இருவரும் நான்கு மாதத்துக்கு முன்பே இசையமைப்பாளர்களிடம் சொல்லி விட்டோம். ஆனால், நாங்கள் அமெரிக்கா கிளம்புவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, அவசர அவசரமாக எங்கள் இருவரையும் பல இசையமைப்பாளர்கள் பாட அழைத்தார்கள். அப்படியான ஒரு நாளில், 18 பாடல்களுக்கும் மேல் பாடினேன். அந்தப் பரபரப்பான நாள்களில், சரியான தூக்கம் இல்லை; சாப்பாடு இல்லை. உடல் சோர்வால் மிகவும் அவதிப்பட்டாலும், எல்லாப் பணிகளையும் துல்லியமாக முடித்துக்கொடுத்தேன். பின்னர் அமெரிக்க கச்சேரியிலும் பாடினேன்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் நீங்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அந்த நினைவுகளைக் கொஞ்சம் மீட்டெடுக்கலாமே?

எம்.ஹேமலதா, சேலம்


60-களில் மெல்லிசைப் புரட்சி ஏற்பட்டது எனச் சொல்லலாம். அப்போதைய இயக்குநர்கள் மிக அற்புதமான சினிமாக்களை எடுத்தார்கள். அந்தப் பல நூறு படங்களுக்கு மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இருவரும் அபாரமாக இசையமைத்தார்கள். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவர்களின் இசைக்குள் ஒன்றிப்போகும். நம்மை அமைதிப்படுத்தும்; மகிழ்ச்சிப்படுத்தும். அவையெல்லாம் காவியங்கள். அவற்றில் நானும் ஓர் அங்கமாக இருந்ததில் ஆனந்தம் கொள்கிறேன். அவர்களின் இசையில் எல்லா வகையான பாடல் களையும் பல ஆயிரங்களில் பாடியிருக்கிறேன். 

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

1952-ம் ஆண்டு, ‘சண்டி ராணி’ படத்துக்காக ஹம்மிங் பாட எம்.எஸ்.வி சார் அழைத்தார். அப்போதிலிருந்து அவருடனான நட்பு தொடர்ந்தது. 1955-ம் ஆண்டு முதல் அவரின் இசையமைப்பில் பிரதான பின்னணிப் பாடகியாகப் பணியாற்றத் தொடங்கினேன். எம்.எஸ்.வி சாரின் தனிப்பட்ட இசையிலும் நூற்றுக்கணக்கான படங்களில் பாடியிருக்கிறேன். எம்.எஸ்.வி சாரை திருப்திப் படுத்துவது மிகக் கடினம். அவருக்குக் கற்பனைத் திறன் அதிகம். பல டேக்குக்குப் பிறகு, அவர் சொல்லிக்
கொடுத்தது போலப் பாடுவோம். பாடலைப் பாடி முடிக்கும் தருணத்தில், ‘கட்’ எனச் சொல்லுவார். உடனே எல்லோரும் வேலையை நிறுத்திவிட்டு அவரைத் திரும்பிப் பார்ப்போம். ‘மெட்டுகளை மாற்றிவிட்டேன். மீண்டும் முதலில் இருந்து  ரெக்கார்டிங்’ என்பார். ரெக்கார்டிங் முடிந்து கேட்கும்போது அந்தப் பாடல் மிக அற்புதமாக உருவாகியிருக்கும். ஒவ்வொரு பாடகருக்கும் பக்கவாத்திய இசைக்கலைஞருக்கும் அவர் சொல்லிக்கொடுக்கும் விதம் தனி அழகு. ஒவ்வொரு கலைஞரை
யும் அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தும்படி செய்துவிடுவார். டி.கே.ராமமூர்த்தி சார் மிகவும் பணிவுடன் செயல்படுவார். சிரமமே தெரியாமல் வேலை வாங்கும் மேதை அவர்.

டி.எம்.செளந்தரராஜன் - பி.சுசீலா இணையின் டூயட் பாடல்களின் வெற்றி சமன் செய்ய முடியாதவை. டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகள்..?

கல்பனா சேகரன், மேட்டூர்


எங்கள் கூட்டணியை முதலில் உருவாக்கியவர், இசையமைப் பாளர் ஆர்.சுதர்சனம். 1954-ல், ‘செல்லப்பிள்ளை’ படத்தில் ‘ஆராரோ ஆராரோ’தான் நாங்கள் இணைந்து பாடிய முதல் பாடல். ‘வெண்கலக்குரலோன்’ என டி.எம்.செளந்தரராஜனைப் பாராட்டுவார்கள். அவர் பாடினால் ரெக்கார்டிங் தியேட்டரே திரும்பிப் பார்க்கும். அப்படி ஒரு தனித்துவமிக்க கம்பீரக் குரலுக்குச் சொந்தக் காரர். நினைத்த நொடியில் உச்ச நோட்ஸுக்கும் அவரது குரலால் எளிதாகச் செல்ல முடியும். ‘தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாம் இப்படிப் பாடிப் பார்க்கலாம்’ என நிறைய ஆலோசனைகள் கொடுப்பார். நானும் அவருக்கு ஆலோசனைகள் கொடுப்பேன். ஓய்வுநேரங்களில் எனக்குப் பிரணாயாமம் (மூச்சுப் பயிற்சி) கற்றுக்கொடுப்பார். அது எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

நாங்கள் இருவரும் பாடியவற்றில், ‘மலர்ந்தும் மலராத’ பாடல் என்றைக்கும் ரசிகர்களின் மனதில் நீங்காதது. அந்தப் பாடல் ரெக்கார்டிங் நேரத்திலேயே அங்கிருந்த பலருக்கும் அழுகை வந்துவிட்டது. இருவரும் போட்டிபோட்டுப் பாடினோம். அது மற்றவர்களுக்குத் தெரியாது. ரெக்கார்டிங் முடிந்ததும், ‘நீங்கள் மிகச் சிறப்பாகப் பாடினீர்கள். அதற்கு நானும் ஈடுகொடுத்தால்தானே அப்பாடல் முழுமை பெறும்’ என நாங்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்வோம். இப்படியே ஆயிரக்கணக்கில் டூயட் பாடல்கள் பாடியிருக்கிறோம். அவர் நன்றாகச் சமைப்பார். எனக்காகத் தன் வீட்டில் இருந்து உணவுகளைச் சமைத்துக்கொண்டு வருவார். நிறைய பயனுள்ள ஆன்மிக விஷயங்களையும் சொல்வார். என் உடன்பிறவாத அன்புச் சகோதரர் அவர்.

உங்கள் குரலை பலரும் ‘தேன்குரல்’ என்பார்கள். குரல்வளத்துக்காக ஏதாவது பயிற்சிகள் எடுப்பீர்களா?

எம்.சசிகலா, கோவில்பட்டி.


என் குரல் கடவுள் கொடுத்த வரம். என்னால் முடிந்த அளவுக்குப் பாடினேன். பிடித்த உணவுகளைச் சாப்பிடுவேன். அவை என் குரல்வளத்தை ஒருபோதும் பாதித்ததில்லை. இயல்பிலேயே நான் பிறரிடம் அதிகம் பேச மாட்டேன். இதனால் ரெக்கார்டிங்கில் பாடுவது மற்றும் பயிற்சி பெறும் நேரம் தவிர என் குரலுக்குப் பெரிதாக வேலைகொடுக்க மாட்டேன். தவிர, குரல்வளத்துக்காக எந்தப் பயிற்சியும் எடுத்ததில்லை.

ரெக்கார்டிங் நேரத்தில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு..?

ரேணுகா அரவிந்த், அரியலூர்


‘தங்கை’ என்ற படத்தில் ‘சுகம் சுகம்... அது துன்பமான இன்பமானது’ என்ற பாடல் இடம்பெறும். அப்பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டபோது, பக்கத்தில் இந்திப் பட ஷூட்டிங்கில் இருந்தார் பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர். அவர் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து அந்தப் பாடல் பதிவைக் கேட்டு ரசித்தார். அந்தப் பாடல் கேசட்டை வாங்கிச் சென்று தன் ரூமில் பல முறை கேட்டு ரசித்திருக்கிறார். அவருக்கு அந்தப் பாடல் ஏதோ ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. உடனே அதிகாலை இரண்டு மணிக்கு என் வீட்டுக்கு வந்து, ஒரு பூங்கொத்துக் கொடுத்துப் பாராட்டிவிட்டுப் போனார். இப்படி ஏராளமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் ரெக்கார்டிங் அறையில் ஏ.சி கிடையாது. சத்தம் வரும் என்பதால் ஃபேனும் போட மாட்டார்கள். நிறைய மாற்றங்களுடன் ஒரு பாடல் பதிவு முடிவதற்குப் பல மணி நேரம் வரைகூட ஆகும். அதற்குள் எல்லோருமே வியர்த்து சோர்ந்துவிடுவோம். சர்வ சாதாரணமாகப் பத்து டேக்குக்கும் மேல் எடுப்போம். ஆனால், ஒருபோதும் வேலையில் சலிப்படைய மாட்டோம்.

‘பாடியதில் மிகவும் பிடித்த பாடல்கள்?’, ‘பாடகி ஆகாவிட்டால் எந்தத் துறைக்குச் சென்றிருப்பீர்கள்?’, ‘குடும்பத்துக்கான நேரத்தை எப்படிச் செலவிட்டீர்கள்?’, ‘ஐவர் கூட்டணியில் உண்டான முரண்பாடுகள்?’, ‘எஸ்.ஜானகியுடனான அன்பு?’, ‘எந்த நடிகைக்கு உங்கள் குரல் பொருத்தமாக இருந்தது?’ - இன்னும் ஏராளமான கேள்விகளும் பதில்களும்...

அடுத்த இதழிலும் இசைக்கிறார் பி.சுசீலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism