Published:Updated:

``அவரு வருவாருன்னு காத்துக்கிட்டுக் கெடக்குறேன்” ராமேஸ்வரம் பூமாரியின் தன்னம்பிக்கை வாழ்க்கை!

``பெரிய மனுஷி ஆனதுல இருந்தே எனக்கும் காதலிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருந்துச்சு. இப்புடி காலு வௌங்காதவளை யாரு காதலிப்பா, கட்டிப்பான்னு ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அதுல இருந்தே நான் அந்த ஆசைய மறந்துட்டேன்”

``அவரு வருவாருன்னு காத்துக்கிட்டுக் கெடக்குறேன்” ராமேஸ்வரம் பூமாரியின் தன்னம்பிக்கை வாழ்க்கை!
``அவரு வருவாருன்னு காத்துக்கிட்டுக் கெடக்குறேன்” ராமேஸ்வரம் பூமாரியின் தன்னம்பிக்கை வாழ்க்கை!

``டே பாபு... அந்தா, நம்ம ராமசாமி வத்த கரையப் பாக்க வந்துக்கிட்டு இருக்குடே. போய் மாரியம்மாட்ட சொல்லி கூடைய எடுத்துட்டு வரச் சொல்லு" 

``அதோ, கெழக்கால ராசப்பா மாமாவோட வத்த வந்துடுச்சாம். ஓடிப்போய் அத்தைய இழுத்துட்டு வாடே” 

``ஏ புள்ள சரோசா உன் அண்ணன் வத்த இழுக்குற திணுசப் பாத்தியா. ரொம்பல்லா மெனக்கெடுதாரு. வூட்டுல சத்தான ஆகாரம் எதுவும் ஆக்கிப்போட மாட்டேயா”

``ம்க்கும் ஏன் இம்புட்டு பேசுறியே நீ வந்து ஆக்கிப்போட வேண்டியதுதானே” 

``ம்ம்.. இது என்னடி சோலியாப் போச்சு! நான் உன் அண்ணனுக்கு வந்து ஆக்கிப்போட்டேன்னா அப்பறம் என் புருசன யாருடி பாப்பா”

``எம்மா மயிலு, சூரியன் இப்பத்தான் விடிய ஆரம்பிச்சிருக்குது. இப்போவே என்கிட்ட சீராடாத! காலங்காத்தாலயே உம்பவுச கொட்டாம வத்த கரைக்கு வந்ததும் சட்டுப் புட்டுன்னு வலைய அரிச்சு மீன எடுக்குற வேலையப் பாப்போம்” 

இப்படியான பேச்சுகளோடு, `நீலச்சேலை கட்டிக்கொண்டு சமுத்திரப் பொண்ணு. நெளிஞ்சு நெளிஞ்சுப் பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு. யாரைக்காண துடிக்கிறியோ கரையில நின்னு. ஏலேலோ ஏலேலோ'... எங்கோ தூரத்தில் ஒலிக்கும் இந்தப் பாடலும் காதில் விழ ராமேஸ்வரம் கடற்கரையின் அந்தக் காலைப் பொழுது மிகவும் ரம்மியமாக விடிய ஆரம்பிக்கிறது. 

``நேத்து சாயந்திரம் கடலுக்குப் போனவுக இன்னைக்குக் காத்தாலயே கரைக்குத் திரும்புறதப் பாத்தா என்கென்னமோ நெறைய மீனுங்க கெடைச்சிருக்குன்னுதான் தோணுது. நேத்து மாதிரி மச மசன்னு பொழுத கழிக்காம நம்ம ஆளுங்கள்லாம் வந்ததும் வேக வேகமா மீனுங்கள பிரிச்சு எடுத்துட்டுப் போயிடுங்க மக்கா. காத்தாலயே வீதிக்கு கொண்டு போனாத்தான் நல்லா வியாபாரம் ஆகும்” மணலில் உட்கார்ந்திருந்த பெரியவரின் குரலை யாரும் காது கொடுத்து கேட்டபடியாயில்லை. எல்லோரின் கவனமும் அலையில் மிதந்து வந்துகொண்டிருக்கும் வத்த (படகு) மீதுதான் இருந்தது. அந்த நேரம் கரையின் முன்பாக இருந்த மணல் மேட்டிலிருந்து பெண்கள் கூடையையும், தூக்கில் டீயையும் எடுத்துக் கொண்டுவர, அந்தப் பெண்களில் ஒருவராகத்தான் பூமாரியையும் பார்த்தோம். இரண்டு கைகளையும் முன்னால் வைத்து மண்டியிட்டு சரசரவென அந்தத் தார்ச்சாலையில் தவழ்ந்து வந்தவரைப் பார்த்ததும் திகைப்பு. 

``என்ன தம்பி எங்க பூமாரி ரோட்டுல நடந்து வாரதையே இப்புடி கண்கொட்டாம பாக்குறிய? இந்தா புள்ள மாரி, வெளியூர்க்காரவுகளுக்கு நீ நடந்து வாரதே வித்தியாசமா இருக்கு புள்ள. இன்னும் நீ கடல்ல எறங்குறதப் பாத்தா தல சுத்தி இங்கனயே விழுந்துடுவாக போலவே”. அந்தப் பெரியவர் நக்கலாச் சொல்ல அதைப் பொருட்படுத்தாமல் சேலையை இழுத்து மடியில் சொருகியபடி வலையிலிருந்து மீனை அரிக்கிறார். 

``என்னங்க தம்பி, வெளியூரா. நான் வந்ததுல இருந்தே கண்ணசைக்காம இப்புடிப் பாக்குறிய! என்னடா இவ, ரெண்டு காலையும் ஊனமா வெச்சிக்கிட்டு காலங்காத்தாலயே கடற்கரையப் பாக்க வந்துட்டாளேன்னா. வேற என்னங்க தம்பி பண்ண முடியும். நாலு காசுக்கு ஒழைச்சாத்தானுங்களே வீட்டுல உள்ளவங்க மதிப்பாங்க. அதுமட்டுமல்ல, நான் ஒண்ணும் இன்னிக்கு நேத்து இப்புடி இல்ல. பொறந்ததுல இருந்தே இப்புடித்தானே இருக்கேன். மத்தவங்களுக்கு என்னைப் பாக்கும்போது ஊனமாத் தெரியும். அதேபோலத்தான் எனக்கு மத்தவங்களைப் பாக்குறப்போ அவங்க ஏன் இப்புடி வித்தியாசமா இருக்கிறாங்கன்னு தோணுது. அவ்வளவுதாம்பா. என்னைக்கும் நான் என்ன ஊனமா பாக்குறதே இல்ல தம்பி” என்கிறார் கெத்தாக. வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கையோடு பேசும் பூமாரியின் வாழ்க்கையில் ஒருபோதும் நிம்மதிஇருந்ததில்லை. தினந்தோறும் ஏராளமான சவால்களைக் கடந்துகொண்டுதானிருக்கிறார். ஆனாலும், நம்பிக்கையோடு அடுத்தடுத்த நாள்களை கடந்து போகிறார். 

``நான் பொறந்தது வளந்ததுன்னு எல்லாமே இங்கதான். இந்த மணல் மேட்டுலயும் கடற்கரையிலயும்தான் உருண்டு பொரண்டு வளந்துருக்கேன். எனக்கு ஒரு தங்கச்சி, ரெண்டு தம்பிங்க இருக்கிறாங்க. அவங்க மட்டுமல்லாம, என் கிராமத்துல இருக்கிற எல்லார்கூடயும் வெளியில போவேன்; விளையாடுவேன்; சந்தோஷமா இருப்பேன். ஆனாலும்கூட, அவங்க எல்லாரும் என்னை வித்தியாசமாதான் பாப்பாங்க. அந்தக் கடலம்மாவத் தவிர. அவ மட்டும்தான் என்னை ஊனமா பாத்தது கிடையாது. நான் கடலுக்குள்ள போயிட்டா ஊனம்ங்கிறதையே மறந்திடுவேன். நல்லா நீச்சலடிப்பேன், அலையில உருண்டு புரளுவேன். அந்த அளவுக்கு என்னை அந்தக் கடலம்மாவுக்குப் புடிக்கும். இப்புடி சந்தோஷமாப் போயிட்டு இருந்தப்போதான் என் தங்கச்சிக்கும் தம்பிங்களுக்கும் கல்யாண ஏற்பாடு நடந்துச்சு. ஆனா, அவங்களுக்கு முன்னாடி அக்கா நான் இருக்கிறதால யாரையாச்சும் பாத்து கட்டிக் கொடுத்துடணும்னு முடிவு பண்ணினாங்க. பெரிய மனுஷி ஆனதுல இருந்தே எனக்கும் காதலிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருந்துச்சு. இப்புடி காலு வௌங்காதவளை யாரு காதலிப்பா, கட்டிப்பான்னு ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அதுல இருந்தே நான் அந்த ஆசைய மறந்துட்டேன். ஆனாலும், வீட்டுல விடாம ஒருத்தரை தேடிப்புடிச்சு கட்டி வெச்சாங்க. அவரும் என்னைய நல்லாவே பாத்துக்கிட்டாரு. நானும் அவருக்கு இடைஞ்சலா இருந்ததே கிடையாது. வீட்டு வேலையில இருந்து எல்லா வேலையையும் நானே பாத்துக்கிட்டேன். முதல் பிரசவத்துல ஆம்பளைப் புள்ள பொறந்துச்சு. பொறக்கப்போற புள்ள எங்க நம்மள மாதிரி பொறந்துடுமோன்னு நினைச்சு தவியா தவிச்சேன். ஆனா, யாரு செஞ்ச புண்ணியமோ அது நல்லபடியா பொறந்துச்சு. `நம்புசரண்'னு பேரு வெச்சு அழகு பாத்தோம். அவன் பால்குடியக்கூட மறக்கல. திடீர்னு என் வீட்டுக்காரரு என்னைய விட்டுட்டுப் போயிட்டாரு தம்பி” என்றவர் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கண்களிலிருந்து தாரைத்தாரையாய் நீர் வழிகிறது. சிறிது நேரம் அலைகளையே வெறித்துப் பார்த்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். 
 

``வீட்டுக்காரரு இருந்தப்போ ஒண்ணும் தெரியல. அவரு போனதுக்கு அப்புறம்தான் வாழ்க்கையே இருட்டுன மாதிரி ஆகிடுச்சு. ஏன்னா, இப்போ நான் மட்டும் கிடையாது. என்னை நம்பி ஒரு பிள்ளையும் வந்துடுச்சு. ரெண்டு உசுர தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரேன்னு பொலம்புனேன். கொஞ்சம்கொஞ்சமா எம்மனச சமாதானம் பண்ணிக்கிட்டு மகனுக்காகவே வாழ்க்கைய நகர்த்த ஆரம்பிச்சேன். அப்போதான் ஒருநாள் திடீர்ணு வந்தாரு. என்னை மன்னிச்சிடுன்னு கெஞ்சினாரு. அவர் மேல கோபம் இருந்தாலும் என்னை மாதிரி ஒருத்திய விட்டுட்டுப் போனாலும் திரும்பத் தேடி வந்துட்டாரேன்னு நினைச்சு ஏத்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் அஷ்வினும் சுஷ்மிதாவும் பொறந்துச்சுங்க. மூணு பிள்ளைகளாகிடுச்சு. அவருக்கு மட்டுமே கஷ்டத்தக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சு நானும் மீனு அரிச்சு சம்பாதிச்சேன். அந்த மனுசன் மனசுல என்ன நினைச்சாரோ தெரியல. திரும்பவும் என்னை விட்டுட்டுப் போயிட்டாரு. கொஞ்ச நாள்ல அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம், `உம் புருஷன் வேற ஒருத்திய கட்டிக்கிட்டானாம்'னு சொன்னாங்க. மனசு கெடந்து துடிச்சுது. ஆனாலும், இனி என்ன பண்ண முடியும் மூணு புள்ளைங்கள வளத்தாகணுமேன்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு இல்லன்னாலும் என்னைக்காவது எம்புருஷன் என்கிட்ட திரும்பி வந்துடுவார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவர் வருவார்னு நான் காத்துக்கிட்டே இருப்பேன். எம்மனசுல உள்ளதை எல்லாம் அவர்கிட்ட சொல்ல ஏங்கிட்டு இருக்கேன்” வழியும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டவர் ``சரிங்க தம்பி நேரம் ஆகிடுச்சு. போய் புள்ளைங்களுக்குச் சோறு ஆக்கணும். நான் வர்றேன்” என்றபடியே அங்கிருந்து நகர்கிறார். 

இப்போது அந்தக் கடற்கரை நன்றாக விடிந்திருந்தது. பூமாரி நகர்ந்து செல்லும் மணல் மேட்டிலும் வெளிச்சம் பரவி இருந்தது.