Published:Updated:

காதலை ஏற்பதற்கு முன் பெண் இவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்? - உளவியல் வழிகாட்டல்!

காதலை ஏற்பதற்கு முன் பெண் இவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்? - உளவியல் வழிகாட்டல்!
காதலை ஏற்பதற்கு முன் பெண் இவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்? - உளவியல் வழிகாட்டல்!

னதுக்குப் பிடித்த பெண்ணிடம் ஐ லவ் யூ சொல்வதற்கு, `இதயம்' முரளி போல இன்று எந்த ஆணும் தயங்கிக்கொண்டே இருப்பதில்லை. பூங்கொத்து, சாக்லேட், குறுந்தகவல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்று ஏதோ ஒரு வழியில், தங்கள் காதலை மனதுக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்லிவிடுகிறார்கள். அப்படி, ஒரு  ஆண் காதலைச் சொன்னால், அவனுடைய காதலை ஏற்றுக்கொள்வதற்கு முன்னால்  பெண் எவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்...இதோ சைக்காட்ரிஸ்ட் அசோகன் உளவியல் டிப்ஸ் தருகிறார். 

*ஒரு ஆண், தன்னுடைய காதலை உங்களிடம் சொல்லும்போதே, உங்கள் மனது  முழுமையாக சந்தோஷப்படுகிறதா என்று ஒரு நிமிடம் அதை உற்றுக் கவனியுங்கள். மனது சந்தோஷப்பட்டால், ஓகே சொல்லிவிடுங்கள். அதற்குப் பதில், உங்கள் புத்தி `இவனைவிட பெட்டர் சாய்ஸ் மறுபடியும் கிடைக்குமான்னு தெரியலை. ஒத்துக்கோ' என்பதுபோல உங்கள் மனதை கன்வின்ஸ் செய்ய முயன்றால், சம்மதம் சொல்வதை தள்ளிப் போடுங்கள்.  

* காதல் என்பது ஒரு இடத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது. திருமணம் என்பது ஒரு புதுப் பயணத்தை ஆரம்பிப்பது. வேடிக்கைப் பார்க்கும்போது உட்காரலாம் அல்லது நின்றுகூட விடலாம். திருமணப் பயணத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே இருவருக்கும் தெரியாது. ஆனால், பயணத்தை நிறுத்த முடியாது. காதலிக்கும்போது, அதாவது, நின்று கொண்டிருக்கும்போது எல்லாமே சந்தோஷமாக இருக்கும். பயணம் செய்ய ஆரம்பித்த பின்புதான் அனுபவங்கள், பிரச்னைகள் எல்லாம் வர ஆரம்பிக்கும். சந்தோஷங்களுடன் உங்களுக்கான கடமைகள் என்னவென்று தெரிய ஆரம்பிக்கும். அந்தக் கடமைகளில் எல்லாம் எந்தளவுக்கு என்னால் இந்த ஆண் கூட பயணம் செய்ய முடியும்; இவனால் என்கூட எவ்வளவு தூரத்துக்கு வர முடியும் என்று யோசித்து முடிவெடுங்கள்.  

* உங்களுடைய கலாசாரம், உணவு, எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போவாரா?  5 வருடங்கள், 10 வருடங்கள், 15 வருடங்கள் கழித்து இவர் எப்படி இருப்பார்? இந்தக் கால காதலில் இந்த 2 கேள்விகளுக்கும் ஓரளவுக்குத் திருப்தியான பதில் கிடைத்தால் நல்லது.  

* இந்த ஆணுக்கு என்னைப் பிடிப்பதற்கு காரணம் வயதா; உடல் ஈர்ப்பா? எனக்கும் அவன் உடல்தான் ஈர்க்கிறதா... இந்தக் கேள்விகளுக்கான பதில் `யெஸ்' என்றால், அதன் பெயர் காதல் இல்லை. 

* பிறந்த வீட்டு உறவுகளுடனே  சில சமயம் ஒன்றிபோக முடியவில்லை. சண்டை வந்துவிடுகிறது. திருமணத்தின் மூலமாக வருகிற புது உறவுகளுடன் ஒத்துப்போக முடியுமா? பிரச்னை வருமா? வந்தால் இவன் துணை நிற்பானா? என்னால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும். அதே நேரம் ரொம்பவும் முன்னெச்சரிக்கையாகவும் இல்லாமல், யதார்த்தமான சந்தேகங்களாக இருக்க வேண்டும்.  

* ஆங்கிலத்தில் ஃபேர் வெதர் என்று சொல்வார்கள். அதாவது, பருவநிலை நன்றாக இருக்கும்வரை வாழ்வது சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரிப் பிரச்னை இல்லாமல் இருக்கிற வரை வாழ்க்கை சுகமாக இருக்கும். பிரச்னை வந்தால் ஒருவருக்கொருவர் தாங்கிப்பிடிக்கிற தூணாக இருக்க வேண்டும். உங்களிடம் காதல் சொல்கிற ஆணும் சரி, நீங்களும் சரி, அப்படி ஒருவரையொருவர் தாங்கிக் கொள்வீர்களா என்று யோசித்துவிட்டு சம்மதம் சொல்லுங்கள். 

* திருமணத்துக்குப் பிறகு ஒரு அறைக்குள் வாழப்போகிற அந்தரங்க வாழ்க்கையும் இருக்கிறது. அந்தப் பகிர்தலுக்கு உங்கள் மனம் சம்மதிக்கிறதா என்பதையும் தெரிந்துகொண்ட பிறகு சம்மதம் சொல்வதே நல்லது.

* காதலில் அட்ராக்‌ஷன் இருப்பதால் அங்கே பெரிய எதிர்பார்ப்பு இருப்பதில்லை. ஆனால், திருமணத்துக்குப் பிறகு பரஸ்பரம் எதிர்பார்ப்புகள் வந்தே தீரும். அந்த நேரத்தில் பரஸ்பரம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு, உறவில் கணக்குப்போடுதல் ஆகியவை அந்த நபரிடம் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

* தெரியாத ஆளைவிடத் தெரிந்தவன் பாதுகாப்பு என்று காதலுக்கு ஓகே சொல்லாதீர்கள். திருமணத்துக்குப் பிறகு நீங்கள் நீங்களாகவோ, காதலன் காதலனாகவே இருக்கப் போவதில்லை. சம்பவங்கள் மனிதர்களை மாற்றும். அதனால், காதல் சொல்கிற ஆணின் அடிப்படைக் குணங்கள் நன்றாக இருக்கின்றனவா என்று பாருங்கள். குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறானா, சின்னச் சின்ன சென்டிமென்ட்ஸ் வைத்திருக்கிறானா, நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறதா என்றால் சம்மதம் சொல்லலாம். `இப்படித்தான் வாழ்வேன்;, `இதெல்லாம் இருந்தாதான் வாழ்வேன்' என்பது மாதிரியான வெறித்தனமான லட்சியங்கள் கொண்டிருந்தால், சற்று யோசித்து முடிவெடுங்கள். 

* ஆண்களில் ஒரு வகையினர் இருக்கிறார்கள். ஒரு நல்ல இயல்பிலும் பெஸ்ட்டாக இருப்பார்கள். இன்னொரு கெட்ட இயல்பிலும்  பெஸ்ட்டாக இருப்பார்கள். மேதாவியாக இருப்பான். ஆனால், மனிதர்களை நேசிக்கத் தெரியாதவனாக இருப்பான். இதில் பலனில்லை. கஞ்சமாகவும் இல்லாமல், செலவாளியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். டீக்கடையிலும் டீ குடிப்பான் ஸ்டார் ஹோட்டலிலும் காபி குடிப்பான். ஸ்கூலில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தவனைவிடச் சராசரி மார்க் எடுத்து, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் என்று வலம் வந்தவனாக இருந்தால் நல்லது. போராட்டம், சந்தோஷம், சென்டிமென்ட்ஸ், நிம்மதி என்று வாழ்க்கை பலதரப்பட்ட அனுபவங்களைக் கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட ஆணுடன் நம்பி உங்கள் திருமணப் பயணத்தை ஆரம்பிக்கலாம். ஆல் தி பெஸ்ட்!