Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

என்னஞ்சல்

Published:Updated:
என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

ன்புள்ள ரயில் ஸ்நேகிதிக்கு,

தொடர்ந்து 47-வது முறையாக நீ இல்லாத காலை ரயிலில் என் கால்களை ஊன்றி நின்று கொண்டிருக்கிறேன். மாலையும் இதே நிலைதான் என்று அவநம்பிக்கை கொள்கிறது, உன்னை இவ்வளவு நாள்கள் கண்டிராத என் மனம். அதைப் பழித்தோ குற்றம் சொல்லிக் கோபப்படவோ எனக்குத் தோன்றவில்லை. தொடர்ந்து ஒன்பது மாதங்கள் காலையும் மாலையும் நீ எனக்கு எதிரில் நிற்கும் இந்த 20 நிமிடப் பயணம், இப்போது நீ இல்லாததால் 20 யுகங்கள் நீளும் பயணமாக எனக்குத் தோன்றுகிறது. வெறும் கையளவே இருக்கும் சதைப் பிண்டமான இந்த அற்ப இதயம் இதை எப்படித்தான் ஏற்றுக்கொள்ளும்?

இந்த ஒன்பது மாதகால ரயில் ஸ்நேகத்தில் நாம் பேசிடாத விஷயங்களே கிடையாது. முதல் முறை நீ என்னுடன் பேசியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. `தேங்க்ஸ்’ என்று ஒலியே வெளியேறாமல் உன் உதடுகள் எனக்காக விரிந்திருக்கின்றன. அன்று ரயிலைத் தவறவிட இருந்த உன்னைக் கரங்கொடுத்து ஏற்றிவிட்டேன். கீழே விழுந்த உன் அடையாள அட்டையை எடுத்து உன்னிடம் நீட்டினேன். அதற்காக நீ எழுப்பிய அந்த ஒலியற்ற நன்றிதான், நம் நட்பின் ஆரம்பப்புள்ளி. பிறகு வந்த நாள்களில், அன்று உன்னைத் தாமதப்படுத்திய பிளாட்பாரக் கூட்ட நெரிசலை நினைவுகூர்ந்து அதற்குப் பலமுறை நன்றி நவின்றிருக்கிறேன். அதுவரை உன் முகத்தை மட்டுமே தெரிந்துவைத்திருந்த நான், உன் அடையாள அட்டையின் மூலம் உன் பெயரையும், நீ வேலை செய்யும் ஐ.டி. அலுவலகத்தின் பெயரையும் தெரிந்து கொண்டேன். அற்பனைப் போல அதை வைத்து ஃபேஸ்புக்கில் உன்னைப் பிடித்துவிடலாம் என்றெல்லாம் தேடியிருக்கிறேன். ஆனால், நீ ஃபேஸ்புக் பயன்படுத்தும் அளவிற்கு மார்க் சக்கர்பெர்க் கொடுத்து வைக்கவில்லை. நண்பர்கள் ஆலோசனையின்படி, டேட்டிங் ஆப் ஒன்றில் லொகேஷன் சர்ச் போட்டபடி உன்னுடன் ரயிலில் பயணித்திருக்கிறேன். அதிலும் நீ இருப்பதற்கான சுவடே இருந்ததில்லை. அதன்பிறகு வந்த நாள்களில், ‘மெய்நிகர் உலகில் என்னை ஏன் இன்னமும் தேடுகிறாய்?’ என்று கேட்பதுபோல நீயே வந்து நிஜ உலகில் என்னிடம் அறிமுகமானாய்.

என்னஞ்சல்

வாரத்தில் இரண்டு நாள்கள் பரிமாறப்பட்ட பரஸ்பரப் புன்னகை விரைவில் அந்த 20 நிமிடக் காலைப் பயணத்தில் 21 நிமிடங்கள் தினமும் உரையாட வைக்கும் அளவிற்கு நட்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மாலையும் அது தடையில்லாத ரயில் பயணத்தைப் போலவே தொடர்ந்தது. ஐ.டி. வாழ்க்கையின் புலம்பல்கள், உன் அன்றாட கேன்டீன் உணவின் உயிர்ப்பின்மை, என் பணியின் சுமைகள், அண்டவியல் முதல் அன்றாட சீரியல் வரை... என நாம் பேசித் தீர்த்திராத விஷயங்களே இல்லை. ரஹ்மான் பாடலை இருவரும் ஒரே இயர்போனில் பகிர்ந்து கேட்டது, எனக்காக நீ செய்த இனிப்புப் பலகாரங்களை டப்பாவில் கொண்டுவந்து நீட்டியது, சோகமானதொரு நாளைக் கடந்திருந்த உன்னை உற்சாகமூட்ட மொக்கை ஜோக்குகள் அடித்தது... என என் நினைவில் நிற்கும் விஷயங்கள் நம் ரயிலின் பெட்டிகள்போல நீள்கின்றன. நம் ரயில் அன்றாடம் ஏற்றிவரும் பலரும் சந்தேகப் பார்வையுடன் நம்மை உற்று நோக்கியுள்ளனர். அவர்களை நாம் வெறும் கண்களாகக் கடந்துவிட்டு, நம் உரையாடல் நிறைந்த உலகின் வார்த்தை மழையில் மீண்டும் மீண்டும் நனைந்திருக்கிறோம். எதையும் விமர்சனம் செய்துவிடத் துடிக்கும் இவ்வுலகில், எதையும் ஆராயாமல் நட்பு பாராட்டிய உன்னிடம் இருந்துதான் என் நட்பின் அதிகாரங்களும் தொடங்கியிருக்கின்றன என்பதை இப்போது உணருகிறேன்.

