Published:Updated:

உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா

உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா
பிரீமியம் ஸ்டோரி
உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா

எனக்குள் நான் ஆர்.வைதேகி, படங்கள் : தி.குமரகுருபரன்

உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா

எனக்குள் நான் ஆர்.வைதேகி, படங்கள் : தி.குமரகுருபரன்

Published:Updated:
உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா
பிரீமியம் ஸ்டோரி
உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா

மையலைக் கடமையாகப் பார்க்கிறவர்கள் மத்தியில் அதை நிஜமான கலையாகப் பார்ப்பவர் செஃப் கவிதா. `மால்குடி' கவிதா என்றால் ஊரறியும்; உலகறியும். ஆண்கள் ஆளும் துறைகளில் அரிதாக மலர்ந்தெழுகிற பெண்கள், அதே வேகத்துடன் அதிக காலம் நீடிப்பதில்லை. விதிவிலக்காக வியக்கவைக்கிறார் கவிதா. பார்ப்பதற்கு ஸ்ட்ரிக்ட்டாகத் தெரிந்தாலும் பழகுவதற்கு ஸ்வீட்டானவர். அறுசுவைகளுடன் அவரின் வாழ்க்கைப் பயணம் பகிர்கிறார்...

கவிதா `செஃப்' ஆனது எப்படி?

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் என் பூர்வீகம். அப்பா ஹைகோர்ட் வக்கீலாகவும் கம்மாபுரம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் முன்னாள் சேர்மனாகவும் இருந்தவர். அம்மா நர்ஸாக இருந்தவர். மூன்று அக்காக்கள், மூன்று தங்கைகள், மூன்று தம்பிகள், நான் எனப் பெரிய குடும்பம். என்.சி.சி-யிலும் ஸ்கவுட்டிலும், விளையாட்டிலும் இருந்த ஆர்வம் எனக்குப் படிப்பதில் இல்லை. விளையாட்டில் ஜெயிக்கும் ஒவ்வொரு முறையும் காவல் துறை அதிகாரிகளின் கைகளால் பரிசு வாங்குவேன்.

அப்பாவைப் பார்க்க நிறைய காவல் துறை அதிகாரிகள் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். காக்கி உடையின்மேல் அப்போதிலிருந்தே ஒரு மயக்கம். `என்னைப் பார்த்து சல்யூட் அடிக்க எத்தனையோ பேர் இருக்கும்போது, உனக்கு எதுக்கு அந்த வேலை?' எனக் காக்கிக் கனவை அப்போதே கசக்கி எறிந்தார். கடலோரக் காவல் படையில் சேர விண்ணப்பித்தேன். அதையும் அப்பா அனுமதிக்கவில்லை.

உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா

கனவுகளைக் கலைத்தாலும்கூட அப்பாதான் என் ஹீரோ. அவரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவருடன் கோர்ட்டுக்குப் போவது, வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களை டைப் செய்வது என எல்லாவற்றிலும் உதவியாக இருந்திருக்கிறேன். ஒரு நண்பர் மூலமாக உள்ளூரில் இயங்கிக்கொண்டிருந்த தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். என்னையும் அறியாமல் எனக்குள் சமையல் கலை வளர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். பெரிய குடும்பம் என்பதால் சமையல் வேலைகளை எல்லோரும் பகிர்ந்து செய்வோம்.  விசேஷ நாள்களில் வீடே திருவிழாக் கோலம் கொள்ளும். அப்படிக் கற்ற சமையல்தான் வேலையில் சேர்ந்தபோது உதவியது.

அந்த நிலையில்தான் என் ஆசிரியர் நடராஜன் மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு பற்றித் தெரியவந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஹோட்டல் நிர்வாகம் படிக்கப்போவதாகச் சொன்னபோதும் குடும்ப கௌரவம், மானம், மரியாதை என ஏதேதோ சொல்லித் தடுத்தார்கள். ஆனாலும், நான் பொருட்படுத்தவில்லை. என் இலக்கை நோக்கிய ஓட்டத்தில் போராட்டங்களுக்குப் பஞ்சமே இல்லை.  ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தேன். ரிப்போர்ட்டிங், மார்க்கெட்டிங் என ஏதேதோ வேலைகள் பார்த்திருக்கிறேன்.

யாருக்குத்தான் இல்லை போராட்டம்? பூமியில் விழுகிற விதை போராடித்தானே முளைக்கிறது. கொக்குக்கு இரையாகப் போகிற மீன்கள் கடலுக்குள் அழுது புலம்பிக்கொண்டா வாழ்கின்றன? நானும் எதிர்ப்புகளைச் சமாளிக்கப் பழகினேன். தடைகளை மீறிப் படித்தேன். படிப்பை முடித்ததும் சென்னையில் `மௌபரீஸ் இன்' ஹோட்டலில் முதல் வேலை. தொடர்ந்து பல ஹோட்டல்களிலும் வேலை பார்த்து அனுபவங்களைச் சேகரித்தேன். வேலை பார்த்த அத்தனை ஹோட்டல்களிலும் நான் மட்டுமே ஒரே பெண்.

அடுத்து சவேரா குழுமத்தில் வேலை வந்தது. சவேரா ஹோட்டலுக்கு வரும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குத் தென்னிந்திய உணவுகள் என்றால் பிடிக்கும். அந்த உணவுகளின் மருத்துவக் குணங்களையும் அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்களின் பாரம்பர்ய உணவுகளையும் சேர்த்துக் கொடுக்கிற வகையில்  `மால்குடி' என்கிற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்தார்கள். அதை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. அதுவரை செஃப் கவிதாவாக மட்டுமே அறியப்பட்ட நான், அன்று முதல் ‘செஃப் மால்குடி கவிதா’வாகப் பிரபலமானேன்.

பிறகு நிறைய பயணங்கள் செய்யவேண்டி வந்தது. வெளியிடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அழைப்புகள் வந்தன.

ரிசர்ச் தொடர்பான வேலைகள் தேடி வந்தன. அதனால் சவேரா குழுமத்திலிருந்து வெளியே வந்தேன். அமெரிக்காவில் `1947 இந்தியன் ரெஸ்டாரன்ட்'டை செட்டப் செய்து கொடுத்து, பயிற்சிகள் கொடுத்துவிட்டு வந்தேன். அந்த ரெஸ்டாரன்ட் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சந்தித்த சவால்கள்... சமாளித்த விதம்?

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் எந்தத் துறையிலும் தமக்குச் சமமாக ஒரு பெண்ணை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இருப்பதில்லை. என் ஆலோசனைகளை அலட்சியம் செய்வார்கள். `நீயெல்லாம் எங்களுக்குக் கத்துக்கொடுக்க வந்துட்டியா?' என்கிற மாதிரி பார்ப்பார்கள். `கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டிங்களுக்குச் சமைச்சுப் போட்டுக்கிட்டு வீட்டுல இருக்கிறதை விட்டுட்டு, இதுங்களுக்கெல்லாம் எதுக்கு ஹோட்டல் வேலை?' என்று என் காதுபடப் பேசியிருக்கிறார்கள்.

`பொம்பிளைங்களால நெருப்புல வெந்து வேலை செய்ய முடியாது...' என்றார்கள். `ஹோட்டல் வேலையெல்லாம் பொம்பிளைங்களுக்குச் சரிப்படாது. பெண்கள் வேற விஷயங்களுக்காகப் படைக்கப்பட்டவங்க. இந்த வேலையில எவனாவது சாப்பாடு வேணும்னு ரூமுக்குக் கூப்பிடுவான். உள்ளே போகும்போது கையைப் புடிச்சு இழுப்பான்' என்று இன்று பிரபலமாக இருக்கும் செஃப் ஒருவர் பகிரங்கமாகப் பேட்டி கொடுத்திருந்தார். அப்போதே நான் அதற்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்திருந்தேன். ஹோட்டல் துறைக்குப் புதிதாகப் பெண்களை வரவிடாமல் செய்வதிலிருந்து, ஏற்கெனவே இருக்கும் பெண்களை மட்டம் தட்டுகிற வேலைகள் வரை என்னென்னவோ நடந்தன.

`கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்குமுன் அவரை நம்ப வேண்டும். செலவு செய்வதற்குமுன் சம்பாதிக்க வேண்டும். சாவதற்குள் வாழ வேண்டும்' என எனக்குள் வைராக்கியம் வைத்துக் கொண்டேன். பாத்திரம் கழுவுவது முதல் சுத்தம் செய்வது வரை எந்த வேலை கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் செய்து காட்டினேன். அவமானப்படுத்தியவர்களையும் அன்பால் வென்றேன்.

திருமண வாழ்க்கை... குடும்பம்?

பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், என் குடும்பமே குட்டி கிராமம் மாதிரி இருந்திருக்கிறது. உறவுகளுக்கும் அன்புக்கும் குறையே இருந்ததில்லை. அவற்றைத் தாண்டி எனக்கென ஒரு குடும்பம் வேண்டும் என யோசிக்கத் தோன்றவில்லை. எல்லாரும் வாழ்ந்து பார்க்கிற வாழ்க்கையை வாழ்வதிலும் விருப்பமில்லை. இந்தத் துறைதான் என் எதிர்காலமெனத்  தீர்மானித்த நொடியே கல்யாணம் வேண்டாம் என்பதையும் முடிவு செய்துவிட்டேன்.  மற்றவர்களுக்கு வாய்க்கு ருசியாகவும் வயிறும் மனமும் நிறையும்படியும் சமைத்துக்கொடுப்பதென்பது சாதாரண காரியமில்லை. அந்தக் கலையே எனக்கு வாழ்க்கையாகி யிருக்கிறது. இப்படியே வாழ்ந்து விட வேண்டுமென்றே விரும்புகிறேன்.

மீ டூ?

`பொம்பிளைங்க வேற விஷயத்துக்காகப் படைக்கப்பட்டவங்க' என்கிற பார்வையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைதானே? மற்றபடி தனிப்பட்ட முறையில்  எனக்கு இப்படி எந்த அனுபவமும் இல்லை. இதைச் சந்தோஷமாகச் சொல்லிக்கொள்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வலி நிறைந்த பகிர்வுகள் வேதனைப்பட வைக்கின்றன.

பெண்களுக்கெதிரான பாலியல் அநீதிகள் அனைத்துமே அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதன் பிரதிபலிப்பே. பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகளே என்கிற பார்வை வர வேண்டும். தொல்லை தருபவர்களுக்குச் சட்டரீதியான தண்டனை பெற்றுத் தருவதற்குப் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் முதலில் தயாராக வேண்டும். 

சாதனைகள்... சந்தோஷங்கள்?

2012 அக்டோபரில் உலக சாதனை செய்தேன். இடைவெளியே இல்லாமல் 35 மணி நேரம் 1,550 உணவு வகைகளைச்  சமைத்துக் காட்டினேன். ஓர் உணவுக்கு நான் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம் 20 நொடிகள். அதன் பின்னால் நான்கரை வருட உழைப்பு இருந்தது.

தென்னிந்தியாவின் பாரம்பர்ய உணவுகளைப் பிரபலப்படுத்துவதே என் நோக்கம். சமையலில் நான் எப்போதும் எந்த ரெடிமேடு மசாலாவையும் உபயோகிப் பதில்லை. பாரம்பர்ய முறைப்படி உடனுக் குடன் ஃப்ரெஷ்ஷாக அரைக்கிற மசாலாவை மட்டுமே பயன்படுத்துவேன்.

சில வருடங்களுக்கு முன் வாஷிங்டனில் அப்படியொரு முயற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்தேன். அடுத்தடுத்து உலகம் முழுவதும் பயணம் செய்து, நம் பாரம்பர்ய உணவுகளின் சிறப்புகளைத் தெரியவைக்கும் திட்டமும் இருக்கிறது. தவிர கலினரி கன்சல்ட்டேஷன், ரெஸ்டாரன்ட் செட்டப் செய்து கொடுப்பது, இண்டோர் - அவுட்டோர் கேட்டரிங் சர்வீஸ், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களை ஒருங்கிணைத்து நடத்துவது போன்றவற்றில் பிஸியாக இருக்கிறேன். அமெரிக்க அழைப்புகள் தொடர்வதால் மறுபடி அங்கே செல்லும் திட்டமும் இருக்கிறது.

இன்று நான் தேர்ந்தெடுத்த துறையில் எனக்கு முழுமையான நிறைவு இருக்கிறது. பணமோ, புகழோ, பெயரோ எவ்வளவு வந்தாலும் திகட்டாது. இன்னும் இன்னும் என எதிர்பார்க்கும். உணவு மட்டும்தான் போதும் என்கிற நிறைவைக் கொடுக்கும். அடுத்த வேளைக்கும் சேர்த்துச் சாப்பிட முடியாது. அப்படியொரு துறையில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செஃப் கவிதா வழங்கும் ஸ்பெஷல் ரெசிப்பி

பீர்க்கன் - முந்திரி - எள் மசாலா கிரேவி

நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த பீர்க்கங்காய் சைவ உணவுப் பிரியர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. இத்துடன் முந்திரி, எள் சேர்த்துச் சமைக்கும்போது அற்புதச் சுவை கிடைக்கும். பீர்க்கங்காயில் ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிடும் தன்மை கொண்டது. இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வேலையையும் செய்கிறது.

தேவையான பொருள்கள்:

 பீர்க்கங்காய் - 3 (மீடியம் சைஸ்)  ஊறவைத்த முந்திரிப்பருப்பு - 100 கிராம்  பெரிய வெங்காயம் - ஒன்று (மீடியம் சைஸ்)  பச்சை மிளகாய் - 2  எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  சீரகம் - அரை டீஸ்பூன்  கடுகு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

எள் மசாலா செய்யத் தேவையானவை:

 எள் - 2 டீஸ்பூன்  கொப்பரைத் துண்டு - சிறிதளவு  அரிசி - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - ஒன்று  தேங்காய்ப்பால் - 50 மில்லி.

உணவு மட்டுமே நிறைவைக் கொடுக்கும்! - `செஃப்' கவிதா

செய்முறை:

பீர்க்கங்காயின் இரு முனைகளையும் வெட்டி, தோல் சீவி, தண்ணீரில் கழுவவும். பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நான்ஸ்டிக் தவாவில் எள் மற்றும் அரிசியை மிதமான சூட்டில் வறுத்து, இத்துடன்  கொப்பரைத் துண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்து இறக்கி ஆறவிடவும். வறுத்த மசாலாப் பொருள்களை மிக்ஸியின் சிறிய ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தேங்காய்ப்பால் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பின் கறிவேப்பிலை சேர்க்கவும். இத்துடன் மஞ்சள்தூள் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். இத்துடன் நறுக்கிய பீர்க்கங்காய், முந்திரி சேர்த்து வதக்கவும். இவை எல்லாம் நன்றாகக் கலக்கும்படி வதக்கி தவாவை மூடி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக விடவும்.

பீர்க்கங்காய், முந்திரி இரண்டும் நன்றாக வெந்து கிரேவி பதத்துக்கு வந்தபின் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் எள் மசாலாவைச் சேர்க்கவும். தீயின் அளவை அதிகப்படுத்தி, கிரேவி திக்காகும் வரை கிளறிவிடவும். பீர்க்கங்காயுடன் மசாலாப் பொருள்கள் நன்றாகக் கலந்த பின் சுவை பார்த்துத் தேவை எனில் மீண்டும் உப்பு சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பீர்க்கன் - முந்திரி - எள் மசாலா கிரேவி ரெடி.

சாதத்தோடு பிசைந்து சாப்பிடவும், ரொட்டிக்கு தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism