Published:Updated:

தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா
பிரீமியம் ஸ்டோரி
தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

அவளும் நானும் நானும் அவளும்

தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

அவளும் நானும் நானும் அவளும்

Published:Updated:
தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா
பிரீமியம் ஸ்டோரி
தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

ர் ஆணும் பெண்ணும் பழகறப்போ, இந்தச் சமூகம் ஒரு கேள்வி வெச்சிருக்கு, `உனக்கு அவன் யாரு?’. இந்தக் கேள்விக்கு விடை சொல்லாம யாரும் கடந்து போயிட முடியாது. இது எதுவும் இல்லாம அழகான ஓர் உறவு எப்பவாவதுதான் வாய்க்கும். அப்படி காலம் கொடுத்த ஒரு பரிசுதான் ஜெயகலா.

அது என் பள்ளிப்பருவம். அப்ப எங்க அத்தம்மா (பாட்டி) வெத்தலையைத் தட்டிக்கிட்டே ராஜகுமாரி கதை சொல்லுவா. அத்தம்மா சொல்ற ராஜகுமாரிகளை மறுநாள் பள்ளிக்கூடத்துல நான் பார்ப்பேன். அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். இப்படியே கதை கேட்டு கதை கேட்டு, நானும் ஒரு கதைசொல்லியாகிட்டேன். அப்படியே கவிதை எழுதவும் ஆரம்பிச்சேன். நானும் என் கவிதைகளும் ஒரு வாசகனுக்காகக் காத்துக்கிடந்தப்பத்தான் ஜெயகலாவைச் சந்திச்சேன்.

நாகர்கோவிலுக்கு விடுமுறைக்குப்  போயிருக்கிறப்ப, ஒருநாள் எங்க மதினிப் பொண்ணு பாத்துமுத்து, ஜெயகலாகிட்ட என்னை அறிமுகப்படுத்தினா... `கலா, இது எங்க சின்னத்தா (சித்தப்பா). உன்னை மாதிரியே கவிதையெல்லாம் எழுதுவான்.’

ரெண்டு பேரும் பரஸ்பரம் ஒரு சிரிப்பு. அவ்வளவுதான். அதன் பிறகு நாங்க கவிதைகளைப் பரிமாறிக்கிட்டோம். நாங்க எழுதின எதுவுமே கவிதை இல்லை. ஆனா, எங்களுக்குள்ள கவித்துவமான ஓர் அன்பு உருவாச்சு. அதுமட்டும்தான் அழகான கவிதை.

தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

கலாவுக்கு என்னைவிட மூணு வயசு அதிகம். கொஞ்சநாள் பழகிய பிறகு எல்லாருக்கும் வர்ற கேள்வி எங்களுக்குள்ளேயும் வந்தது. `நான் உனக்கு யாரு... நீ எனக்கு யாரு? ஆண் பெண் உறவை எப்பவுமே வகைப்படுத்திக்கிட்டு இருக்கணுமா? நண்பனா, காதலனா, சகோதரனாத்தான் பழகணுமா? நீ ஜெயகலா, நான் ஷேக் தாவூது. இதுபோதும். எந்தவிதமான கோரிக்கைகளும் எதிர்பார்ப்பும் இல்லாத இந்த அன்புக்கு எந்த அடையாளமும் வேண்டாம்’னு சொன்னேன்.