பீச்சில் மக்களை ஏற்றிச் செல்லும் குதிரையின் உலகத்தைப் போலத்தான் என்னுடைய உலகமும். தினமும் ரயிலில் ஏறி, குறிப்பிட்ட இடத்தில் இறங்கி, பணி முடிந்தவுடன் மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பிவரும் ஜந்துவின் வாழ்க்கை. இந்தப் பயணத்தில் என்றும் மாற்றம் இல்லாமல் நீ உதிர்க்கும் புன்னகையும், உன்னுடனான உரையாடல்களும்தாம் எனக்கான அன்றாடத் தேவைகளாக இருந்தன, இப்போதும் இருக்கின்றன. உன் முகம் காண முடியாத துரதிர்ஷ்டவசமான ஞாயிறுகளைத் தவிர இந்த ஒன்பது மாதங்களில் நீ ரயில் ஏறாத வார நாள்களும் சில உண்டு. நான் ரயிலைத் தவறவிட்ட, பணிக்குச் செல்லாத நாள்களும் உண்டு. அந்த நாள்களை எல்லாம் சிக்னலுக்காகக் காத்திருக்கும் ரயிலைப் போல அவஸ்தையுடன் காத்திருந்து கடந்து போயிருக்கிறேன். ஆனால் இன்று, நீ தொடர்ந்து 47 நாள்களாக இல்லாத இந்தத் தனிமையான ரயில் பயணம் வேறு சில விஷயங்களை எனக்குக் கற்பிக்கின்றது.

அதில் மிக முக்கியமான ஒன்று... நமக்குள் இருக்கும் இந்த அழகான உறவைக் காதல் என்று கூறிச் சிறுமைப்படுத்த எனக்குத் துளியும் விருப்பமில்லை. எதற்காக நாம் எல்லா ஆண்-பெண் அன்பிற்கும் ‘காதல்’ என்ற பெயரை வைக்க விரும்புகிறோம்? அதுவும் முகம் தெரியாத ஒருவரின் உடல் மொழியை அருகில் இருந்து ரசிக்க முடியாத தற்கால மெய்நிகர் டெக்னாலஜி உறவுகளைக் காதல் என்று பலரும் கொண்டாடுகையில், என் நிஜ வாழ்வில் தினமும் தேவதையாக உலாவிய உன்னை எதற்காக நான் காதலி என்று அழைத்துக் கொச்சைப்படுத்த வேண்டும்? பெயர் வைக்கப்படாத குழந்தை வளராமல் போய்விடுமா என்ன? பெயரில்லாத இந்த உறவு இந்தப் பிரபஞ்சம் இருக்கும்வரை நீளட்டுமே! நாம் நம் கைப்பேசி எண்களையோ, மின்னஞ்சல் முகவரிகளையோ இதுவரை பகிர்ந்ததில்லை. பகிர வேண்டும் என நமக்குத் தோன்றியதும் இல்லை. நம் உலகம் இந்த ஓடும் ரயிலினுள்ளே மட்டும் விரவிக் கிடந்தது. அதுவே நமக்குப் போதுமானதாகவும் இருந்தது. அதனாலேயே எதுவும் சொல்லாமல் காணாமல் போய்விட்ட உன்னைத் தேடும் வழிமுறைகள் இருந்தும் அதைச் செய்யாது நாள்களைக் கழிக்கிறேன். ஒருவேளை நீ வேறு நிறுவனத்துக்கோ, வேறு ஊருக்கோ சென்றிருக்கலாம். சொந்த ஊருக்கே சென்று திருமண மேடையேறத் தயாராகிக் கொண்டிருக்கலாம். அல்லது நீ எப்போதும் விரும்பிய ஆன்சைட் உனக்குக் கிடைத்திருக்கலாம். இப்படி நீ இல்லாத நாள்களில்கூட உனக்கு நீ விரும்பியதே கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனக்கு நீ பிரியா விடை இன்னமும் அளிக்கவில்லை. எனவே உன்னைப் பிறிதொரு நாளில் சந்திக்கையில் அதுவரை நீ தராத புன்னகைகளைச் சேர்த்து வைத்து மொத்தமாய்க் கொடுத்துவிடு. வாழ்நாள் முழுவதும் ஓடும் ரயிலில் அமர்ந்து பேசாத விஷயங்களையும் பேசித் தீர்த்துவிடுவோம். அந்த நாள் நாளையாய் இருக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் இந்த ரயில் ஏறுகையில் நினைத்துக்கொள்கிறேன். ஏறியவுடன் உன் முகத்தைத் தேட முற்படுகையில், கிளம்பும் ரயிலைப்போலத் தடதடக்கிறது என் இதயம்!

பிரியமுடன்

உன் ரயில் ஸ்நேகிதன்