வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

அறிவோம் ஆனந்த், ஆ.சாந்தி

ணிக்குச் செல்லும் பெண்களின் முதன்மைச் சவால்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அவற்றைப் பற்றி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் ஒரு நிறுவனத்தில் பெண்களின் பாதுகாப்புக்குக் கடைப்பிடிக்கவேண்டிய சட்ட வரையறைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மூன்று கேள்விகள்.

பணியிடங்களில் பெண்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுகிறதா?

`` `விவசாயக் கூலி,  கட்டட வேலைகள் முதல் ஐ.டி பணிகள்வரை ஊதியம் தருவதில் ஆண் பெண் பாகுபாடு காலங்காலமாக இருக்கிற விஷயம். செய்கிற வேலையின் தன்மையைக் காரணம் காட்டி ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது’’ என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரான உ.வாசுகி.

மனிதவளத் துறையில் பல வருடங்கள் அனுபவமுள்ள புஷ்பா பாக்கியம்,  ``பிரைவேட்டோ, கவர்ன்மென்ட்டோ... வேலையின் இயல்புக்கு ஏற்றவாறுதான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆண் பெண் வித்தியாசம் பார்த்து அல்ல. ஆனால், ஒரே சம்பளம் வாங்கும் இருவரில் ஒருவரிடம் அதிகமான வேலைவாங்குதல் நிறுவனங்களைப் பொறுத்தும் வேலைவாங்கும் அதிகாரிகளைப் பொறுத்தும் மாறுபடலாம். என்றாலும், உழைப்புக்கான ஊதியத்தைப் பெண்களுக்கு நீண்ட நாள்களுக்கு மறுக்கமுடியாது. இன்று, பெரிய பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ முதல் முதல்நிலைப் பணியாளர்கள்வரை ஆண்களைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்களை அலுவலகங்கள் தோறும் பார்க்கிறோம். அது பெண் உழைப்பின் வெற்றிக்கான அங்கீகாரம், சக பெண்களுக்கான நம்பிக்கை சாசனம்’’ என்கிறார் புஷ்பா பாக்கியம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு அலுவலகத்தில் பாலியல் தொல்லையா?

தனியார் நிறுவனம் ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கும் மாயா ராமச்சந்திரன், ‘`பணிக்குச் செல்லும் பெண்கள் தூக்கம் தொலைப்பது, தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்வது, தூக்கம் கெட்டுப்போனதால் காலையில் சிடுசிடுவென இருப்பது, குழந்தைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமல் திணறுவது, சில நேரங்களில் தன் இயலாமையைக் குழந்தைகளின் மீதான கோபமாக வெளிப்படுத்துவது, தலைவலி, உடல்நிலை சரியில்லை என்று சொல்லி அலுவலகத்துக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பது, வழக்கத்துக்கும் அதிகமாக இழுத்துப் போர்த்தினாற்போல ஆடை அணிவது, அலங்காரங்கள் தவிர்ப்பது என்றெல்லாம் நடந்துகொண்டால் அவர் குடும்பத்தினர் அக்கறை எடுக்க வேண்டும். வீட்டில் பிரச்னை ஏதும் இல்லாத சூழலில், அலுவலகத்தில் அவருக்கு ஏதோ சிக்கல் என்பதை வீட்டினர் புரிந்துகொள்ள வேண்டும்; அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.

புகார் அளிப்பது எப்படி?


``பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப் படும் பெண்களுக்கு உதவிசெய்ய ஒவ்வோர் அலுவலகத்திலும் நிறுவப் படும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யில் ஐந்து விசாரணை அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களில் மூவர் பெண்களாக இருப்பார்கள். அந்தக் கமிட்டிக்கென இருக்கும் புகார் மின்னஞ்சல், புகார் பெட்டி, தொலைபேசி எண்கள் ஆகியவற்றின் மூலம் புகார் அளிப்பது மற்றும் கமிட்டி யில் இருக்கும் பெண் அதிகாரிகளைத் தனியே சந்தித்துப் புகாரளிப்பது என விருப்பமான வழியில் தங்கள் புகாரைத் தெரிவிக்கலாம். புகார் கூறிய பெண்ணை அழைத்து விசாரித்த பின், புகார் யார் மீது கூறப்பட்டிருந்தாலும் அவர் உடனே விசாரிக்கப்படுவார். புகார் அளிப்பவர், குற்றம்சாட்டப்பட்டவர் பெயர் எந்த வகையிலும் வெளியில் தெரியாமல் மிக ரகசியமாகவே பிரச்னை அணுகப்படும். இதனால் புகார் கூறப்பட்ட ஆண் தவறு செய்திருந்தால், பெரும்பாலும் அவர் தன் தவற்றை ஒப்புக்கொள்வார். தொடர்ந்து அவர் வேறு கிளை அல்லது டீமுக்கு மாற்றப்படுவார். பிரச்னை பெரிதாக இருந்தால் அவர் சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்’’ என்கிறார் சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி நெல் மேத்யூ.