Published:Updated:

அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!

அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!
பிரீமியம் ஸ்டோரி
அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள் ஆர்.வைதேகி, படங்கள் : செ.விவேகானந்தன்

அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள் ஆர்.வைதேகி, படங்கள் : செ.விவேகானந்தன்

Published:Updated:
அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!
பிரீமியம் ஸ்டோரி
அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!

‘ஸ்மைலி ஸ்ரீதர்’ என்றழைக்கலாம். மும்பையைச் சேர்ந்த ஃபுட் பிளாகர் கீதா ஸ்ரீதரின் உணவுகளையும் ரெவ்யூக்களையும் போலவே அவரது புன்னகையும் பிரபலம். மும்பைவாசிகளுக்கு இவர் ‘கீதும்மா’. ‘ஃபுட் பேங்க் மும்பை’ மூலம் ஏழைகளின் பசியாற்றுபவர்; புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவாலும் உணர்வாலும் ஆதரவளிப்பவர்; பாலிவுட் பிரபலங்களுக்கு நெருக்கமானவர்; மும்பையிலும் சென்னையிலும் பிரபல ரெஸ்டாரன்ட்டுகளுக்கு மெனு தேர்வு செய்து தருபவர்... இன்னும் இவரைப் பற்றி நிறைய சொல்லலாம்.

‘`இந்தப் பெயர், புகழ், பெருமை எதுவும் எனக்குப் பெரிசில்லை. வயிறும் மனசும் நிறையற மாதிரி அடுத்தவங்களுக்கு சமைச்சுக் கொடுக்கிறதையும் அதன் மூலமா அவங்க அன்பைச் சம்பாதிக்கிறதையும் விடவுமா இவையெல்லாம் பெரிசு?’’ என்கிறார் கீதா. சென்னையின் பிரபல ரெஸ்டாரன்ட்டுகளை ரெவ்யூ செய்வதற்காக மும்பையிலிருந்து வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

‘`பிறந்து வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னையிலதான். எம்.காம், எம்.சி.ஏ படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு மும்பையில செட்டிலானோம். நல்ல சாப்பாட்டுக்கு நான் அடிமை. சாப்பிடப் பிடிச்சதாலேயே சமைக்கவும் பிடிச்சது. என் மகள்கள் குழந்தைகளா இருந்தபோது ஸ்கூலுக்கு கொடுத்தனுப்பற லஞ்ச்சைப் பத்தி மொத்த ஸ்கூலும் பேசும். மற்ற பிள்ளைங்களோட அம்மாக்கள் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டுவாங்க.

அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!

என் கணவரும் மகள்களும் நான் சமைக்கிறதைப் பாராட்டி, ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவாங்க. எல்லா வீடுகளிலும் வாரத்துக்கு ஒருநாளோ, மாசத்துக்கு ஒருநாளோ ஒரு மாறுதலுக்கு வெளியில போய்ச் சாப்பிட நினைப்பாங்க. ஆனா, எங்க வீட்டுல எங்கே போகிறதா இருந்தாலும் வீட்டுச் சாப்பாட்டை மிஸ் பண்ண மாட்டோம். ‘அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது’ங்கிற அவங்களுடைய பாராட்டுதான் இன்னிக்கும் என்னை இயக்கிட்டிருக்கு. வீட்டுக்குள்ளேயே அடிக்கடி விருந்து நடக்கும். வீட்டுக்கு சாப்பிட வர்றவங்களும் ‘நீ செஃப் ஆயிடு’, ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் படி’னு சொல்லத் தவறினதே இல்லை. ஆனா, அதெல்லாம் எனக்கு வொர்க் அவுட் ஆகலை.

என் மகள்கள் படிச்ச ஸ்கூல்லயே கம்ப்யூட்டர் டீச்சரா வேலை பார்த்திட்டிருந் தேன். ஸ்கூல்ல என்ன ஃபங்ஷன்னாலும் ‘ஹோட்டலுக்குக் கொடுக்கிற பணத்தை உங்ககிட்ட தர்றோம். வெரைட்டியா சமைச்
சுக் கொடுங்க’னு  கேட்பாங்க. ஆனா, சாப்பாட்டுக்குக் காசு வாங்கறதுல எப்போதுமே எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. மும்பையில இருந்தாலும் பாரம்பர்ய தென்னிந்திய சாப்பாடுதான் என் ஸ்பெஷாலிட்டி. ஒரு கட்டத்துல ஃபியூஷன் உணவுகளை முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். உதாரணத்துக்கு மும்பையில பாவ் பாஜி ரொம்பப் பிரபலம். பாவ் பாஜின்னாலே உருளைக்கிழங்குதான் பிரதானம். எல்லா வயசுக்காரங்களும் சாப்பிட யோசிப்பாங்கனு உருளைக்கிழங்கே இல்லாம அதே டேஸ்ட்டுல பாவ் பாஜி பண்ணிக் கொடுத்தேன். எல்லாரும் ஆசையா சாப்பிட்டாங்க. அதுக்குக் கிடைச்ச வரவேற்புதான் அடுத்தடுத்து எல்லா உணவுகளையுமே இப்படி ஆரோக்கியமா மாத்திச் சமைக் கிறதுக்கான ஆர்வத்தை அதிகமாக்கினது.

