Published:Updated:

வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்

வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்

எதிர்க்குரல்

வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்

எதிர்க்குரல்

Published:Updated:
வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்

ப்போது பள்ளிக்கூடம் முடியும் எனக் காத்துக்கொண்டிருப்பார். முடிந்தவுடன் அவசரமாக வீட்டுக்கு ஓடுவார் ரொமிலா. சில நிமிடங்களில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியில் ஓடுவார். பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பித்துவிடக் கூடாது அல்லவா? கடவுள் மீதோ, வழிபாடு மீதோ உள்ள ஆர்வம் என்பதைவிட, காந்தியைக் காண வேண்டும் என்னும் துடிப்பே ரொமிலாவுக்கு மிகுதியாக இருந்தது. தேசியவாத அலை நாடு முழுக்க ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. புனேயில் உள்ள புனிதமேரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் ரொமிலா. காந்தி அவ்வப்போது அடைபட்டுக் கிடந்த எரவாடா சிறையும் அதே புனேயில் தான் இருந்தது. சிறை புகாத நேரங்களில் காந்தி, கூட்டங்கள் நடத்துவது வாடிக்கை.

ரொமிலாவின் தந்தை தயா ராம் தாப்பர், காந்திக்கோ, இந்திய விடுதலைக்கோ எதிரானவர் அல்லர் என்றாலும், தன் மகள் வெளிப்படையாக `காந்தி, காந்தி' எனத் திரிந்துகொண்டிருந்தது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. `நான் பிரிட்டிஷ் அரசின் ராணுவ மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது என் மகள் அரசை எதிர்க்கும் ஒரு தலைவரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?' அதேநேரம், `இனி காந்தியைப் பார்க்கப்போகாதே!' எனக் கட்டளையிடவும் அவருக்குத் தயக்கம். எனவே, நிதானமாகவும் நட்பாகவும் உரையாடிப் பார்த்தார்.

``காந்தி நல்லவர்தான். நீயும் நல்ல பெண்தான். ஆனால், பிரிட்டிஷ் அரசுக்கு அவர் விரோதி அல்லவா? உன்னை யாராவது அடையாளம் கண்டு புகார் கொடுத்துவிட்டால் என்னவாகும் என யோசித்தாயா?''

``பயப்படாதீர்கள் அப்பா. எனக்கு ஒன்றும் ஆகாது'' என்றார் ரொமிலா.

``உனக்கு ஒன்றும் ஆகாது என்று எனக்கும் தெரியும். நான் கவலைப்படுவது என்னைப் பற்றி'' என்றார் அப்பா.

ரொமிலா அப்பாவை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தார். ``இவ்வளவு பெரிய ஆள், உங்களை யார் என்ன செய்துவிட முடியும்? சும்மா பயப்படாதீர்கள் அப்பா!''

அன்றைய தினம் ரொமிலாவுக்கு இன்னொரு முக்கியமான பணியும் இருந்தது. கிளம்புவதற்குள் மறக்காமல் காந்தியிடம் கையெழுத்து வாங்கிவிட வேண்டும். `இதோ பார் காந்திஜியின் கையெழுத்து' என்று நாளை பள்ளியில் சென்று தோழிகளிடம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.ஆனால், ஐந்து ரூபாய் கொடுத்தால்தான் காந்தியை நெருங்க முடியும். ஐந்து ரூபாய் என்பது அப்போது பெரிய தொகை. எப்படியோ அப்பாவை நச்சரித்து வாங்கி வந்துவிட்டார் ரொமிலா. இதோ அடுத்து அவர் முறை. பணத்தைச் செலுத்திவிட்டு ஆல்பத்தை எடுத்து காந்தியிடம் நீட்டினார் ரொமிலா. அவரை ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டுக் கையொப்பம் இட்டுக் கொடுத்தார் காந்தி. ``ஆ, சாதித்துவிட்டேன்'' என்று வெற்றிப் புன்னகையோடு ரொமிலா திரும்பி நடக்கத் தொடங்கியபோது, காந்தி ரொமிலாவின் குர்தாவைப் பிடித்து நிறுத்தினார்.

வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்

``இதென்ன பட்டுத் துணியா?''

`ஆமாம்' என்று தலையசைத்தார் ரொமிலா.

``இனி ஒருபோதும் பட்டாடை உடுத்தாதே. காதி அணிந்துகொள்.''

பிறகென்ன... ``அப்பா, இனி இதையெல்லாம் நான் தொடவே மாட்டேன். இப்போதே எனக்கு கதர் வாங்கிக்கொடு!'' - மகளின் கதறலை அடக்க, அப்பா மீண்டும் இணங்கிப்போக வேண்டியிருந்தது.

30 நவம்பர், 1931 அன்று பிறந்த ரொமிலா தாப்பருக்கு, இன்று வயது 87. அதே மன உறுதி. குறையாத துடிதுடிப்பு. தீ எனத் தெரிந்த பிறகும் தொட்டு விளையாடத் துடிக்கும் அதே குழந்தைத்தனமான துணிச்சல். பத்மபூஷண் விருது இருமுறை அவரை நாடி வந்தது. இருமுறையும் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. `என்னுடைய பணிசார்ந்த அமைப்புகளிலிருந்தும் கல்விக்கூடங்களிலிருந்தும் அளிக்கப்படும் விருதுகளை மட்டுமே நான் ஏற்றுக்கொள் வேன். அரசு அளிக்கும் விருது எனக்குத் தேவைப்படாது. மன்னிக்கவும்' என்று எழுதி யனுப்பிவிட்டார் தாப்பர்.

லண்டனுக்குச் செல்ல வேண் டும், வரலாறு கற்க வேண்டும் என்று ரொமிலா கோரியபோது அப்பா இரு வாய்ப்புகளை அவருக்கு வழங்கினார். ``உன் எதிர்காலத்துக்காகத்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். நீ திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா அல்லது படிக்கப் போகிறாயா என்பதை முடிவெடுத்துக்கொள்!'' ரொமிலா திருமணத்தை ஒதுக்கிவைத்து விட்டு லண்டனைத் தேர்ந் தெடுத்தார். அதற்குப் பிறகு நடந்தது, வரலாறு!

வரலாற்றைத் தன் கரங்களில் ரொமிலா தாப்பர் ஏந்திக்கொண்ட பிறகு, இந்திய வரலாறு எழுதப்படும் முறையும் கற்பிக்கப்படும் முறையும் கற்கும் முறையும் முற்றிலுமாக மாறிப் போயின. பண்டைய இந்திய வரலாறு மீது கவனம் செலுத்தி அவர் ஆராய முற்பட்டபோது, அந்தத் துறை தூசு படிந்த, சிதைந்த கட்டடம்போல் கவனிப்பாரற்று கிடந்தது. ஒருபக்கம் இதிகாசங்களும் புராணக் கதைகளும் `வரலாறு' என்னும் பெயரில் வலம்வந்துகொண் டிருந்தன. இன்னொரு பக்கம், ஆய்வு என்று சொல்லிக்கொண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்ததையும் தெரியாததையும் எழுதிக் குவித்துவைத்திருந்தார்கள். இந்தியாவுக்கு வரலாறு என்ற ஒன்றே கிடையாது என்னும் முடிவுக்கு ஒருவர் வந்துசேர்ந்திருந்தார். பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாக இருண்டு கிடந்த இந்தியாவுக்கு ஒளி பாய்ச்சியது பிரிட்டன்தான் என்று இன்னோர் ஆய்வாளர் கண்டுபிடித்திருந்தார். `வேதங்களில் இருந்துதான் இந்தியாவின் வரலாறு தொடங்குகிறது' என்றார் வேறொருவர். இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா, பிரிட்டிஷ் இந்தியா. அவ்வளவுதான் இந்திய வரலாறு என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டார் மற்றொருவர்.

யார் இவர்கள்? சிலர் வரலாற்றாசிரியர்கள். ஆனால், அவர் களுக்கு இந்தியா கறுப்பா, சிவப்பா என்றுகூடத் தெரியாது. பலர் இந்தியாவை நேரடியாகவே அறிந்துவைத்திருந்தனர். ஆனால், அவர்கள் வரலாற்றா சிரியர்கள் அல்லர். கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக அதிகாரிகளாகவும் குமாஸ்தாக்களாகவும் வணிகர்களாகவும் அவர்கள் இங்கே நியமிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் இந்தியாவை வெறுமனே சுற்றிப்பார்க்க வந்தவர்கள் மட்டுமே. இவர்கள் போக, கிறிஸ்தவ பாதிரியார்களும் தங்களுக்குத் தெரிந்த வரலாற்றை எழுதிவைத்துவிட்டுச் சென்றார்கள். இந்தப் பதிவுகளைத்தான் `இந்திய வரலாறு' என்னும் பெயரில் உலகமே படித்துக்கொண்டிருந்தது. இந்தியர்களும்கூட இதையெல்லாம்தான் வரலாறு என நினைத்து பயபக்தியோடு கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருந்தார்கள்.

