Published:Updated:

அழகு - அவசியமான சிகிச்சைகள்

அழகு - அவசியமான சிகிச்சைகள்
பிரீமியம் ஸ்டோரி
அழகு - அவசியமான சிகிச்சைகள்

காஸ்மெட்டாலஜியாழ் ஸ்ரீதேவி

அழகு - அவசியமான சிகிச்சைகள்

காஸ்மெட்டாலஜியாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
அழகு - அவசியமான சிகிச்சைகள்
பிரீமியம் ஸ்டோரி
அழகு - அவசியமான சிகிச்சைகள்

ணமகனும் மணமகளும் திருமணத் தேதி முடிவான நாள் முதல்,  ‘அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும்?’ என்று நண்பர்களிடமும் உறவினர்களிடமும் ஆலோசனைகள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். திருமணத்துக்கான அழகுக் குறிப்புகளை இணையத்தில் தேடித் தேடிக் களைத்துப் போவார்கள்.  திருமண நாளில் மட்டுமின்றி திருமணத்துக்குப் பின்னரும் தங்களுடைய அழகைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இதற்காக உணவு, உடற்பயிற்சி, ஹேர் ஸ்டைல், டிரஸ்ஸிங் ஸ்டைல் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு செய்தாலும், தங்களுடைய கனவு நனவாகி விட்டதற்கான திருப்தி அவர்களுக்குக் கிடைத்திருக்காது!  

அழகு - அவசியமான சிகிச்சைகள்

ஏனெனில், பரபரப்பான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால் சருமப் பிரச்னைகள், முடி கொட்டுதல் ஆகிய தொந்தரவுகளையும் சந்திக்கின்றனர். இப்பிரச்னைகளைச் சரி செய்ய இன்ஸ்டன்ட் வழிகளைவிட்டு நிரந்தரத்தீர்வுக்கு முயற்சி செய்வதே சரியாக இருக்கும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாக மிளிரவைக்கும் ‘காஸ்மெட்டாலஜி’ சிகிச்சைகள் குறித்து சரும சிகிச்சை நிபுணர் ஷண்முகப்பிரியாவிடம் பேசினோம்...

“திருமண வயதை அடைந்த   பலரும் ‘மணமேடையில் அழகாக ஜொலிக்க வேண்டும்’ என்றே ஆசைப்படுகிறார்கள்.   இதற்காக டெர்மட்டாலஜிஸ்ட் அல்லது காஸ்மெட்டாலஜிஸ்ட்டை அணுகுவதே சிறந்தது. இதுபோன்ற சிகிச்சைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தேவைப்படும்.  திருமணத்துக்கு எவ்வளவு மாதங்கள் இருக்கின்றன என்பதன் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

காஸ்மெடிக் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க, குறிப்பிட்ட சிட்டிங்ஸ் சிகிச்சை எடுக்கவேண்டியது அவசியம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, மருத்துவர்கள் ஒரு வருடம் வரைகூட காஸ்மெடிக் சிகிச்சைகள் செய்துகொள்ளப் பரிந்துரைப்பார்கள். அப்போதுதான்  எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைய முடியும்.

மணமகன், மணமகள் என இருவருக்குமே காஸ்மெடிக் சிகிச்சைகள் உள்ளன. எதிர்பார்ப்பு, காஸ்மெடிக் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு இருக்கும் கால அவகாசம், செலவழிக்க முடியும் தொகை, சருமத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆலோசனை வழங்கி சிகிச்சை தருகிறோம்.

இந்த சிகிச்சைகள் சிலவற்றில் பக்க விளைவுகள் ஏற்படலாம். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், பக்க விளைவுகளே இல்லாத சிகிச்சைகளே மருத்துவத்தில் இல்லை. பக்க விளைவுகள் ஏற்பட்டால் அவற்றைச் சரி செய்து, வேறு சிகிச்சை அளிப்போம்.

ஒரு சிலர் திருமணத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ‘நான் அழகாக ஆக வேண்டும்’ என்று கூறி எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். முகத்தின் கருமை நிறம் மாற அப்படியெல்லாம் அவசரமாக ஒரு ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது. காஸ்மெட்டிக் சிகிச்சைகள் செய்து கொள்வதென்று முடிவு செய்து விட்டால் அதற்கான கால அவகாசத்தை அளிக்க வேண்டியது அவசியம்” என்பவர், பொதுவான சிகிச்சை முறைகளைப் பற்றி விளக்குகிறார்...

பீல்ஸ் ட்ரீட்மெண்ட்

திருமணத்துக்குத் தயாரானதும் உங்களை எல்லாக் கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் போட்டோக்களைப் பார்த்தால் முகத்தில் எங்கெங்கே பிரச்னைகள் இருக்கின்றன, எதைச் சரி செய்ய வேண்டும் என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். பெரும்பாலானோர் முகமும் கழுத்தும் அழகாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

அதிகளவு முகப்பருக்கள் இருந்தால் காஸ்மெடிக் சிகிச்சையில் சரி செய்துவிட முடியும். இந்த சிகிச்சையில் உள்ளுக்குள் சாப்பிடுவதற்கான மாத்திரைகளும் சருமத்தின்மீது தடவுவதற்கான மருந்துகளும் கொடுப்போம். முகப்பருக்களைச் சரிசெய்ய நிறைய பீல்ஸ் ட்ரீட்மென்ட் உள்ளன. அதில் முக்கியமானது ‘சாலிசலிக் ஆசிட் பீல் ட்ரீட்மென்ட்’ (Salicylic acid peel treatment). இது முகப்பருக்களைக் குறைக்கும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை நான்கு சிட்டிங் சிகிச்சை செய்துகொண்டால் முகப்பருக்கள் முழுமையாகக் குறைந்துவிடும். ஆனால், முகப்பருக்களால் முகத்தில் தழும்புகள் மிஞ்சும். இதை அகற்றி, முகத்தைப் பளிச்சென்று மாற்ற ‘கிளைக்காலிக் ஆசிட்’ (Glycolic acid) பீல்ஸ் சிகிச்சை செய்யலாம். இதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வீதம் ஐந்து சிட்டிங் எடுத்துக் கொள்ளலாம். பீல்ஸ் சிகிச்சையில் ஒருவகையான ஃபுரூட் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தின் தன்மை மற்றும் சிகிச்சைக்கேற்ப பீல்ஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

சருமப் பராமரிப்புக்கு...

திருமணத்துக்குத் தயாராகும் ஆணும் பெண்ணும் சருமப் பராமரிப்புக்கு சத்துள்ள பழங்களை நிறைய சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எளிய உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சிகள் செய்வதும் முக்கியம். 

அழகு - அவசியமான சிகிச்சைகள்

சன்ஸ்கிரீன் க்ரீம்களைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். கோடைக்காலத்தில் வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக ‘சன் புரோடக்டிவ் ஃபேக்டர்’ (Sun protection factor)  50 ப்ளஸ் கொண்ட சன்ஸ்கிரீன் போட வேண்டும். வெயில் காலங்களில் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சன்ஸ்கிரீன் தடவுவதோடு, ‘மாய்ஸ்சரைசர்’ பயன்படுத்துவதும் நல்லது. மேக்கப் போட்டிருந்தால் இரவில் முகம் கழுவிவிட்டு மாய்ஸ்சரைசர் போட்டுகொண்டு தூங்க வேண்டும்.

கருவளையம்

இப்போதைய சூழலில் சிறுவயதிலேயே கண்களைச் சுற்றிக் கருவளையம் உண்டாகிறது. திருமணத்தின்போதுதான் பலரும் இதுபற்றி யோசிக்கின்றனர். பொதுவாகக் கோபம், தூக்கமின்மை, இரவில் அதிக நேரம் அலைபேசியைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கருவளையம் உண்டாகும். கருவளை யத்துக்கும் கெமிக்கல் பீல்ஸ்தான் சரியான சிகிச்சை முறை. முதலில், கருமை குறைவதற்கான க்ரீம்களையே பரிந்துரைப்போம். கிளைக்கலிக் பீல்ஸைக் கண்களைச் சுற்றிலும் கவனமாகத் தடவ வேண்டும். இந்தப் பிரச்னைக்குச் சரும நிபுணரின் பரிந்துரைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், சிகிச்சை இல்லாமல் கருவளையம் முழுமையாகப் போகும்படியாக மேக்கப் போட முடியாது. எனவே, திருமணத்துக்கு முன்பே கருவளையத்தைச் சரிசெய்ய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

முகப்பருத் தழும்பு

முகம் முழுவதும் முகப்பரு உள்ள அளவுக்குத் தழும்புகளும் இருக்கும். இதைச் சரிசெய்ய காஸ்மெடிக் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சையின் மூலமாக, முகத்தில் மிருதுவான தன்மையைக் கொண்டுவர முடியும். இதற்கு, இருவகையான சிகிச்சைகள் உள்ளன. ஒன்று, ‘மைக்ரோ நீடிலிங்’ (Micro needling), ‘டெர்மா ரோலர்’ (Derma roller). இதில் குட்டிக் குட்டி ஊசிகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். இதை முகத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் தழும்புகளை அகற்றமுடியும்.

இப்படி செய்யும்போது வலி ஏற்படாமல் இருப்பதற்கு க்ரீம் உபயோகப்படுத்துவோம் என்பதால், பயப்படத் தேவையில்லை. இந்த சிகிச்சையின்போது கொஞ்சம் ரத்தம் வருவது போல இருக்கும். ஆனால், சருமத்தின் மேல்பகுதியை சமப்படுத்தி தழும்புகளை மறையச் செய்யும். இந்த சிகிச்சைக்கும் ஐந்து முதல் ஆறு சிட்டிங் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுவார இடைவெளியில்தான் இந்த சிகிச்சையைச் செய்ய முடியும். மைக்ரோ நீடில் சிகிச்சையில் தழும்புகள் மறைவதுடன் முகத்துக்கும் பளபளப்பு கிடைக்கும்.

மைக்ரோ நீடிலிங் சிகிச்சையில் ரத்தக் கசிவு இருப்பதால், இயல்புநிலைக்கு வர இரண்டு மூன்று நாள்கள் ஆகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருப்பதற்கான மாத்திரைகள் கொடுப்போம்.

முடி கொட்டுதல்

முடி கொட்டுவது நிறையப் பேருக்கு ஏற்படக்கூடிய பொதுவான பிரச்னைதான். திருமணத்தன்று தலையில் கொஞ்சம் அடர்த்தியாக முடி இருக்க வேண்டும். அப்போதுதான் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் செய்துகொள்ள முடியும். கூடுதலாக ‘விக்’ எதுவும் வைத்துக் கொள்ளாமல் சொந்த முடியில் அழகாகத் தெரிய நினைப்பவர்களுக்கு முடி கொட்டும் பிரச்னையை சரி செய்வதற்கான சிகிச்சை உள்ளது. சிறிய அளவிலான ஊசியே இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. முடியின் வேரில் இறங்குவதுபோல ஊசி போடப்படும். அதிக வலி இருக்காது. இந்த சிகிச்சை முடி கொட்டுவதைக் குறைக்கும். புதிதாக முடி வளர்வதை அதிகரிக்கும்.

புரோட்டீன், ‘பாலிபெப்டைட்’ (Polypeptide) போன்ற மருந்துகள் ஊசியின் மூலமாக முடியின் வேர்களில் செலுத்தப்படுகின்றன. இதை வாரத்துக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளலாம். லேசர் லைட் சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நல்லது. வைட்டமின் மாத்திரைகள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த உதவும்.

முகம் பொலிவுபெற...

ஒரேமுறை முகம் முழுக்க காஸ்மீலான் பீல் (Cosmelan peel) க்ரீமை தடவிவிடுவோம். அவர்களின் கையில் ஒரு பாட்டில் க்ரீமும் கொடுப்போம். இது பசை போல முகத்தில் இருக்கும். 12 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். 12 மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இந்த சிகிச்சைக்குப் பின் முகத்தில் லேசாகத் தோலுரிந்து கொண்டே இருக்கும்.  இது இரண்டு வாரங்களுக்குத் தொடரும். பின்னர் முகத்தில் சின்னக் கறுப்புக் கூட இல்லாமல் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் இரவில் மூன்று மாதங்களுக்குக் க்ரீம் தடவ வேண்டும். நாம் எதிர்பார்க்காத அளவுக்கு முகம் பளிச்சென்று ஆகிவிடும். திருமணத்துக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே இந்த சிகிச்சை செய்துவிட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் முகம் பொலிவு குறையாமல் இருக்க காஸ்மீலான் பீல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சையில் எந்தப் பக்க விளைவும் இல்லை.

லேசர் சிகிச்சை

முகப்பரு தழும்புகள் இருந்தால் ‘பிராக்‌ஷனல் சி.ஓ.டூ லேசர் சிகிச்சை’ (Fractional  CO2 laser treatment) செய்யலாம். இதை மாதத்துக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். கொஞ்சம் வலி இருக்கும். இரண்டு நாள்களுக்கு முகம் சிவப்பாகத் தோன்றும், பின்னர் குறைந்துவிடும். தழும்புகள் மற்றும் முகத்தில் சின்னச் சின்ன சுருக்கங்கள் இருந்தால், அவை நீங்கிவிடும். வெயிலால் சருமம் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அதையும் சரிசெய்யும்.

மூக்கு, காது குத்தல்

மூக்கு குத்திக் கொள்ள சில பெண்கள் ஆசைப்படுவார்கள். அல்லது புகுந்த வீட்டில் இது ஒரு சடங்காகவும் இருக்கலாம். காதில் பக்கவாட்டில் கூடுதலாகக் குத்திக் கொள்ள ஆசைப்படலாம். நிறையத் தங்கம் அணிய விரும்பியும் பெண்களும் இது போல குத்திக் கொள்வது உண்டு.

சிலர் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தொப்புளின் மேல்ப்பகுதியில் கூட அணிகலன் போட்டுக் கொள்கின்றனர். விரும்பினால் தொப்புளிலும் தங்கம் போடலாம்.

பொதுவாக, குறிப்பிட்ட இடத்தில் மரத்துப் போவதற்கான க்ரீம் தடவி விட்டுவிட்டு ஊசியால் குத்தி விடுவோம்.

கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆகலாம்!

கையில் அதிக கொழுப்பு இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட டிசைன் டிரஸ் போட முடியவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. கையிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க ஊசி போட்டுக் கொள்ளலாம். உடலில் எங்கெல்லாம் தேவையற்ற கொழுப்பு உள்ளதோ அங்கெல்லாம் ஊசி போட்டுக் கொழுப்பைக் கரைக்கலாம். கொழுப்பைக் கரைப்பதற்கான ஒரு வகை லேசர் சிகிச்சையும் உள்ளது. இது கொஞ்சம் செலவு பிடிக்கும். உடலுக்கான வெப்ப நிலையை மாற்றியும் கொழுப்பைக் கரைக்க முடியும்.

உடல் முழுக்க நிறத்தைக்கூட்ட...

உடல் முழுக்க நிறத்தை அதிகமாக்க சிலர் விரும்பலாம். இதற்கு குளூட்டோத் தையோன், வைட்டமின் சி மருந்துகள், மாத்திரைகள் கொடுப்போம். நரம்பிலும் ஊசி மருந்தாகச் செலுத்துவோம். இந்த ஊசியை மருத்துவரிடம் மட்டும்தான் போட்டுக் கொள்ள வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை என்ற அளவில் 10 வாரங்கள் வரை போட்டுக் கொள்ளலாம். இரண்டு, மூன்று மாதங்களில் உடலில் மாற்றம் தெரிய தொடங்கும். முழு உடலும் பளபளப்பாகும். ஆறு மாதங்களுக்கு இந்தப் பளபளப்பு நீடிக்கும். மீண்டும் தேவையானால் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். குளூட்டோத்தையோன் முழு உடலுக்குமான அழகை மிளிரச் செய்கிறது.

டாட்டூ

கணவன் அல்லது மனைவியின் பெயரை டாட்டூவாகப் போட்டுக் கொள்ள சிலர் விரும்புவார்கள். விரும்பும் வண்ணத்தில் கையில் அல்லது கழுத்துப் பகுதியில் எனத் தேவையான இடத்தில் டாட்டூவாகப் போட்டுக் கொள்ளலாம். மிகச் சிலரே உடலில் டாட்டூ வரைந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பிரைடல் பேக்கேஜ்


திருமணத்துக்கு முன் ஆண் பெண் இருவருமே மொத்த பேக்கேஜ்ஜாக ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ தேவையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளலாம். தேவை, எதிர்பார்ப்பு, செலவழிக்கும் திறன் அடிப்படையில் இதை முடிவு செய்யுங்கள். டெர்மட்டாலஜி, காஸ்மெட்டாலஜி மருத்துவர்கள் உங்களது தேவையைப் பூர்த்தி செய்வார்கள்.