ஃபேஸ்புக்ல நடக்கிற எல்லா சமையல் போட்டிகளிலும் கலந்துக்க ஆரம்பிச்சேன். அதன் தொடர்ச்சியா, மும்பையில நிறைய டி.வி சேனல்களில் கலந்துக்கற வாய்ப்புகள் வந்தன. ‘குட்ஃபுட் சேனல்’, ஜீ டி.வி-யில் ‘கானா கஸானா’, ஸ்டார் பிளஸ்ல ஃபுட் ஷோஸ், செஃப் சஞ்சீவ் கபூரின் யூடியூப் சேனலுக்கான நிகழ்ச்சிகள்னு பயங்கர பிஸியானேன். அப்பதான் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் சீஸன் 4-க்கான அறிவிப்பு வந்தது. அதுல கலந்துக்கிட்ட இருபதாயிரம் பேரில் நான் டாப் ஃபைனலிஸ்ட்டா வந்தேன்.

மாஸ்டர் செஃப்ல எனக்கு டைட்டில் வாங்கிக் கொடுத்த ரெசிப்பி கோதுமை ரவை பிசிபேளாபாத். அதுல கலந்துக்கிட்டவங்க ஒவ்வொருத்தரும் அவங்களுடைய ரெசிப்பிக்களை அலங்கரிச்சு, அழகுப்படுத்தியிருந்த விதமே அவ்வளவு பிரமாண்டமா இருந்தது. ஆனாலும், வீட்டுச் சாம்பார் பொடியை உபயோகிச்சு நான் பண்ணின சிம்பிள் ரெசிப்பிதான் ஜெயிச்சது. அதுதான் என் வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனை. அந்த டைட்டில் ஜெயிச்ச பிறகு நான் உலக அளவுல பிரபலமானேன். மும்பையில இருந்த என்னைச் சென்னைக்குக் கூப்பிட்டுத் தமிழ் சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகள் செய்து தரச் சொன்னாங்க.  இப்போ தமிழ் நேயர்களுக்கும் என் முகம் பரிச்சயம்...’’ - நீண்ட அறிமுகம் சொல்பவர், மாதமொருமுறை மும்பை டு சென்னை விசிட் செய்கிறார். அனைத்தும் உணவு தொடர்பான பயணங்களே!

‘`என் கணவரும் ரெண்டு மகள்களும் பெரிய சப்போர்ட். அவங்க சொல்லித் தான் ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ‘இந்தியன் ஃபுட் எக்ஸ்பிரஸ்’ என்கிற பெயர்ல ஃபுட் பிளாக் ஆரம்பிச்சேன். எங்க வீட்டுல எல்லாரும் காலையில சீக்கிரமே காலேஜுக்கும் வேலைக்கும் கிளம்பறவங்க. மூணு வகையான டப்பாக்களில் சாப்பாடு கட்டித் தருவேன். சாதாரண கேரியர்ல வைக்கிறதையே அப்படியே போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம்ல போட்டுக் கிட்டிருந்தேன். ஒருசில நாள்களிலேயே நானே எதிர்பார்க்காத நேரத்துல 90 ஆயிரம் ஃபாலோயர்ஸ். அது மூலமா என் பிளாக்கும் வளர்ந்தது.  இன்னிக்கு அதுல எனக்கு மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வருது...’’ - பகிரங்கமாக வருமானத்தை அறிவிக்கிறவர், அந்தப் பணம் முழுவதையும் சேவைகளுக்கே செலவிடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமிர்தமே ஆனாலும் உன் சாப்பாட்டுக்கு இணையாகாது!

‘`என் மகளுக்கு முழங்கால் வரைக்கும் நீளமான, அழகான முடி இருக்கும். அதுக்காகவே அவளை ஸ்கூல் நாடகங்களில் நடிக்க வைப்பாங்க. அப்போ அவளுக்கு எட்டு வயசு. திடீர்னு ஒருநாள் முடியை வெட்டிக்கப் போறேன்னு சொன்னதும் எங்களுக்குப் பயங்கர அதிர்ச்சி. முதல்ல விளையாட்டா சொல்றானு நினைச்சோம். அப்புறம்தான் காரணம் தெரிஞ்சது. அவளுடைய கிளாஸ்மேட்டுக்குக் கேன்சர் வந்து, கீமோதெரபியால முடியெல்லாம் கொட்டிப் போச்சு. மத்தப் பிள்ளைங்க கிண்டல் பண்ணினதால அந்தப் பையன் ஸ்கூலுக்குப் போகவே மறுத்து அழுதிட்டிருந்தான். அது தெரிஞ்சதும் என் மகள், தன் முடியையும் ஷேவ் பண்ணிட்டு, ‘நான் இருக்கேன் உன்கூட... இனிமே யார் உன்னைக் கிண்டல் பண்றாங்க’னு பார்ப்போம்னு அவனைக் கூட்டிட்டுப் போயிருக்கா. அந்த மனசுதான் எனக்கான இன்ஸ்பிரேஷன்.

நாலு பேருக்கு நல்லது பண்ணணும்கிற எண்ணம் இருந்தது. ஆனா, எப்படிப் பண்றதுனு தெரியலை. எங்கப்பா உடம்புக்கு முடியாம இறந்துட்டார். அந்த இழப்புலேருந்து என்னால அத்தனை சீக்கிரம் மீள முடியலை. அந்த நிலைமையிலதான் எங்க குடும்ப மருத்துவர் மூலமா கேன்சரால பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் அறிமுகம் கிடைச்சது. இந்தக் குழந்தைகளோடு இணைஞ்ச பிறகு எனக்குள்ளேயும் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். கேன்சரால பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை என் கையால சமைச்சுக் கொடுக்கறேன்.

ஒருமுறை ‘ஷின்சான் புரோகிராம்ல ஷின்சான் பீட்சா சாப்பிட்டு, நல்லாவே இல்லை, கட்டை மாதிரி இருக்கிறதா சொல்றானே... பீட்சான்னா என்ன?’னு அந்தப் பிள்ளைங்க கேட்டாங்க. அந்தக் குழந்தைங்களுக்காகவே நான் வீட்டுல கோதுமையில பீட்சா செய்து கொண்டு போய்க் கொடுத்தேன். தவிர, சென்னையில சினேகா மோகன்தாஸ் கேட்டுக்கிட்டதன் பேர்ல அவங்களுடைய ஃபுட் பேங்க் கான்செப்ட்டை மும்பையில் செய்யறேன். ஃபுட் பேங்க் மூலமா வாரம் ஒருமுறை ஐம்பது பேருக்குச் சமைச்சுக் கொடுத்தனுப்பறேன். பார்வையில்லாத குழந்தைகளுக்குத் தேர்வுகள் எழுதிக் கொடுக்கறேன். பாடம் சொல்லித் தர்றேன். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்குச் சமையல் வகுப்புகள் எடுக்கறேன். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு வேலை செய்யறேன்...’’ - சிரிப்பு மாறாமல் பேசுகிறவர், மும்பை மற்றும் சென்னையில் பிரபல ஃபுட் க்ரிட்டிக். மும்பையில் ஆயிரத்துக்கும் மேலான ரெஸ்டாரன்ட்டுகளையும் சென்னையில் நானூறுக்கும் மேலான ரெஸ்டாரன்ட்டு களையும் ரெவ்யூ செய்திருக்கிறார்.

‘`ஃபுட் பிளாகிங் துறையில இன்னிக்கு  நிறைய போட்டிகளும் பொறாமைகளும் இருக்கு. இன்னிக்கு எக்கச்சக்கமான ஃபுட் பிளாகர்ஸ் வந்துட்டாங்க. அவங்களல பலருக் கும் பால் காய்ச்சக்கூடத் தெரியறதில்லை. நிஜமாவே சமையலைப் பத்தின அறிவும் ஆர்வமும் இருக்கிறவங்கதான் இந்தத் துறைக்கு வரணும்.

அதேபோல ரெஸ்டாரன்ட்டுகளுக்குப் போய் உணவுகளை ரெவ்யூ செய்யறதும் தனி கலை. ஒரு துறையில ஈடுபடறதுக்கு முன்னாடி அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு உள்ளே வாங்க. வந்த பிறகும் கத்துக்கிறதுக்கு நிறைய இருக்கு. தேடல் இருந்தாதான் அந்தத் தெளிவு வரும்...’’  - உணவு வலை நடத்துகிறவர்களுக்குச் சின்ன அறிவுரையுடன் முடிக்கிறார் கீதா.