இவர்கள் உருவாக்கிய இந்திய வரலாறு எப்படி இருந்தது? `இந்தியா என்பது அழுக்கு படிந்த, சூடான நிலம். அது ஒரு விநோத பூமி. ஐரோப்பாவைப்போல அமெரிக்காவைப்போல அந்த நாட்டைப் புரிந்துகொள்ள முடியாது. இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு என்று ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடந்த காலம் என்பது மாயை. மரணம் என்று ஒன்று கிடையாது. இறந்தவர்கள் அனைவரும் மறுபிறவி எடுத்துவிடுகிறார்கள். கடந்த காலமே இல்லை என்பதால், வரலாறும் இல்லை. மகாராஜாக்களும் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும் புழங்கும் நாடு அது. இந்தியர்கள் எல்லோரும் ஆன்மிகவாதிகள். அவர்களுக்கு தவம் செய்யத் தெரியும், மாந்திரிகம் தெரியும். இந்து மதம்தான் அவர்கள் வாழ்க்கைமுறை. இந்து மதம்தான் அவர்கள் தத்துவம். வேதமும் உபநிஷதமும் கீதையும் தெரிந்தால் இந்தியத் தத்துவமும் சட்டமும் புரிந்துவிடும். இந்தியர்களைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், அவர்களுடைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் புரிந்துகொண்டால் போதும். அவ்வளவுதான் இந்தியா...'

`மன்னிக்கவும். இதெல்லாம் தவறான புரிதல்கள், பிழையான பார்வைகள். வரலாறு என்பது வேறு' என்று சில இந்திய வரலாற்றாசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டுப் புரியவைக்க முயல்கின்றனர். ரொமிலா தாப்பர், தன்னை அவர்களுடன் இணைத்துக்கொண்டார். இது வெறுமனே பணி மட்டுமல்ல, வாழ்நாள் போராட்டம் என்பதை ரொமிலா தாப்பர் விரைவில் புரிந்துகொண்டார். இந்திய வரலாற்றை நேர் செய்ய வேண்டுமானால் அடிப்படைகளிலிருந்து தொடங்கியாக வேண்டும். அடிப்படைக் கட்டுமானத்தைப் பலப்படுத்தினால்தான் அதற்கு மேல் புதிய வரலாற்றைக் கட்டியெழுப்ப முடியும். இந்தப் புரிதலோடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தன்னுடைய ஆய்வைத் தொடங்கினார் தாப்பர். முதலில் இந்தியாவின் பழங்காலத்தை உள்ளது உள்ளவாறே மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும். இந்தியா என்றால் என்னவென்பதை உலகுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்குமேகூட வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டியிருக்கிறது. தன்னுடைய நிதானமான, ஆழமான ஆய்வுகள் மூலம் மெள்ள மெள்ள வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டார் தாப்பர்.

அசோகரும் மௌரியப் பேரரசின் வீழ்ச்சியும் குறித்த அவருடைய ஆய்வுநூல் 1961-ம் ஆண்டு வெளிவந்தது. இந்திய வரலாறு குறித்த தட்டையான கண்ணோட்டத்தை உடைத்து நொறுக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்தது. வரலாறு அற்ற சமூகம் என்று இகழப்பட்ட இந்தியாவின் சமூக வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் பொருளாதாரப் பின்னணியையும் மீட்டெடுத்து அழகுற அறிமுகப்படுத்தினார் தாப்பர். அசோகரின் இந்தியாவில் வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும், வெவ்வேறு சிந்தனையோட்டம்கொண்ட மக்கள் வசித்தனர். அசோகரின் பௌத்த தம்மம் இந்த வேறுபாடுகளை ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றிருந்தது என்று தன் நூலில் அவர் நிறுவினார். அசோகரின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும் அவர் ஆட்சியைக் கைப்பற்றியது குறித்தும் நம்மிடம் தகவல்கள் உள்ளனவா... அசோகரின் நிர்வாகம் எப்படி இருந்தது...அவர் எவ்வாறு தம்மத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தினார்... எவ்வாறு சமூக ஒழுங்கை அவர் நிலைநிறுத்தினார்... அசோகரின் மறைவுக்குப் பிறகு மௌரிய அரசு உடைய ஆரம்பித்தது ஏன்? இத்தகைய கேள்விகளுக்கு தாப்பர் அளித்த விடைகளைவிடவும் அவற்றை வந்தடைய அவர் கையாண்ட ஆய்வு முறை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

``விடைகள் அல்ல, கேள்விகளே எனக்கு முக்கியம்'' என்கிறார் ரொமிலா தாப்பர். புதிய கேள்விகளோடு புதிய விளக்கங்களும் அவரிடமிருந்து வந்தன. ``இனி, `இந்திய வரலாறு' என்று சொல்லாதீர்கள், `இந்திய வரலாறுகள்' என்று சொல்லுங்கள். கலாசாரம் அல்ல, கலாசாரங்கள். நம்பிக்கையல்ல, நம்பிக்கைகள். கடவுள் அல்ல, கடவுளர்கள். சமூகம் அல்ல, சமூகங்கள். பாலினம் அல்ல, பாலினங்கள். மொழி அல்ல, மொழிகள். மேலிருந்து கீழ் அல்ல, கீழிருந்து மேல். மாளிகைகள் அல்ல, குடிசைகள். அரசர்கள் அல்லர், சாமானியர்கள். ஒரு மதம், ஓர் அரசியல், ஒரு நாடு, ஒரு பண்பாடு, ஒரு மக்கள் குழு என்று இந்தியா என்றுமே இருந்ததில்லை. இந்தியா, வேற்றுமைகளால் தழைத்த நாடு. இங்கே பல சிந்தனைகள் முட்டி மோதியிருக்கின்றன. தீவிரமான தத்துவ விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன. கோட்பாட்டு மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. எதிர்ப்புகளுக்கும் மறுப்புகளுக்கும் முரண்பாடுகளுக்கும் இங்கே எப்போதும் இடம் இருந்திருக்கிறது. இனியும் இருக்க வேண்டும்'' என்றார் ரொமிலா தாப்பர்.

ஓய்வுபெற்றுவிட்ட ஒரு பேராசிரியராகவோ பணிகளை முடித்துக்கொண்டுவிட்ட ஓர் ஆய்வாளராகவோ அவர் தன்னைக் கருதிக்கொள்வதில்லை. ``நான் ஆரம்பித்த பணி முடிவடைய வில்லை'' என்கிறார் அவர். இந்தியாவைப் பெரும்பான்மையினரின் தேசமாக உருமாற்றிக் காட்டுபவர்களின் வாதங் களைத் தக்க வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு அவர் முறித்துப்போடுகிறார். காலனிய காலத்தில் நடந்ததைப்போல நிகழ்காலத்திலும் வரலாறு தாக்கப்படுகிறது, குறுக்கப்படுகிறது, திருத்தி எழுதப்படுகிறது. இந்த முயற்சிகள் பெரும் மக்கள் திரளைப் பாதிக்கவல்லது என்பதை ரொமிலா தாப்பர் உணர்ந்திருக்கிறார். அத்தகைய சந்தர்ப்பங்களில் ரொமிலா தாப்பரின் பேனா ஒரு போர் வாளாக மாறிவிடுகிறது. வரலாறு நம் அனைவருக்குமானது. எனவே, அது சரியாகச் சொல்லப் பட வேண்டும் என்கிறார் தாப்பர்.

பெங்குவின் 1966-ம் ஆண்டு வெளியிட்ட தாப்பரின் இந்திய வரலாறு (முதல் பாகம்) இன்று வரை வரலாற்று மாணவர்களின் வழிகாட்டியாக நீடிக்கிறது. சகுந்தலா, சோமநாதா, பண்டைய இந்தியாவின் சமூக வரலாறு என்று தொடங்கி தாப்பர் எழுதிய நூல்களும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் புதிய இந்தியாவை மட்டுமல்ல; புதிய எழுத்துமுறையையும் ஆய்வுக் கருவிகளையும் நமக்கு அறிமுகப் படுத்துகின்றன. ஆம், தாப்பரின் எழுத்துகள் கனமானவைதாம். இருந்தாலும், அவை ஆய்வுக்கூடங்களிலும் நூலகங்களிலும் பண்டிதர்களின் கருத்தரங்குகளிலும் மட்டும் தேங்கிக்கிடக்காமல் எளிய மக்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கின்றன. அவர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கின்றன.

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ரொமிலா தாப்பர் வளர்த்தெடுத்த குழந்தை. தற்சமயம் ஓய்வுபெற்றுவிட்டார் என்றபோதும் அங்கு உள்ள மாணவர்கள் தங்களுக்கு நெருக்கமானவராக, தங்களில் ஒருவராக ரொமிலா தாப்பரை இன்றும் காண்கிறார்கள். ``வெவ்வேறு இடங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த நாங்கள் பலரும் அவரவர் வேலைகளைக் கைவிட்டுவிட்டு நவம்பர் 1970-ல் ஒரு புதிய ஜே.என்.யூ-வை உருவாக்கினோம்'' என்று பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார் தாப்பர். ``இந்த இடம் அறிவுசார்ந்த தேடலுக்கான மையமாக இருக்க வேண்டும். அச்சமின்றி சுதந்திரமாக உரையாடும் களமாக இருக்க வேண்டும் என விரும்பினோம்.'' இந்தியாவும் அப்படியோர் இடமாக இருக்க வேண்டும் என்பதே ரொமிலா தாப்பரின் கனவு. இந்தக் கனவு அதிகார பலமிக்க பலரை எரிச்சலடையச் செய்வதை அவர் அறிவார்.

அறிவுஜீவி என்பவர் யார்? புத்தகங்களுக்குள் புதையுண்டு கிடக்காமல் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழு விழிப்புடன் அவதானிப்பவர். தான் வாழும் உலகோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பவர். அறிவு அகந்தையின்றி, நானும் சமூகத்தின் ஒரு பகுதிதான், என்னை உருவாக்கியவர்கள் என் மக்கள்தாம் என்பதை உணர்ந்திருப்பவர். மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக் காக அவர் குரல் தன்னிச்சையாக வெடித்துக் கிளம்பும். சமூகம் நெருக்கடிக்கு உள்ளாகும்போது தன் அறிவை ஒரு கருவியாக அவர் கையாள்வார். அவ்வாறு செய்யும்போது அவர் பலரைப் பகைத்துக்கொள்ள நேரிடலாம். அது தவிர்க்கவியலாதது மட்டுமல்ல, அவசியமானதும்கூட என்னும் புரிதல் அவருக்கு இருக்கும். ரொமிலா தாப்பர் மக்களுக்கான அறிவு ஜீவி. வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் அரசியல் காரணங்களுக்காகத் திரித்து எழுதப்பட்டபோது அவருடைய எதிர்க்குரல் வலுவாக ஒலித்தது. பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அவர் மாணவர்களின் பக்கம் நின்றார். அறிவுஜீவிகளின் கருத்துரிமைக்குத் தடை வந்தபோது அவர்களுடன் கரம் கோத்துக்கொண்டார்.

ஒருமுறை ஐந்து வயது ரொமிலா ரயிலில் சென்றுகொண்டிருந்த போது, கைவிலங்குகளோடு சிலர் நடத்திச் செல்லப்படுவதை ஜன்னலிலிருந்து பார்த்தார்.

``அம்மா, அவர்கள் யார்?''

``நம் சுதந்திரத்துக்காகப் போராடு பவர்கள்'' என்றார் அம்மா.

``நாம் ஏன் சுதந்திரமாக இல்லை?''

``ஏனென்றால், நாம் அடிமைகளாக இருக்கிறோம்'' என்று பதில் வந்தது.

`நாம் ஏன் அடிமைகளாக இருக்கிறோம்?' இந்தக் கேள்விக்கான விடையை ரொமிலா விரைவில் கண்டறிந்தார். ஏனென்றால், நாம் வரலாறு அற்றவர்களாக இருக்கிறோம். வரலாற்றைத் தொலைத்தவர்கள் அடிமைகளாகிவிடுகிறார்கள். நம் சங்கிலிகளை உடைத்தெறியும் ஆற்றலும் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் திறனும் வரலாற்றுக்கு மட்டுமே இருக்கிறது. அப்படியானால், நமக்கான வரலாற்றை ஏன் நாமே உருவாக்கிக்கொள்ளக் கூடாது? அவ்வாறு செய்யும்போது எதிர்ப்புகள் திரண்டுவந்தால் நாம் ஏன் தலைநிமிர்ந்து நின்று போராடக் கூடாது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மருதன்

வரலாறு என்பது போராட்டமே! - ரொமிலா தாப்பர்

விரல் நகங்கள் சிலருக்கு அடிக்கடி உடையலாம். ஆப்பிள் சீடர் வினிகர், பாதாம் எண்ணெய், இலாங் இலாங் ஆயில் - இவை மூன்றையும் சம அளவில் எடுத்து ஒரு பவுலில் ஊற்றி, நகத்தில் எண்ணெய்க் கலவை படும்படி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். நகம் உறுதியடையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism