வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வேலையைவிட்ட பெண்களின் கவனத்துக்கு...

வேலையைவிட்ட பெண்களின் கவனத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
வேலையைவிட்ட பெண்களின் கவனத்துக்கு...

+2 படித்தவர்களுக்கும் ஐ.டி வேலை! ஞா.சக்திவேல்முருகன், படம் : சொ.பாலசுப்ரமணியன்

``இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்களில் 50 சதவிகிதம் பெண்கள். ஆனால், ஐ.டி வேலையில் சேர்ந்தாலும் திருமணம், குழந்தைப்பேறு உள்பட பல்வேறு காரணங்களால் இடையிலேயே வேலையை விட்டுவிடுகின்றனர். குடும்பப் பொறுப்புகளை ஒரளவு நிறைவேற்றிய பிறகு, மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற கனவு அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும். ஆனால், தொழில்நுட்ப மாற்றங்களால் வேலை கைகூடுவதில்லை. இந்த நிலையை மாற்றியமைக்க, நாங்களே பயிற்சியும் வேலைவாய்ப்பும் வழங்கக் காத்திருக்கிறோம்” என்கிறார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர்.
 
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் அறிமுகப்படுத்தியுள்ள `ஐபிலிவ் (iBelieve)’ திட்டம் குறித்து 500-க்கும் மேற்பட்ட பெண்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தவரிடம், `ஐ.டி நிறுவனங்களில் பெண்களுக்கான மறுவாய்ப்புகள்' குறித்துப் பேசினோம்.

``இப்போது கிராமப்புற மாணவிகள் மிகுந்த அறிவாற்றலோடு ஐ.டி பணியில் சேர்க்கின்றனர். இவர்கள், ஐ.டி நிறுவனங்கள் ஆரம்ப நிலையில் எதிர்பார்க்கும் திறனை வளர்த்துக்கொண்டாலே, சிறந்த பணியாளராக மாறலாம். இதற்கு நானே உதாரணம். 25 வருடங்களுக்கு முன்பு ஐ.டி துறையில் நுழைந்த நான், இன்னமும் இந்தத் துறையிலேயேதான் இருக்கிறேன். குடும்பம், குழந்தைகள் எனப் பொறுப்புகள் கூடினாலும் பெண்களுக்கு ஐ.டி துறையில் சாதிக்க வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

வேலையைவிட்ட பெண்களின் கவனத்துக்கு...

``இரண்டு வருடங்களுக்கு மேல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பணியிலிருந்து விலகியிருந்தாலும் அவர்களை மீண்டும் பயிற்சி வழங்கி ஹெச்.சி.எல் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளராகவே வேலையில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

மாறிவரும் தொழில்நுட்பம் குறித்து அறிந்திருக்க வேண்டும். இப்போதுள்ள எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தாற்போல தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு மீண்டும் வேலையில் சேர வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும்” என்கிறார்.

பயிற்சி காலம் எவ்வளவு? கட்டணம் உண்டா? எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள்?

``மூன்று மாதப் பயிற்சி வழங்குவோம்.  திறன்வாய்ந்தவர்களாக இருந்தால் ஒரு மாதத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்கு ரூ.2.5 லட்சம் கட்டணம். இதற்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்கிறோம். முதல் ஆண்டு சம்பளமாகக் குறைந்தபட்சம் ரூ.3.6 லட்சம் கிடைக்கும். சென்னையிலும் பெங்களூரிலும் பணி செய்யலாம். தொழில்நுட்பப் பணி, தொழில்நுட்ப உதவிப் பணி எனப் பல்வேறு பணிகளுக்கு, திறன் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். பணியிலிருந்து விலகி ஆறு ஆண்டுகளுக்குள் வர வேண்டும்.

http://bit.ly/carrer2 இணையதளத்தில் முழுமையான விவரங்கள் இருக்கின்றன. சென்னை அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள ஹெச்.சி.எல் நிறுவனத்துக்கு வந்து நேர்முகத்தேர்விலும் கலந்துகொள்ளலாம்.”

ப்ளஸ் டூ, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன?

``ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கும், பொறியியல் படித்தவர்களுக்கும் பயிற்சி வழங்கி பணிவாய்ப்பும் கொடுக்கிறோம். ப்ளஸ் டூ முடிப்பவர்களுக்கு, மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்குகிறோம். ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு, இவர்கள் ஐ.டி வேலையில் சேருவார்கள். இதற்கான கட்டணத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுடைய சம்பளத்திலிருந்து மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும். ஆரம்ப ஆண்டுச் சம்பளமாகக் குறைந்தபட்சம் ரூ.2.25 லட்சம் வழங்குகிறோம். மதுரையில் உள்ள ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பயிற்சி பெறுகிற வர்களுக்கு ரூ.50,000 கட்டணம் குறைவு.”

ஐ.டி வேலைகள் நிரந்தரமல்ல என்ற சூழ்நிலையில், பெண்கள் மீண்டும் வேலைக்குச் சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்கிறீர்களே?

``இப்போது எந்த வேலையும் நிரந்தரமல்ல என்பதுதான் நிலை. ஒவ்வொரு பணியிலும் செயல்திறன் அடிப்படையில்தான் வேலை என்றாகிவிட்டது. செயல்திறன் குறைந்தவர்களுக்கு, செயல்திறனை மேம்படுத்து வதற்கு வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்குகிறோம். பணியில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவது எங்களுடைய நிறுவனத்தின் பாலிசி அல்ல!”