அலறலுக்கு அணைபோடும் மத்திய அரசு!
##~## |
இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சம், குங்குமம்! கணவனையும், கடவுளையும் குங்குமமாக சிருஷ்டித்துக் கொள்பவர்களும் இங்கு ஏராளம். இத்தகைய நம்பிக்கையை சாதகமாக்கிக் கொண்டு, தரமற்ற குங்குமத்தை தயாரிக்கும் கும்பல்கள் பெருகிவிட்டன. விளைவாக, குங்குமத்தால் ஏற்படும் அலர்ஜிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில், குங்குமத்தின் தரத்தை உறுதிப்படுத்துவது குறித்து, மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பது, ஆரோக்கியமான செய்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குங்குமம்... சுமார் 5,000 வருடங்கள் பழமையானது. ஆரம்ப காலங்களில் மஞ்சளை பவுடராக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து வீடுகளில் தயாரிக்கப் பட்டது குங்குமம். பிறகு... கற்பூரம், கடல் சிப்பிகளின் தூள் கலந்தும் குங்குமம் தயாரானது. இன்னும் சிலர், சந்தனத்துடன் வாசனைத் திரவியம் மற்றும் வாசனைப் பூக்களை கலந்து தயாரித்தனர். நிறத்துக்காக ஒருவகை சிவப்புக் கல்லை பவுடராக்கியும் பயன் படுத்தினர். இயற்கையான, பாரம் பரியம் மிக்க இத்தகைய குங்குமத் தயாரிப்புகள், பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட, கலப்பட குங்கும தயாரிப்பு கும்பல்கள் தலையெடுத்து விட்டன!

இவ்வகை குங்குமங்களில், ரசாயனம் மற்றும் ஈயத் துகள்கள் கலக்கப்படுகின்றன. இன்னும் சில தயாரிப்பாளர்கள், வெட்டி எடுக்கப் பட்ட சிவப்பு ஈயத்தைத் (Pb3O4) தூளாக்கிக் கலக்குகின்றனர். இது போன்ற குங்குமங்களினால் பல பெண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு பலவிதமான பிரச்னைகள் உருவா கின்றன.
இதுபற்றிய புகார்கள் பல ஆண்டுகளாகவே மத்திய சுகாதார நல அமைச்சகத்துக்கு வந்து கொண்டே இருந்த நிலையில், 1994-ம் ஆண்டில், குங்குமத்தில் கலந்திருக்கும் பொருட்கள் குறித்த ஆய்வில் இறங்கியது மத்திய அரசு. ஆனால், அதன் பிறகு அதில் பெரிதாக அக்கறை காட்ட வில்லை.
இந்நிலையில்தான், சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவான டிடிஏபி எனப்படும் 'டிரக் டெக்னிகல் அட்வைஸரி போர்ட்' (DTAB - Drug Technical Advisory Board) சார்பில், டெல்லியில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகுப் பொருட்கள் பட்டியலின் 'எஸ்’ என்கிற சிறப்பு அட்டவணைப் பிரிவின் கீழ் குங்குமத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குங்குமம், தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்படவும்; சிவப்பு ஈயம், செயற்கை நிறமிகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் வேதிப்பொருட்களை பயன்படுத்தும் குங்குமத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும்; குங்குமத்தின் தரத்தை மேம்படுத்தவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவை வரவேற்றுப் பேசும் டெல்லியைச் சேர்ந்த பிரபல தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் வீரேந்தர், ''ஈயத்தின் துகள்கள், ரசாயனம் மற்றும் வேதியியல் பொருட்கள் நம் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இதை நெற்றியில் இடுவதால், சுமார் 15 சதவிகிதப் பெண்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. புண், அரிப்பு ஏற்பட்டு, உடலின் மற்ற இடங்களுக்கும் அலர்ஜி பரவும். சில பெண்களுக்கு தலையில் முடி கொட்டத் துவங்கும். தவறி கண்களில் பட்டாலும் ஆபத்துதான். இதுபோன்ற புகார்களுடன் என்னிடம் வரும் பல பெண்களுக்கு, குங்குமத்தைத் தவிர்க்கச் சொல்வதுதான் என் முதல் சிகிச்சையாக இருக்கும். குங்குமம் அன்றாட வாழ்க்கையில் தெய்விகச் சிறப்புப் பெற்றுள்ளதால், அதைத் தவிர்க்கச் சொல்வது... பெண்களுக்கு மனதளவில் உடன்பாடில்லாததாக இருந்தது. இப்போது அரசின் இந்த முடிவு, இப்பிரச்னைக்கு ஓர் ஆரோக்கியமான தீர்வைத் தந்துள்ளது'' என்ற டாக்டர்,
''இன்னொரு பக்கம், பெண்களும் குங்குமம் விஷயத்தில் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சிலர் நெற்றியில் ஒருவித பசையான 'அம்பர்’ வைத்தபின், குங்குமம் வைத்துக் கொள்வார்கள், நன்றாக ஒட்டவேண்டும் என்று. அது சிலருக்கு அலர்ஜியையும், நெற்றியில் தழும்பையும் ஏற்படுத்தும். வட இந்தியாவில் இன்னும் சிலர் அதிக சிவப்பு நிறம் விரும்புவதன் காரணமாக, லிப்ஸ்டிக்கையே நெற்றியில் இடுவதுடன் அதை வகிடிலும்கூட வருவிக் கொள்கின்றனர். இது அதிக ஆபத்தானது'' என்று எச்சரித்தார்.
காலம் கடந்தாவது பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறைப்பட்டிருக்கும் அரசு, இதை செயல்வடிவம் ஆக்குவதிலாவது வேகம் காட்டட்டும் !