ஒருநாள்  `நீ எழுதுற கவிதைகளை நான் மட்டும் படிச்சா போதுமா? அது எல்லோருக்கும் போய்ச் சேரட்டும். கவிஞர் ஷேக் தாவூதா உன்னை எல்லாரும் பாராட்டுறதை நான் பார்க்கணும்’னு சொன்னா. அப்பத்தான் ஒரு நண்பர் நான்கு கவிஞர் களின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமா கொண்டுவர்ற திட்டத்தைச்  சொன்னார். `நீங்க பணம் குடுத்தா உங்க கவிதைகளையும் கொண்டுவந்துரலாம்’னு சொன்
னார். இதை நான் கலாகிட்ட சொன்னதும், `எவ்வளவு பணம் கொடுக்கணும்?’னா. நான் ரெண்டு கைகளையும் குவிச்சுவெச்சு `இவ்ளோ பணம்’னு சொன்னேன். `இரு வர்றேன்’னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனவ, ஒரு கைக்குட்டை நிறைய காசு எடுத்துட்டு வந்தா. நாங்க அதைக் கொட்டி எண்ண ஆரம்பிச்சோம். 99 ரூபாய் இருந்தது. அது அவள் நாலணா எட்டணாவா சேர்த்துவெச்சிருந்த காசு. `இந்தா... உன் கவிதைகளைப் புத்தகமா கொண்டுவா’னு சொன்னா. எனக்குக் கண்ணெல்லாம் கலங்கிருச்சு. எழுத்தாளனா எனக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம் அதுதானே?

அந்தப் புத்தகம் வெளியே வரலை. ஆனா, அதுக்குப் பிறகு நாங்க அதீத அன்பானோம். அப்பதான் கலாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. `திருமணம் நம்மளப் பிரிச்சுடும். வரக்கூடிய கணவர் எப்படி இருப்பாரோ?'ன்னு எங்களுக்குள்ள பயம். ஒவ்வொரு மாப்பிள்ளை வந்து பார்த்துட்டு போறப்பவும் எங்களுக்குத் திக்கு திக்குன்னு இருக்கும். எங்கள் அன்புக்கு மத்தியில் ஒரு மாயபூதமா வரப்போற அந்த மனுஷனுக்காக நாங்க காத்திருந்தோம்.

ஒருநாள் செவ்வாய்க்கிழமை மத்தியானம் நான் மீன் குழம்பு வெச்சு சாப்பிட்டுட்டு இருந்தப்ப கலா வந்தா. `கலா சாப்பிடேன்’னு சொல்லி கையில ஓர் உருண்டை சாப்பாட்டை உருட்டி ஒரு மீன் துண்டும் வெச்சுக் கொடுத்தேன். எதுவும் சொல்லாம வாங்கிச் சாப்பிட்டுட்டு `இன்னிக்கு செவ்வாய்க்கிழமை விரதம். நான் வழக்கமா மரக்கறி மட்டும்தான் சாப்பிடுவேன்’னு சொன்னா. `அய்யய்யோ! அப்புறம் எதுக்குச் சாப்பிட்டே?’னு கேட்டேன். `விரதம் முக்கியமா... தாவூது முக்கியமான்னு யோசிச்சுப்பார்த்தேன். தாவூதுதான் முக்கியம்னு என் மனசு சொல்லிச்சு’ன்னு சொன்னா.

அந்த வாரத்துல கலாவை பொண்ணு பார்க்க ஒரு மாப்பிள்ளை வந்தார். பொட்டல்புதூர்ல கிளினிக் வெச்சிருக்கிற முருகன் டாக்டர். எல்லாருக்கும் அவரைப் பிடிச்சுப்போச்சு. எங்களுக்கு மட்டும் அவர் எப்படி இருப்பாரோன்னு ஒரு சந்தேகம்.

பொண்ணு பார்க்கிறப்ப, கலாவும் அவரை சரியா பார்க்கலை. `வந்தாரு, ஒரு சாயா குடுத்தேன். குடிச்சுட்டுப் போயிட்டார். எதுவும் பேசலை'னு சொன்னா கலா. ஒரு மனுஷன் சாயா குடிக்கிறதைவெச்சு அவர் கேரக்டரை ஜட்ஜ் பண்ண முடியாதே? கல்யாணத்துக்குப் பிறகுதான் அவரை முழுசா தெரிஞ்சுக்க முடியும்னு நினைச்சோம்.

`ஒருவேளை திருமணம் நம்ம சந்திப்பை காவு கேட்கலாம். நம்ம அன்புக்குத் தடை சொல்லலாம். எதுவானாலும் ஏத்துக்கணும்'னு நினைச்சோம்.

கலா  திருமணத்துக்கு ஒரு கவிதை எழுதி, அதை ஃப்ரேம் போட்டுக் கொடுத்தேன். திருமணத்துல கலாவோடு பேச முடியலை. கூட்டத்தோடு கூட்டமா போயிட்டு வந்துட்டேன்.

மறுநாள் காலையில தூங்கிட்டு இருக்கிறப்ப கலாவின் குரல் கேட்டுது. கண் விழிச்சுப் பார்த்தா, கலா நின்னுட்டு இருந்தா. `என் வீட்டுக்காரர் என்னென்னமோ பேசினாங்க. நான் உன்னைப் பற்றி மட்டும்தான் பேசினேன்’னு சொன்னா. அப்படியே கண்ணு கலங்கிருச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

அன்று முருகனைச் சந்தித்தோம். `உன்னைப் பற்றி எல்லாம் சொன்னா. எனக்கு இந்தக் கவிதை கிவிதையெல்லாம் தெரியாது. நான் ஒரு டாக்டர். உடம்பு சரியில்லைன்னா மருந்து குடுப்பேன். ஊசி போடுவேன். அவ்வளவுதான்’னார். அவர் ரொம்ப இயல்பா பேசினது, எனக்குப் பிடிச்சிருந்தது.

ரொம்ப நேரம் எதுவும் பேசாம இருந்தவர். `ஆமா... ரெண்டு பேரும் உட்கார்ந்து கலாவுக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு பேசி வெச்சிருந்தீங்களே... நான் அப்படி இருக்கேனா?’னு கேட்டார். சட்டுன்னு மூணு பேரும் சிரிச்சோம். அந்தச் சிரிப்பு எங்களை இன்னும் எளிமையாக்கிடுச்சு.

கலா தனிக்குடித்தனம் போனா. எங்க சந்திப்பு குறைஞ்சது. நான் கவிதைகளை விட்டுட்டு, கதை எழுத ஆரம்பிச்சேன். அப்படியே சென்னைக்கு வந்துட்டேன். அப்பப்ப நாகர்கோவில் போறப்ப ஒருத்தரை ஒருத்தர் விசாரிச்சுக்குவோம்.

ஒருமுறை ஊருக்குப் போயிருக்கிறப்ப `கலாவுக்குக் குழந்தை பொறந்திருக்கு’ன்னு சொன்னாங்க. `பொட்டல்புதூர்ல இருக்கிறாள்’னு சொன்னாங்க. குழந்தையைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு எண்ணம். அட்ரஸ் எதுவும் கிடையாது. `டாக்டர் முருகன்னு சொன்னா, சுத்துப்பட்டி பதினெட்டு கிராமத்துக்கும் தெரியும்’னு முன்னாடி ஒருமுறை கலா சொல்லியிருந்தா. அதை வெச்சுக்கிட்டு பொட்டல்புதூர் போனேன்.
கலாவையும் குழந்தையையும் பார்த்துட்டு திரும்பலாம்னு நினைச்சப்ப, கேஸ் பார்க்கப் போயிருந்த முருகன் டாக்டர் திரும்ப வந்தார். ரொம்ப உற்சாகமா வரவேற்றார். `இரு, இன்னொரு கேஸ் இருக்கு. அதை முடிச்சுட்டு வந்துடுறேன்’னு சொன்னார்.

ஏழு மணிக்குதான் அந்த ஊருக்குக் கடைசி பஸ் வரும். அதுக்குப் பிறகுதான் வந்து சேர்ந்தார். நல்ல விளைமீன் வாங்கிட்டு வந்தார். `இரு, மீன்குழம்பு ஆக்கி சாப்பிட்டுட்டுப் போலாம்’னார்.

