Published:Updated:

இளமை இதோ... இதோ!

முதுமையை முந்தித் தரும் தாறுமாறான மேக்கப்..! வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன்

இளமை இதோ... இதோ!

முதுமையை முந்தித் தரும் தாறுமாறான மேக்கப்..! வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன்

Published:Updated:
##~##
மேக்கப் என்பதே நம் அழகைக் கூட்டத்தான். ஆனால், நம் ஆரோக்கியத்தைக் குறைப்பதற்கும் அதுவே காரணியாகிவிடும் என்றால்...  ஆபத்துதானே!

ஆம், பெரும்பாலான காஸ்மெடிக் பொருட்கள்... கெமிக்கல் தயாரிப்புதான். இத்தகைய பொருட்களை உபயோகிப்பதன் மூலம், அந்த சமயத்தில் வேண்டுமென்றால்... பளபளப்பு கூடி நிற்கும். ஆனால், நாள் பட நாள் பட... ஆங்காங்கே சருமத்தில் சுருக்கம், தாளாத எரிச்சல், தீராத அரிப்பு என்று... நாம் அதற்கு பலியாக நேரிடும்! எனவே, பாதுகாப்பான மேக்கப் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பாக... சோப், ஷாம்பு, பாடி லோஷன் என்று எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் பாரஃபின் எனும் வேதிப்பொருள்... சரும வறட்சி, தோல் அரிப்பு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் சோடியம் லோரல்... தலை அரிப்பு, கண் எரிச்சல், முடியின் நிறம் மங்குவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, பாரஃபின் ஃபிரீ ஷாம்பு, சோப்புக்காய், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹெர்பல் ஷாம்பு, வெந்தயம், சிகைக்காய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

லிப்ஸ்டிக்... இள வயது முதல் முதிய வயது பெண்கள் வரை, அனைவரையும் ஈர்க்கும் ஒரு மேக்கப் பொருள். அதன் காரணமாகவே மிகமுக்கியமான காஸ்மெட்டிக் அயிட்டமாக இது பார்க்கப்படுகிறது. லிப்ஸ்டிக் எனப்படும் இந்த உதட்டுச் சாயங்களில்... இதழ்களுக்கு பளபளப்பு கொடுக்கும் லிப் கிளாஸ், இதழ்களை வெடிப்புகளில் இருந்து பாதுகாக்கும் லிப் பாம், தண்ணீரில் அழியாத வாட்டர் ரெசிஸ்டன்ட் லிப்ஸ்டிக், ஒரு நாள் முழுக்க நீடிக்கும் லாங் ஹவர்ஸ் லிப்ஸ்டிக் என பல வகைகள் உள்ளன.

இளமை இதோ... இதோ!

18 வயது நிரம்பியவர்கள்... லிப் க்ளாஸ் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதில் இருக்கும் வைட்டமின்-'ஈ’, உதடுகளை வெடிப்புகளில் இருந்து சரிசெய்யும். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. உதடு கறுப்பாக இருப்பவர்கள்... வைட்டமின்-'சி’ உள்ள லிப் கிளாஸை பயன்படுத்தலாம். இந்தக் குளிர் காலத்துக்கும்கூட வைட்டமின்-'சி’ உள்ள லிப் க்ளாஸும், லிப்ஸ்டிக்கும் உதட்டுப் பாதுகாப்புக்கு உகந்தது. இது எல்லாவற்றையும்விட, தினமும் இரவு தூங்குவதற்கு முன் உதடுகளில் வெண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு படுத்தால், ஆரோக்கியமும் பளபளப்பும் கிடைக்கும்.

லெட் மற்றும் ஸிங்க் போன்ற பொருட்கள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக் ரகங்கள்... உதடுகள் கறுப்பாவது, வெடிப்பது, உதட்டின் தோல்கள் உரிந்து காயமாவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதடு, தன்னுடைய இயற்கையான ஈரப்பதத்தை இழக்கவும் இதுவே காரணமாகிவிடும்.

சமீப ஆண்டுகளாக, சென்னை மாநகரில் பெண்களும் சிகரெட் பிடிப்பது தலைதூக்கத் தொடங்கியுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், 'பப்’கள் என்று மட்டுமல்லாமல், பொது இடங்களில் கூட இளம் பெண்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்க்க முடிகிறது. உதடு கறுத்துப் போவதற்கு, இந்த சிகரெட்டும் ஒரு காரணமாக அமைந்துவிடும். உதட்டை மட்டுமல்ல... உயிரையே பறிக்கக் கூடியது சிகரெட் என்பதை உணர்ந்து அதையெல்லாம் பெண்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும்!

கண்களை முகத்தின் ஜன்னல் என்பார்கள். அந்தக் கண்களை மேலும் ஹைலைட்டாகக் காட்ட, மை பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். அவர்கள் விளக்கெண்ணெய் கலந்து வீட்டிலேயே தயாரித்த ஜெல் போன்ற அந்த மை, கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும், நீண்ட காலம் பொலிவு கொடுக்கும். இப்போது, அன்றாட பயன்பாட்டுக்கு ஏதுவாக கோன், ஸ்டிக் என பல வடிவங்களில் மை கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் தயாரிக்கும் மைகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன என்பதை இந்த நிமிடத்திலிருந்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். இதன் பிறகும், கண்களுக்கு மை போட ஆசைப்பட்டால், எது நமக்கு கேடு விளைவிக்காத மை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு பயன்படுத்துங்கள்.

மஸ்காரா, ஐ லைனர் போன்றவற்றை தினசரி பயன்படுத்துவது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. விசேஷம், பார்ட்டி என்று முக்கியமான தருணங்களுக்கு மட்டும் இவற்றை பயன்படுத்தலாம். அதுவும் 'க்ளோஸ் டு ஐ' என்று இல்லாமல், இமையில் இருந்து கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், இப்போது எல்லாம் 16 வயதில் இருந்தே பெண்கள் ஐ லைனர், மஸ்காரா என்று பயன்படுத்த ஆரம்பிப்பதன் விளைவு, இமை முடி உதிர்வது, கண் அரிப்பு, அலர்ஜி, வலி போன்றவற்றில் முடிகிறது. எனவே, 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே இதையெல்லாம் பயன்படுத்த வேண்டும்!

வெளிப்பூச்சுகளைவிட, கண்களின் பாதுகாப்புக்கும் அழகுக்கும் வைட்டமின்-'ஏ’ சத்துள்ள கேரட், கீரை வகைகள், நிலக்கடலை, சிவப்பு பூசணிக்காய், மாம்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கண்ணைச் சுற்றி உள்ள தசைகள் வலுவாக இருந்தால்... கண் சுருக்கம் வராமல் தடுக்கலாம். இதற்கு நான் சொல்லும் ஒரு  பயிற்சி கை கொடுக்கும். தலையை அசைக்காமல் விழிகளை மட்டும் மேல், கீழாக ஐந்து முறை அசைக்கவும். பின் வலது, இடது என ஐந்து முறை அசைக்கவும். வாரம் ஒரு முறை இந்தப் பயிற்சியை செய்வது, கண்களை முதுமையடைவதில் இருந்து காக்கும்.

காலையில் போட்டுக் கொள்ளும் ஃபவுண்டேஷன், ஃபேர்னெஸ் க்ரீம், காம்பேக்ட்... போன்றவை சருமத்தின் வேர் துவாரங்களை அடைத்துவிடும் என்பதால், அவற்றை விசேஷங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம். தினமும் வீடு திரும்பியதும் மேக்கப் ரிமூவ் செய்வது முக்கியம். அதற்கு மேக்கப் ரிமூவர், ஐ மேக்கப் ரிமூவர், ஐ பட்ஸ் என்று பயன்படுத்தலாம். ஸ்கின் கேர் விஷயத் தில் சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்தலாம்.

மீண்டும் ஒரு தடவை எச்சரிக்கிறேன்... அளவுக்கு அதிகமாக காஸ்மெடிக் அயிட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அந்தக் கெமிக்கல்களின் விளைவால் 35 வயதிலேயே சருமத்தின் இளமைப் பொலிவு தீர்ந்துவிடும்... ஜாக்கிரதை.

இருபத்தியோரு வயது குறித்து இதுவரை நாம் பேசியதே ஓரளவுக்கு உங்களுக்கு இளமை பற்றிய விழிப்பு உணர்வை தந்திருக்கும். இனி, தாம்பத்யத்தை நோக்கி தயார்படுத்தும் திருமண வயது பற்றியும்... அதை அணுகுவது பற்றியும் பேசுவோம்!

- இளமை வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism