Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்!

 கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட்  - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்!

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

விக்ரமாதித்தன் அரியணையில் அமரத் தயங்கிய போஜராஜனைப் போலத்தான் நாம் இருக்கிறோம். விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் 32 தங்கச் சிலைகள் படிகளைத் தாங்கி நின்றன. ஒவ்வொன்றும் விக்ரமாதித்தனின் பெருமை களில் ஒன்றைச் சொல்லி, `அந்த நற்குணம் உனக்கிருந்தால் இந்தப் படியில் ஏறலாம்' என்றன. அந்த 32 கல்யாணக் குணங்களும் இருப்பவன்தான் அதன் உச்சியில் அமர லாயக்கு என்பது அதன் அர்த்தம்.

போஜராஜன், விக்ரமாதித்தனின் புகழ் கேட்டு, தான் அந்தச் சிம்மாசனத்தில் அமர லாயக்கற்றவன் என்று முடிவுகட்டி, பின்வாங்கியபோது, அந்தச் சிலைகள் அவனை வணங்கி, `நீ அதற்கு முழுமையாகத் தகுதியானவன்' என்று சொல்லி வழிவிட்டன.

அதேபோல, செல்வநிலை என்கிற சிம்மாசனத்தின்மீது அமர ஆசைப்படும் நமக்கும் அதற்குண்டான லட்சணங்கள் உள்ளனவா என்ற தயக்கமும் பயமும் உள்ளன. பொறுமை, விடாமுயற்சி, சிக்கனம், துணிவு, அறிவு, ஆற்றல் – இவை எந்தவொரு விஷயத்துக்கும் தேவை. இவை நம்மிடம் நிறைய இருந்தாலும், `தவறு செய்துவிடுவோமோ' என்ற தயக்கமும், `வழக்கம்போல அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என்கிற ஒரு சிறிய சோம்பேறித்தனமும் நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றன.

 கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட்  - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்!

மங்கையராய் பிறப்பதற்கே...

ஆண் பெண் இருபாலர்களின் மூளைக் கூறுகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் முதலீடுகளைக் கையாளத் தேவையான  பொறுமையும் விடாமுயற்சியும் பெண்களுக்கே அதிகம் என்கின்றனர். இந்தப் பொறுமை நமக்கு ஸ்டாக் மார்க்கெட் விழும் நேரத்தில் அமைதி காக்க உதவுகிறது. விடாமுயற்சி, ஆராய்ச்சி மனப்பான்மையை அதிகரித்து நல்ல பங்குகளைக் கண்டறிகிறது. அடிக்கடி வாங்கி விற்பது செலவுக்குத்தான் வழிவகுக்குமே அன்றி, வரவை அதிகப் படுத்தாது என்கிற நிதர்சனம் எளிதில் புரிந்துவிடுகிறது.

நமது தயக்கம்கூட பல வேளைகளில் நம்மைத் தவறு செய்யாமல் காக்கும் பாசிட்டிவ் விஷயமாகவே இருக்கிறது. அமெரிக்காவில் ஆண்களைவிடப் பெண்கள் மேனேஜ் செய்யும் `ஹெட்ஜ் ஃபண்டுகள்' அதிக லாபம் சம்பாதிக்கின்றன. காரணம், ஒரு பங்கின் விலை சரசரவென்று உயர்ந்தால் ஆண்கள் பாய்ந்து சென்று அதை வாங்குகிறார்கள். பெண்கள், ஏனிந்த ஏற்றம், யாராவது வேண்டுமென்றே ஏற்றுகிறார்களா என்று தங்கள் இயல்பான ஜாக்கிரதை உணர்வால் உஷாராகிறார்கள். அந்தப் பங்கின் விலை நன்கு குறைந்தால்தான் பெண்கள் வாங்குகிறார்கள். ஆண்கள் தங்கள் முதலீடு பெருகி, பத்தாக, நூறாக வளர்வதை விரும்புகிறார்கள். பெண்கள் அதிலிருந்து வரும் வருமானத்தை அவ்வப்போது எடுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
 
பின்லாந்து நாட்டின் ஸ்டாக் மார்க்கெட்டை 17 வருடங்களாக ஆராய்ந்துவந்த ஆய்வாளர்கள், `ஆண்களைவிட பெண்கள் அதிகமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்; ஆண்களை விடக் குறைவாகவே நஷ்டம் அடைகிறார்கள்' என்கிறார்கள். இத்தனை ஆய்வுகளைப் பற்றி இங்கு பேசுவதன் நோக்கம், நாம் சேமிப்பு எனும் கூண்டிலிருந்து வெளியேறி, முதலீடு எனும் வானில் பறக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட்  - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்!

பயம்... பயம்... பயம்

உலகம் முழுவதுமே பெண்கள் பல விஷயங்களில் பின்வாங்கக் காரணம், பிறரின் கேலி, கிண்டல் நமது மனதை அதிகம் பாதிப்பதுதான்... `இது என்ன, உன் சமையல் போல உப்பு, புளி சமாசாரமா?' என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்பது போன்ற பயம்தான். ஆனால், நாம் அகலக்கால் வைக்கத் தேவையில்லை.

என் தொல்லை தாங்காமல், என் சகோதரி ஒருத்தி வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்தை எடுத்து, மியூச்சுவல் ஃபண்டில் போட்டாள். போன வருடம் மியூச்சுவல் ஃபண்ட் அடைந்த வளர்ச்சி வேகம் உங்களுக்கே தெரியும். அவள் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. இப்போது அவளே நாலு பேரிடம் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிச் சொல்லி உற்சாகப்படுத்துகிறாள்.

ஆங்கிலத்தில் `டெஸ்ட்டிங் தி வாட்டர்' என்பார்கள். அப்படி மெதுமெதுவாக நாம் இந்தக் குளத்தில் இறங்கி நீச்சல் பயில்வது எதிர்காலத்தில் செல்வக்கடலில் நீந்தும் லாகவத்தை நமக்குத் தரும். வாருங்கள், நமக்கும் சிம்மாசனம் காத்திருக்கிறது.

ஒரு பயிற்சி

எது உங்கள் நம்பிக்கைக்குரிய சேமிப்பு?

1. வங்கி எஃப்.டி; 2. அஞ்சலக ஆர்.டி; 3. நகைச் சீட்டு.

இவற்றின் மூலம் என்ன லாபம் கிடைக்கும்? 

ப(ய)ணம் தொடரும்