சாப்பிட்டு முடிச்சதும் `என்னை திசையன்விளையில கொண்டுபோய் விடுங்க. நாம் அப்படியே திருநெல்வேலி பஸ் புடிச்சுப் போயிடுறேன்’னு சொன்னேன். `நல்லா சொன்னே போ. வந்துட்டு உடனே போவியாக்கும்? அதெல்லாம் தங்கிட்டுப் போகலாம்’னு சொன்னார் முருகன் டாக்டர். பொதுவா எங்க சந்திப்புக்கு மத்தியில அவர் இவ்வளவு பேசுறவர் இல்லை. ரொம்ப அமைதியா இருப்பார். நாங்கதான் அதிகம் பேசுவோம். அன்னிக்கு அவர் என்னை வம்படியா தங்கவெச்சார்.

அந்த வீடு, ஒரு பெரிய ஹால்... ஒரு திண்ணை அந்த அளவுதான் இருக்கும். ராத்திரி எங்க படுக்கிறதுன்னு ஒரு குழப்பம். சாப்பிட்டு முடிச்சதும் ஒரு தம் அடிச்சுட்டு வந்து நான் திண்ணையில விரிச்ச பாய்ல வந்து படுத்துக்கிட்டேன்.

அவரு எங்கிட்ட வந்து `இங்கே கொசு அதிகம் கடிக்கும். நீ உள்ளே படுத்துக்க’னு சொல்லி கட்டாயப்படுத்தி, கட்டில்ல படுக்க வெச்சார்.  கீழ தொட்டில் பக்கத்துல கலா படுத்திருந்தா.

ராத்திரி முழுக்க தூக்கம் இல்லை. காலையில நான் எழுந்துக்கிறதுக்கு முன்னாலேயே அவர் ஒரு கேஸ் பார்க்கிறதுக்காகக் கிளம்பிப் போயிட்டார். நானும் கலாவும் கண்கலங்க அவரைப் பற்றிப் பேசிட்டிருந்தோம். அவர் எங்க மேல வெச்சிருந்த நம்பிக்கையும் எங்க அன்பைப் புரிஞ்சுக்கிட்ட விதமும் அவர் செய்கையில வெளிப்பட்டுது. பின்னாட்கள்ல எனக்கு ரொம்ப நல்ல நேர்மையான உறவுகள் பல வாய்க்கிறதுக்கு இந்த நிகழ்வு ஒரு காரணமா அமைஞ்சது. எண்பதுகள்ல இப்படி ஓர் ஆண் பெண் உறவுக்கான புரிதல் ரொம்ப அபூர்வமானது.

எனக்குத் தூய்மையான அன்பைக் கற்றுக்கொடுத்தவ ஜெயகலா. அதை அழகா அங்கீகரிச்சு அதுக்கு சிறப்பு சேர்த்தவர் முருகன் டாக்டர்!

தூய்மையான அன்பும், அழகான அங்கீகரிப்பும்! - எழுத்தாளர் / இயக்குநர் தாமிரா

நானும் அவளும்

மிடில் கிளாஸ் நம்பிக்கை!

``என் மனைவிதான் `அவள்’ வாசகி. `இதுல என்ன இருக்கு?’னு கேட்டால், `என்ன இல்லை?’னு திரும்பக் கேட்பா. சாதனைப் பெண்கள் பற்றிய பேட்டிகள், கட்டுரைகள், சமையல் குறிப்பு, மருத்துவக் குறிப்புன்னு அவளுக்கு `அவள்’ மூலம் நிறைய கிடைக்குது. பொதுவா பத்திரிகைகள் பொழுதுபோக்குக்கும் புதிய தகவல்களைத் தெரிஞ்சுக்கிறதுக்கும்தான் உதவியா இருக்கும். `அவள்’ மிடில் கிளாஸ் பெண்களுக்கு நிறைய நம்பிக்கையூட்டுறதா இருக்கு.

அப்பப்ப நானும் `அவள்’ வாசிப்பேன். பெண்களுக்கான பத்திரிகைன்னாலும் உணவு, ஆரோக்கியம் சார்ந்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் வருவது ஆரோக்கியமானது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism