Published:Updated:

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்
பிரீமியம் ஸ்டோரி
பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

பளபளப்புஆ.சாந்தி கணேஷ் - படங்கள்: தி.குமரகுருபரன்

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

பளபளப்புஆ.சாந்தி கணேஷ் - படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
பட்டு! - பரவசமூட்டும் வகைகள்
பிரீமியம் ஸ்டோரி
பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

ந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பிரத்யேக பட்டுப்புடவைகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அந்தப் பட்டு வகைகளின் சிறப்புகளைப் பற்றிச் சொல்கிறார், கோ-ஆப்டெக்ஸின் உற்பத்திப் பிரிவு பொதுமேலாளர் ஆர்.வாசு.

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

காஞ்சிப்பட்டு

‘`பட்டென்றாலே காஞ்சிப்பட்டும் அதன் மென்மையும்தான் நம் நினைவுக்கு வரும். தன்னை உடுத்திக்கொண்ட பெண்களுக்கு அழகு, கம்பீரம் இரண்டையும் தருவதில் இந்தப் பட்டுக்கு ஈடு இணையில்லை. மற்ற பட்டுப் புடவைகளைவிட காஞ்சிப்பட்டு ஏன் கனமாக இருக்கிறது? நான்கு இழைகள் கொண்டு நெய்யப்படுவதே இதன் வலிமையின் ரகசியம். 100 சதவிகித மல்பெரி பட்டில், வெள்ளிச் சரிகையில் தங்க முலாம் போடப்படுவதால், காஞ்சிப்பட்டு மற்ற பட்டுப் புடவைகளைவிட விலை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. இந்தப் பட்டின் இன்னொரு சிறப்பு, பெட்னி இழுத்தல். அதாவது, புடவையின் உடல்பகுதியையும் முந்தானையையும் கோத்து இணைப்பது. இரண்டு பேர் சேர்ந்துதான் இதைச் செய்ய முடியும். யானை, யாளி, அன்னம், மயில், துத்திப்பூ, மல்லி மொக்கு, வங்கி, நெளி, இரட்டை நெளி, தாழம்பூ ரேக், கோயில் சிற்ப உருவங்கள் என்று டிசைன்களிலும் காஞ்சிப்பட்டுதான் எவர்கிரீன் அழகி!

ஆரணிப்பட்டு

இரட்டை இழை, எடை குறைவு, மெல்லிய பார்டர், கொட்டடி (கால் இன்ச்சுக்கு சின்னச் சின்னதாகக் கட்டம் போட்டிருப்பது), மெல்லிய கோடுகள், 8 அல்லது 9 கஜம் என வசீகரிக்கும் ஆரணிப்பட்டு சீனியர் பெண்களுக்கு மரியாதையான தோற்றத்தைக் கொடுக்கும் பட்டுப்புடவை!

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

சேலம் மற்றும் ராசிபுரம் பட்டு

இந்த இரண்டு பட்டு வகைகளுமே கல்யாணப் பெண்ணுக்குச் சீராகவும், தாலி நூல் பிரித்துக் கோக்கும்போதும் அளிக்கப்படுபவை. இரண்டு அல்லது மூன்று இழைகளால் நெய்யப்பட்ட இந்தப் புடவைகளில் வெள்ளிச் சரிகை, தங்க முலாம் போன்ற காஸ்ட்லியான விஷயங்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஒரிஜினல் பட்டின் மென்மைக்காகவே கொண்டாடப்படுபவை இந்தப் பட்டு வகைகள்.

திருபுவனம் பட்டு

காஞ்சிப்பட்டு போலவே இதுவும் திருமணங்களில் மணமகள் உடுத்துகிற பட்டுதான். மூன்று இழை, உடல் பகுதியின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் முந்தானை, உடல் பகுதியின் நூலையும், முந்தானைப் பகுதியின் நூலையும் கண்களுக்குப் புலப்படாத ஓவர் லேப்பிங் மூலம் இணைப்பது, புடவையை விசிறி  மடிப்பாக மடிப்பது, வெள்ளி ஜரி என்று காஞ்சிப்பட்டுக்கு டஃப் ஃபைட் கொடுப்பவை திருபுவனம் பட்டு வகைகள்! 

பனாரசி பட்டு

பிறந்தது உத்தரப்பிரதேசத்தில். தங்க ஜரி, தங்க முலாம் போட்ட வெள்ளி ஜரி, வெறும் வெள்ளி ஜரி என்று பார்க்கும்போதே மனதைக் கொள்ளைகொள்பவை பனாரசி பட்டுப் புடவைகள். புடவையின் உடல் முழுக்க  மலர்ந்த பூக்களும்  நிமிர்ந்த இலைகளுமாக பெண்மைக்கு அழகு சேர்க்கும் பட்டுப்புடவை வகைகள் இவை!

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

உப்படா ஜம்தானி

ஆந்திராதான் உப்படாவின் பிறந்த வீடு. ஜம்தானி என்பது வங்காளத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்து உப்படா பட்டில் இணைந்துகொண்ட  வேலைப்பாடு. வெள்ளி மற்றும் தங்க ஜரி, சுத்தமான பட்டு, காஞ்சிப்பட்டைப் போலவே கைகளால் நெய்யப்படுவது, மூன்று நெசவாளர்கள் சேர்ந்து நெய்வது என இதன் சிறப்புகளைச் சொல்லலாம். அப்படி மூன்று பேர் சேர்ந்தாலும் ஒரு புடவையை நெய்வதற்குக் குறைந்தது பத்து நாள்கள் தேவைப்படும், அகலமான ஃப்ளோரல் பேட்டர்ன் என உப்படாவின் பெருமைகள் இந்தப் புடவைகளைப் போலவே மிகவும் வசீகரமானவை.

போச்சம்பள்ளி

இப்போதைய தெலங்கானாதான் போச்சம்பள்ளியின் சொந்த ஊர். புடவையில் எந்தெந்த இடங்களில் டிசைன்ஸ் வர வேண்டுமோ அந்தப் பகுதியை மட்டும் நூலால் இறுக்கக் கட்டி மெழுகால் மூடிவிட்டு, மற்ற இடங்களில் மட்டும் சாயம் ஏற்றுவார்கள். மிகவும் கடினமான பணி இது. சாயம் போடுவதன் மூலமே ஜியோமிதி டிசைன்களை உருவாக்குவது இந்தப் புடவை வகைகளின் சிறப்பம்சம்!

இக்காட்

இக்காட் பட்டு ஒரிசாவில் பிறந்தது. பட்டோலா என்றும் அழைப்பார்கள். நீளவாக்கில் பட்டும், அகலவாக்கில் காட்டனும் சேர்த்து நெசவு செய்வார்கள். இந்தப் புடவையிலும் டிசைன்கள் வர வேண்டிய இடங்களில் நூலை இறுகக் கட்டிவிட்டு, மற்ற இடங்களில் சாயம் ஏற்றுவார்கள்.

பட்டு! - பரவசமூட்டும் வகைகள்

பைத்தானி

மகாராஷ்டிரா பெண், இந்த பைத்தானி பட்டு.  பார்டர்களைத் தங்க ஜரியிலேயே உருவாக்குகிறார்கள். புடவையின் உடலில் கிளிகள், மரங்கள், கொடிகள் என்று நெய்பவர்களே டிசைன்களை உருவாக்குவார்கள். அனுபவம் அதிகமுள்ள திறமையான  நெசவாளர்களால்தான் இப்படி நெய்ய முடியும். அதனாலேயே பைத்தானி பட்டு கைகள் கொஞ்சம் காஸ்ட்லி!

சந்தேரி சில்க்

மத்தியப்பிரதேசத்தில் பிறந்தது சந்தேரி. வெயில் காலத்திலும் உடுத்திக்கொள்ளலாம். காரணம், சந்தேரியைப் பட்டில் மாத்திரமல்ல, பருத்தி சேர்த்தும் நெய்வார்கள். டெம்பிள் டிசைன்ஸ் இந்தப் பட்டு வகைகளின் ஸ்பெஷல்!

கோசா பட்டு

இந்தப் பட்டு சட்டீஸ்கரில் உருவானது. கோசா என்றால், பட்டுப்புழுக்கூடு என்று அர்த்தம். மற்ற பட்டுப்புடவைகளைப் பொறுத்தவரை, பட்டுப்புழுக்களை வளர்த்து அதிலிருந்து பட்டு நூலை அறுவடை செய்து புடவை நெய்வார்கள். கோசா பட்டுக்கோ, காட்டில் வாழ்கிற பட்டுப்புழுக்களின் கூடுகளைச் சேகரித்து அதிலிருந்து பட்டு நூலை எடுத்து, புடவை நெய்வார்கள். அதனால் கோசா பட்டுகள் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருக்கின்றன. வெள்ளி ஜரி அல்லது தங்க ஜரியுடன் ஜியோமிதி டிசைன்ஸ் உருவாக்கப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது இந்தக் கோசா பட்டு.

பாலுச்சாரி பட்டு

வங்காளத்தில் பிறந்தது இந்தப் பட்டு. முந்தானையில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் காட்சிகள் நெய்யப்பட்டிருக்கின்றன. ஜரியெல்லாம் தங்கம்தான். அதனால், அந்தக் காலத்தில் ஜமீன்தார் வீட்டுப் பெண்கள் மட்டுமே பாலுச்சாரி பட்டுப்புடவைகளைக் கட்டுவார்களாம்!’’

பெண்களுக்குத் திகட்டுமா பட்டுக் கதைகள்!